Published:Updated:

கல்லூரி கணக்கெடுப்பு அனுபவங்கள் #MyVikatan

"கணக்கெடுப்பு முடிந்து நள்ளிரவு ஊர் திரும்புகையில் உண்மையாவே பேய் அடிச்சிருச்சிடா'' என பேஸ்த் அடித்தாற்போல வந்தான் ஒருவன்.

கல்லூரி கணக்கெடுப்பு அனுபவங்கள் #MyVikatan

"கணக்கெடுப்பு முடிந்து நள்ளிரவு ஊர் திரும்புகையில் உண்மையாவே பேய் அடிச்சிருச்சிடா'' என பேஸ்த் அடித்தாற்போல வந்தான் ஒருவன்.

Published:Updated:
அக்காலத்தில் சென்னை லயோலா கல்லூரிக்கும், எங்கள் கல்லூரிக்கும் யாரது கணிப்பு சிறந்தது என்பதில் ஒரு கவுரவம் கலந்த, நட்பான போட்டி இருந்தது.

1988 - 1993 ஆண்டுகளில் நான் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளம் அறிவியல் + முது அறிவியல் (புள்ளியியல்) படித்தேன். இயற்பியல், வேதியியல், உயிரியியல் துறை மாணவரைப் போன்று அல்லாது, புள்ளியியல் துறை மாணவர்க்கு NCC/NSS போன்றவை அன்றைய நாளில் கிடையாது. மாறாக, கணக்கெடுப்பு (Survey) என்பது இருந்தது.

இந்தக் கணக்கெடுப்புகளின் இடம் / பொருள் / ஏவல் ஆகியவை வருடா வருடம் மாறுபடும். தேர்தல் நேரங்களில், எந்தக் கட்சி அதிக வாக்குகள் பெறும் என்பதை கணிக்க இவை பெரிதும் உதவின. சில வேளைகளில் இக்கணிப்பானது சுகாதாரம், கல்வி நிலை, சமுதாய குறைபாடுகள் போன்ற பலவற்றை கணிக்கவும் / உணரவும் உபயோகப்படுத்தப்பட்டன.

1989 ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இருந்தது. அதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு எந்த அளவு அம்மை, தட்டம்மை, கக்குவான் இருமல் போன்ற கொடிய நோய்கள் குறித்த தெளிவு இருக்கிறது, எவ்வளவு பேர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள் என அறிய விரும்பியது. இவ்விரண்டையும் சேர்த்து எங்கள் கல்லூரி 1988 நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. நான் பங்குபெற்ற முதல் கருத்துக் கணிப்பாக அது அமைந்தது.

தொகுதிக்கு தக்கவாறு கிராமங்கள்/நகரங்கள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் எவ்வளவு நபர்களைச் (Sample) சந்தித்து கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்பதற்கு புள்ளியியலில் ஒரு மிகத் தெளிவான, ஆழம் மிகுந்த, அறிவியல் ரீதியான, தீவிரமான பாடம் உண்டு. Simple Random Sampling, Stratified Sampling, Quota Sampling, Cluster Sampling என அதில் பல உட்பிரிவுகளும் உண்டு.

Madras Christian College
Madras Christian College

அக்காலத்தில் சென்னை லயோலா கல்லூரிக்கும், எங்கள் கல்லூரிக்கும் யாரது கணிப்பு சிறந்தது என்பதில் ஒரு கவுரவம் கலந்த, நட்பான போட்டி இருந்தது. இந்தப் பின்னணியில், நான் எனக்கு ஒதுக்கப்பட்ட மானாமதுரை / மாரநாடு / திருப்புவனம் / சிவகங்கை / காளையார்கோவில் ஆகிய இடங்களுக்குப் பயணமானேன்.

திரும்பவும் சொல்கிறேன். அது 1988-ம் ஆண்டு. அப்போது இன்டர்நெட் இல்லை, செல்போன் இல்லை, அவ்வளவு ஏன், பெரும்பாலான வீடுகளில் சென்னை டெலிபோன்ஸ் என்று அழைக்கப்பட்ட (இன்றைய BSNL) நிறுவனத்தாரின் அடிப்படை தொலைபேசியும் இல்லாத நாட்கள் அவை.

சுகாதார கேள்விகளுக்கு அவர்களிடமிருந்து சிறப்பான பதில் கிடைத்தது. அது அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டில் ஆரம்ப சுகாதாரத்துக்கு / நோய் தடுப்புக்கு நாம் செய்திருந்த அரும் சாதனைகளுக்கு அத்தாட்சியாக அமைந்திருந்தது.

சென்னையிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் ஒரு எக்ஸ்பிரஸ் வழியாக மானாமதுரை அடைந்து, அந்த நாளில் அங்கு பிரபலமான (ஊரில் இருந்த ஒரே விடுதி !) பழனி ஆண்டவர் விடுதியில் நானும் எனது நண்பனும் ரூம் எடுத்து தங்கினோம். அடுத்த நாள், அருகாமையில் இருந்த தாலுகா ஆபீசில் வாக்காளர் பட்டியல் வாங்கி, பார்த்து, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு யார் யாரை சந்திப்பது எனத் தேர்ந்தெடுத்து, அவர்கள் முகவரி போன்றவற்றைக் குறிப்பிட்டுக் கொண்டு கிராமங்களுக்கு பயணமானோம்.

பல கிராமங்களில் நாங்கள் தேர்வு செய்த நபர்களின் வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்கில், மூலையில் இருக்கும். அங்கு சைக்கிள் வாடகை எடுத்துக்கொண்டு பயணமாவோம்.

"எந்த கட்சிக்கு ஓட்டு ?" என்பதை எடுத்தவுடன் அப்படியே கேட்காமல், அவர்கள் வீட்டில் மாட்டி இருக்கும் தலைவர் புகைப்படங்கள், அவர்கள் கையில் இருக்கும் மோதிரம் (இருந்தால்!) போன்றவற்றைக் கொண்டு ஒருவாறு பேச்சை அமைத்துக் கொள்வோம்.

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் இருப்பார்கள். சுகாதார கேள்விகளுக்கு அவர்களிடமிருந்து சிறப்பான பதில் கிடைத்தது. அது அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டில் ஆரம்ப சுகாதாரத்துக்கு / நோய் தடுப்புக்கு நாம் செய்திருந்த அரும் சாதனைகளுக்கு அத்தாட்சியாக அமைந்திருந்தது என்று சொன்னால் மிகையில்லை.

மானாமதுரை
மானாமதுரை
திட்டம் ஒன்று நடந்தது ஒன்று என்றுதான் எல்லா நாளும் அமையும்.

காலையில் ஒரு பஸ், மாலையில் ஒன்று என்றே அக்காலத்தில் அநேக கிராமங்கள் இருந்தன. ஆகவே, திரும்பிப் போவதற்கு தக்கவாறு எந்த கிராமத்தில், எவ்வளவு நேரம் இருக்கலாம் என்பதை முன் கூட்டியே திட்டவட்டமாக வகுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. இருப்பினும், திட்டம் ஒன்று நடந்தது ஒன்று என்றுதான் எல்லா நாளும் அமையும்.

2-3 நாள்கள் போயிருக்கும். நான் ஜுரத்தில் படுத்து விட்டேன். மானாமதுரையில் ஒரு டாக்டர் ஒன்றுக்கு இரண்டாக(!), ’அம்மா அம்மா’ எனக் கத்தும் அளவிற்கு ஊசி குத்தினார்.

இரவில் மானாமதுரை ஜங்ஷனில் ’மரக்கறி உணவு விடுதி’ என்கிற ஒற்றை விற்பனையகத்தில் சாப்பிடுவோம். Vegetarian என்பதற்கு இதைவிட வேறு வார்த்தை கேள்விப்பட்டதாக சரித்திரத்தில் எனக்கு நினைவு இல்லை.

சென்னை நோக்கி போகும் கம்பன் போன்ற ரயில்களை ஜங்ஷனில் பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். Homesickness.

ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து ஊர் திரும்பினோம். கல்லூரியில் கணிப்புச் சீட்டுகளைச் சமர்ப்பித்து, அவற்றை தொகுத்து ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிட உதவினோம்.

இதர மாணவரை சந்தித்த வேளை ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கதையை வைத்திருந்தனர்.

ஒருவன்: மச்சான், ஊராடா அது. பாம்பு கடிச்சிடுச்சி மச்சி. (காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன் ஸ்டைலில் -- துரை மாதிரி போனேன், நுரை தள்ளி வந்தேன் என பாடினான்).

இன்னொருவன்: டேய், போறப்போ ஸ்டைலா ட்ரைனில் ஃபுட்போர்டில் கொஞ்சம் போனேன் மாமா. டிக்கெட் ஆய்வாளர் (TTR) அறை விட்டு பின்னிட்டார்டா. ரவுண்டு கட்டிட்டார். மொத்த பயணமும் மூட் அவுட் ஆயிடுச்சிடா... அந்த ஆளை மறுபடியும் பார்த்தேன், மவனே நுங்குடா அந்தாளு.

மற்றவன்: டேய், நான் போன ஊரில், கணக்கெடுக்க வந்தேன் என்பதற்கு அத்தாட்சியா அங்கிருந்த போலீஸ் நிலையம் போய் சப் இன்ஸ்பெக்டர் முன்னாடி நின்னேன் மாம்ஸ்.... சீல் வாங்கும் போது ஒரு கொலை கேஸ் மச்சி... அப்படியே கியாரா ஆயிடுச்சிடா.

வேறொருவன் (அவன் தாய்மொழி சௌராஷ்டிரா): "எத்தனை நாளா இந்த ஊர்ல வசிக்கிறீங்கனுதான் கேட்டேன் மச்சி... அந்த கேள்வி கணக்கெடுப்பில் இருந்தது... உடனே கட்டிப் போட்டுட்டாங்க..."

எங்களுக்கு முதலில் புரியவில்லை... அப்படி என்ன கேட்டான் அவன் என்று மண்டை காய்ந்தது. திரும்ப அந்த கேள்வியை எங்களை பார்த்து கேட்க சொன்னோம். அவன் கேட்டான். அந்த கடைசி வார்த்தையை கொஞ்சம் மாற்றி சொன்னான்... எங்களுக்கு மெதுவாக புரிய ஆரம்பித்து பேய் சிரிப்பு சிரித்தோம் (அவன் எப்படி அதை உச்சரித்தான் என்பதை இங்கு எழுத முடியாது).

ஒருத்தன் தடுப்பூசி பற்றி கேட்க போய், அந்த ஊர் பெரியவர்கள் அவ்வூருக்கு வரும் செவிலியர்களை (Anganwadi / NGO workers) வையத் தொடங்கி ரகளை ஆகி இருந்ததும் தெரிய வந்தது.

சிலரது பஸ்கள் பிரேக்டௌன் ஆகி நடந்து நூலானது பெரும் சிரிப்பலையானது.

ஒருவன் "கணக்கெடுப்பு முடிந்து நள்ளிரவு ஊர் திரும்புகையில் உண்மையாவே பேய் அடிச்சிருச்சிடா'' என பேஸ்த் அடித்தாற்போல வந்தான்.

Survey
Survey
பல இடங்களுக்கு நான் போனதுண்டு. இருப்பினும்... மானாமதுரை தந்த நினைவுகள் இன்றளவும் நெஞ்சில்!

அது போன்ற பல கணக்கெடுப்புகள் பின் வரும் நாட்களிலும் நடந்தன (வாசகருக்கு நினைவு இருக்கலாம் - அந்த 1989 தேர்தல் முடிந்து நடந்த ஆட்சி குறித்த காலத்தின் முன்பாகவே கலைக்கப்பட்டதன் விளைவாக). கோவை, கொளிஞ்சிவாடி, தாராபுரம், ஈரோடு, ஆண்டிக் கவுண்டன் புதூர், அய்க்கவுண்டன் புதூர், தருமபுரி என பல இடங்களுக்கு நான் போனதுண்டு. இருப்பினும்... மானாமதுரை தந்த நினைவுகள் இன்றளவும் நெஞ்சில்!

வட்டாரச் சொல் வழக்கு, மக்கள் எப்படி வாழ்கிறார்கள், கிராமங்கள் எவ்வாறு இயங்குகின்றன, அரசின் திட்டங்கள் / வசதிகள் ஆகியவை எவ்வளவு தூரம் அவர்களை எட்டி இருக்கின்றன, அவர்களின் எளிமை, ஆழ்ந்த சோகங்கள் போன்ற பலவற்றை உணர இந்த கருத்துக் கணிப்புகள் பெரிதும் உதவின.

- கணேஷ் வெங்கிட்டு