Published:Updated:

”ஷேம் ஆன் யூ ட்ரம்ப்!” துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மாணவியின் ஆவேச பேச்சு #ParklandShooting #GunSafety

”ஷேம் ஆன் யூ ட்ரம்ப்!” துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மாணவியின் ஆவேச பேச்சு #ParklandShooting #GunSafety
”ஷேம் ஆன் யூ ட்ரம்ப்!” துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மாணவியின் ஆவேச பேச்சு #ParklandShooting #GunSafety

மெரிக்காவின் பார்க்லாந்த் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பள்ளியில், கடந்த புதன்கிழமை (14.02.18), பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். இது, மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிறகு, சனிக்கிழமை நடைபெற்ற ஒன்று கூடலில், அந்தப் பள்ளியைச் சேர்ந்த எம்மா கன்சாலெஸ் என்பவரின் பேச்சு வைரலாகிவருகிறது. அதன் சுருக்கம் இங்கே... 

”நம்முடைய கீழ் சபையில் மௌன அஞ்சலி இன்னும் செலுத்தப்படவில்லை. எனவே, இங்கு நான் மௌன அஞ்சலியைச் செலுத்த விரும்புகிறேன். இந்த அரசாங்கமும் அதிபரும் நடந்தவற்றுக்காக அவர்களுடைய பிரார்த்தனைகளை மட்டுமே அனுப்ப முடிந்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள்தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும். அரசியல் சாசனத்தில் இரண்டாவது திருத்தம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, அதிகரித்திருக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை மயக்கத்தில் ஆழ்த்துகிறது. துப்பாக்கிகள் மாறியிருக்கின்றன. சட்டம் இன்னும் மாறவில்லை. விடுமுறை நாள்களில் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுவதற்குப் பதிலாக, ஆட்டோமேட்டிக் மற்றும் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளை வாங்குவதற்கு எது தூண்டுகிறது என்று எனக்குப் புரியவில்லை. ஃப்ளோரிடாவில் நீங்கள் ஒரு துப்பாக்கியை வாங்குவதற்கு எந்த வகையான அனுமதியும் தேவையில்லை. துப்பாக்கி லைசென்ஸும் தேவையில்லை. துப்பாக்கி வாங்கிய பிறகு, பதிவுசெய்ய வேண்டும் என்றும் அவசியமில்லை. ஒரே நேரத்தில் நீங்கள் எத்தனை துப்பாக்கிகளை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். 

நான் இன்றைக்கு, ஓர் ஆசிரியரின் பார்வையிலிருந்து இந்த சக்திவாய்ந்த வரிகளைப் படித்தேன். 'யாராவது தன்னிடம் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமை இருக்கிறது என்று சொன்னால், எனக்குத் தெரிவதெல்லாம், அந்தத் துப்பாக்கியின் உரிமை, இங்கிருக்கும் மாணவர்களின் வாழும் உரிமையைப் பறிக்கிறது என்பதையே. இந்தப் பள்ளியில் பல நாள்களாகத் துப்பாக்கி வைத்துக்கொள்வதுகுறித்த விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோதும், பைப்புகளுக்கு கீழ் ஒளிந்து இருந்தபோதும்கூட சிலர் இதுகுறித்து விவாதம் செய்துகொண்டிருந்தனர். இங்கு சிலர் செய்யும் ஒவ்வொரு நேர்காணல்களும், ட்விட்டுகளும், முகப்புத்தகப் பதிவுகளும், இது முதல் முறை நடப்பது போன்ற தோற்றத்தைத் தருகின்றன. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இது [துப்பாக்கிச் சூடு நிகழ்வு] 1000 முறை நடந்திருக்கிறது. 

Shootingtracker.com என்கிற ஓர் இணையதளத்தைப் பார்த்தேன். அது, அமெரிக்காவில் எங்கெல்லாம் துப்பாக்கிச்சூடு நடக்கும் என்று காட்டவில்லை. ஆனால், அது காட்ட வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன? 

ஆஸ்திரேலியாவில் 1999-ம் ஆண்டு, ஒரு பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. அதன்பின் ஆஸ்திரேலிய அரசு, துப்பாக்கிப் பாதுகாப்பை உறுதிசெய்தது. இன்றுவரை எந்தத் துப்பாக்கிச்சூடும் நடைபெறவில்லை. ஜப்பானில் இதுவரை பெரிய துப்பாக்கிச் சூடு நடைபெற்றதேயில்லை. கனடாவில் மூன்றும் இங்கிலாந்தில் ஒன்றும் நடைபெற்றது. அங்கே துப்பாக்கிப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால், நாம் இணையதளங்களை உருவாக்கிவருகிறோம். 

ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், உங்களுடைய குழந்தைளும் இதுபோன்ற பள்ளி துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாக வேண்டுமா என்கிற கேள்வியைப் பார்த்தேன். அரசாங்கத்துடன் நாம் பேசினால், யாருமே இதுபோன்ற துப்பாக்கிச்சூட்டை எதிர்கொள்ள வேண்டியதில்லை. இதற்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்றால், இன்னும் பல இறப்புகளைச் சந்திக்க நேரிடும். எனவே, ஏதாவது செய்திட இதுதான் நேரம். நாம் வரலாற்றில் இடம்பெறவிருக்கிறோம். மற்றொரு துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அல்ல; நாம்தான் இதில் கடைசியாக இருக்கப்போகிறோம். நாம், இந்தப் பள்ளியின் போர்டு, ஆசிரியர்கள், மாணவர்கள் என்றும் தொடர் முயற்சியால் அதைச் செயல்படுத்துவோம். மாணவர்கள்... விபத்தில் இறந்த மாணவர்கள், இன்னும் வீடு திரும்பாமல் மருத்துவமனையில் இருக்கும் மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள், 24 மணி நேரமும் ஹெலிகாப்டர்கள் பள்ளியைச் சுற்றி வருவதால், நினைவேந்தலின்போது பேனிக் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்று அனைவருமே இதைச் செய்ய வேண்டும். 

சிலர் ,அந்த மாணவருக்கு உளவியல் ரீதியிலான சில சிக்கல்கள் இருந்தன. இதுபோன்ற விஷயங்களை உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும் என்கிறார்கள். நாங்கள் அப்போதே செய்தோம். அவனைத் தெரிந்த யாருக்குமே அவன்தான் துப்பாக்கிச்சூட்டைச் செய்தவன் என்பதில் எந்த ஆச்சர்யமும் இருக்காது. உங்களுக்கு அவனைத் தெரியாது. ஆனால், எங்களுக்கு அவனைத் தெரியும். நான் ஒரு மனநிலை நிபுணர் கிடையாது. ஆனால், இது வெறுமனே மனநிலை பாதிக்கப்பட்ட விஷயம் மட்டுமே கிடையாது. நாம் எப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களையே திட்டுவதை நிறுத்தப்போகிறோம்? அவனைத் தெரிந்தவர்கள், அவன் துப்பாக்கி வாங்குவதை அறிந்தவர்கள், அவனுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள், அவன் இதுபோன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியபோதே பேசாதவர்களின் குற்றம்தான் இது. 

என்னிடம் அதிபர்,  ‘இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருக்கக் கூடாது’ என்று சொல்லிவிட்டு, இதுகுறித்து ஒரு நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்பதைத் தெரிவிப்பாரானால், தேசிய துப்பாக்கிச் சங்கத்திலிருந்து எவ்வளவு பணத்தை லஞ்சமாகப் பெற்றார் என்று கேட்கப்போகிறேன். அதற்கு அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில், எனக்கு ஏற்கெனவே தெரியும்... 30 மில்லியன் டாலர்கள். கடந்த ஒன்றரை மாதங்களில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கையோடு அதை மதிப்பிட்டால், 5800 டாலர்கள் ஒருவருக்கு வருகிறது. எங்களது உயிருக்கு அவ்வளவுதான் மதிப்பா ட்ரம்ப்

இதற்கு மேலும், துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றால், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடும். அவர்களுடைய உயிர்களுக்கான மதிப்பு குறையும். எங்களுடைய வாழ்க்கை மதிப்பில்லாமல் போகத் தொடங்குகிறது. தேசிய துப்பாக்கிச் சங்கத்திலிருந்து பணம் பெறும் எல்லா அரசியல்வாதிகளையும் நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்று உணர்வு பொங்க அந்த மாணவி பேச, 'ஷேம் ஆன் யூ' என்று மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது.