Published:Updated:

அகதிகளின் பிறப்பிடமா திருவண்ணாமலை... அங்கே என்ன நடக்கிறது?

கூலி வேலைகளுக்காக இந்தியப் பெருநகரங்களுக்குப் படையெடுப்பதில் திருவண்ணாமலை மாவட்டத்தினர் அதிகம் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு பல அதிர்ச்சிகளைக் கடந்துவர வேண்டியிருந்தது.

அகதிகளின் பிறப்பிடமா திருவண்ணாமலை... அங்கே என்ன நடக்கிறது?
அகதிகளின் பிறப்பிடமா திருவண்ணாமலை... அங்கே என்ன நடக்கிறது?

சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்துகொண்டிருந்த இளைஞருடன் பேச நேர்ந்தது. சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் எனவும் அங்கே எதுவும் வேலை வாய்ப்பு இல்லாததால் வேலைக்காக சென்னை வந்துவிட்டதாகச் சொன்னார். "நான் இந்த வேலை செய்றேன்னு வீட்டுக்குத் தெரியாது" எனத் தாழ்ந்த குரலில் அவர் சொல்லும்போதிருந்த பலவீனத்தின் அதிர்வு இன்னும் எனக்குள் இருக்கிறது. அதற்கடுத்த சில நாள்களில் வளசரவாக்கத்தில் நண்பரொருவரை சந்திக்கச் சென்றபோது அவருக்காகக் காத்திருந்த நேரத்தில் எதிர்வீட்டில் கட்டட வேலை செய்துகொண்டிருந்த நடுத்தர வயதுடையவரிடம் பேச்சுக்கொடுத்தேன். சொந்த ஊரைப் பற்றிச் சொல்லும்போது அவரும் திருவண்ணாமலை என்றார். அடுத்து சில வாரங்களில் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. படுக்கையில் இருந்த நோயாளி ஒருவரின் கழிவை ஓர் இளம்பெண் சுத்தம் செய்து கொண்டிருந்தார். எல்லாம் கழுவி முடித்து நோயாளியைப் படுக்க வைத்துவிட்டு ஓர் ஓரமாக நின்றபடி அந்தப் பெண் தோழிகளுடன் சிரித்தபடி காகிதக் கோப்பையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார். ``நீங்கள்லாம் எந்த ஊரு" எனக் கேட்டேன். எதிப்பார்த்தது போலவே திருவண்ணாமலை என்றார்கள். அதிர்ச்சி அடைவதா ஆச்சர்யம் கொள்வதா என்று சரியாக வெளிப்படுத்த முடியாத உணர்வுநிலையில் இருந்தேன். மேற்கொண்டு அவர்கள் என்னிடம் பேசமுடியாத மருத்துவச் சூழலில் அவர்களிடமிருந்து விடைபெற்றேன். 

சந்தித்த ஒவ்வொருவரும் திருவண்ணாமலை என ஒன்றுபோல சொல்வதற்கு பின்னணியில் இருப்பது என்ன என்கிற கேள்வி எழுந்த சில நாள்களில் மேற்படி எந்த யோசனையும் இல்லாமல் திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டேன். திருவண்ணாமலையில் எந்த கிராமத்து மக்கள் இப்படியான வேலைகளுக்காக அதிகம் இடம்பெயர்கிறார்கள் என ஊர்க்காரர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கொடுத்த பட்டியலில் அம்மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள் இருந்தன. அந்த அதிர்ச்சியுடனேயே பயணப்பட்டோம். அண்ணாமலையார் கோவிலைச் சுற்றியிருக்கும் பரபரப்பான திருவண்ணாமலையைத் தாண்டி பயணப்பட்டால் வறண்ட நிலங்களினூடாக ஆங்காங்கே இருக்கும் குக்கிராமங்களில்தாம் இம்மாவட்டத்தின் உண்மையான நிலை தெரிகிறது. 

முதலில் நடுப்பட்டி என்கிற கிராமத்துக்குச் சென்றோம். வழிகேட்பதற்குக் கூட ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன கிராமங்கள். தோலைப் பொசுக்கும்படியான வெயிலில் ஆங்காங்கே தெரியும் நிழலில் தளர்ந்துபோன முதியவர்களே புருவத்தைச் சுருக்கி வருவோர் போவோரை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தாற்போல் சிறுபிள்ளைகள் பள்ளிச்சீருடையில் நடமாடியபடியும், சைக்கிள் ஓட்டியபடியும் யாரையும் பொருட்படுத்தாத வேகத்தில் வியாபித்திருந்தார்கள். நடுத்தர வயது ஆண்களையோ, பெண்களையோ காண்பது அரிதாக இருந்தது. அவர்கள் அனைவரும் வெளியூருக்குத்தான் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களில் சிலரைத்தான் தற்செயலாகச் சென்னையில் சந்தித்திருக்கிறேன் என நினைத்துக்கொண்டேன்.

கட்டட வேலை செய்பவர்களாக, துப்புரவுத் தொழிலாளிகளாக, சாலைப் போடுபவர்களாக, கேட்ரிங் வேலைகளுக்காக, காய்கறிச் சந்தைகளில் சுமை தூக்குபவர்களாக, உணவகங்களில், மருத்துவமனைகளில் ஹவுஸ் கீப்பிங் செய்வதற்காக, அப்பார்ட்மென்ட்களில் வீட்டு வேலைக்காக, முதியவர்களைப் பராமரிப்பவர்களாக, படப்பிடிப்புத் தளங்களில் சமையல் செய்பவர்களாக என இன்னும் இதுமாதிரி பல வேலைகளுக்காக இந்தியப் பெருநகரங்களுக்குப் படையெடுப்பதில் திருவண்ணாமலை மாவட்டத்தினர் அதிகம் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு பல அதிர்ச்சிகளைக் கடந்துவர வேண்டியிருந்தது.

``எம் பேரு சோனு. எங்க அம்மா பாம்பேல மிக்ஸி தயாரிக்கிற இடத்துல வேலை செய்றாங்க எப்போவாது வருவாங்க. எங்க தாத்தாகூடதான் தங்கி இருக்கேன்" என்கிறாள் நான்காவது படிக்கும் அந்தச் சிறுமி. "எங்கப்பம்மாகூட சென்னையிலதான் பில்டிங் வேலை செய்றாங்க" என ஒருசேர குதூகலக்குரலில் சொல்கிறார்கள் சுஸ்மிதாவும், நரேஷும். "எங்க அம்மா, இந்தியாவுல தாண்டி குவைத்ல வேலை செய்றாங்க தெரியுமா? வருசவருசம் ரம்ஜானுக்கு வந்துடுவாங்க" என்று அவர்களை பழிப்புக் காட்டுகிறாள் தர்ஷினி. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கொளக்குடி கிராம ஊராட்சி தொடக்கப் பள்ளி மாணவ மாணவியர்களில் சிலருடைய குரல்கள்தாம்  இவை. 

``மற்ற கிராமங்களோட ஒப்பிடும்போது நடுப்பட்டு, கொளக்குடி, ஆண்டாப்பட்டு, கண்ணப்பந்தல், அழகாந்தல், மாத்தூர், மேல மாத்தூர், வடமாத்தூர், நத்தவாடி, பெரியகுளம் இந்த ஊர்கள்ல இருந்து ஜனங்க அதிகமும் வெளியூருக்குப் போயிருக்காங்க. இது இன்னைக்கு நேத்து இல்ல, நாப்பது வருஷமா எங்க மாவட்ட ஜனங்களுக்கு இதுதான் நிலைமை. ஒரு சின்னத் தொழிற்சாலைகூட இங்க இல்லை. படிச்ச பசங்க வேலைக்குப் போறதுக்கு ஒரு சின்ன கம்பெனிகூட இல்லை. அதனாலத்தான் படிச்சவங்க, படிக்காதவங்கன்னு எல்லோரும் வெளியூரைப் பாத்து போயிட்டு இருக்கோம். யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்க நிலைமை இதுதான்" என்கிறார் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி.

``கேரளாவுல ரோடு போடுற வேலைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. மூணு வேளை சோறு போட்டு நானூற்று எண்பதுருபா கூலிங்க. இந்தச் சம்பளத்துக்கு எவ்ளோ அல்லோலகல்லோலப்பட வேண்டியிருக்கு தெரியுமா" எனத் துயரப்படுகிறார்கள் சமீபத்தில் ஊர் திரும்பியிருக்கிறவர்கள்.

போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல், கரும்பு, கடலை. செங்கம் பகுதியில் கடலை, பூ, நெல், கரும்பு. ஆரணி பகுதியில் கடலை, காய்கறிகள், கீரைகள். வந்தவாசி செய்யாறு பகுதியில் சவுக்கு மரங்கள், நெல், கரும்பு. காஞ்சி மற்றும் புதுப்பாளையம் பகுதியில் பூ, கரும்பு, கத்திரிக்காய், வெண்டை, போன்ற காய்கறிகள் என ஒவ்வொரு பகுதிக்கென்று பிரத்தியேகமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது திருவண்ணாமலை மாவட்டம். ஆனால், நீண்டகாலமாக அங்கே மழை பொய்த்துப்போனதால் விவசாயத்தை நம்பி வாழ்ந்த பலபேர் வெளியூர்களுக்குக் கூலி வேலைகளுக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள்.

மேல் சோழங்குப்பம், கெங்கவாரம், கிழ்குப்பம், கேட்டவராம்பாளையம், தென் மாதிமங்கலம் கிராம மக்கள் கட்டட வேலைக்கும். தண்ராம்பட்டு அடுத்த ராதபுரம் முஸ்லிம் மக்கள் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு வீட்டு வேலைக்கும், நம்மியந்தல் கிராம மக்கள் சினிமா தியேட்டர் கேன்டீன் வேலைக்கும், கடலாடி, புதுப்பாளையம் கிராம மக்கள் திருப்பூர் பனியன் கம்பெனிக்கும் மற்றும் மும்பை போன்ற இடங்களில் வீட்டு வேலைக்கும், செய்யாறு, வந்தவாசி பகுதியில் உள்ள பெரும்பாலான எல்லாக் கிராம மக்களும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கும், செங்கம், தானிப்பாடி பகுதியில் உள்ளவர்கள் பெங்களூரு மார்கெட்டில் மூட்டைத் தூக்குவதும், மற்றும் கட்டட வேலைக்கும் செல்கிறார்கள். ஊருக்கு ஒரு விவசாயம் என்று செய்து கொண்டிருந்த மக்கள் தற்போது ஊருக்கு ஒரு வேலை எனப் பிழைப்புக்குச் செல்கிறார்கள்.

இதொரு பக்கமிருக்க கிராமங்களில் இருக்கும் சொற்பமானவர்களையும் குடிப்பழக்கம் பெரிதும் அரித்து வருகிறது. ``டவுன்ல சரக்கு வாங்கியாந்து இங்க ஆளாளுக்கு மளிகைக்கடையில, வூட்லன்னு வெச்சு விக்கிறாங்க. கடனுக்கும் சரக்குக் கொடுக்கிறதால இஷ்டத்துக்கு வாங்கி குடிச்சுட்டு கடன்காரனா திரியுறாங்க. உடம்பையும் கெடுத்துட்டு குடும்பத்தலயும் சண்டை, சச்சரவு செஞ்சு நாசம் பண்றானுங்க. எங்க ஊருக்கு நல்லது பண்றதா இருந்தா ஊர்ல சாரயாத்தை ஒழிச்சா போதுங்க" எனக் கும்பிடுகிறார் மேல்மாத்தூரைச் ஒரு பெண்மணி.

``வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதில் வேறுமாதிரியான சிக்கல்கள் ஏற்படுது. 
அதுல முக்கியமானது அவங்களுக்கு இழைக்கப்படுகிற பாலியல் வன்கொடுமைகள். சென்னை, பெங்களூரு, மும்பை மாதிரியான நகரங்களில் உள்ள பணக்காரர்கள் வீட்டுக்கு வீட்டுவேலை செய்றதுக்கு இங்க இருந்து நிறைய சின்னைப் பிள்ளைக போறாங்க. அவங்க பாலியல் ரீதியான துன்புறுத்தப்பட்டு ஊர் திரும்பின கதைங்க ஏராளம். ஆனா யாரும் அதை வெளிய சொல்றதோ, போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கிறதோ இல்லைங்க" என்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் உரிமை அமைப்பைச் சார்ந்த ராஜம்மாள்.

சென்னையிலுள்ள பிரமாண்டமான ஜவுளிக்கடைகளுக்கு அதிக சம்பளம் என சிறுமிகளைக் கூட்டிக்கொண்டு போய் முறையான உணவும், இருப்பிடமும் கொடுக்காமல், சொல்லி அழைத்துச் சென்ற சம்பளமும் தராமல் ஏமாற்றப்பட்டவர்களின் அழுகையைப் பார்க்க முடியவில்லை. ``திரும்ப அங்கதான் வேலைக்குப் போகணும். எங்க பேரோ, ஊரோ போட்டுடாதீங்க" என அவர்கள் வைத்த வேண்டுகோள் இன்னும் துயர்மிகுந்ததாக இருந்தது.

``எழுந்துக்க முடியாத ஒரு பெரியவர் இருக்காரு. ரொம்ப வயசானவரு. அவரை எழுப்பிவிட சாப்பாடு கொடுக்க, உதவியா இருக்க ஆளு வேணும்னு கேட்டாங்க. வீட்ல என்னை அனுப்பி வெச்சாங்க. ஒரு வாரத்துல சென்னையில இருந்து தப்பிச்சு ஊருக்கு வந்துட்டேன்" என்ற சிறுமி சிலநொடிகள் அமைதியாக இருந்துவிட்டு "அந்த தாத்தா எங்கங்கயோ தடவுனாரு" என்று அழ ஆரம்பித்தாள்.

திருப்பூருக்கு வேலைக்குச் சென்ற பெண், உடன் பணிபுரிபவர்களால் வல்லுறவுக்கு ஆக்கப்பட்டு பிணமாகத்தான் போனவருடம் வீடு திரும்பியிருக்கிறார். திருவண்ணாமலையில் எந்தக் கிராமத்துக்குச் சென்றாலும் இதுபோன்ற கதைகளைக் கேட்க முடிகிறது. பெண்களும், சிறுமிகளும் தங்களைப் பாதித்த கதைகளைச் சொல்லாமல் காக்கின்ற மௌனம் இன்னும் துயர் மிகுந்ததாக இருக்கிறது.

வேலைக்காக இடம்பெயர்வது பல ஆண்டுகளாகத் திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. பிள்ளைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்கள் தம் குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டாமல், அந்தப் பிள்ளைகளும் சரியான படிப்பின்றி கூலி வேலைக்கே செல்லும் அவலம் அங்கே நிகழ்கிறது.

``வயசுப் பிள்ளைகளை விட்டு நாங்களும் எங்கும் வேலைக்குப் போவ முடியல. அடுத்தவங்களை நம்பி, பிள்ளைங்களையும் எங்கும் வேலைக்கு அனுப்ப முடியல. இங்கேயே எங்களுக்கு ஏதாவது ஒரு சின்ன வேலை கிடைச்சா கூட போதும்" என்று நெஞ்சில் கை வைத்து சோர்வடைகிறார் ஒருவர்.

ஊரில் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், போதிய வேலைவாய்ப்பு அங்கேயே இல்லை. செய்யாறு சிப்காட் இருக்கிறதென்றாலும் பலரும் வேலை செய்யக்கூடிய இடமாக அது இல்லை என்கிறார்கள் ஊர்வாசிகள். 

``எ.வா வேலு, கு.பிச்சாண்டி இவங்க நிறைய மாற்றங்களை இங்க கொண்டுவந்தாங்க மறுக்கிறதுக்கு இல்லை. ஆனா, ஒரு சின்ன எக்ஸ்போர்ட் கம்பெனிகூட இங்க இல்லை. எந்தத் தொழிற்சாலைகளும் இல்லை. மக்கள் என்ன செய்வாங்க. குறிப்பிட்ட விவசாயம் மட்டுமே தெரிஞ்ச ஜனங்களுக்கு மாற்றுப் பயிர்கள் குறித்த போதிய விழிப்பு உணர்வை அரசாங்கம் ஏற்படுத்தணும். தொழிற்கூடங்கள் கொண்டுவந்து மக்கள் மேற்கொண்டு இடம்பெயராமல் பார்த்துக்கணும். தமிழகத்தில குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டுமே விரிவடைவது வளர்ச்சி அல்ல வீக்கம்ங்கிறதை தமிழக அரசு உணரணும். இல்லாட்டி வேலைதேடி வெளியூருக்குச் செல்லும் அகதிகளோட பிறப்பிடமாகத்தான் திருவண்ணாமலை இருக்குங்கிறது ஒருபோதும் மாற்றமுடியாத உண்மையாகிடும்" என்கிறார் சமூக ஆர்வலர் சிவா. 

திருவண்ணாமலையில் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகள் 14 இருக்கின்றன; பொறியியல் கல்லூரிகள் 13 இருக்கின்றன; பாலிடெக்னிக் கல்லூரிகள் 14 இருக்கின்றன. பெரிய அளவிலான தொழிற்கூடங்கள், நுண் தொழிற்கூடங்கள், சிறு தொழிற்கூடங்கள், கைவினைத் தொழிற்கூடங்கள், குடிசைத் தொழில்கள் எனத் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. இவ்வளவு இருந்தும் திருவண்ணாமலை இளைஞர்களும், இளம் பெண்களும், நடுத்தர வயது ஆண்பெண்களும் குடும்பம், சொந்தபந்தம், குழந்தைகளைவிட்டுக் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியூர்களுக்கு இடம் பெயரும் தேவையை அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் சிந்திக்க வேண்டும். வெளியூரிலிருந்து வருபவர்கள் ஆன்மிக தரிசனம் செய்வதற்கான இடமாக மட்டுமே அல்லாமல் சொந்த மனிதர்கள் தன் சொந்த கிராமத்தில் தங்கி வாழ்வதற்கான இடமாகவும் திருவண்ணாமலை மாற வேண்டும்.