Published:Updated:

அன்றைவிட இன்று பெரியார் நமக்கு ஏன் மிகவும் தேவை!? #Periyar140

அன்றைவிட இன்று பெரியார் நமக்கு ஏன் மிகவும் தேவை!? #Periyar140
அன்றைவிட இன்று பெரியார் நமக்கு ஏன் மிகவும் தேவை!? #Periyar140

அண்மையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 அழித்தொழிக்கப்பட்ட நிலையில், ஒரு ட்வீட் எதேச்சையாக கண்ணில்பட்டது.

'பிரிவு 377 அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. இனி நாம் அனைவரும் சுதந்திரமாக நமது சாதிக்கு உட்பட்டு எந்த பாலினத்தவரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்'

இந்த நகைமுரணான பதிவு நிச்சயம் சமூகத்தின் மீது காரி உமிழ்வதாக இருந்தது. ஏனென்றால், அடுத்த சில தினங்களிலேயே ஆந்திர மாநிலம் நல்கொண்டாவில் சாதி மறுத்துக் காதல் திருமணம் செய்துகொண்டதால், கர்ப்பிணி மனைவியின் முன்னிலையிலேயே  அவரது கணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியது அந்தப் பெண்ணின் தந்தை!

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த ருக்சார் என்கிற பெண்ணை மணம் புரிந்துகொண்ட சஞ்சய் என்பவர் பெண் வீட்டாரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சஞ்சய் இறந்த சமயம் ருக்சார் எட்டு மாதங்கள் கர்ப்பமாக இருந்திருக்கிறார்.  

2015 ஆம் வருடம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற இளைஞர் ரயில் தண்டவாளத்தின் அருகே பிணமாகக் கிடந்தார். வேறு சாதியைச் சேர்ந்த ஸ்வாதியும் கோகுல்ராஜூம் காதலித்ததுதான் இந்தக் கொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டது. குறிப்பிட்ட சாதிய அமைப்பு ஒன்றை நிறுவி நடத்திவந்த யுவராஜ், இதில் முதன்மைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். மூன்று வருட காலமாக நடந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் தற்போது நீதிமன்றத்தில் சாட்சியம் கூறி இருக்கும் ஸ்வாதி, கோகுல்ராஜை தனக்குத் தெரியவே தெரியாது என்று குறிப்பிட்டிருக்கிறார். கோகுல்ராஜ் யாரென்பதே தெரியாது எனக் கூறுவதற்கு அவருக்கு மூன்று வருடகாலம் தேவைப்பட்டிருப்பது முரண். இத்தனை ஆண்டுகாலமாகச் சாதியும் மதமும் மனிதனைச் சாக்கடையும் மிருகமுமாக ஆக்கியிருப்பதற்கு மேலே குறிப்பிட்டிருப்பவை சில உதாரணங்கள் மட்டுமே.

ஆங்கிலேயர்களிடமிருந்து சுய அதிகாரச் சுதந்திரத்தை 200 ஆண்டுகள் போராடிப் பெற்றோம். பாலினம் மறுத்து திருமணம் செய்யலாம் என்கிற சுதந்திரத்தை பத்துவருட காலம் போராடிப் பெற்றிருக்கிறோம். சாதி மறுத்துத் திருமணம் செய்யலாம்… சாதி, மதம் ஒழித்து அன்பு செய்யலாம் என்பதற்கு காத்தவராயன் காலம் தொடங்கி இன்றுவரைப் போராடிக் கொண்டிருக்கிறோம்.  இங்கு நமக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம் மற்றும் தனிமனித வளர்ச்சி முதல் கார்ப்பரேட் வளர்ச்சிகள் முடிய அனைத்துமே சாதி வரையறைக்குள் அடங்கியதுதான் என்பதால் யாரும் சாதி ஒழிப்பு பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. பிறப்பு தொடங்கி இறப்பு முடிய நமக்குத் தேவையான அத்தனைச் சலுகைகளையும் அரசாங்கம் சாதி வரையறைக்குள்ளேயே வழங்கிவிடுகிறது. இதற்கு மறுப்பு கூற நினைத்தால், தமிழகத்தின் ஏதோ ஒரு கோடியில் அரசுப்பள்ளியில் படித்த பிரதீபாவுக்குக் கல்விக்கனவு மறுக்கப்பட்டதற்கும் மத்தியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பலருக்கு அவர்கள் கனவு காணாமலேயே கிடைத்த மருத்துவச் சீட்டுகளுக்கும் பின்னணியில், கல்வியின் மீது அரசால் திணிக்கப்பட்ட சாதிய வர்க்க மனோநிலை இல்லை என்று உங்களால் அடித்துச் சொல்ல முடியுமா?

''சமுதாயத்தில் நலம் ஏற்பட வேண்டுமானால் சாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதியை ஒழிக்கக் கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சி, சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லத் தைரியமுள்ள ஆட்சியே தவிர, சாதியை ஒழிக்கத் தைரியமுள்ள ஆட்சி அல்ல” என்கிறார் தனது சாவின் வரை தனது மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சாதிக்கு எதிராய் குரல்கொடுத்த பெரியார். சாதி ஒழிக்கப்பட்டுவிட்டால் இங்கு தேர்தலற்ற ஜனநாயக ஆட்சி சாத்தியப்பட்டுவிடக் கூடும் என்பதால், இங்கு சாதி அரசியலும் சாதியின் பெயரிலான அரசியலும் நிகழ்த்தப்படுகிறதே ஒழிய சாதி ஒழிப்பு பற்றி தேர்தல் அரசியலுக்கு பெரிதும் அக்கறை இருப்பதாகப் புலப்படவில்லை. இல்லையென்றால், இங்கு ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டங்கள் எப்போதோ வடிவம் பெற்றிருக்கும். இளவரசன்களுக்கும் கோகுல்ராஜ்களுக்குமாக பல ஆண்டுகாலப் போராட்டம் தேவைப்பட்டிருக்காது.

'சாதி இல்லை… சாதி இல்லவே இல்லை' என்று அடித்துச் சொல்பவர்களும் 'இப்பலாம் யாருங்க சாதி பாக்குறா?’ என்கிற க்ளிஷேக்களில் அடைபட்டுக்கிடப்பவர்களும் மலம் அள்ளுபவர்களில் வேற்று சாதிக்காரர்கள் ஒருவரையேனும் கைகாட்டிவிடமுடியுமா? அரசின் தரவுகள்படி நமது நாட்டில் கையால் மலம் அள்ளும் தொழிலாளிகள் இல்லவே இல்லை. அது ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நாட்டின் தலைநகரான டெல்லியைச் சேர்ந்த ஐந்து தொழிலாளிகள் அண்மையில், பாதாளச் சாக்கடை ஒன்றில் இறங்கிச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இறந்தது குறித்து இதே அரசதிகாரம் எந்த வகையில் நியாயம் கற்பித்துவிட முடியும். தேர்தல் அரசியலில் இருக்கும் அதிகாரங்களுக்கு அவர்களது வாக்கு வங்கிகளுக்காக பிரச்னை தீர்வு எட்டப்படாமல் நீட்சியாய்த் தேவைப்படுகிறது என்பதுதான் நிதர்சனம்.  

அத்தகைய சூழல்களில் தீர்வுக்காகப் போராட்டங்கள் தேவையாக இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்யும் மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது என்று ஒருபக்கம் ஆட்சியில் இருப்பவர்களால் குற்றம்சாட்டப்பட்டாலும் காவிரி நீர் தொடங்கி ஸ்டெர்லைட் விவகாரம் வரை பல ஆண்டுகளாக நீண்டுகொண்டே சென்ற பெரும்பாலான மக்கள் பிரச்னைகளுக்கு ஜனநாயக முறைப்படிக் கிடைக்கப்பெறாதத் தீர்வைப் போராடித்தான் பெறவேண்டியதாக இருந்தது. பெரியாரும் இதைத்தான் அனுபவத்தின் மூலமாக அறிவுறுத்தினார். ‘'ஜனநாயகத்தின் மூலமாகப் பித்தலாட்டத்தை ஒழிக்க முடியாது. பெண்களுக்கான சொத்துரிமையையும் ’தாசிகள்’ என்கிற ஒரு சாதியை ஒழிக்க தேவதாசி ஒழிப்புச் சட்டமும் கொண்டுவரும்படியான நிலைமையை போராட்டங்களின் வழியாகத்தான் ஏற்படுத்தினோம்.குலக்கல்வி திட்டத்தைக்கூட போராட்டத்தினால்தான் ஒழிக்க முடிந்தது’' என்கிறார். ஒருவேளை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டம் என்பது நடைபெறாமல் போயிருந்தால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெறப்பட்ட புதுப்பிக்கப்படாத உரிமம் கொண்டே இன்றும் அந்த ஸ்டெர்லைட் ஆலை இயங்கி இருக்கும். தேர்தல் அரசியல் விளைவித்த இதுபோன்ற குழப்பங்களுக்கே அறப்போராட்டங்கள்தான் தீர்வு என்னும் நிலையில், ஜனநாயகத்தால் கைவிடப்பட்ட… கார்பரேட் தேசம் பூசிமறைத்துவிட்ட சாதி, மதச் சமூக அரசியலைப்  பற்றி நினைவூட்ட... 140 ஆவது ஆண்டிலும் பெரியாரின் சிந்தனைகள் சார்ந்த செயல்பாடுகள்தான் தேவையாக இருக்கிறது. 

மற்றபடி… இன்ன சாதி என்பதாலேயே அவர்கள் குழிக்குள் இறங்கி நமது மலத்தை அள்ளிக் கொண்டிருக்கும்போதும், இன்ன சாதி என்பதாலேயே அவர்கள் அங்கே வெட்டுபட்டுக் கிடக்கும்போதும், இன்ன சாதி என்பதாலேயே அவர்கள் அங்கே தூக்குக் கயிறில் தொங்கியபோதும்... ஒருபக்கம் மனிதர்களைப் பறிகொடுத்துக்கொண்டு புதிய இந்தியாவின் பிறப்பைச் சிலாகிப்பது என்பது பெரியாரின் வார்த்தைகளிலேயே சொல்லவேண்டுமென்றால், ''வெங்காயம்!''