Published:Updated:

தெய்வ நிந்தனைச் சட்டமும் (295 AA) ஜின்னாவின் எச்சரிக்கையும்!

இந்தியச் சாதிமுறை, தீண்டாமை ஆகிய சமூகக் கொடுமைகளை எதிர்த்து நின்ற தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்றோரும் வேதங்கள் இராமாயணம் முதலானவற்றின் மீது விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். இந்தப் புதிய சட்டத்தின்படி அவையும் இன்று ஆயுள் தண்டனைக்குரிய குற்றங்கள் ஆக்கப்படலாம்.

தெய்வ நிந்தனைச் சட்டமும் (295 AA) ஜின்னாவின் எச்சரிக்கையும்!
தெய்வ நிந்தனைச் சட்டமும் (295 AA) ஜின்னாவின் எச்சரிக்கையும்!

ந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள `தெய்வ நிந்தனைச் சட்டம்' எனப்படும் 295 A பிரிவில் பஞ்சாப் அரசு ஒரு திருத்தத்தை (295 AA) நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஏற்கெனவே இங்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் தொடங்கி இருந்து வருகிற 295 A சட்டத்தின்படி யாரொருவரும் எந்த ஒரு மதத்தினரின் நம்பிக்கையையும் இழிவு செய்தாலோ புண்படுத்தினாலோ அவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் அளிக்க முடியும். இப்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி யாரொருவரும் ``ஶ்ரீ குரு கிரந்த சாஹிப், ஸ்ரீமத் பஹவத் கீதை, புனித குர்ரான் அல்லது புனித பைபிளை, அவற்றைப் பின்பற்றும் மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் நோக்குடன் அவமானப் படுத்தினாலோ, நாசம் விளைவித்தாலோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை" வரை வழங்கலாம். பஞ்சாப் மக்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துகிறவர்களுக்கு மூன்றாண்டு தண்டனையும், வெளிப்படையாகக் கடவுளரை அல்லது புனித நூlகளை அவமதிப்போர் அல்லது எரிப்போருக்கு ஆயுள் தண்டனைவரையும் அளிக்கலாம் என்றாகிறது.

பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள இந்தச் சட்டத் திருத்தம் தேவையற்றது என்கிற கருத்து சஞ்சய் ஹெக்டே போன்ற சட்ட வல்லுநர்களால் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் போன்றோராலும் முன்வைக்கப்படுகிறது. இது நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளான மதச்சார்பின்மை கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதிக்கும் என்பது இந்தத் திருத்தம் தேவையற்றது எனச் சொல்வோர்களின் வாதம். ஏனெனில் இந்தத் திருத்தத்தில் ``புனித நூல்களை இழிவு செய்வது குற்றம்" எனத்தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர எந்த வழியில் இழிவு செய்யப்படுவது என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனவே இழிவு செய்வது என்பது புனித நூல்களை எரிப்பது, அசிங்கப்படுத்துவது என்பதோடு நின்றுவிடாமல் அவை குறித்து அறிவுசார்ந்த முறையில் ஆய்வு செய்வது, விமர்சனங்களை முன்வைப்பது ஆகியனவும் கூட, ஒரு மதச்சார்பு அரசால், ஒருவரைப் பழிவாங்கப் பயன்படுத்தப்படலாம்.  

எடுத்துக்காட்டாக உலக அளவில் மதிக்கப்படும் அறிஞர் ஏ.கே. ராமானுஜனின் ``முந்நூறு இராமாயணங்கள்" நூலுக்கு இந்துத்துவவாதிகள் தெரிவித்த எதிர்ப்பையும் அதன் விளைவாகப் பல்கலைக் கழகம் ஒன்றின் பாடத் திட்டத்திலிருந்து அது சில ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்டதையும் சொல்லலாம். இந்தப் புதிய சட்ட வரைவின்படி ராமானுஜம் ஒருவேளை உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு ஆயுள் தண்டனையே வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் ராமானுஜத்தின் அந்த நூல் உலகளவில் அறிஞர்களால் போற்றப்படும் ஒரு முழுமையான ஆய்வு நூல். இராமாயணம் தென் கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் பயிலக்கூடிய ஒரு காவியம். பல்வேறு வடிவங்களில் அது இன்று ஆங்காங்கு வழங்கப்படுகிறது. ஜைன இராமாயணத்தில் இராமனும் சீதையும் சகோதர உறவுடையோர். தென் கிழக்காசிய நாடுகளில் இராவணனின் மகளாக சீதை ஏற்கப்படுகிறார். கோண்டு இன மக்கள் மத்தியில் இராவணன் அவர்களின் கடவுள். பவ்லா ரிச்மான் போன்றோரும் இராமாயணத்தின் இந்தப் பன்மைத்தன்மை குறித்துப் பேசியுள்ளனர். இதெல்லாம் இச்சட்டப்படி இப்போது குற்றமாக்கப்படலாம்.

இது ஏதோ இராமாயணத்துக்கு மட்டுமல்ல. எல்லா மதங்களிலும் இப்படியான பிரச்னைகள் உண்டு. பைபிளின் காலம், பைபிளின் பிற்காலப் பதிப்புகளில் நீக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட பகுதிகள் என்பன குறித்தெல்லாம் பல விமர்சனங்கள் உண்டு. பைபிள் சார்ந்த மாற்றுக் கருத்துகள் (controversies) என்றே விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை உண்டு. ஏசுவின் சீடர்களில் ஒருவர் பெண் எனவும், மரியா மக்தலேனாவுக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவு குறித்தும் கூடப் பல மாற்றுக் கருத்துகள் உண்டு. அதே போல திருக்குரான் ஆயத்துகளுக்கும் வழக்கமான பொருளுரைப்பிலிருந்து வேறுபடும் பொருள் உரைப்புகளையும் இப்போது சிலர் முன்வைக்கின்றனர்.

இந்தியச் சாதிமுறை, தீண்டாமை ஆகிய சமூகக் கொடுமைகளை எதிர்த்து நின்ற தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்றோரும் வேதங்கள் இராமாயணம் முதலானவற்றின் மீது விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அவையும் இன்று ஆயுள் தண்டனைக்குரிய குற்றங்கள் ஆக்கப்படலாம்.

பாகிஸ்தானில் இவ்வாறு இதே 295 வது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் எத்தகைய மோசமான விளைவுகளுக்கும், அரசியல் பழிவாங்கல்களுக்கும் பயன்படுத்தப்பட்டன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது..

தற்போது நடைமுறையில் உள்ள 295 A உருவாக்கப்பட்டபோது முகமது அலி ஜின்னா முன்வைத்த ஒரு முன் எச்சரிக்கையை சஞ்சய் ஹெக்டே நினைவூட்டுகிறார். 1920-களில் பஞ்சாபில் தீவிரமாக முஸ்லிம் எதிர்ப்புப் பிரசாரங்களை ஆர்யசமாஜம் மேற்கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில் 1927ல் மஹாஷே ராஜ்பால் என்பவர் ``ரங்கீலா ரசூல்" (வண்ணமிகு இறைத்தூதர்) என ஒரு நூலை வெளியிட்டார். நபிகளின் பல மனைவியரை முன்னிட்டு நபிகள் குறித்து அவதூறாக எழுதப்பட்ட அந்நூல், ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த கிருஷன் ப்ரஷாத் பிரதாப் என்பவர் எழுதியதாகப் பிறகு அறிய வந்தது. அப்போது 295 A சட்டப்பிரிவு இல்லை. 153 A பிரிவின் கீழ் ராஜ்பாலை கைது செய்தார்கள். 153 A என்பது பொதுவாக மதம், இனம், மொழி அடிப்படைகளில் பகை மூட்டுவது தொடர்பானது. இந்தச் சட்டம் இரு சமூகங்களுக்கிடையே பகை மூட்டுவது பற்றியதுதான் என்பதால் இறைத்தூதரை இழிவு செய்ததற்கு இச்சட்டம் பொருந்தாது என பிரதாப் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம் சமூகம் இப்படி இறைத்தூதர்களையும் கடவுளையும் இழிவு செய்வதற்கெதிரான தெளிவான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்கிற அழுத்தத்தை பிரிட்டிஷ் அரசுக்குக் கொடுத்தது. அப்போது இயற்றப்பட்ட குற்றவியல் சட்டப் பிரிவுதான் `வெறுப்புப் பேச்சுக்கு (எதிரான) சட்டப் பிரிவு' 295 A.

அப்போதே கூர்த்த மதி படைத்த சட்டவியல் வல்லுநரான முகமது அலி ஜின்னா இப்படியான சட்டம் இயற்றுவதை எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒருவரின் மத உணர்வையும் புண்படுத்துபவர்களையும், அவர்களின் கடவுளர் அல்லது இறைத்தூதர் ஆகியோரை இழிவு செய்பவர்களையும்  தண்டிக்கும் இந்தச் சட்டத்தின் அடிப்படையை தான் ஏற்றுக் கொண்டாலும், அதே நேரத்தில் வரலாற்று ஆய்வு செய்பவர்கள் மற்றும் ஆதாரபூர்வமான விமர்சனங்களை மதங்களின் மீது வைப்போர் ஆகியோரின் அடிப்படை உரிமைகளையும் நாம் பாதுகாத்தாக வேண்டும் என்றார் ஜின்னா. அது இன்றும் பொருந்தும்.

பின் குறிப்புகள்

1. 1929ல் ரங்கீலா ரசூல் தொடர்பான வழக்கு முடிவுற்று ராஜ்பால் விடுவிக்கப்பட்டார். 1929 ஏப் 6 அன்று இல்முதீன் எனும் இளைஞர் அவரைக் கொன்றார். அவருக்காக ஜின்னா வழக்காடியபோதும் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டு அதே ஆண்டு அக் 31 அன்று இல்முதீன் தூக்கிலிடப்பட்டார்.

2. இப்போது காங்கிரஸ் அரசு இதை இயற்றுவதன் பின்னணியைப் புரிந்துகொள்வது அவசியம். 2015 ல் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் இழிவு செய்யப்பட்டதையொ ட்டிச் சீக்கிய சமூகம் கொதித்தெழுந்தது. துப்பாக்கிச் சூட்டில் சிலர் கொல்லப்பட்டனர். இதையொட்டி அப்போது ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலிதள் - பா.ஜ.க கூட்டணி அரசு 295 பிரிவில் ஒரு திருத்தத்தை முன்வைத்து ஒரு மசோதாவை இயற்றியது. அதன்படி குருகிரந்த் சாஹிபை அவமதிப்பவர்களுக்கு ஆயுள்தண்டனை என்பது முன்மொழியப்பட்டது. சீக்கிய சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டது.

இப்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தவுடன் அவர்கள் பங்குக்கு இப்போது இந்தத் திருத்தம் முன்மொழியப்படுகிறது. முந்தைய ஆட்சியில் நடைபெற்ற அந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பான ரஞ்சித் ஆணைய அறிக்கையை வெளியிட்டதோடு, துப்பாக்கிச் சூட்டில் இறந்தோருக்கு இழப்பீட்டையும் அறிவித்து கூடவே இந்த 295 AA சட்டத் திருத்தத்தையும் அம்ரித்சிங் அரசு இயற்றியுள்ளது. குரு கிரந்த்சாஹிப் உடன் மற்ற மூன்று மதங்களின் புனித நூல்களும் இப்போது இச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன..

இதுதான் இப்போதைய இந்தச் சட்டத்திருத்தத்தின் பின்னணி. காங்கிரஸ் - பா.ஜ.க போட்டியில் பலியாவது கடைசியில் மக்களின் உரிமைகள்தாம்.