Published:Updated:

``திருமணத்துக்கு வெளியில் உறவிலிருப்பது குற்றமற்றது!” - தீர்ப்பை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா? #VikatanPoll

``திருமணத்துக்கு வெளியில் உறவிலிருப்பது குற்றமற்றது!” - தீர்ப்பை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா? #VikatanPoll
``திருமணத்துக்கு வெளியில் உறவிலிருப்பது குற்றமற்றது!” - தீர்ப்பை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா? #VikatanPoll

``திருமணமான ஆணோ பெண்ணோ, பரஸ்பர சம்மதத்துடன் திருமணத்தை மீறிய பாலுறவு வைத்துக்கொண்டால் அது சட்டப்படி குற்றமாகாது'' என்று உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிற தீர்ப்பு நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பை முழுதாகப் படிக்காமல், தெரிந்துகொள்ளாமல் பல விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அதாவது, 497 சட்டப் பிரிவின்படி, திருமணமான ஆண், வேறொருவரின் மனைவியுடன், அந்தக் கணவரின் அனுமதி இல்லாமலோ அல்லது அவருக்குத் தெரியாமலோ பாலியல் உறவில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஐந்தாண்டுக் கால தண்டனையோ (அ) அபராதமோ (அ) இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும். இத்தகைய வழக்குகளில், சம்பந்தப்படும் பெண்ணுக்கு எந்தத்  தண்டனையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

497 சட்டப் பிரிவின்படி, முறையற்ற உறவில் ஈடுபட்ட பெண்ணை பாதிக்கப்பட்டவராகவும், கணவர் அதிகாரம் செலுத்தும் நபராகவும் கருதும் ஒரு பார்வை இருக்கிறது என்றும், இந்தக் கோணத்தை எதிர்த்து `திருமணமான ஆண், வேறொருவரின் மனைவியுடன் பாலியல் உறவு கொண்டால், அவருக்கு மட்டும் ஐந்தாண்டு தண்டனையோ அபராதமோ வழங்கப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணும் பரஸ்பரமாகச் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், அவரைப் பாதிக்கப்பட்டவராகக் கருதி, தண்டனை இல்லாமல் செய்வது, பாலியல் பாகுபாட்டை உருவாக்கும் விதமாக உள்ளது' என்று தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இதனை விசாரித்த,  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வுக் குழு, ``மனைவியை அசையும் சொத்தாக நடத்தக் கூடாது. கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு எஜமானர்கள் இல்லை என்பது இத்தருணத்தில் குறிப்பிடவேண்டியது. குடும்பத்தைச் சிதைப்பதற்கு எந்தச் சமூக உரிமமும் இருக்கமுடியாது. 

திருமணத்துக்கு வெளியில் உறவில் வைத்துக்கொள்வது, மகிழ்ச்சியற்ற திருமணத்தைக் குறிப்பிடுவதாகும். மகிழ்ச்சியற்றவர்களைத் தண்டிப்பது முறையாகாது. திருமணத்துக்கு வெளியிலான பாலியல் உறவில் யாருக்கும் பாதிப்பு இல்லாதபட்சத்தில் ஈடுபடும்போது, அது சட்டப்படி குற்றமாகாது", என்று தெரிவித்துள்ளது. ஆனால், இதன் காரணமாக தம்பதி இருவரில் ஒருவர் தற்கொலை வரை செல்ல நேர்ந்தால், மற்றவர் தற்கொலைக்குத் தூண்டியவர் என்ற வகையில் தண்டிக்கப்படுவார்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

இது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா என்ன சொல்கிறார்? 

``சட்டப்பிரிவு 497-படி பெண்கள், ஆண்களுடைய போகப் பொருள். அதாவது, இந்தச் சட்டப்பிரிவுப்படி கணவரின் அனுமதியுடன் மனைவி வேறொரு ஆணுடன் உறவு வைத்துக்கொண்டால் தவறில்லை. கணவருக்குச் சம்மதமில்லாமல் வைத்துக்கொண்டால்தான் அது தவறு.  இங்கே எந்தப் பெண்ணும், யாருடன் உறவுகொள்ளலாம் என்ற மனநிலையில் சுற்றிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், இப்படிச் சொல்வது தவறு இல்லையா? கணவர் பர்மிஷன் கொடுத்தால் மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இது வெள்ளைக்காரன் ஏற்படுத்திய அறிவிலியான சட்டம். இதைத்தான் மாற்றியிருக்கிறார்கள். நல்லதுதானே...''

சென்னையை வழக்கறிஞர் கண்ணதாசன் என்ன சொல்கிறார்?

``157 வருடங்களுக்கு முன்னால் பெண்களை வீட்டில் இருக்கிற தட்டு முட்டுச் சாமான்கள் போலத்தான் ஆண்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். இந்தச் சட்டம் அப்போதுதான் வந்தது என்பதை முதலில் கருத்தில்கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் 70 வயது தாத்தாவுக்கு 20 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது சர்வ சாதாரணமாக நடந்தது. தவிர, பலதார திருமணமும்  வழக்கில் இருந்த காலகட்டம் அது. ஒரு ஆண் தன் அந்தஸ்தைக் காட்டுவதற்காக  நான்கைந்து பெண்களைத் திருமணம் செய்துகொள்வான். ஆனால், அவனால் தன்னுடைய அத்தனை மனைவிகளையும் தாம்பத்ய ரீதியாகத் திருப்திப்படுத்த முடியாமல் போகலாம். அந்தச் சூழலில் திருமணம் தாண்டிய உறவுகள் பெண்களுக்குத் தேவைப்படலாம். இதைக் கணவரின் சம்மதத்துடன் மனைவி செய்தால் தவறில்லை என்று ஆங்கிலேயர்கள் 497 சட்டம் இயற்றினார்கள். இதைச் சற்று உற்றுக் கவனித்தால் பெண்ணை விபசாரத்துக்குப் பயன்படுத்துகிற மாதிரியே இருக்கும்.  

நம் புராணங்களிலும் சில கதைகள் இந்த வகையில்தானே சொல்லப்படுகின்றன? அதைத்தான் 497 சட்டமும் இத்தனை காலம் சொல்லிக்கொண்டிருந்தது. பெண்ணை மனித உயிராகப் பார்க்காமல் போகப் பொருளாக பார்த்ததன் விளைவு. இதைத்தான்  தற்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்தத் தீர்ப்பின் நல்ல பக்கம் இது. 

இன்னொரு வகையில் பார்த்தால், திருமணம் தாண்டிய உறவுகள் இனி அதிகரிக்கலாம். வெளிநாடுகளுக்கு இது ஓகே.  உலக மயமாக்கலைப் பொருளாதாரத்துக்குப் பின்பற்றலாம். கலாசாரத்தில் உலகமயமாக்கல் அவசியமில்லாதது. 

பழைய சட்டத்தின்படி திருமணம் தாண்டிய உறவு ஏற்படுத்திக்கொண்ட ஆண்களுக்கு மட்டும்தான் தண்டனை, பெண்ணுக்குக் கிடையாதுதான். ஆனாலும், ஆணுக்கு குடும்பத்தைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் போகப் பயம் இருந்தது. இனிமேல் ஆணுக்கும் தண்டனை கிடையாது என்பதால், சட்டப்படி தண்டிக்க நினைத்தவர்களும் கொலை செய்கிற முடிவுக்குச் சென்று விடலாம். இது இன்னொரு வகையான குற்றத்துக்கு வழி திறந்து விடுகிறது. 

loading...

கணவர் தவறு செய்கிறார் என்றோ, மனைவி தவறு செய்கிறார் என்றோ, பரஸ்பரம் புகார் தருவதே, தவற்றைச் சரி செய்து மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்குத்தான். இனிமேல் இப்படியெல்லாம் புகார் கொடுக்க முடியாது. மனைவி தவறு செய்தாலும் டைவர்ஸ் தான். கணவர் தவறு செய்தாலும் டைவர்ஸ்தான். இது சிலரை தற்கொலைக்குத் தூண்டலாம்."