Published:Updated:

``பெரியாரின் எழுத்துகளுக்குத் தடை கோருவார்கள் என எதிர்பார்த்தேன்!” டெல்லியிலிருந்து ஒரு குரல்

``பெரியாரின் எழுத்துகளுக்குத் தடை கோருவார்கள் என எதிர்பார்த்தேன்!” டெல்லியிலிருந்து ஒரு குரல்
``பெரியாரின் எழுத்துகளுக்குத் தடை கோருவார்கள் என எதிர்பார்த்தேன்!” டெல்லியிலிருந்து ஒரு குரல்

டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரங்களுக்கான நிலைக்குழு கடந்த வாரம் அரசியல் அறிவியல் துறையின் பாடத்திட்டத்தில் மாணவர்கள் வாசிப்புப் பட்டியலில் இருக்கிற எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவின் `God as Political Philosopher Dalit' உட்பட மூன்று புத்தகங்களை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கெதிராக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகளையடுத்து தற்போது, இந்தப் பரிந்துரை பின்வாங்கப்பட்டுள்ளது. 

பரிந்துரையின்போது, `தலித்' என்ற வார்த்தைக்குப்பதிலாக அம்பேத்கரியர் அல்லது பட்டியலினத்தவர் என்கிற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்திருந்தது.

இந்த விவகாரம் கல்வி வட்டாரத்தைத் தாண்டி, அரசியல் வட்டாரத்திலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ``ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-யின் சதித்திட்டம்தான் இந்த நடவடிக்கை" என விமர்சித்த காஞ்சா அய்லய்யா, ``கல்வி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களின் வலதுசாரி சிந்தனைகளை திணிப்பதற்கான முயற்சிதான் இது. இவர்கள் பெரியாரின் எழுத்துகளுக்கும் தடை கோருவார்கள் என எதிர்பார்த்தேன்! இப்போது, காஞ்சா அய்லய்யாவின் புத்தகத்தைத் தடைசெய்யக் கோருபவர்கள், தலித் மக்கள் சந்தித்த கொடுமைகளைப் பற்றிப் பேசுகிறது என்பதற்காக, டாக்டர் அம்பேத்கரின் புத்தகத்திற்கும் நாளை நிச்சயம் தடைகோருவார்கள். கல்விப் புலங்களில் பன்முகச் சிந்தனைகளை அனுமதிக்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கை இது” என்றார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காஞ்சா அய்லய்வாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் எழுதினார். அதில், ``இந்த முடிவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஃபாசிசம் அப்பட்டமாகத் தெரிகிறது. உங்களுடைய புத்தகங்கள், கடந்த 10 ஆண்டுகளாகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்று மாணவர்கள் அவற்றைப் படித்து வருகிறார்கள் என்பது உண்மை. ஆனால், தற்போது எந்தவோர் அறிவார்ந்த பின்புலமும் இல்லாத ஆர்.எஸ்.எஸ். பல தரப்பட்ட குரல்களை ஒடுக்கி உயர்கல்வியில் உள்ள சுதந்திரமான சூழலைச் சீர்குலைக்கப் பார்க்கிறது. நிலைக்குழுவின் பரிந்துரைகளை டெல்லி பல்கலைக்கழக அகாடெமிக் கவுன்சில்  நிராகரிக்கும் என நம்புகிறேன். மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணியாமல் பலதரப்பட்ட பார்வைகளைப் படித்து, அவர்களுடைய சொந்தக் கருத்துகளை உருவாக்கிக் கொள்கிற சூழல் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் நா.சுகுமார் இதுதொடர்பாக நம்மிடம் பேசியபோது... 

``கல்வி விவகாரங்களுக்கான நிலைக்குழு எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவின் புத்தகங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற பரிந்துரைத்ததற்குக் காரணம் என்னவாக இருக்கும்?"

``இந்த விவகாரம் அண்மையில்தான் பல்கலைக்கழகத்தின் துறை கமிட்டிக்கு வந்தது. அவர்கள் அளித்துள்ள பரிந்துரைக்கான காரணங்கள் தர்க்கம் இல்லாமல் இருந்தன. நான்தான் இந்தப் புத்தகங்களை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியவன். அவர்கள் கொடுத்துள்ள காரணங்களின் அடிப்படையில் என்னுடைய வாதத்தையும் எடுத்து வைத்தேன். அதை துறைத் தலைவரும் சக பேராசிரியர்களும் ஏற்றுக்கொண்டார்கள். நிலைக்குழுவின் பரிந்துரைகளை நிராகரித்து, அந்தப் புத்தகங்களையும் பாடத்திட்டத்தில் தொடருவது என்று கமிட்டி முடிவெடுத்துள்ளது. 

இனி அகாடெமிக் கவுன்சில்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். இந்தப் பாடத்திட்டங்கள் 10 வருடங்களாக இருக்கின்றன. இதற்கு நிர்வாகத்தில் தீர்வு கிடைக்கவில்லையென்றால், நான் நீதிமன்றத்துக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்".

``ஆரம்பத்தில் இந்தத் தகவலைக் கேட்டவுடன் எவ்வாறு உணர்ந்தீர்கள்?"

``இந்தத் தகவல் எனக்கு நிலைக்குழுவிடம் இருந்தோ, துறையில் இருந்தோ கிடைக்கவில்லை. முதலாவதாகக் காஞ்சா அய்லய்யாவிடம் இருந்துதான் எனக்குக் கிடைத்தது. என்னுடைய சக பேராசிரியர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்களுக்கும் இதைப்பற்றி எதுவும் தெரியவில்லை. பின்னர் மறுநாள் செய்தித்தாளைப் பார்த்து, நான் விஷயத்தை உறுதி செய்து கொண்டேன். 2015-ல் `Dalit & Bahujan Studies' பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது முதலே ஏதாவது சிக்கல் கொடுப்பார்கள் என எதிர்பார்த்திருந்தேன். தற்போது அது நடந்துள்ளது".

``நிர்வாகம் இந்த அறிவிப்புக்கு எவ்வாறான எதிர்வினையை ஆற்றியது?" 

``பல்கலைக்கழக நிர்வாகத்திலிருந்து எந்தவொரு அதிகாரிகளும் இதுபற்றிக் கருத்து தெரிவித்ததாகத் தெரியவில்லை. ஆனால் மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பிலிருந்து பரவலான ஆதரவு இருக்கிறது. அகாடெமிக் கவுன்சில் உறுப்பினர்கள் உட்பட வேறுபலரும் புத்தகத்தை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துணைவேந்தருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் நிர்வாக தரப்பிலிருந்து எந்தவொரு உத்தரவாதமும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதற்குப் பின்னால் அரசியலும், உள்நோக்கமும் உள்ளது".

``சமீப காலங்களில் கல்விப் புலத்தில் இதுபோன்று புத்தகத்தின் மீதான தடை, பாடத்திட்டத்தின் மீதான தடை போன்றவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளன. ஆனால், அப்போதெல்லாம் அவை அவ்வளவு தீவிரப் பிரச்னையாக இருக்காது. எங்காவது ஒன்றிரண்டு சம்பவங்கள் நடைபெறும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதை என்னால் உணர முடிகிறது. சாதி எதிர்ப்பு, இந்துத்துவம் சார்ந்த கருத்துகளை விவாதிப்பதை அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. வேறு சில பல்கலைக்கழகங்களிலும் இங்குள்ள சில துறைகளிலும் இதே போன்று பிரச்னைகள் எழுந்துள்ளன. ஆனால், நான் சார்ந்துள்ள அரசியல் அறிவியல் துறையில் என்னுடைய 17 வருட அனுபவத்தில் இப்போதுதான் முதல் தடவையாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன".

``காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்கலைக்கழகத்தின் இந்தச் செயலைக் கண்டித்து காஞ்சா அய்லய்யா-விற்கு கடிதம் எழுதினாரே, அதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?"

``எனக்கு அதுபற்றித் தெரியாது. அவ்வாறு, அவர் ஆதரவு தெரிவித்திருந்தால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இது அரசியல் போராட்டம் அல்ல. கல்விக்கான போராட்டம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் என இதுபோன்ற நடவடிக்கைகள் வேறு பல்கலைக்கழகங்களிலும் தொடர்கின்றன. இந்தப் பிரச்னையில் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டால் மகிழ்ச்சிதான்.

``இந்தியாவில் தற்போது உயர்கல்வித் துறையில் நிலவுகிற சூழல் எவ்வாறாக இருக்கிறது?"

``வகுப்பறைகள் இன்றைக்கு யுத்தகளமாக மாறிவருகின்றன. தலித் - பிற்படுத்தப்பட்ட பின்னணியிலிருந்து கல்விப் புலங்களுக்கு வருகிற சிந்தனையாளர்கள் ஆட்சி அதிகாரத்தின் சித்தாந்தத்தைக் கேள்வியெழுப்புகின்றனர். கல்வி நிலையங்கள் எல்லாம் சித்தாந்தப் போர்க்களங்களாக மாறியுள்ளன. அதை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் எல்லாம் கல்விப் புலங்களில் சிந்தனைகளை உற்பத்தி செய்கிற இடங்களில் தொடர்ந்து நிரப்பப்படுகிறார்கள். அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு வருகிறவர்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான். பல்கலைக்கழகங்களுக்கான நிதியுதவி குறைக்கப்படுகிறது. கல்வியாளர்கள் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள். கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட தலித் மாணவரை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறிய பேராசியருக்கு துணைவேந்தர் சம்மன் அனுப்பியுள்ளார். உயர்கல்வி என்பது இன்றைக்கு மிகத் தீவிரமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. உலக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது இந்தியாவில் அதிகமாக உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதற்கு யூ.ஜி.சி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இதுபோன்று உயர்கல்வித்துறையில் பல்வேறு சிக்கல்கள் முறையாக அணுகப்படாமலே உள்ளன".