Published:Updated:

``கஜா இழப்பீட்டை மாநில அரசு முறையாகக் கணக்கிடவில்லை" - திருமுருகன் காந்தி ஆவேசம்!

இயற்கை சீற்றம் மூலம் மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய் அழிவு ஏற்பட்டிருக்கிறது, இவை தொழிற்சாலைகளுக்கு வந்த அழிவல்ல , விவசாயத்துக்கு வந்த அழிவு. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 3.5 முதல் 4 கோடி பேர் விவசாயத்தை நம்பி இருக்கிறபோது இந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பை தமிழ்ச்சமூகம் எப்படித் தாங்கப்போகிறது?

``கஜா இழப்பீட்டை மாநில அரசு முறையாகக் கணக்கிடவில்லை" - திருமுருகன் காந்தி ஆவேசம்!
``கஜா இழப்பீட்டை மாநில அரசு முறையாகக் கணக்கிடவில்லை" - திருமுருகன் காந்தி ஆவேசம்!

றைந்த சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, மே 17 இயக்கத்தின் சார்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் ஒன்று அம்பத்தூர் முருகன் கோயில் அருகே நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்றோர், `கஜா புயலைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!', `ஏழு நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்', `ஆணவப் படுகொலைகளை தடுக்கச் தனிச் சட்டம் இயற்று' போன்ற முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திருமுருகன் காந்தி, பிரவீன் குமார் ஆகியோர் உரையாற்றினர். மே 17 இயக்க உறுப்பினர்களுடன் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். நாடி நரம்புகளை உயிர்ப்பித்து ஆடச் செய்யும் பறையிசையோடு உற்சாகமாக ஆரம்பித்தது பொதுக்கூட்டம். 

இந்தக் கூட்டத்தில் பேசிய திருமுருகன் காந்தி, ``தமிழர்கள் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு உரிமை, மொழியின் மீதான உரிமை, பொருளாதாரம் நெரிக்கப்பட்டு இறையாண்மை இல்லாதவனாக ஆக்கப்படும் சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் தமிழர்களின் உரிமை மீட்புப் பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது. அம்பேத்கர் என்பவர் குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டுமே தலைவர் என்ற ஒரு சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் குறிப்பிட்ட மக்களுக்காக மட்டும் பேசியவர் இல்லை. அவர் பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள் என எல்லோருக்காகவும் யோசித்து பணியாற்றியவர். இந்தியா விடுதலை பெற்ற பின்னர், அனைத்துத் தொழிற்சாலைகளும் அரசாங்கத்தால் நடத்தப்படவேண்டும் என்றும், விவசாயம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் கூறியவர் அம்பேத்கர். `தொழிற்சாலைகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஒரு தொழிலாளி தன்னுடைய வறுமை காரணமாகவும் அடிப்படைத் தேவைக்காகவும் தன் வேலையை முன்னிறுத்தி அவரின் அரசியல் பண்பாட்டு உரிமையை விட்டுவிடுவார்' என்று குறிப்பிட்டவர் அவர். 

இதேபோல்தான் விவசாயம் அரசாங்கத்திடம் இல்லையென்றால் விவசாய நிலமுடையவர்கள், விவசாயக் கூலிகளின் உரிமைகளை மறுத்துவிடுவார்கள். விவசாயத் தொழிலாளர்கள் தன் உரிமைப் பற்றிப் பேசினால் அவர்களை வேலைக்கு வரக் கூடாது என்று பண்ணையாட்கள் சொல்லிவிடுவார்கள். நிலம் அரசுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். அதிலிருந்து வரும் விளைபொருள்களின் விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். ஒருவருடைய பொருளாதாரத்தை, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு கூலித்தொழிலாளியும் அரசுக்கு வரி கட்டுகிறார். இந்த நாட்டின் பிரதமராக உள்ள மோடி விமானத்தில் பயணம் செய்ய, புத்தம்புதிய ஆடை அணிவதற்காகவெல்லாம் நாம் வரி செலுத்தவில்லை. நம் உரிமைகளுக்காக நாம் கேள்வி எழுப்ப நமக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் எட்டரை லட்சம் குடும்பங்கள் விவசாயத்திலிருந்து விலகியிருக்கின்றன. இந்நிலையில் கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலுமாகச் சிதைந்திருக்கின்றன. ஆனால் அதைப்பற்றி ஒன்றிய அரசுக்குக் கவலை இல்லை. 2015-ல் சென்னையில் வெள்ளம் வந்தபோது, மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிதி 13,731 கோடி ரூபாய். ஆனால், மத்திய அரசு கொடுத்த நிதியோ 1,940 கோடி ரூபாய்தான். இதேபோல் வர்தா புயலின்போது, மாநில அரசு கேட்ட நிதி 22,573 கோடி ரூபாய். ஆனால், மத்திய அரசு அளித்ததோ 264  கோடி ரூபாய்தான். 2017-ல் வறட்சி நிவாரணமாக 39,565 கோடி ரூபாய் கேட்டபோது கிடைத்த நிதி 1,748 கோடி ரூபாய். எண்ணூரில் கடலில் எண்ணெய் கொட்டியபோது 135 கோடி ரூபாய் இழப்பீடாகக் கேட்டார்கள், அதற்கு இதுவரை ஒரு பைசா கூட இந்திய அரசு தரவில்லை. ஒகி புயலின் போது கேட்ட  நிதி 9,300 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசு வெறும் 561 கோடி தான் கொடுத்தது. இன்றைக்கு கஜா புயலுக்காக 15,000 கோடி கேட்டிருக்கிறார்கள். மத்திய அரசு 350 கோடி ரூபாயை பிச்சை போன்று அளித்துள்ளது. கேட்ட நிதி யாவும் அவர்கள் பணமல்ல, எல்லாம் நாம் செலுத்திய வரிப்பணம்.

கஜா புயலின் பொது விழுந்த தென்னை மரங்களுக்கு வெறும் 1100 ரூபாய் இழப்பீடாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சேலம் எட்டு வழிச் சாலைக்காக அப்புறப்படுத்தவிருந்த தென்னைகளுக்கு 50,000 ரூபாய் தருவதாக மாநில அரசு அறிவித்திருந்தது, இது எவ்வளவு பெரிய அநியாயம். தற்போது கிட்டத்தட்ட 40 லட்சம் தென்னை மரங்கள் கஜா புயலினால் விழுந்துள்ளன. ஒரு தென்னைக்கு ரூபாய் 50,000 என்று கணக்கிட்டால் தென்னை மரங்களுக்கான இழப்பீடே 20,000 கோடி ரூபாய் ஆகிறது. ஆனால், மாநில அரசு வெறும் 15,000 கோடி ரூபாய்தான் இழப்பீடாகக் கேட்டிருக்கிறது. தென்னை மரங்கள் போக சேதமடைந்த வீடுகள், பலா , வாழை, நெல் என இத்தனை பெரும் இழப்பீடுகள் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் ஒழுங்காகக் கணக்கில் கொள்ளாமல் வெறும் 15,000 கோடியை இழப்பீடாக அ.தி.மு.க. அரசு எப்படி அறிவித்தது. அவர்கள் யாருக்கும் கணக்கு தெரியாதா?."

மாநில அரசுக்குரிய வரியை முற்றிலுமாய் ரத்து செய்து ஜி.எஸ்.டி கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசுக்கு முற்றிலுமாக வரியை நேரடியாகச் செலுத்த வேண்டுமென்று கொண்டுவரப்பட்டதுதான் ஜி.எஸ்.டி. மாநில அரசுக்கு இருக்கக்கூடிய குறைந்தபட்ச அதிகாரமே வரிவசூலில் திட்டமிடுதல்தான். அதையும் ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி மூலம் பறித்திருக்கிறது. இயற்கைச்சீற்றம் மூலம் மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய் அழிவு ஏற்பட்டிருக்கிறது, இவை தொழிற்சாலைகளுக்கு வந்த அழிவல்ல, விவசாயத்துக்கு வந்த அழிவு. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 3.5 முதல் 4 கோடி பேர் விவசாயத்தை நம்பி இருக்கிறபோது இந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பை தமிழ்ச்சமூகம் எப்படித் தாங்கப்போகிறது?

2016-ல் தமிழ்நாட்டின் வருமானத்தில் விவசாயத்தின் பங்கு 13 -15 சதவிகிதம். தமிழக அரசு 2023-ம் ஆண்டுக்கு வளர்ச்சித்திட்டம் என்றோர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் விவசாயத்தின் பங்கு என்பது 7 சதவிகிதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தின் 40% மக்கள் வெறும் 7 சதவிகித வருமானத்துக்குள் வாழப்போகிறார்கள் என்றால் நாம் எப்படி வஞ்சிக்கப்படப்போகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிதல் இல்லாமல் விவசாயத்தைக் காப்பாற்ற முடியாது, நிலத்தைப் பாதுகாக்க முடியாது. நம் உரிமைகளையும், விவசாயத்தையும் மீட்டெடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்" என்றார்.