மதம் பிடித்த யானையாக டெல்டா மக்களின் வாழ்வாதாரங்களைக் குலைத்துப்போட்டிருக்கிறது கஜா. மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஆட்சியாளர்கள், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க அச்சப்பட்டு ஒதுங்கி நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க ஹெலிகாப்டரில் பறந்துவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதி வழியில் திரும்பிவிட்டார். நிவாரணப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. “முகாம்களில் மூன்று வேளை உணவு என்பது, இரு வேளையாகக் குறைந்துவிட்டது; கெட்டுப்போன உணவைத் தருகிறார்கள்; மின்சாரப் பணிகளைக்கூட வீட்டுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து நாங்களே பார்த்துக்கொண்டோம். நிவாரண உதவிகள் உள்கிராமங்களைச் சென்றடையவில்லை” என்று குவிகின்றன துயரம் மிகுந்த புகார்கள்.

கஜா புயல் கரையைக் கடந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் - வேதாரண்யம் வழியில் உள்ள நாலுவேதபதி, புஷ்பவனம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் பாதிப்புகள் மிக அதிகம். வேதாரண்யத்துக்கு எட்டு கி.மீ தொலைவில் உள்ளது ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராமம். முதன்முதலாக கஜா கரையைக் கடந்தது இங்குதான். ஏற்கெனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமம் இது. இந்தக் கிராமத்தில் மட்டும் 320 ஃபைபர் படகுகளும், 60 பெரிய விசைப் படகுகளும், 20 கட்டுமரங்களும் இருந்தன. இப்போது மொத்தமும் போய்விட்டது. ஆறுகாட்டுத்துறை பேரிடர் மீட்பு மையத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களே இதுவரை கிடைக்கவில்லை. அந்த ஊரின் தலைவர் ஜெயமணி, ‘‘கோடியக்கரை, கோடியக்காடு, மணியந்தீவு, ஆறுகாட்டுத்துறை, வானவன்மாதேவி இங்கெல்லாம் கடற்கரையை ஒட்டியிருக்கிற அறுநூறு வீடுகள் உருக்குலைஞ்சுப் போச்சு. சேத்தோட கடல் தண்ணீர் வீடுகளுக்குள்ளேயும் வந்துட்டு. நாலு மணி நேரம் ஓயாம அடிச்ச புயல்ல எங்க மொத்த வாழ்க்கையையும் தொலைச்சிட்டு நிக்கிறோம். மறுநாள் படகு கட்டிவச்ச இடத்துக்குப் போனா, பாதிப் படகு தூக்கிவீசிக் கெடக்கு. மிச்சப் படகுகளைக் காணோம். சில படகுங்க, இங்க இருந்து 40 கி.மீ-க்கு அந்தப் பக்கம் நாகப்பட்டினத்துல கிடந்துச்சு. அதுல இருந்த மோட்டார் எல்லாம் உடைச்சிடுச்சு. புயல் அடிச்சு ஆறு நாள் வரைக்கும், இங்க எந்த அதிகாரியும் வரலை. ஒத்த ஜெனரேட்ட வச்சுத்தான், ஊருக்கே சோறாக்கிப் போட்டோம். இப்போ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்து பாத்துட்டுப் போனார். அதுக்கு அப்புறம்தான் கொஞ்சம் காய்கறியும், ரெண்டு மூட்டை அரிசியும் வந்துச்சு.
சுனாமிக்கு முன்னாடி இருந்தே, 25 வருஷமா எங்க ஊருக்கு ‘தூண்டில் வளைவு’ அமைச்சிக் கொடுங்கன்னு கேக்குறோம். எந்த அரசும் செய்யலை. அடிக்கடி கடல் சீற்றம் வரும். பாதி மாசம், கடல் தண்ணி சேறா ஊருக்குள்ள வரும். தூண்டில் வளைவு இருந்திருந்தா, எங்க படகுகளை ஓரளவாச்சும் காப்பாத்தியிருக்கலாம். எங்களுக்கு அரிசி எதுவும் வேணாம். எங்க படகுகள் திரும்பக் கிடைக்க அரசு உதவணும்’’ என்கிறார் ஜெயமணி.

இந்தக் கிராமத்தில் ஆண்கள் மீன்பிடிக்கச் சென்றால், பெண்கள் கருவாடுத் தொழில் செய்கிறார்கள். இங்கிருந்துதான் டெல்டா பகுதிக்கு கருவாடு அனுப்பப்படும். கருவாடுத் தொழில் செய்வதற்கான அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் அனைத்தையும் கஜா புயல் துவம்சம் செய்துவிட்டது.

“மாசக்கணக்குல கருவாட்டைக் காயவெச்சு சிறுகச் சிறுக சம்பாரிச்ச எங்க சிறுவாட்டுக் காசையெல்லாம் புயல் கொண்டுப்போயிடுச்சு...” என்று அழுகிறார் லட்சுமி.

பல இடங்களில் வேதனைத் தாங்காமல் ஆத்திரத்தில் சாலை மறியல் செய்கிறார்கள் மக்கள். அப்போதாவது அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காதா என்கிற கோபம் அவர்களுக்கு. பட்டுக்கோட்டை அருகே மருதூர் கூட்டு ரோட்டில் மறியலில் ஈடுபட்டிருந்த மக்கள், “சோறு தண்ணி இல்லாம, மரங்களை நாங்களே வெட்டி அப்புறப்படுத்திக்கிட்டு இருக்கோம். பள்ளிக்கூடத்துலதான் 200 பேருக்கு மேல தங்கியிருக்கோம். கரன்ட் இல்லை, அடிக்கிற காத்துக்கு வெளக்கும் நிக்கலை. ஆயக்காரன்புலம், மருதூர்னு எங்கயுமே நிவாரணம் கிடைக்கலை. ஒரு வாரமாச்சு... நாங்க உசுரோடு இருக்கோமான்னு பார்க்கக் கூட ஒரு அதிகாரியும் வரலை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துதான் மறியல் பண்றோம். கலெக்டர் கூட வரவேணாம். ஒரு தாசில்தாராவது வர வேணாமா?” என்கிறார்கள் கொந்தளிப்புடன்!

“கெட்டுப்போன சாப்பாடு தர்றாங்க! ”

வேதாரண்யம், கீழ்வேளுர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் கோரப் புயலின் தாக்கத்தைக் காணமுடிகிறது. வேட்டைக்காரனிருப்பு புயல் பாதுகாப்பு மையத்தில் சுமார் 500 பேர் தங்கியுள்ளனர். அங்கே இருந்த மகேஸ்வரி, “எங்களைப் பார்க்க பத்து கார்ல அமைச்சரும், கலெக்டரும் வந்தாங்க. ஆனா, தண்ணி பாட்டிலக்கூட கொண்டுவந்து அவங்களால கொடுக்க முடியல. எல்லாத்தையும் இழந்து கட்டுன துணியோட, குழந்தை குட்டிகளோட கெடக்கிறோம். ராத்திரி சமைச்ச உணவை காலையில தர்றாங்க. காலையில சமைச்சதை சாயங்காலம் தர்றாங்க. கெட்டுப்போன சாப்பாட்டை புள்ளைகளுக்கு எப்படித் தர முடியும்? இவங்க எங்களுக்குச் சோறு போட வேண்டாம். தார்பாயும், உணவுப் பொருள்களும் கொடுத்தா, நாங்களே சமைச்சு சாப்பிட்டுக்குவோம். ‘ரோட்டுக்குப் போனா... லத்தி சார்ஜ் பண்ணுவோம், ஜெயில்ல புடிச்சுப் போடுவோம்’னு போலீஸ்காரங்க எங்களை மிரட்டுறாங்க” என்றார் வெறுப்பாக.

மன உளைச்சலில் மின் ஊழியர்கள்!

நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் வரையிலுள்ள துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் பணிகளில் திருநெல்வேலியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். “முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்படாததால் கிராமங்களுக்குள் செல்ல முடியவில்லை. எந்தக் கிராமத்தையும் வந்து பார்வையிடாமல், மின் துறை அமைச்சர் ‘ஒரே வாரத்தில் எல்லாக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்’ என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது” என்கிறார்கள் அவர்கள். கீழ்நிலையில் பணிபுரியும் ஊழியர்களை அதிகாரிகள் கடுமையாகப் பேசுவதும், ஊழியர்களின் மனநிலையைப் பாதித்திருக்கிறது. அகஸ்தியம்பள்ளி உப்பளத்தில் ஓராண்டுகால உழைப்பால் தயாரிக்கப்பட்ட உப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சிறு உப்பு உற்பத்தியாளர் பானுமதி, “எங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள உப்பு நஷ்டமாயிருச்சு. அதை வித்து, அந்தப் பணத்துலதான் மறுபடியும் உப்புத் தயாரிக்க முடியும். இப்போ எல்லாமே போச்சு. வீடும் போச்சு, தொழிலும் போச்சு. குழந்தைகளை எப்படிக் காப்பாத்தப் போறோம்னு தெரியலை” என்றார் கண்ணீருடன்.

“நாஃப்கின் இல்லை... அழுக்குத் துணி கட்டிக்கிறோம்!”

தஞ்சாவூர் மாவட்டத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், ஒரத்தநாடு உள்ளிட்ட ஊர்களில் உணவு, மின்சாரம் எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் கண்ணீரும் கம்பலையுமாக மக்கள் பரிதவிக்கிறார்கள். நிவாரணப் பொருள்களை எதிர்பார்த்து கூட்டம் கூட்டமாகக் கலங்கி நிற்கும் மக்களைப் பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. அத்தனை பேரும் விவசாயிகள் மற்றும் மீனவ மக்கள். நமக்காக, காலம் முழுக்க உணவு உற்பத்தி செய்பவர்கள் அவர்கள். அதிராம்பட்டினம் அருகே உள்ள கிழத்தோட்டம் மீனவ கிராமத்தில் 500 வீடுகளுக்கு மேல் உள்ளன. அவற்றில் முக்கால்வாசி, குடிசை வீடுகள்தான். இப்போது, குடிசைகள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கான பாதிப்பு புயல் ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த பெண் ஒருவர், “பொம்பளையாளுங்க ஒத்த நைட்டியை ஒருவாரத்துக்குமேல கட்டிக்கிட்டிருக்கோம். அழுக்கடைஞ்சு உடம்பெல்லாம் அரிக்குது. மாதவிடாய் ஆன பொம்பளைகளுக்கு நாஃப்கின்கூட கிடைக்கலை. அழுக்குத் துணியையும் பேப்பரையும் வெச்சு அவஸ்தைப்படுறோம். புயல் பாதுகாப்பு மையத்துல எல்லோரும் நெருக்கியடிச்சு நிற்க இடமில்லை. அங்கயும் தங்க முடியாம, இப்போ சாக்கடையும் கடல் தண்ணியும் கலந்து நிக்கிற ரோட்டுல கிடந்து மழையில் நனையுறோம். ஒரு கட்சித் தலைவருகூட இங்க வரலைங்க. தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கக்கூட யாருக்கும் மனசில்லையா...” என்று அழுகிறார்.

நன்றி சொல்லி இறந்த இளைஞர்!

ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், சுரேஷ். திருமணம் ஆகாதவர். அவரின் தம்பி சிவக்குமார் வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டதால், சுரேஷ் மட்டும் வீட்டில் இருந்தார். புயல் கரையைக் கடந்தபோது, இவரது வீடு இடிந்து, இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார் சுரேஷ். உணவும் தண்ணீரும் இல்லாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். ஊரே மயானமாகிப்போனதால் இவரைக் காப்பாற்ற நாதியில்லை. இரண்டு நாள்கள் கழித்து அந்த வழியே வந்தவர்கள், முனகல் சத்தம் கேட்டு இவரை மீட்டுள்ளனர். “ரெண்டு நாளா தண்ணி குடிக்கலை. உயிர் பிழைப்பேன்னு நம்பிக்கையே இல்லை. என்னை மீட்ட உங்க எல்லோருக்கும் நன்றி...” என நெகிழ்ச்சியுடன் கூறிய அவர், அடுத்த இரண்டு நாள்களில் இறந்துவிட்டார்.

கட்சிக்காரர் நிலத்தைப் பார்வையிட்ட முதல்வர்!

பட்டுக்கோட்டையில் புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் முதல்வர் கையால் நிவாரணம் பெறுவதற்காக, காலை 7 மணிக்கெல்லாம் அழைத்துவரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உணவுகூட கொடுக்கப்படவில்லை. அங்கு தென்னை விவசாயி வீரசேனன் என்பவர் முதல்வருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவார் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டார். பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள ஹெலிபேடு தளத்துக்குக் காலை 10.15 மணியளவில் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார் முதல்வர். அவருடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்கள் மேடை அமைக்கப்பட்ட இடத்துக்கு எதிரே விழுந்தகிடந்த தென்னை மரங்களைப் பார்வையிட்டபடி, கொஞ்சம் தூரம் நடந்து சென்றனர். அவரிடம் விவசாயி ஒருவர் தேங்காயை எடுத்துக் காண்பித்துக் கண் கலங்கினார். அவரிடம் முதல்வர், ‘‘நானும் தென்னை விவசாயிதான். உங்க வலி புரியுது” என்றபடி கடந்தார்.

மேடையில் நடந்த நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புயலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலைகளைக் கொடுத்தார். நிவாரணம் கொடுத்து முடித்தபிறகு திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குச் செல்வதாகக் கூறியவர்கள், மழையைக் காரணம் காட்டிப் பாதியிலேயே சென்னை திரும்பிவிட்டனர். இது குறித்துப் பேசிய விவசாயிகள், “நிவாரணம் கிடைக்கவில்லை என்று போராடும் மக்களுக்குப் பயந்துகொண்டு காரில் வராமல் ஹெலிகாப்டர் மூலம் வந்த முதல்வர், மக்கள் குடியிருப்புகளே இல்லாத பகுதியில் டாஸ்மாக் கடை இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்வையிட்டார். இதில் கட்சிக்காரர்கள் தவிர வேறு யாரும் இல்லை. கேள்வி கேட்பார்கள் என்று பொதுமக்களை உள்ளே விடவில்லை. நான்கு பக்கமும் இரண்டு கி.மீ தொலைவுக்கு மேல் யாரையும் அனுமதிக்கவில்லை. முதல்வர் பார்வையிட்டது எம்.எல்.ஏ சி.வி.சேகரின் உறவினரின் நிலம். இதைப் பார்க்கவா முதல்வர் வந்தார்? 90 சதவிகிதத் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்த விரக்தியில் இருக்கிறார்கள் விவசாயிகள். நானும் விவசாயிதான் எனச் சொல்லிக்கொள்ளும் முதல்வர், தென்னை விவசாயிகளின் வேதனையை உணரவும் இல்லை; பார்க்கவும் இல்லை.

முதல்வர் வந்து சென்ற இடத்துக்கு அருகிலேயே அதிராம்பட்டினத்தில் கடற்கரைக் கிராம மக்கள், வீடுகளை இழந்து முகாம்களில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களையும் முதல்வர் சந்திக்கவில்லை. 60 வருடங்களுக்கு முன் இதுபோன்ற புயலைச் சந்தித்தோம் ஆனால், இவ்வளவு இழப்பைச் சந்திக்கவில்லை. உடைமைகள் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நிற்கும் மக்களுக்கு 20 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கி, அவர்களையும் சந்திக்காதது பெரும் துயரத்தைத் தருகிறது” என்றார்கள்.

தொகுதியை மட்டும் கவனிக்கும் அமைச்சர்!

கஜா புயல் கரையைக் கடந்த அன்று புதுக்கோட்டையில் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “பாதிப்புகள் குறித்து, உள்ளூர் வி.ஏ.ஓ-விடம் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்யுங்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார். ஆனால், மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு வி.ஏ.ஓ-க்கள் செல்லவில்லை என்பதுதான் கள நிலவரம். அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை, விராலிமலை பகுதிகளில் ஓடியாடி மீட்புப் பணிகளைக் கவனிக்கிறார். ஆனால், மாவட்டத்தின் மற்ற பகுதிகளான கந்தர்வக்கோட்டை, வடகாடு, கொத்தமங்கலம் பகுதிகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, சாலை மறியல், அரசு வாகனம் எரிப்பு எனத் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதிலிருந்து அப்பகுதியில் தடை உத்தரவு போட்ட அதிகாரிகள், வெளிநபர்கள் வரக்கூடாது என்று கறார் காட்டியதுடன், நிவாரணப் பொருள்கள் கொண்டுசெல்ல அனுமதி மறுத்தனர்.

“புயல் காத்துல மரங்கள் வீட்டு மேல விழுந்து, தங்க இடமில்லாம பால்வாடியில இருக்கோம். சேதம் குறித்துக் கணக்கெடுக்க வி.ஏ.ஓ வருவாங்கன்னு சொன்னாங்க. ஒருத்தரும் வரல. வி.ஏ.ஓ சார்பில் வந்த உள்ளூர் ஆளுங்க, மரம் விழுந்ததை மட்டும் கணக்கு எடுக்குறாங்க. வீடுகள் இடிந்ததை மறைக்குறாங்க. அதிகாரிகள் நேரில் வந்தால்தான் பாதிப்புகள் தெரியும்னு சொல்லி எங்க ஊர் பொதுமக்கள் சாலை மறியல் பண்ணினாங்க. அவங்களையும் போலீஸ் கைது பண்ணிட்டாங்க. இவ்வளவு நாளா இங்கேதான் கெடக்கிறோம். எந்த வசதியும் செஞ்சு தராதவங்க, இந்தப் பள்ளிக்கூடத்தைத் தொறந்து வெச்சு பாடம் நடத்தப்போறாங்களாம்... நோட்டு, புத்தகங்கள் எல்லாம் பாழாய் போச்சு. பொம்பளைப் புள்ளைங்களை வெச்சுக்கிட்டு வீடில்லாம நாங்க படும் கஷ்டத்தைச் சொல்ல வார்த்தையில்ல. சாப்பிட்டு மூணு நாள் ஆகுதுங்க” என்று கண்கலங்கினார் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த செல்வி.

முதல்வரிடம் ஆவேசமான அ.தி.மு.க எம்.எல்.ஏ!

புதுக்கோட்டை மாவட்டத்தில் எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் நெடுவாசல், பேராவூரணி, வடகாடு, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகள் சிதைந்துகிடக்கின்றன. குடிதண்ணீருக்காக மக்கள் தவிக்கிறார்கள். சாலை ஓரங்களில் ஏதாவது தண்ணீர் வாகனங்கள் வராதா என்று காலிக்குடங்களுடன் பெண்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். மின்சாரம் எப்போது வரும் என்று தெரியவில்லை. மின்கம்பங்களைச் சரிசெய்வதற்காக ஆந்திரம், கேரளம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு புதுக்கோட்டையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட கடமாவூர் பகுதியில் கடந்த 20-ம்தேதி, நாமக்கல் மாவட்ட மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின் கம்பிகளில் மின்சாரம் வந்ததால், குமாரமங்கலத்தைச் சேர்ந்த முருகேசன், தேவனாங்குறிச்சி மோகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி, படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், காரில் ஏற்றி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தார்.

புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியில் சேதம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். முதல்வரைப் பொதுமக்கள் நெருங்கிவிடாதபடி, சுற்றிலும் பாதுகாப்பு வளையம். அப்போது கந்தர்வக்கோட்டை அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான ஆறுமுகம், மீட்புப் பணிகளின் மெத்தனம் குறித்து கலெக்டரிடம் ஆவேசமாகப் பேசினார். அதே ஆவேசத்துடன் முதல்வரிடமும் அவர் புகார் கூறினார். அவரை ஆசுவாசப்படுத்திய முதல்வர், அங்கிருந்து வேகமாகக் கிளம்பினார்.

பேராவூரணியில் நிவாரணப்பணிகள் செய்யப்படவில்லை என அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான கோவிந்தராஜின் வீட்டை மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர், ‘‘பாதிப்பு உங்களுக்கு மட்டும்தானா, எனக்கும்தான். அனைத்தையும் முதல்வர் எடப்பாடியிடம் பேசியிருக்கிறேன். உங்களுக்கு வர வேண்டியது வந்துசேரும்’ என்றார். ஆனால், அடுத்த ஐந்து நாள்கள் வரையிலும் குடிக்கத் தண்ணீர்கூட வரவில்லை. பேராவூரணியை அடுத்த நாட்டானிக்கோட்டை சேர்ந்த விவசாயி முத்தையா, “இரண்டு ஏக்கரில் இருந்த தென்னம்பிள்ளை எல்லாம் மொத்தமா போச்சு. அதிகாரிங்க ஆய்வு செய்ய வருவாங்கன்னு வெட்டவெளியிலே கிடக்கேன். இந்தப் பக்கம் யாரும் வரலை. அப்படி நாங்க என்ன பாவம் செஞ்சோம்” என்று தலையில் அடித்தபடிக் கதறினார். பேராவூரணி, குளத்தூர், நாட்டானிக்கோட்டை, கழனிவாசல், ஊமத்தநாடு பகுதிகளில் வீழ்ந்துகிடந்த தென்னை மரங்கள், மின் கம்பங்கள் கடந்த 22-ம் தேதி மாலைவரை அப்படியே கிடந்தன.

அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு கிராமத்தில், 80 சதவிகித வீடுகள் சின்னாபின்னமாகியுள்ளன. அந்த கிராமத்தைச் சேர்ந்த கமலா, “வீட்ல கொஞ்ச அரிசி இருந்துச்சு. அதுல கஞ்சி காச்சி குழந்தைகளுக்குக் கொடுத்தோம். இப்போ, அரிசி சுத்தமா தீந்துபோச்சு. எங்களோட சேர்ந்து குழந்தைகளும் பட்டியா கிடக்குதுங்க. இன்னையோட, ஒரு வாரம் ஆகிருச்சு, எங்களுக்கு சோறு, தண்ணி கிடைக்கலை’’ என்று வேதனையுடன் கூறினார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு நாட்டுப்புற கிராமியக் கலைஞர்கள் மன்றம் சார்பில், மதுரையில் ஒருநாள் கிராமிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் மூலம் கிடைத்த நிதியை வைத்து வாங்கிய நிவாரணப் பொருள்களை புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று கிராமியக் கலைஞர்கள் வழங்கினர்.

தலைமுறையைத் தாண்டிய பேரழிவு!

யானை புகுந்த வாழைத்தோப்பு போலக் கிடக்கிறது கொடைக்கானல். மரங்கள் சாய்ந்து கிடக்காத சாலைகளே இல்லை. நூறாண்டுகளுக்கு மேல் வயதான மிகப்பெரிய மரங்கள் சாய்ந்துவிட்டன. முக்கியச் சாலைகளில் விழுந்த மரங்கள் மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. பல மலை கிராமங்களில் அதிகாரிகள், மீடியாக்களால் நுழைய முடியாத அளவுக்குப் பேரழிவு. பூண்டி பக்கத்தில் கீழப்பெரும்பள்ளம் நீர்த்தேக்கம், உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறிவிட்டது. இந்த நீர்த்தேக்கம், பொதுமக்கள் சேர்ந்து கட்டியது. இந்தப் பகுதிக்கு இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை. பொதுமக்களே உடைப்பைச் சரிசெய்து வருகிறார்கள்.

கொடைக்கானல் பாதிப்பைப் பற்றிப் பேசிய ‘வாய்ஸ்’ அமைப்பின் மைக்கேல், ‘‘கொடைக்கானல் இதுக்கு முன்னாடி இப்படி ஒரு புயலைப் பார்த்ததே இல்லை. ரோடே தெரியாத அளவுக்கு மரங்களும், மின்கம்பங்களும் விழுந்துகிடக்கு. கரன்ட் வரவே மூணு நாள் ஆச்சு. பூண்டி, கிளாவரை, மன்னவனூர், பெருமாள்மலை, உப்புப்பாறைமெத்து போன்ற பகுதிகளில் பாதிப்பு அதிகம். கீழ்மலையில் கே.சி.பட்டி, தாண்டிக்குடி பகுதிகளில் விவசாயம் மோசமாகப் பாதிச்சிருக்கு. ஒருநாள் மழை தண்ணி நின்னாலே கேரட் அழுகிடும். இந்த இழப்புகளை ஈடுசெய்றது ரொம்பக் கஷ்டம்’’ என்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டுவருகிறார் பழனி தி.மு.க எம்.எல்.ஏ-வான செந்தில். ‘‘கொடைக்கானலில் வரலாறு காணாத பேரழிவு இது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு. மலைப் பகுதிகளில் விவசாயம் அழிந்தால் அதிலிருந்து மீள பல ஆண்டுகள் பிடிக்கும். மிளகு படரத் தேவையான மரங்கள் வளர, பத்து ஆண்டுகள் தேவை. அப்படிப்பட்ட மரங்கள் 60 சதவிகிதத்துக்கும் மேல் சாய்ந்துவிட்டன. மிளகுக்கொடிகள் மொத்தமாக அழிந்துவிட்டன. மிளகு மூலம் ஒரு ஹெக்டேருக்கு ஆறு லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் வரும். அத்தனையும் போய்விட்டது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு தலைமுறை விவசாயமே அழிந்துவிட்டது. இப்போது மீண்டும் தயார்படுத்தினாலும் முழுமையான பலன் கிடைக்க 25 ஆண்டுகளாகும்.

மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் கூடுதலாகக் கேட்டால், கலெக்டர் தர மறுக்கிறார். கேட்டால் விதிமுறைகளைக் காரணம் சொல்கி றார். வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களிடம் விதிமுறைகளைக் காரணம் காட்டுவது பெரும் பாவம். கொடைக்கானல் பாதிப்புகள் வெளியுலகத்துக்கு முழுமையாகத் தெரியவில்லை. இந்தப் பகுதியைத் தேசியப் பேரிடர் பகுதியாக அறிவித்து, உதவிகளைச் செய்ய வேண்டும்’’ என்றார்.

- ஆர்.குமரேசன், சி.ய.ஆனந்தகுமார், கே.குணசீலன், மு.இராகவன், இ.லோகேஷ்வரி, ஜி.சதாசிவம், இரா.மணிமாறன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், க.சதீஷ்குமார், ம.அரவிந்த், பா.பிரசன்னா, ர.கண்ணன்

அமைச்சர் மீது தாக்குதல் ஏன்?

வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ-வும் தமிழக கைத்தறித் துறை அமைச்சருமான ஓ.எஸ். மணியன், மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானதாக ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் பரபரப்பாகச் செய்திகள் பகிரப்பட்டன. அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது. வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி சாலையில் ராஜாளிகாடு பகுதியில் அமைச்சர் குடியிருக்கும் வீடும் கல்வீசித் தாக்கப்பட்டது. தற்போது அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் தரப்பில் பேசியவர்கள், “கஜா புயலால் தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளுக்கு மட்டும்தான் சேதம். மற்ற பகுதிகளில் பாதிப்புகள் இல்லை’ என்று அமைச்சர் கூறியதாகத் தவறான செய்தியை சிலர் பரப்பிவிட்டனர். மின்சாரமும் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டதால், அமைச்சர் பேசியது மக்களிடம் சேரவில்லை. வீடுகள், உடைமைகளை இழந்து மக்கள் நிர்க்கதியாய்த் தவிக்கும்போது, அமைச்சர் இப்படிச் சொல்வாரா?” என்றனர். தெற்கு பொய்கைநல்லூர் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், “கஜா புயலால் மக்கள் தங்களது மா, தென்னை, முந்திரி அனைத்தையும் இழந்து பெரிய சேதத்தைச் சந்தித்திருக்கிறார்கள். மீனவர்களின் படகுகளையும், வலைகளையும் பறிகொடுத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.” என்றார்.

சில வாரங்கள் ஆகும்!

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 90,000 மின்கம்பங்கள் விழுந்துகிடக்கின்றன. சில நகர்ப் பகுதிகளில் மின்சார விநியோகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான உள் கிராமங்களில் மின் வசதி அளிக்க இன்னும் சில வாரங்கள் பிடிக்கும் என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள். அவர்கள் கூறுகையில், “சுமார் 90,000 மின்கம்பங்கள் விழுந்தாலும், அவற்றில் 12,000 முதல் 14,000 வரை எண்ணிக்கையிலான மின்கம்பங்கள் மட்டுமே முழுமையாகப் புதியதாக அமைக்க வேண்டியவை. விழுந்துகிடக்கும் மற்ற மின் கம்பங்களைத் தூக்கி நிறுத்திவைத்துப் பழுது பார்த்தாலே போதுமானது. அதனால், மின்கம்பங்கள் ஸ்டாக் இல்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்கள்.

நெகிழ வைக்கும் மனிதநேயம்!

நிவாரணப் பணிகளில் அரசு மெத்தனமாக இருந்தாலும், சில நல்ல உள்ளங்களின் நிவாரணப் பணிகள் நெகிழவைக்கின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ‘மன்னையின் மைந்தர்கள்’ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், புயல் பாதித்த நாளிலிருந்து இன்றுவரை 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கிவருகிறார்கள். வேர்கள், அறம் உள்ளிட்ட இளைஞர்கள் அமைப்பினரும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். மன்னார்குடியைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் பாரதிச்செல்வன், புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெருகவாழ்ந்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியதுடன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இலவசமாகச் சிகிச்சையும் மருந்துகளும் வழங்கிவருகிறார். இப்படி இதுவரை மூவாயிரம் பேருக்கு மாத்திரைகள் வழங்கியுள்ளார். மரங்கள் அகற்றும் பணியில் பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் சுப்ரியா இரவுவரை களத்தில் நின்று முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார். இதே ஊரைச் சேர்ந்த சமரன் என்கிற இளைஞர், கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மீத்தேன் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்துகொண்டவர் என்பதால், தமிழகம் முழுவதும் தனக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி, புயலால் பாதித்த மக்களுக்கு ஏராளமான உதவிகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

- கு. ராமகிருஷ்ணன்
படம்: ஏ.எஸ்.ஈஸ்வர்