Published:Updated:

பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்பு... விளைவுகள் என்னென்ன?!

"பொறியியல் கல்லூரிகளில் அறிவியல் மற்றும் கலை பாடங்களை ஆரம்பிக்க அனுமதிக்கும் ஏ.ஐ.சி.டி.இ, கலைக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளை ஆரம்பிக்க அனுமதிக்குமா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்."

பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்பு... விளைவுகள் என்னென்ன?!
பொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்பு... விளைவுகள் என்னென்ன?!

பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி, அவற்றின் தரத்தைக் கண்காணிப்பது அகில இந்திய தொழில்நுட்பக் குழுவின் (AICTE) பணி. AICTE அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், `பொறியியல் கல்வி முடித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இனி புதிய பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதி இல்லை. ஆனால், ஏற்கெனவே உள்ள பொறியியல் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள் தொடங்கலாம்’ என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர் சேர்க்கைக்காகத் தடுமாறிக்கொண்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் 4.26 லட்சம் பொறியியல் இடங்களை ரத்து செய்துள்ளது AICTE. 2016-ல் இருந்து ஒவ்வோர்  ஆண்டும் 75,000 பொறியியல் இடங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 562 பொறியியல் கல்லூரிகளில் 80 கல்லூரிகளில் மட்டும் 80 சதவிகித இடம் பூர்த்தியானது. 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 20 சதவிகித மாணவர்கள் கூட சேரவில்லை. கடந்த ஆண்டு மட்டும் கல்லூரியை மூட AICTE-யிடம் 28 தனியார் பொறியியல் கல்லூரிகள் அனுமதி கோரியுள்ளன.

இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளில் அறிவியல், கலை பாடங்களை ஆரம்பிக்க அகில இந்தியத் தொழில்நுட்பக் குழு அனுமதி அளித்திருப்பது கல்வியாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் ஐ.ஐ.டியின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் அனந்தகிருஷ்ணன், ``தமிழ்நாட்டில் தகுந்த ஆசிரியர்கள், போதுமான வசதிகள் எதுவும் இல்லாமல் செயல்பட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை மூட வேண்டும். ஏற்கெனவே தரமில்லாமல் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் அறிவியல், கலை படிப்புகள் தொடங்குவது சரியானது அல்ல" என்றார். 

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் துணைப் பேராசிரியர் செல்வகுமார், ``மாணவர்களின் சேர்க்கையின் மூலம் பணம் வந்தால் போதும் என்று நினைப்பதுவே பொறியியல் கல்வியின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணம். கல்லூரியை வியாபாரமாக நடத்துவதால், குறைந்த எண்ணிக்கையில் தகுதியற்ற பேராசிரியர்களை நியமிப்பதும், அவர்களுக்குச் சொற்பமான அளவுக்கு ஊதியம் வழங்குவதும், போதுமான உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள் இல்லாமலேயே அளவுக்கு அதிகமான மாணவர்களைச் சேர்ப்பதும், வெளிப்படைத்தன்மை இல்லாததுமாக இருக்கின்றன.  

இன்னும் பல கல்லூரிகளில் தெளிவான வெளிப்படையான கல்விக்கட்டணம், ஆசிரியர் ஊதியம் போன்றவற்றை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஏற்கெனவே, பொறியியல் படிப்பில் இருந்த அறிவியல் பாடங்களை வேண்டாம் என்று படிப்படியாகக் குறைத்துவிட்டனர். இப்போது பொறியியல் கல்லூரியில் கலை அறிவியல் படிப்புகளை தொடங்குவது தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பணம் சம்பாதிக்கவே உதவும். பொறியியல் கல்லூரிகளில் அறிவியல் மற்றும் கலை பாடங்களை ஆரம்பிக்க அனுமதிக்கும் ஏ.ஐ.சி.டி.இ, கலைக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளை ஆரம்பிக்க அனுமதிக்குமா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். 

பொறியியல் கல்லூரிகளில் அறிவியல் மற்றும் கலைப் படிப்புகள் வழங்கப்படும்போது அதற்கான கட்டணத்தை யார் நிர்ணயிப்பது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். இனியாவது, கல்லூரி தொடங்குவது குறித்துத் தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும். கல்லூரி நடத்துபவர்கள் உயர்கல்வியில் போதிய திறன் உள்ளவர்களா என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும். மாணவர்கள் விகிதத்தில் மட்டும் கவனம் செலுத்தும் அகில இந்தியத் தொழில்நுட்பக் குழு, தனியார் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமனம், ஊதியம், கல்விக் கட்டணம், வேலை வாய்ப்புக்கான வசதிகள் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஆசிரியர்கள், மாணவர்களிடையே உள்ள விகிதத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று, 1:15 என்றிருந்த ஆசிரியர் - மாணவர்கள் விகிதத்தை 1:20 என்று மாற்றியிருக்கிறது ஏ.ஐ.சி.டி.இ. இது பொறியியல் கல்வியின் தரத்தை மேலும் மோசமாக்கும். இதன்மூலம், தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வரும் 1,78,809 பேராசிரியர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும். குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் 16,500 பேர் வேலை இழக்கும் நிலையில் உள்ளனர். இதனையெல்லாம் கவனித்து ஏ.ஐ.சி.டி.இ முடிவெடுக்க வேண்டும்" என்றார். 

இந்திய மக்கள் தொகைக்கு இன்னும் பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்க வேண்டியது அவசியமே. அதே நேரத்தில் கல்வியின் தரத்தையும், மாணவர்கள், கற்பிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.