Published:Updated:

இடைக்கால பட்ஜெட்டில் விவசாயம்! - ஒரு விவசாயப் பொருளாதார வல்லுநரின் பார்வை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இடைக்கால பட்ஜெட்டில் விவசாயம்! - ஒரு  விவசாயப் பொருளாதார வல்லுநரின் பார்வை
இடைக்கால பட்ஜெட்டில் விவசாயம்! - ஒரு விவசாயப் பொருளாதார வல்லுநரின் பார்வை

இடைக்கால பட்ஜெட்டில் விவசாயம்! - ஒரு விவசாயப் பொருளாதார வல்லுநரின் பார்வை

பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியுஷ் கோயல், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்ற விவசாயம் பற்றிய அறிவிப்புகளில் முதன்மையான சிலவற்றைப் பார்ப்போம்...

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வருமானம் கிடைக்க உத்தரவாதம்.

இதற்காக நடப்பு நிதி ஆண்டில் 75,000 கோடிரூபாயும், 2018-19 திருத்திய மதிப்பீட்டில் கூடுதலாக 20,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

காமதேனு ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்துக்கெனத் தனியான துறை உருவாக்கப்படும்.

கிசான் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வட்டி மானியம் இரட்டிப்பாகும்.

இத்திட்டங்களை பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் பாலசுப்ரமணியனைத் தொடர்புகொண்டு கருத்து கேட்டோம். ``பியுஷ் கோயல் பேசுய போது `விவசாய இடுபொருள்களை வாங்க இந்த 6000

ரூபாய் உதவியாக இருக்கும். இதன் மூலம் விவசாயிகள் கடனாளி ஆவது தவிர்க்கப்பட்டு கந்துவட்டி வேட்டையிலிருந்து தப்பிக்கலாம்' என்றார். உண்மையில் வருடத்திற்கு 6000 ரூபாய் போதுமானதாக இருக்குமா? இந்தத் தொகை மூன்று தவணைகளாகப் பிரித்து தரப்படும். மாதம் 500 ரூபாய் என்றால் நாள் ஒன்றுக்கு 16.6 ரூபாய் மட்டுமே. யானைப் பசிக்குச் சோளப்பொறியா என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது, இந்தச் சலுகையும் இரண்டு ஹெக்டேருக்குள் நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. விவசாயக் கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் 2005-06 ல் 83 சதவிகிதமாக இருந்த சிறு குறு விவசாயிகள் 2015-16ல் 86 சதவிகிதமாக உயர்ந்துள்ளன என்பது தெரியவந்தது. இத்திட்டத்தின் முக்கியப் பின்னடைவு குத்தகைக்கு விவசாயம் செய்யும் சொந்த நிலம் இல்லாத விவசாயிகளுக்கு சலுகை மறுக்கப்பட்டுள்ளதுதான். இது தவிர விவசாயிகளுக்குப் பல இடர்பாடுகள் உள்ளன. நிலத்தடி நீர்,  மேற்பரப்பு நீர் மற்றும் மண் வளம் போன்ற இயற்கைச் சூழலைக் காப்பாற்ற இன்னும் கவனம் செலுத்தவேண்டும்.

இயற்கை வள நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது. நகர்புறத்தில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி, மருத்துவச் செலவு போன்றவற்றிற்குச் செலவு செய்வதைப் போல விவசாயிகள் செய்ய முடிவதில்லை. இதற்குக் காரணம் அவர்களின் குறைந்த வருமானம்தான். அதை உயர்த்த 6000 ரூபாய் என்பது கண்துடைப்பு வேலை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விவசாயத் துறையின் பங்களிப்பு வெறும் 16 சதவிகிதம் மட்டுமே. ஆனால், மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களிலே ஈடுபட்டுள்ளனர். 50 சதவிகித மக்களிடமிருந்து 16 சதவிகித உற்பத்தித் திறன் என்பது பெரிய முரண்பாடாக உள்ளது. மேலும் உற்பத்தியை அதிகரித்தாலும் அதை வாங்க நுகர்வோர் இல்லை என்பதாலும் சரியான விலை கிடைக்காததாலும் விவசாயப் பொருள்களை சாலையில் கொட்டும் அவலம் ஏற்படுகிறது. விவசாயப் பொருள்களின் நுகர்வை அதிகரிக்க அனைத்து தரப்பு மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமதேனு ஆயோக் அமைப்பும் மீன்வளத்துக்கென தனித்துறை அமைப்பதும் வரவேற்கத்தக்கது. மாறி வரும் சூழலில் பயிரை மட்டும் நம்பி விவசாயம் செய்யாமல் கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணை முறை முக்கியத்துவம் பெறும் நேரத்தில் இதுபோன்ற அமைப்புகளின் செயல்பாடு அவசியமாகும்.

கிசான் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வட்டி மானியம் இரட்டிப்பாகும் என்பது சந்தோஷம்தான். ஆனால் எல்லா விவசாயிகளிடமும் கிசான் கார்டு உள்ளதா? நபார்டு வங்கிக் கணக்கெடுப்பின்படி, 2015-16-ல் வெறும் 10 சதவிகித விவசாயிகள் மட்டுமே கிசான் கார்டு வைத்திருப்பது தெரியவந்தது.

இதைத் தவிர `கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கடனுக்கு 2 சதவிகித வட்டி தள்ளுபடி, கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் கூடுதலாக 3 சதவிகித வட்டிச் சலுகை, பேரிடர் காலங்களில் வழங்கப்படும் 2 சதவிகித வட்டித் தள்ளுபடி, கடன் காலம் முழுவதற்கும் வழங்கப்படும்' போன்ற அறிவிப்புகளும் உள்ளன. ஆனால், பேரிடர் காலத்தில் ஏற்படும் இழப்புடன் ஒப்பிட்டால் இந்தச் சலுகைகள் கடலில் ஒரு துளி போன்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவசாயிகள் ஆணையம் அமைக்கப்படவில்லை. விவசாயிகளின் குறைகளை நேரடியாக அவர்களிடம் கேட்டு அதற்கேற்ப திட்டங்களை வகுத்தால்தான் அது விவசாயிகளுக்குப் பயன் தரும். விவசாயம் சார்ந்த தொழில்துறை முதலீடுகள், விவசாயத்தை நவீனப்படுத்தும் முதலீடுகள் போன்றவை இந்த பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்திருக்க வேண்டும். மொத்தத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு