Published:Updated:

பாகூர் ‘பார்’ ஊரான கதை! - ‘குடி’மகன்களுக்கு இலவச ஆட்டோ...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாகூர் ‘பார்’ ஊரான கதை! - ‘குடி’மகன்களுக்கு இலவச ஆட்டோ...
பாகூர் ‘பார்’ ஊரான கதை! - ‘குடி’மகன்களுக்கு இலவச ஆட்டோ...

குடிகெடுக்கும் புதுச்சேரி அரசு...

பிரீமியம் ஸ்டோரி

புதுச்சேரி அரசும் அரசியல்வாதிகளும் கடைபிடிக்கும் மதுக்கொள்கை, கிராமப்புறத்தில் இருக்கும் அப்பாவி விவசாய மக்களின் வாழ்க்கையைக் கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு மோசமான உதாரணமாக திகழ்கிறது புதுச்சேரி மாநிலத்தில் பாகூர் என்கிற விவசாய கிராமம்.

‘தேசிய நெடுஞ்சாலைகளில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால், அதிக அளவில் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்’ என்று பா.ம.க-வின் வழக்கறிஞர் பாலு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 162 மதுக்கடைகளை மூடியதாக அறிவித்தது புதுச்சேரி அரசு. அதேசமயம், முன் வாசலை மூடிவிட்டு பின் வாசலைத் திறந்த கதையாக, மூடப்பட்ட மதுக்கடைகளை கிராமப்புறங்களில் திறந்துகொள்ள அனுமதி அளித்துவிட்டது புதுச்சேரி அரசு.

பாகூர் ‘பார்’ ஊரான கதை! - ‘குடி’மகன்களுக்கு இலவச ஆட்டோ...

இந்த முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூரையொட்டி இருக்கும் பாகூர்தான். குறிப்பாக சோரியங்குப்பம், முள்ளோடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளும், பார்களும் வரிசைகட்டி நிற்கின்றன. விளைவு, இங்கு தடுக்கி விழுந்தாலே பார் வாசலில்தான் விழவேண்டும். புதுச்சேரியின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த பாகூர், ‘குடி’மகன்களுக்குச் சொர்க்கபுரியாகவும் குடியானவர்களுக்குச் சோக பூமியாகவும் மாறி, ‘பார்’ ஊராகக் காட்சியளிக்கிறது. இந்த பார்களின் அருகில் நிலம் வைத்திருந்த விவசாயிகள், விவசாயத்தை மூட்டைகட்டிவிட்டார்கள். மாறாக அந்த இடங்களில் பெட்டிக்கடைகளைத் திறந்து சிகரெட், ஊறுகாய், கிளாஸ் உள்ளிட்ட பொருள்களை விற்பதுடன், விவசாய நிலங்களைத் திறந்தவெளி பார்களாக்கிவிட்டார்கள்.

இங்கிருந்து கடலூர் மற்றும் கன்னியக் கோயிலுக்குச் சரியான பேருந்து வசதிகள் கிடையாது. ஆனால் கடலூர் சாவடி, கன்னியக்கோயில் பகுதிகளில் இருந்து இங்கு மது அருந்த வருவோருக்கு இலவச ஆட்டோ சர்வீஸ் நடத்துகின்றன இங்கிருக்கும் மது பார்கள். ‘நெடுஞ்சாலையில் இருந்து பார்த்தால், பார்களின் விளம்பரப் பலகைகள்கூட தெரியக்கூடாது’ என்பதும் நீதிமன்ற உத்தரவுகளில் ஒன்று. ஆனால், பெரிய விளம்பரப் பலகையில் அம்புக்குறி வரைந்து, காவல் துறையினர் கண் எதிரிலேயே, “உட்காருங்க பாண்டிச்சேரி பாருக்கு போகலாம்... ஆட்டோ ஃப்ரீதான்” என்று கூவிக் கூவி ஆட்களை ஏற்றிச் செல்கின்றன ஆட்டோக்கள்.

குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த இந்தப் பகுதி பெண்கள் ஓய்ந்துவிட்டார்கள். புதுச்சேரியைப் பொறுத்தவரை, ‘மதுக்கடைகளால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று எந்த அரசாவது பேசினால், கட்சி பேதமின்றி அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஒன்றிணைந்து ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்குச் சென்றுவிடுவார்கள். காரணம், புதுச்சேரியில் இயங்கும் 90 சதவிகிதம் பார்கள் எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் சொந்தமானவை. புதுச்சேரி பட்ஜெட்டைத் தாங்கிப்பிடிப்பதே, கலால் துறையின் வருவாய்தான் என்பதால் எந்த ஆட்சி வந்தாலும் இந்த விஷயத்தில் ‘கப்சிப்’ ஆகிவிடுகிறார்கள்.

பாகூர் ‘பார்’ ஊரான கதை! - ‘குடி’மகன்களுக்கு இலவச ஆட்டோ...

இந்தப் பகுதியின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தும், மதுக்கடைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி, மக்களுடன் சேர்ந்து சாராயக்கடைகளை அடித்து நொறுக்கியவர் தனவேலு. அவரிடம் பேசினோம். “எங்கள் ஊரில் அனைவருமே விவசாயக் கூலிகள்தான். வீட்டுக்குப் பக்கத்திலேயே பார்கள் இருப்பதால், கூலிப் பணத்தில் குடித்துவிட்டு, பெண்களை அடித்து உதைத்து அவர்களின் கூலிப் பணத்தையும் பிடுங்கிக் குடித்துவிடுகிறார்கள் ஆண்கள். ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையாகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார்கள். முள்ளோடை பகுதியில் தினமும் ஒரு விபத்து நடக்கிறது. இதனால், சென்னை உயர் நீதிமன்றம் சென்று, குடியிருப்புப் பகுதிகளையொட்டியிருக்கும் பார்களை அப்புறப்படுத்த ஒரு வழிகாட்டுதலைப் பெற்றுவந்து துணை நிலை கவர்னர் கிரண் பேடியிடம் கொடுத்தோம். அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

குடிமகன்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவேண்டிய அரசுகளே, இப்படி மக்களை ‘குடி’மகன்களாக்கிச் சீரழிப்பது நியாயம்தானா நியாயமாரே!

- ஜெ.முருகன்
படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு