Published:Updated:

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி! - அழகுபடுத்தும் திட்டமா… அழவைக்கும் திட்டமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி! - அழகுபடுத்தும் திட்டமா… அழவைக்கும் திட்டமா?
தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி! - அழகுபடுத்தும் திட்டமா… அழவைக்கும் திட்டமா?

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி! - அழகுபடுத்தும் திட்டமா… அழவைக்கும் திட்டமா?

பிரீமியம் ஸ்டோரி

ஞ்சாவூர் நகரம், 1,000 கோடி ரூபாய் செலவில், ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியானபோது ஒட்டுமொத்த தஞ்சாவூர் மக்களும் மகிழ்ந்தார்கள். ‘அனைத்து அடிப்படை வசதிகளுடன், அழகான நகரமாக மாற்றப்படும்’ என்று அறிவிக்கப்பட்ட திட்டத்தில், மக்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் அம்சங்களும் இருப்பதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நகரத்தைச் சுற்றி அமைந்துள்ள பழங்காலத்துக் கோட்டை, தஞ்சாவூரின் தனி அடையாளம். கோட்டையையொட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள வீடுகளை அழித்து நடைபாதைப் பூங்கா அமைக்க, தஞ்சாவூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், ‘எங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது’ என்று போராடி வருகிறார்கள், மக்கள்.

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி! - அழகுபடுத்தும் திட்டமா… அழவைக்கும் திட்டமா?

கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நாகலட்சுமி, “இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 8,000 வீடுகள் இருக்கு. பல தலைமுறையா இங்க இருக்கோம். அந்த அட்ரஸை வெச்சு, எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மின்சார  இணைப்பு கொடுத்திருக்காங்க. அதனால, எங்களுக்கான வீடுனு நினைச்சு கடனை வாங்கி பல லட்ச ரூபாய் செலவில் வீடுகளைப் புதுப்பிச்சுருக்கோம். நாங்க எல்லோருமே தினப்படி கூலி வாங்குகிற அன்றாடம் காய்ச்சிகள். பாதாள சாக்கடைக்காகக்கூட எங்ககிட்ட பணம் வாங்கியிருக்காங்க. திடீர்னு வீட்டைவிட்டு வெளியேறச் சொல்றாங்க. அதுக்குப் பதிலா அடுக்கு மாடிக் குடியிருப்புல வீடு கொடுக்கிறதா சொல்றாங்க. நாங்க பிழைப்பு நடத்துற மார்கெட், பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல் எல்லாம் இங்கதான் இருக்குது. அவங்க சொல்ற அடுக்குமாடி குடியிருப்பு ரொம்ப தூரம். நாங்க போக்குவரத்துக்கே நிறைய செலவழிக்கணும். ரோட்டுல படுத்துக் கிடந்தாலும் இதுதான் எங்க சொந்த வீடு. எங்க உயிரே போனாலும் சரி... எங்க வீடுகளை இடிக்க விடமாட்டோம்” என்றார், கலங்கிய கண்களுடன்.

சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஜீவகுமார், “இந்தப் பகுதியில் குடியிருப்புகளை அழித்து நடைபாதைப் பூங்கா அமைப்பது ஆக்கப்பூர்வமான செயல் அல்ல. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனுபவப் பாத்தியத்தின்படி, இந்த மக்களை வீட்டைவிட்டு வெளியேற்ற முடியாது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது மக்களின் அடிப்படை வசதிகளையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டுமே தவிர, வீட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது” என்றார்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (தி.மு.க) டி.கே.ஜி.நீலமேகம், “நடைபாதைப் பூங்காவுக்குச் செலவழிக்க இருக்கும் தொகை 150 கோடி ரூபாயாம். இது மிகப் பெரிய பகல் கொள்ளை. இவ்வளவு பணம் செலவழித்து பூங்கா அமைப்பதால் யாருக்கும் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. பணத்தைக் கொள்ளை அடிப்பது மட்டும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம். செக்கடி அருகில் இருக்கும் மிகப் பெரிய குப்பைக் கிடங்கில் குப்பைகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சி சார்பில் 2.66 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நவீன இயந்திரம் பயன்பாடு இல்லாமல் மூலையில் கிடக்கிறது. அதைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, நகர்ப் பகுதியில் 10.5 கோடி ரூபாய் செலவில் 14 இடங்களில் குப்பைப் பராமரிப்பு மையங்களை அமைக்க இருக்கிறார்கள். குப்பைக் கிடங்கைச் சுத்தப்படுத்த 14.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு  ஒரு கோடி ரூபாய்கூடத் தேவைப்படாது. மூன்று குளங்களைச் சீரமைக்க 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாகக் குளங்கள் அமைக்கக்கூட இவ்வளவு செலவாகாது. இதுபோல மக்களுக்குப் பயனற்ற பல்வேறு திட்டங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறது” என்றார்.

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி! - அழகுபடுத்தும் திட்டமா… அழவைக்கும் திட்டமா?

மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிச்சந்திரனிடம் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டோம். “கோட்டைப் பகுதியில் உள்ள மக்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க இருக்கிறோம். கோட்டையைச் சீரமைத்துப் பராமரிக்க இருக்கிறோம். பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணைப்படி, குப்பைக் கிடங்குகளை அகற்றிவிட்டு நகரத்தின் குப்பைகளை அந்தந்தப் பகுதிகளிலேயே மறுசுழற்சி செய்யப் போகிறோம். இந்தத் திட்டங்கள் அனைத்துமே மக்களுக்குப் பயனளிக்கக் கூடியவைதான். திட்டங்கள் அனைத்தும் முறையாகத்தான் நடக்கின்றன. முறைகேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை” என்றார்.

- கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: ம.அரவிந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு