Published:Updated:

இப்போது இலங்கை எப்படி இருக்கிறது?

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

இறுதிப்போர் முடிந்து 10 ஆண்டுகள்...

இப்போது இலங்கை எப்படி இருக்கிறது?

இறுதிப்போர் முடிந்து 10 ஆண்டுகள்...

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமான இறுதிப்போர் முடிந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரின்போது, விடுதலைப்புலிகளை மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களையும் கொன்றுக் குவித்தது இலங்கை ராணுவம். இப்போது எப்படி இருக்கிறது இலங்கை?

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வந்திருந்த இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் அங்குள்ள நிலை குறித்துப் பேசினோம்... `‘தங்கள் அடையாளங்கள் குறித்து வெளியிட வேண்டாம்’’ என்ற வேண்டுகோளுடன் பேசிய அவர்கள், ‘‘மஹிந்த ராஜபக்‌சேவும் அவரின் தம்பி கோத்தபய ராஜபக்‌சேவும்தான் எங்கட மக்கள் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்கள். அவர்களுக்குத் துணையாக மைத்திரிபால சிறிசேன இருந்தார். பிறகு ராஜபக்‌சேவிடமிருந்து பிரிந்து வந்த சிறிசேன, அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றார். ஆனாலும், அவரது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு பெரிய அளவிலான தீர்வுகள் எதுவும் கிட்டவில்லை. எங்கட வாழ்விடங்களில் சிங்களவர்களைக் குடியமர்த்துவது மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது. மற்றபடி எல்லாவிதமான கட்டுப்பாடுகளும் தொடர்ந்துகொண்டேதான் இருந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கச்சத்தீவு திருவிழாவுக்கு வருவதற்குகூட வழமையைவிட கூடுதலான கட்டுப்பாடுகள் குறிக்கட்டுவான் இறங்குதுறையில் விதிக்கப் பட்டன. ‘போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் நிலை என்ன?’ என்பதுதான் எங்கட மக்களின் பிரதான கேள்வி. அதற்கு எந்தப் பதிலும் தரப்பட வில்லை. இதனால் இதற்கான போராட்டங்கள் தினம் தினம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தற்போது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தபய, காணாமல் ஆக்கப்பட்டவர்களை இறந்துபோனவர்களாக அறிவித்துள்ளார். அதிலும் 20,000 பேர் மட்டுமே அவ்வாறு அறிவிக்கப்பட்டு, அவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை தருவதாகக் கூறியுள்ளார்.

இலங்கை
இலங்கை

பல்லாயிரம் பேரின் கதி என்னவென்றே தெரியவில்லை. அவர்களது குடும்பங்கள் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கின்றன. ‘ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த போர்க்குற்ற விசாரணையில் இந்தப் பிரச்னைக்கு விடிவு கிட்டும்’ என நினைத்தோம். ஆனால், அந்த விசாரணை அமைப்பிலிருந்தே இலங்கை அரசு விலகியுள்ளது. விசாரணையிலிருந்து தப்பிக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்த இலங்கை அரசு, போரில் குற்றம்சாட்டப்பட்ட ராணுவத் தளபதியை அமெரிக்கா அனுமதிக்கவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி விசாரணை அமைப்பிலிருந்து விலகிவிட்டது. இதனால், எங்களுக்கு தீர்வு கிட்டுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது’’ என்றனர் கவலையுடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலங்கை ஊடகவியலாளர் ஒருவரிடம் பேசினோம். ‘‘இலங்கையில் புலிகள் இயக்கம் செயல்பட்டபோது இருந்த ஒழுக்கங்கள், கட்டுப் பாடுகள் எல்லாம் இப்போது இல்லை. எங்கட மக்கள் வாழும் பகுதிகளில் அரசுத் திட்டங்கள் செயலாக்கம் அரைகுறையாகவே இருக்கின்றன. போதிய வேலைவாய்ப்புகளோ தொழில் வாய்ப்புகளோ தமிழர்களுக்கு இல்லை. மறுவாழ்வுக்காக அரசிடம் கடன் வாங்கியவர்கள் தொழில் வாய்ப்பு இல்லாததால் அதைத் திரும்பச் செலுத்த முடியாமல் தத்தளிக்கின்றனர். படித்த இளைஞர்களுக்கும் போதிய வேலைவாய்ப்பு இல்லை. இந்த விரக்தியில் பலர் தீய பழக்கவழக்கங் களுக்கு ஆட்படுகின்றனர். போராட்ட குணம் படைத்த தமிழ் இளைஞர்களின் கவனத்தை திசைதிருப்ப நினைக்கும் இலங்கை அரசு, தமிழ் இளைஞர்கள் தீய பழக்கங்களுக்கு ஆட்படுவதைத் தடுக்க முன்வருவதில்லை.

தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி நல்வழியில் வழிநடத்த வேண்டிய தமிழர் தலைவர்களோ... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனப் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். இதனால், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட வென்றெடுக்க முடியாத சூழலே அங்கு நிலவுகிறது. சுதந்திரதினத்தில் தமிழ் மொழியில் பாடப்பட்டுவந்த தேசிய கீதம், இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கைத் தமிழர்கள் பெருமளவு பங்கேற்கும் கச்சத்தீவு திருவிழா பிரார்த்தனையிலும்கூட சிங்கள மொழியைப் புகுத்திவிட்டனர். இப்படி ஏராளமான ஒடுக்குமுறைகள் இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கச்சத்தீவு திருவிழாவில்...
கச்சத்தீவு திருவிழாவில்...

சமீபத்தில் கல்வித் துறையில் அடிப்படை கல்வி கற்பிக்கும் தொண்டர் பணிக்கு ஒரு லட்சம் பேர் தேர்வுசெய்யப்பட்டனர். வழக்கமாக பிரதேசச் செயலாளர்கள் செய்துவந்த இந்தத் தேர்வுப் பணி, இந்தமுறை ராணுவ அதிகாரிகளைக்கொண்டு நடத்தப்பட்டது. இதனால் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டுமா என்பது கேள்விக்குறி தான். நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே, இறந்துபோன புத்த பிக்கு ஒருவரின் உடலை எரியூட்டினர். பிறகு அந்த இடத்துக்கு உரிமை கொண்டாடியதுடன் அங்கே புத்த விகாரமும் ஏற்படுத்தியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக தமிழர்களை அரவணைத்துச் செல்வதுபோல் நடந்துவரும் கோத்தபய ராஜபக்‌சே கூட்டணி தேர்தலுக்குப் பிறகு தன் உண்மையான முகத்தைக் காட்டும் என்றே நினைக்கிறோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism