Published:Updated:

அஜாக்கிரதையின் விலை அவசர நிலை!

கிட்டத்தட்ட அனைத்து மாநில முதல்வர்களையும் அலறவைத்திருக்கிறார் மோடி.

பிரீமியம் ஸ்டோரி

ஏப்ரல் 14... இந்தியா முழுவதும் தற்போது நடைமுறையில் இருக்கும் 21 நாள்கள் ஊரடங்கு முடிவுக்கு வரும் நாள். அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விகள் எங்கெங்கும் எதிரொலிக்கின்றன. ‘ஊரடங்கு நீட்டிக்கப்படும்’, ‘நீட்டிக்கப்படாது’ என விவாதங்கள் சூடுபறக்கின்றன. ஆனால், ‘‘இவை இரண்டுமே இல்லாத இன்னொன்று நடக்கப்போகிறது’’ என்று அதிரவைக்கி றார்கள் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரத்தில்!

பல்வேறு மாநில முதல்வர்களுடன் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நடத்திய கறார் ஆலோசனைக்குப் பிறகுதான், அதிரவைக்கும் புது விஷயம் பற்றிய பேச்சுகள் புறப்பட்டுள்ளன.

பல்வேறு மாநில முதல்வர்களுடனும் கவலைபொங்க விவாதித்த பிரதமர், மார்ச் 27 காலை 10 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியிருக்கிறார். அந்த அழைப்பை முடித்தபோது முதல்வரின் முகம் இருண்டுபோயிருந்ததாம். அந்த அளவுக்கு பிரதமர் என்ன பேசிவிட்டார் என்பது பற்றி கோட்டை வட்டாரத்தில் சூடான விவாதங்கள் நடக்கின்றன.

‘எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியே இருக் கின்றனவே. எவருக்கும் எந்த பயமும் இல்லையா, எதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அமைச்சர்கள், அதிகாரிகள்? நானே கையில் எடுத்தால்தான் சரிப்பட்டுவரும்போலிருக்கிறது!’ என்றெல்லாம் சாடித்தள்ளிவிட்டாராம் மோடி.

பிரதமரிடமிருந்து இந்தப் பாய்ச்சலை எதிர்பார்க்க வில்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கிட்டத்தட்ட அனைத்து மாநில முதல்வர்களையும் இப்படித்தான் அலறவைத்திருக்கிறார் மோடி.

‘‘பிரதமர் பேசிய அந்த வார்த்தைகளின் அர்த்தம்... அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனத்துக்கான முன்னறிவிப்பு என்பதுதான்’’ - இதுதான் தமிழகத்தில் அரசியல் அதிகார வட்டாரங்களில் இப்போது தகிக்கும் டாபிக்.

இதுகுறித்து மத்திய அரசின் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

‘‘பிரதமர் மோடி கடும் கவலையில் இருக்கிறார். காரணம், சில மாநிலங்களின் போக்கு. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு எப்படி அமல்படுத்தப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை கேட்டிருந்தார் பிரதமர். மத்திய உளவுத் துறையினர் சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் அனுப்பியிருந்தனர். அதில் ஊரடங்கை மதிக்காமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் விதிகளை மீறும் மாநிலங்களின் பட்டியல் நீளமாகவே இருந்திருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி போன்ற பெரிய நகரங்களில் பொதுமக்கள் தாராளமாக நடமாடுவது, பொது இடங்களில் கூடுவது, திருத்தணி அருகே இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோக்கள், புகைப்படங்களைச் சேகரித்தும் அனுப்பியிருந்தது அந்த டீம். சென்னையில் அதிகளவில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை 60 சதவிகித மக்கள் மதிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறது அந்த டீம். கிராமப் புறங்களில் 65 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் அத்துமீறுகின்றனர் என்ற தகவலும் அந்த டீமின் ரிப்போர்ட்டில் இடம்பெற்றிருக்கிறது.

ஊரடங்கு
ஊரடங்கு

உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும் இதே நிலை உள்ளது. கொரோனா சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சி இந்த மாநிலங்களின் செயல்பாடுகளால் தோல்வியுற வாய்ப்புண்டு.

இப்படித்தான் பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரதமருக்குத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான் ஊரடங்கை ஒழுங்காக அமல்படுத்தாத மாநிலங்களில் மட்டும் அவசரநிலையை அமல்படுத்துவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் தீவிர ஆலோசனை நடந்துள்ளது. கடந்த காலங்களில் பிளேக், அம்மை போன்ற பயங்கர தொற்று நோய்கள் பரவிய காலகட்டத்தில் இந்தியாவில் அவசர நிலைக்கு இணையான சில சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல் இப்போது கொண்டுவருவது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை கேட்கப் பட்டிருக்கிறது. அந்தப் பழைய சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்து புதியதாக ஒரு சட்டத்தை உருவாக்கும் முயற்சி நடந்துவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பாது காப்பை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகமே எடுத்துக்கொள்வதுதான் இந்தச் சட்டத்தின் பிரதான அம்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்படும் எமர்ஜென்சி அல்ல... மெடிக்கல் எமர்ஜென்சி. அதாவது மக்களின் நலன் கருதி அவர்களிடையே ஓர் ஒழுங்கைக் கொண்டுவருவதற்காக அமல்படுத்தப் படும் எமர்ஜென்சி’’ என்று விளக்கமாக எடுத்துவைத்தார் அந்த அதிகாரி.

அவரிடம், ‘‘இதை எப்படி நடைமுறைப்படுத்துவார்கள்... சில மாநிலங்களில் மட்டும் இதைக் கொண்டுவந்தால் கடும் எதிர்ப்புக் கிளம்புமே?’’ என்று கேட்டோம். அதையும் அந்த அதிகாரி விளக்கினார்.

அஜாக்கிரதையின் விலை அவசர நிலை!

‘‘இது ஒன்றும் மாநிலங்களின் அதிகாரத்தை கையில் எடுக்கும் விஷயமோ, அதிகார வரம்பை மீறுவதோ அல்ல. தேச நலனுக்கான அத்தியாவசிய நடவடிக்கைதான். இந்தியாவில் சி.ஆர்.பி.எஃப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை), பி.எஸ்.எஃப் (எல்லைப் பாதுகாப்புப் படை), சி.ஐ.எஸ்.எஃப் (மத்திய தொழில் பாதுகாப்புப் படை), இந்தோ–திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட ஏழு விதமான துணை நிலை ராணுவப் படையினர் இருக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்பது லட்சம்.

கொரோனா விழிப்புணர்வு இல்லாத மாநிலங்களின் லிஸ்ட் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் முதல் இடத்தில் உள்ள நான்கு மாநிலங்களில் மிகவும் ஆபத்தான ஏரியாக்கள் என்று இன்னோர் உள் பட்டியலையும் தயார்செய்திருக் கின்றனர். இந்த ஏரியாக்களில மத்திய துணை நிலை ராணுவப் படையினர் ரோந்துபணியில் ஈடுபடுவர். அதாவது அந்தப் பகுதியின் சட்டம் ஒழுங்கு முழுவதும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும். எவரும் எதுவும் கேட்க முடியாது. இதைச் செயல்படுத்துவதில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவை பா.ஜ.க ஆட்சி இல்லாத மாநில அரசுகள் எதிர்க்கக்கூடும். ஆனால், கொரோனா பரவுதலைத் தடுக்க வேறு வழியின்றி இந்த முடிவை மத்திய அரசு செயல்படுத்தும் நிலையில் இருக்கிறது. அந்தப் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது’’ என்றார்.

மத்திய உள்துறை சர்வே எடுத்தது, ஊரடங்குக்கு ஐந்து நாள்களுக்குப் பிறகுதான் என்றாலும், ஊரடங்கு அறிவித்த அன்றைய நிலையே மிகமோசமாகத்தான் இருந்தது. 144 தடை உத்தரவை 21 நாள்களுக்கு அறிவித்த பிரதமர், ‘அனைவரும் இருக்கும் இடத்திலேயே இருங்கள்’ என்ற வேண்டுகோளை முன்வைத்தார். அவர் அறிவித்த அன்றைய இரவில்தான் கூட்டம் கூட்டமாக மக்கள் தங்கள் ஊர்களுக்குக் கிளம்பினார்கள். இதில் மத்திய, மாநில அரசுகளின் தவறும் இருக்கிறது.

உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு பல லட்சம் பேர் நடந்தே கிளம்பினர். அடுத் தடுத்த நாள்களில் டெல்லி பதறியது. டெல்லி ஆனந்த்விஹார் பேருந்துநிலையத்தில் பல்லாயிரக்கணக்கில் குவிந்த மக்களை டெல்லி போலீஸால் கட்டுப்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி, இவர்களை அழைத்துவர ஆயிரம் பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசு அனுப்பியது.

கடந்த 30-ம் தேதி காலை நிலவரப்படி, 144 தடை உத்தரவை அத்துமீறிய குற்றத்துக்காக தமிழகத்தில் 19,637 வழக்குகள் பதிவாகியுள்ளன. 22,906 பேர் கைதுசெய்யப்பட்டு, 15,129 வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஆறு நாள்களில் மட்டும் நடைபெற்ற 20,497 அத்துமீறல்களில் 5.25 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டாலும் மக்கள் ஆபத்தின் வீரியத்தை உணரவில்லை.

அஜாக்கிரதையின் விலை அவசர நிலை!

‘‘கொரோனா அச்சுறுத்தலுக்காக நாட்டில் எமர்ஜென்சி கொண்டுவருவது சாத்தியமா?” என்று கணேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் தலைவரும், இந்திய அரசியலமைப்புச் சட்ட நிபுணருமான கணேஷ் சுப்பிரமணியனிடம் கேட்டோம்.

‘‘எல்லையோரத் தாக்குதல், ஆயுதம் ஏந்திய உள்நாட்டுக் கலவரம், போர் ஆகிய மூன்று காரணங்களுக்காகத்தான் நாட்டில் எமர்ஜென்சியைக் கொண்டுவர முடியும். கொரோனாவை வைத்து நேரடியாக நாட்டில் எமர்ஜென்சியைக் கொண்டுவர சட்டரீதியாக இடம் கிடையாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 355-ன்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும். சட்டப்பிரிவு 257 உட்பிரிவு 1-ன்படி, தேவைப்பட்டால் மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட சட்டம் ஒழுங்கில் மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். இதை, மாநில அரசு எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. இதையேதான் சட்டப்பிரிவு 256-ம் கூறுகிறது. `மத்திய அரசின் உத்தரவுகளை மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை என்றால், மாநிலத்தில் அரசு செயல்படவில்லை என்பதை காரணமாகக் காட்டி ஜனாதிபதி உரிய நடவடிக்கையை எடுக்கலாம்’ என சட்டப்பிரிவு 365 கூறுகிறது. இதன்படி பார்த்தால், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள கொரோனா இயக்கக் கட்டுப்பாடுகள் (lockdown) உத்தரவை நிறைவேற்றாத மாநிலங்களில் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி எமர்ஜென்சியைக் கொண்டுவர முடியும். இது மிக மிக அரிதான நிகழ்வு. ஆனால், சாத்தியமானது” என்றார் தெளிவாக.

அஜாக்கிரதையாக மாநில அரசுகளும் மக்களும் இருக்கும்போது, அதற்கான விலையாக அவசரநிலையை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்!

தமிழகத்தில் கொரோனா!

அஜாக்கிரதையின் விலை அவசர நிலை!

மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 74 ஆகியுள்ளது. கொரோனாவுக்கு முதல் பலியான மதுரையைச் சேர்ந்த நபரின் மனைவிக்கும் அவர்களின் இரண்டு மகன்களும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவெனில், இறந்தவர் தொடர்புவைத்திருந்த தாய்லாந்து மதக்குழுவினர் எட்டு பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதுதான். ஆனால், பெருந்துறையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து மதக்குழுவைச் சேர்ந்த இருவருடன் இவர் தொடர்பில் இருந்ததால் இவருக்கு தொற்றியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது பெரியவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, மதுரை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் 32 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து வந்திருந்த மதப்பிரசங்கிகள் மூலம் மட்டுமே 24 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இவர்களில் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்ததில் ரயில்வே பெண் டாக்டருக்கு தொற்று ஏற்பட்டது. அவருடைய 10 மாதக் குழந்தை, டாக்டரின் தாய், பணிப்பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு