அலசல்
அரசியல்
Published:Updated:

தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் - பாதுகாப்பா... கண்காணிப்பா?

பாதுகாப்பா... கண்காணிப்பா?
பிரீமியம் ஸ்டோரி
News
பாதுகாப்பா... கண்காணிப்பா?

இந்தியாவில் தனிநபரின் தகவல்களை யாரேனும் தவறாகப் பயன்படுத்தினால் அவர்களை தண்டிப்பதற்கோ, அபராதம் விதிக்கவோ இப்போது எந்தச் சட்டத்திலும் இடமில்லை.

என்றைக்கு ஸ்மார்ட்போன் வந்ததோ அன்றே அந்தரங்கம் அல்லாத சமூகமாகிவிட்டோம் நாம்! இன்றைய இணைய உலகில் தனிமனித தகவல்களில் `ரகசியம்’ என்பதற்கே இடமில்லை. தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாலோ பொதுவெளியில் கசிவதாலோ உண்டாகும் பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் மத்திய அரசு தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அதேசமயம் இந்தச் சட்டம், உண்மையில் தனிநபர் தகவல்களுக்குப் பாதுகாப்பா அல்லது கண்காணிப்பா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் - பாதுகாப்பா... கண்காணிப்பா?

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அந்தச் சட்ட மசோதா, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்குச் சென்றிருக்கிறது. `டிஜிட்டல் யுகத்தில் இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களையும் அந்தரங்க உரிமையையும் பாதுகாக்க இந்த மசோதா முற்படும்’ என்றும் ட்வீட் செய்திருக்கிறார் ரவிசங்கர் பிரசாத்.

இந்தியாவில் தனிநபரின் தகவல்களை யாரேனும் தவறாகப் பயன்படுத்தினால் அவர்களை தண்டிப்பதற்கோ, அபராதம் விதிக்கவோ இப்போது எந்தச் சட்டத்திலும் இடமில்லை. ஃபேஸ்புக்கின் கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா விவகாரம், இந்தியாவில் ஆதார் உட்பட தகவல் திருட்டு ஆகியவை குறித்து பல்வேறு சர்ச்சைகள் அதிகரித்துவருவதால், தனிநபரின் தகவல் பாதுகாப்புக்காகச் சட்டம் இயற்றப்படுவது அவசியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மக்களின் டேட்டா தொடர்பான விஷயங்களில் பாதுகாப்பையும் வெளிப்படைத்தன்மையையும் நிறுவுவதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்கிறது மத்திய அரசு.

தனிநபர் தகவல்களைத் திரட்டுவது, சேமித்துவைப்பது, பயன்படுத்துவது, பகிர்வது, தனிநபர் தகவலைப் பயன்படுத்த ஒப்புதல் பெறும் முறை, தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தினால் அபராதம் என்ன, நஷ்டஈடு என்ன உள்ளிட்டவற்றை அடக்கிய தனிநபர் தகவல் பயன்பாட்டுக்கான விதிமுறைகள் மற்றும் அதை கண்காணிக்கும் அமைப்பு என அனைத்தும் இந்தச் சட்டத்தில் கையாளப் பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ‘பிரைவசி’ என்பது அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிசெய்துள்ள நிலையில், `தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்ட மசோதா 2019’ குறிப்பிடும் சில அம்சங்கள் கவனிக்கத்தக்கவை. அவை என்னென்ன?

பாதுகாப்பா... கண்காணிப்பா?
பாதுகாப்பா... கண்காணிப்பா?

அரசு, இந்தியாவில் பதியப்பட்ட தனியார் நிறுவனங்கள், தனிப்பட்ட தகவல்களைக் கையாளும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகிய மூன்றும் தனிநபர் சார்ந்த தகவல்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளை இந்தச் சட்ட மசோதா வரையறுக்கிறது. தனிநபர் குறித்த தகவல்களை Sensitive Data, Critical Data, General Data என மூன்று வகைகளாகப் பிரிக்கிறது.

  • சென்சிட்டிவ் டேட்டா என்ற முக்கியமான தகவல் பிரிவில் பாஸ்வேர்டு கொடுத்துப் பாதுகாக்கப்பட்டிருக்கும் தகவல்கள், நிதி மற்றும் வங்கி விவரங்கள், உடல்நலன் தொடர்பான விவரங்கள், பாலின விருப்பம், மதம் மற்றும் சாதிப் பிரிவுகள், வேலை, கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்கள், மரபியல் விவரம் உள்ளிட்டவற்றை வகைப்படுத்துகிறது. இந்தத் தகவல்களை சம்பந்தப்பட்டவரின் நேரடி ஒப்புதலுடன் மட்டுமே இந்தியாவுக்கு வெளியில் சேமிக்கவும் கையாளவும் நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், அந்தத் தகவல்களின் ஒரு நகலை கட்டாயம் இந்திய எல்லைக்குள்ளும் வைத்திருக்க வேண்டும் என்கிறது இந்தச் சட்டம்.

  • கிரிட்டிக்கல் டேட்டா எனப்படும் மிக முக்கியமான என்ற வகைப்பாட்டில் என்னென்ன தகவல்கள் இடம்பெறும் என்பதை, சூழலுக்கேற்ப அரசு தீர்மானிக்கும். ராணுவம் உள்ளிட்ட தேசப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் இந்த வகைப்பாட்டில் இடம்பெறுகின்றன. இந்தத் தகவல்களை இந்திய எல்லைக்குள்ளேயே கையாள வேண்டும்.

  • மேற்கண்ட இரண்டைத் தவிர்த்த பொதுவான தகவல்களை ‘ஜெனரல் டேட்டா’ என வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றை எங்கு வேண்டுமானாலும் சேமிக்கலாம்; பயன்படுத்தலாம்.

இந்தச் சட்டம் தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின் தகவல் பாதுகாப்பு ஆணையம் (Data Protection Authority) அமைக்கப்படும். இந்த அமைப்பு, தேர்தல் ஆணையத்தைப்போல் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக விளங்கும். இந்தச் சட்டம் தொடர்பான வழக்குகளை கவனிக்க, தனி தீர்ப்பாயம் (Appellate Tribunal) அமைக்கப்படும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு உரிமையும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் தனிநபர் தகவல்கள் அரசுக்குத் தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறது சட்டம். மத்திய அரசு நினைத்தால் எந்த அரசு நிறுவனத்துக்கும் இந்தச் சட்டவரைவிலிருந்து விலக்கு அளிக்க முடியும். இதன்மூலம் மத்திய அரசு சொந்த மக்களையே அதீத கண்காணிப்பிலேயே வைத்திருக்க இந்தச் சட்டம் உதவுகிறது என்பது சட்டம் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் சந்தேகமாக இருக்கிறது!