2 ஆண்டுகள் அல்லது 50 லட்சம்... மருத்துவ சேவை ஒப்பந்தத்தை மீறினார்களா மருத்துவர்கள்?!

நேஷனல் மெடிக்கல் கமிஷன் அறிக்கைபடி, இந்தியாவில் உள்ள 4,238 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களில் 594 இடங்கள் தமிழக கல்லூரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது மொத்த இடங்களில் 14 சதவிகிதமாகும்.
மருத்துவர்கள் தங்களின் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பிற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட மருத்துவ பிரிவில் நிபுணத்துவம் பெறுவதற்காக சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிக்கிறார்கள். இந்திய மருத்துவக் கல்லூரிகளில் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பிற்காக அதிக இடங்கள் ஒதுக்கப்படுவது டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான்.

நேஷனல் மெடிக்கல் கமிஷன் அறிக்கைபடி, இந்தியாவில் உள்ள 4,238 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களில் 594 இடங்கள் தமிழக கல்லூரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது மொத்த இடங்களில் 14 சதவிகிதமாகும். தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஐம்பது சதவிகிதம் மத்திய அரசின் நீட் தேர்வு அடிப்படையில் பொதுப்பிரிவில் எல்லா மாநில மருத்துவர்களுக்காகவும் ஒதுக்கப்படுகிறது (All India quota). ஐம்பது சதவிகிதம் மாநில அரசின் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு ரிசர்வேஷன் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
இதில் முதுகலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மாணவர்களுக்குப் படிப்பு முடிந்த பிறகு குறிப்பிட்ட காலம் அரசு மருத்துவமனையில் பணி செய்ய வேண்டும் என ஒப்பந்தம் போடுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கால அளவு, அபராதத் தொகை போன்றவை அந்தந்த மாநில அரசினால் நிர்ணயிக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு சேவையில் இல்லாத ஆல் இந்தியப் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அவர்கள் படிப்பு முடிந்த இரண்டாண்டுகளுக்குள் பணி ஆணை வழங்கப்பட வேண்டும் என்பதே நடைமுறையில் உள்ள சட்டம்.

படிப்பு முடிந்த பிறகு அரசு தேவைக்கேற்ப எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் இவர்களுக்குப் பணி ஆணை வழங்கலாம். தமிழகத்தில், மருத்துவர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியிலிருக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை மீறுபவர்கள் ஐம்பது லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையும் ஒப்பந்தத்தில் இடம்பெறுகிறது.
பொதுவாகத் தனியார் நிறுவனங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிக்க முனையும் மாணவர்கள் ஓர் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வரையில் கட்டணம் செலுத்துகிறார்கள். ஆனால் அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 30,000 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மாணவர்கள் படித்துக் கொண்டே பணியிலும் ஈடுபடுவதால் இந்த மருத்துவர்களுக்கு மாதம் 40,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உட்பட உயர்ரக மருத்துவச் சிகிச்சைகளை இலவசமாக வழங்குகிறது அரசு. சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிக்கும் மருத்துவர்களின் மருத்துவ சேவை என்பது இந்த அரசு மருத்துவமனைகளின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்து, படிப்பு முடித்ததும் 30 சதவிகிதம் மருத்துவர்கள் மட்டுமே பணி ஆணையை ஏற்றுப் பணியில் சேருகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 250 மருத்துவர்கள் பட்டப்படிப்பு முடிந்ததும் ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் பணி ஆணையைப் பெற்ற பின்பு அவர்களின் இருப்பிடத்தை அறிய முடியாமலேயே, தொடர்பின்றி போய்விடுகிறார்கள் என்கிறது தமிழக மருத்துவ கல்வி ஆணையம். இதுவரை இந்த மருத்துவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அபராதத் தொகையையும் யாரும் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.

ஆனால், இனிவரும் மருத்துவர்கள் இவ்வாறு செய்யாமல் தடுக்கவும், படிப்பு முடித்ததும் ஒப்பந்தப்படி அவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டி வலியுறுத்தவும் வேண்டும் என முடிவு செய்திருக்கிறது மருத்துவ கல்வி ஆணையம். இதன் முதல்கட்டமாக இந்த ஒப்பந்தத்தை மீறிய 250 மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் ஏற்படவிருக்கும் சட்ட போராட்டத்தைச் சந்திக்க ஆணையம் தயாராக இருக்கிறது என்பதே வெளிவந்திருக்கும் தகவல்.
இந்தச் சர்ச்சைக் குறித்து குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காசியிடம் பேசினோம். "அரசு இப்போது சொல்வது பாதி உண்மைதான். இந்த ஒப்பந்தம் என்பது நீண்ட நாட்களாக இருக்கும் ஒன்றுதான். ஆனால், குறைந்த பணம் என்பதுதான் வித்தியாசம். இதை யாரும் கொடுக்கவில்லை என்பதே தவறான விஷயம். கொடுக்க மறுத்தால் தேர்வு எழுதுவதே சிக்கலாகும். கவுன்சிலிங்கில் தமிழக மாணவர்கள் தமிழகத்தைவிட மற்ற மாநிலங்களைதான் விரும்புகிறார்கள். அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதனால் தமிழக இடங்கள் நிரம்புவதில்லை. அதனால், மற்ற மாநிலத்தவர்கள் இங்கே அதிகம் வருகிறார்கள். அவர்கள் கட்டாயம் என்பதால் தமிழக அரசு கேட்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் அதன்படி நடப்பதிலை. ஆல் இந்தியா கோட்டாவில் வருபவர்கள் ‘இந்த ஒப்பந்தம் எங்களுக்குப் பொருந்தாது’ என நீண்டகாலமகாவே சொல்லி வருகிறார்கள். சட்டரீதியாக அணுகி அவர்களின் சான்றிதழ்களை வாங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

முதுகலை படிப்பில் 100% இடங்களும் ஆல் இந்தியா கோட்டா என்றான பின் இது போன்ற மாநில அளவிலான ஒப்பந்த முறை வைத்திருப்பதே தவறு. ஒப்பந்த மதிப்பும் சில லட்சங்கள் வைத்தாலும் பரவாயில்லை. அதிக பணம் எனும்போது இப்படி செய்யாமலும், பணம் கட்டாமலும் தப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும்.
படிப்பை முடித்ததும் தமிழக அரசு சொல்லும் இந்தச் சேவை கட்டாயமென்றால், படித்து முடிக்கும் அனைவருக்குமா அரசு வேலை தருகிறது? அனைவருக்கும் உடனடியாக போஸ்டிங் போட வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்கள் ஒப்பந்தத்தைமீறி போகலாம் என்றாவது சொல்ல வேண்டும் இல்லையா? அப்படியும் எதுவும் இல்லை. போஸ்டிங்கும் போடாமல், அவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாமல் தடுத்தால் இப்படித்தான் ஆகும்" என்று இதிலுள்ள பிரச்னையை விளக்கினார்.
அதே சமயம் தற்போது, உத்திர பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத்தின் அரசு ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அந்த மாநிலத்தில் முதுகலை மருத்துவம் படிப்பவர்கள் கட்டாயம் 10 ஆண்டுகள் அந்த மாநிலத்திலேயே சேவையாற்ற வேண்டும். இல்லையென்றால் 1 கோடி ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என்று பீதியைக் கிளப்பியுள்ளது.
மருத்துவர்கள் பக்கம் மட்டும் இங்கே தவறில்லை. அரசு பிரச்னை எங்கே இருக்கிறது என முழுமையாக விசாரித்து நல்ல தீர்வை முன்வைக்க வேண்டும்.