Published:Updated:

“மின்சாரத்தில் கை வைத்துவிட்டார் ரஜினி!”

கி.வீரமணி
பிரீமியம் ஸ்டோரி
News
கி.வீரமணி

கி.வீரமணி விளாசல்

துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் முன்வைத்த கருத்துகள் தமிழக அரசியல் களத்தை தகிக்கவைத்துள்ளன. பெரும்விவாதத்தைக் கிளப்பியுள்ள ரஜினியின் பேச்சு தொடர்பாக, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“அன்று நடந்த சம்பவம் பற்றி பத்திரிகைகளில் வந்ததன் அடிப்படையில் தானே நடிகர் ரஜினி பேசியிருக்கிறார். அதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?”

“ `அரசியலுக்கு வரப்போகிறேன்’ என்று நடிகர் ரஜினி அவ்வப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார். எப்போது வருவார் என்பது கேள்விக்குறி. அதற்கு முன்பாக அவர், ‘தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. அதை தன்னால் நிரப்ப முடியும்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். தற்போது, இதை ஒரு வாய்ப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கி றார். மற்றவர்களால் ஒரு கருவியாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளார்.

`கடவுளர்களைத் தொடர்புபடுத்திப் பேசினால், திராவிட இயக்கத்தின் செல்வாக்கு குறைந்துவிடும். அதன்மூலம் பக்தர்கள் மற்றும் பிற தரப்பினரின் வாக்குகள் தங்களுக்குக் கிடைத்துவிடும்’ என நினைக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான், இதே ராமர் பிரச்னையை அரசியல்ரீதியாகப் பயன்படுத்தலாம் என சோ நினைத்தார். ஆனால், அது எதிர்விளைவாகத்தான் முடிந்தது. அதுபோலவே இப்போது பெரியாரை ரஜினி சீண்டியிருக்கிறார். இதற்கு எல்லோரும் பதில் சொல்வார்கள். அதன்மூலம் இன்னொரு சாராரின் விளம்பரங்கள் கிடைக்கும். அதைவைத்து வளர்ந்து விடலாம் என்பது அவர்களின் திட்டம். ஆனால் ரஜினியைப் பொறுத்தவரை, அவர் ஒரு மாயக்குதிரை!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுவது ரஜினியின் தனிப்பட்ட உரிமைதானே?”

“பெரியாரைக் கொச்சைப்படுத்தவும், உண்மைக்கு மாறான தகவலைச் சொல்லவும் யாருக்கும் உரிமை கிடையாது. உண்மைக்கு மாறாக ரஜினி பேசும்போது, அதைச் சுட்டிக்கட்டுவது எங்கள் கடமை. மன்னிப்பு கேட்பதோ, வருத்தம் தெரிவிப்பதோ மனிதப் பண்பின் பெருந்தன்மையைப் பொறுத்தது. அரசியலுக்கு ரஜினி வந்தால் எப்படி நடந்துகொள்வார் என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்.”

ரஜினி
ரஜினி

“பொதுவாக பெரியார் குறித்து அ.தி.மு.க-வினர் பெரும்பாலும் பேச மாட்டார்கள். ஆனால் இப்போது, ‘என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள்கூட உயர்ந்த நிலைக்கு வருவதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார்’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். ‘தந்தை பெரியாரின் வழியில் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அ.தி.மு.க உழைக்கும்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் சொல்கிறார். இதேபோன்று அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் எல்லோரும் பேசியிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பெரியார் அனைவருக்கும் உரியார் என்பது இதன்மூலம் உறுதியாகிறது. வலதுசாரிகள், பெரியாரை தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். அதற்கு இடம் தரக் கூடாது என்று துணை முதல்வரும் அமைச்சர்களும் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இது அரசியல் வியூகம்தான். அதில் ஆச்சர்யமில்லை. பெரியார் பல நேரங்களில் பலருக்கும் பயன்படக்கூடிய சுவாசக்காற்று என்பதை, தொடர்ந்து பார்த்துவருகிறோம்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டபோதும், வேறுவிதங்களில் அவர் இழிவுபடுத்தப் பட்டபோதும், ஆத்திகவாதிகள்கூட அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட்போல... பல சரக்குகளும் இருக்கும். பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கையை ஏற்காதவர்கள், அவரின் சமூகநீதியால் பயனடைந்திருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறியிருப்பார்கள். பெரியார் போராடியதால்தான், குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு பலரும் கல்வியறிவு பெற்றார்கள். வேலைவாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள். ‘கடவுளைப் பெரியார் மறுத்தாலும் நாங்கள் பெரியாரை கடவுளாகப் பார்க்கிறோம்’ என்று எத்தனையோ பேர் என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். இந்த உணர்வு அனைத்து தரப்பினரிடமும் இருக்கிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ரஜினியின் பேச்சை வலதுசாரிகள் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறார்கள். அதேபோல், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்களும் ரஜினியின் பேச்சால் ஒருங்கிணையும் போக்கையும் பார்க்க முடிகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இந்துத்துவ சக்திகள் தாங்கள் யார் என்ற அடையாளத்தையும், அதே நேரத்தில் திராவிட இயக்கத்தின் வேர் எவ்வளவு ஆழமானது என்பதையும் காலம் தெளிவாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ `பெரியார்’ என்ற மின்சாரத்தில் கை வைத்துவிட்டார் ரஜினி. 1971-ம் ஆண்டைப்போல் வரலாறு மீண்டும் திரும்பும்.”

கி.வீரமணி
கி.வீரமணி

“பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ‘திராவிடர் கழக குண்டர்கள், ரஜினிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள். நீதியின் முன்பாக அது நிற்காது. ரஜினியை ஒன்றும் செய்ய முடியாது’ என்று சொல்லியிருக்கிறாரே?”

“நீதிமன்றத்தை ஹெச்.ராஜா எப்படி மதிப்பார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவரைப் பற்றி நீதிமன்றத்துக்கு என்ன கருத்து இருக்கிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும். அதனால், நீதிமன்றத்தில் வழக்கு நிற்குமா, நிற்காதா என்பது அவருக்கும் தெரியும். அந்தத் ‘தகுதி’ அவருக்கு உண்டு. இதற்குமேல் இதைப் பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை.”

“ரஜினியை பி.ஜே.பி தூண்டிவிட்டுப் பேசவைக்கிறது என்பது நம்பும்படியாகவா இருக்கிறது?”

“தமிழக அரசில்களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாக இந்தச் சம்பவம் பயன்படுத்தப்படுகிறது. திட்டமிட்டுத்தான் இதில் அவர்கள் இறங்கியுள்ளார்கள். ஏற்கெனவே `பெரியார்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் என்ன கருத்துகளைச் சொன்னார் என்பதைப் பார்க்க வேண்டும். அப்போது அவர் தன் கருத்துகளை மிகவும் சுதந்திரமாக வெளிப்படுத்தினார். கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், இப்போது அவர் பேசுவது வேறு வகையானது. யாரிடம் அவர் இப்போது சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பது மிக முக்கியமானது. இந்துத்துவா அவரை விடப்போவதில்லை. அதன் பிடியிலிருந்து விடுபட வேண்டுமென அவர் நினைத்தாலும், அது அவரை விடவே விடாது. காலம் அவரை விடுதலை செய்யலாம். அப்போது அவர் உண்மையை உணர்வார்.”

யாரிடம் அவர் இப்போது சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பது மிக முக்கியமானது. இந்துத்துவா அவரை விடப்போவதில்லை. அதன் பிடியிலிருந்து விடுபட வேண்டுமென அவர் நினைத்தாலும், அது அவரை விடவே விடாது.
கி.வீரமணி
கி.வீரமணி
கி.வீரமணி

“ஆக, ரஜினிகாந்த் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறார் என்கிறீர்களா?”

“சினிமாவில் நடிகர்களுக்கு வசனம் எழுதிக் கொடுத்து பேசச் சொல்வார்கள். எப்படி நடிப்பது என்பதை இயக்குநர் சொல்லிக் கொடுப்பார். அந்தப் படம் வெற்றிகரமான படமா, தோல்வியடையக்கூடிய படமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இந்தப் படம் நிச்சயம் தோல்விப்படம்தான். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இது இன்னொரு ‘பாபா’வாகத்தான் இருக்கும்.”

“இதை முன்வைத்து தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்படுமா?”

“இதை நான் முக்கியமான விஷயமாகக் கருதவில்லை. திராவிட இயக்கத்தை எதிர்த்து நிறையபேர் அரசியல் செய்கிறார்கள். பெரியாரை எதிர்த்தால் விளம்பரம் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இப்போதுகூட எங்கள் கருத்துகளை ரஜினி விமர்சனம் செய்வதைப் பற்றி கவலையில்லை. ஆனால், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லியிருக்கிறார். `ராமர், சீதை உருவ பொம்மைகளை உடையின்றி எடுத்துச் சென்றார்’ என்று சொல்லியிருக்கிறார். பெண்ணுரிமையை மதிக்கும் ஒருவர், எந்தப் பெண்ணையும் அப்படிக் கொச்சைப்படுத்த மாட்டார்.

நாங்கள் இன்னொன்றையும் கேட்டு வாதாடினோம். ‘சீதையை ராமர் நெருப்பில் தள்ளலாமா? யாருடைய பேச்சையோ கேட்டு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சீதையைக் காட்டுக்கு அனுப்பலாமா?’ என்றெல்லாம் கேட்டோம். பெண்ணுரிமையைப் பற்றியும், மனித உரிமையைப் பற்றியும்தான் நாங்கள் பேசுகிறோம்.”