Published:Updated:

சேலத்தின் நலனுக்காக கள்ளக்குறிச்சியை ‘தவிக்க’விடுகிறாரா முதல்வர்?

கரியகோவில் அணை – கைக்கான் வளவு திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரியகோவில் அணை – கைக்கான் வளவு திட்டம்

சர்ச்சையில் கரியகோவில் அணை – கைக்கான் வளவு திட்டம்

‘‘தனது சொந்த மாவட்டமான சேலத்தின் நலனுக்காக, எங்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கப்பார்க்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி’’ என்று கொந்தளிக்கின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள்.

கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்ட எல்லைகளை உரசிச் செல்கிறது கல்வராயன் மலை. கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராப் பாளையத்திலுள்ள கோமுகி அணையும், சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டியில் கரியகோவில் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கரியகோவில் அணையும் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் நீரைச் சேமிப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

900 ஏக்கர் பரப்பில், 46 அடி கொள்ளளவைக் கொண்ட கோமுகி அணையின் மூலம் கள்ளக்குறிச்சியில் சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் மற்றும் கச்சிராப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த அணைதான் முக்கிய நீர் ஆதாரம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சேலம் மாவட்டத்தில் 188 ஏக்கர் பரப்பில், 52 அடி கொள்ளளவைக் கொண்ட கரியகோவில் அணை கல்வராயன் மலையை ஒட்டியுள்ள சேலம் மாவட்ட விவசாயிகளின் முக்கியமான நீர் ஆதாரம். ஆனால், “கடந்த 10 ஆண்டுகளாக இந்த அணைக்கு தண்ணீர்வரத்து இல்லை. இதனால், கல்வராயன் மலையிலிருந்து கோமுகி அணைக்கு வரும் காட்டாற்றின் உபரி நீரை, கைக்கான் வளவு என்ற கிராமத்தில் தடுத்து, கரியகோவில் அணைக்குத் திருப்ப வேண்டும்” என்று சேலம் மாவட்ட விவசாயிகள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.

கோமுகி அணை
கோமுகி அணை

சேலம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற முதல்வர், ‘‘7.30 கோடி ரூபாயில் சேலம் கரியகோவில் அணை–கைக்கான் வளவு திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்று கடந்த ஆண்டு அறிவித்தார். அதற்கான நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில், ‘‘தனது சொந்த மாவட்டத்தின் நலனுக்காக எங்கள் வாழ்வாதாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பறிக்க நினைக்கிறார்’’ என்று குமுறுகின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவரான கஜேந்திரன், “ஒருகாலத்தில் மூன்று போகத்துக்கு தண்ணீர் கொடுத்துவந்தது கோமுகி அணை. அதைத் தூர்வாராமல் விட்டதால், இப்போது ஒரு போகத்துக்குக் கூட நீர் ஆதாரம் போதவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை நெல் விளைவிக்கும் குறு, சிறு விவசாயிகள்தான் அதிகம். `கோமுகி அணையை ஒட்டியிருக்கும் பகுதிகளிலேயே குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுவதால், மேல்பரிக்கல் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும்’ என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். அதைக் கண்டு கொள்ளாத அரசு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் துடிக்கிறது’’ என்றார்.

கரியகோவில் அணை
கரியகோவில் அணை

‘‘இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கும் ரிஷிவந்தியம் தொகுதியின் தி.மு.கழக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் பேசியபோது, ‘‘புதிதாகப் பிரிக்கப்பட்டிருக்கும் எங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நீர் ஆதாரமாக இருப்பது கோமுகி ஆறும் மணிமுத்தாறும்தான். கைக்கான் வளவு பகுதியில் எந்தவிதப் பேச்சு வார்த்தையுமின்றி தமிழக அரசு தன்னிச்சையாகத் தடுப்பணை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோமுகி அணைக்கு நீர்வரத்து முற்றிலும் தடைப்படும். அந்த நீர் ஆதாரத்தை நம்பியிருக்கும் விவசாய நிலங்கள் பொய்த்துப்போவது மட்டுமல்லாமல், குடிநீர் பஞ்சமும் ஏற்படும். எனவே, இந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என்கிறார் சீற்றத்துடன்.

சேலம் மாவட்டம், வசிஷ்ட நதி விவசாயிகள் சங்கத்தின் தலைவரான ஸ்ரீராமன், ‘‘கோமுகி அணைக்குச் செல்லும் காட்டாறு சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் தான் உற்பத்தியாகிறது. ஆகையால், நீரில் பங்கு கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் காட்டாற்றின் ஒரு பகுதி கோமுகி அணைக்கும், மற்றொரு பகுதி கரியகோவில் அணைக்கும் வந்தது. 1972-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண்சரிவு ஏற்பட்டு கரியகோவில் அணைக்கு வந்த நீர்வழித்தடம் அடைக்கப்பட்டது. இதனால் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் தண்ணீர் முழுமையாகக் கோமுகி அணைக்குத்தான் சென்றது. 1963-ல் கோமுகி அணை கட்டப்பட்டபோது இரண்டு ஷட்டர்கள்தான் அமைக்கப் பட்டன. 1972-க்கு பிறகு நீர்வரத்து அதிகரித்ததால், மேலும் இரண்டு ஷட்டர்கள் பொருத்தப்பட்டன.

ஸ்ரீராமன் - கஜேந்திரன் - வசந்தம் கார்த்திகேயன்
ஸ்ரீராமன் - கஜேந்திரன் - வசந்தம் கார்த்திகேயன்

ஆனால், கரியகோவில் அணையின் கடைமடைப் பகுதிகளான சின்னம்மா சமுத்திரம், பெத்தநாயக்கன் பாளையம், ஏத்தாப்பூர், ஆத்தூர் பகுதி விவசாயிகள் நிலத்தடி நீர்கூட இல்லாமல் தவித்துவருகின்றனர். சேலம் மாவட்டத்தின் நலனுக்காக கள்ளக்குறிச்சியை முதல்வர் தவிக்கவிடுகிறார் என்பதெல்லாம் தேவையில்லாத குற்றச்சாட்டு. அதனால், இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

இரு மாவட்ட விவசாயிகளையும் அழைத்துப் பேசி, சுமுகத் தீர்வு எட்டுவதற்கான முயற்சியை அரசு முன்னெடுக்க வேண்டும்!