Published:Updated:

பெண்களே சட்டம் இயற்றுவார்கள்!

கனிமொழி
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி

நாடாளுமன்றத்தில் பெண் குரல்

பெண்களே சட்டம் இயற்றுவார்கள்!

நாடாளுமன்றத்தில் பெண் குரல்

Published:Updated:
கனிமொழி
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி

மோடி 2.0 அரசில், 78 பெண்கள் எம்.பி-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகான முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெண் எம்.பி-க்களின் பேச்சு நாடு முழுவதும் கவனம் ஈர்த்திருக்கிறது. தமிழக பெண் எம்.பி-க்கள் மக்களவையில் இடம்பிடித்தது மட்டுமல்ல... தங்கள் செயல்பாடுகள் மூலம் மக்கள் மனத்திலும் இடம்பிடித்து நாடாளுமன்ற வரலாற்றில் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முத்தலாக் சட்டம் குறித்த விவாதம் நாடாளு மன்றத்தில் நடந்தது. இஸ்லாமியப் பெண்களை முத்தலாக்கில் இருந்து பாதுகாப்பதற்காகவே அந்தச் சட்டம் என்பது மத்திய அரசின் வாதம். எதிர்க்கும் கட்சிகள் - குறிப்பாக இஸ்லாமிய கட்சிகள் தங்களது மதநம்பிக்கை மற்றும் இஸ்லாத் மத திருமணச் சட்டமான ஷரியத் சட்டத்தில் மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது என்று வாதிட்டன. இப்படி மதநம்பிக்கையில் மூக்கை நுழைப்பதை அரசியலமைப்புச் சட்டமே அனுமதிக்கவில்லை என்பது அவர்களது கருத்து. கூடவே முத்தலாக் சட்டத்தின்படி முத்தலாக் சொன்ன கணவனை கைதுசெய்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு யார் ஜீவனாம்சம் வழங்குவது? அந்தப் பிள்ளைகளை யார் படிக்க வைப்பது? சிறையில் இருக்கும் கணவன் எப்படிப் பொருளீட்டுவார்? இப்படி நடைமுறைச் சிக்கல்களை எடுத்துரைத்துத் திருத்தம் கேட்டார்கள். இருப்பினும் அது நிறைவேறவில்லை.

  கனிமொழி , மஹுவா மொய்த்ரா
கனிமொழி , மஹுவா மொய்த்ரா

`எந்த மதமாக இருந்தாலும், பெண்களுக்கு எதிராக மதநம்பிக்கைகள் இருந்தால் காலத்துக்கேற்ப அதை மாற்றுவது அவசியம். மதத்தின் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பெண்களை மதிப்பிடுங்கள். பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்' என்பது நாடாளுமன்றத்திலுள்ள பெண்ணுரிமையாளர்களின் பார்வையாக இருந்தது. இப்படி அந்த மசோதாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறி எழுந்தது. இருப்பினும் வலுவான ஆதரவோடு முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.

``மகளிர் பாதுகாப்புக்காகவே முத்தலாக் தடைச் சட்டம் என்றுகூறும் மத்திய அரசு, 33 சதவிகித

மகளிர் இட ஒதுக்கீடுச் சட்டத்தை ஏன் நிறைவேற்ற

வில்லை?'' என்று மக்களவையில் முத்தலாக் தொடர்பான விவாதத்தில் கேள்வி எழுப்பினார் தி.மு.க எம்.பி கனிமொழி. ``இந்துப் பெண்கள், கிறிஸ்துவப் பெண்களும்தாம் விவாகரத்து பெறுகிறார்கள்; பாதிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் மசோதா நிறைவேற்றுவது என்பதில்தான் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது'' என்றும் கனிமொழி தெரிவித்தார். ‘‘பெண்களுக்கான சட்டங்களை அவர்கள் அனுமதி இல்லாமல் - அதாவது அவைக்குள் பெண் பிரதிநிதிகள் இல்லாமல் எப்படி நிறைவேற்றுவீர்கள்? முதலில் இந்த அவைக்குள் பெண்களை கொண்டுவாருங்கள். பிறகு, அவர்களே அவர்களுக்குத் தேவையான சட்டத்தை இயற்றுவார்கள்'' என்ற கனிமொழியின் பேச்சு மிகவும் கவனிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க-வின் மற்றொரு எம்.பி தமிழச்சி தங்கப் பாண்டியன், பட்ஜெட் மீதான விவாதத்தில் தன் கன்னிப் பேச்சிலேயே கவனம் ஈர்த்தார். அவையில் இருக்கும் பெண் எம்.பி-க்களை வாழ்த்தியதோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வாழ்த்து தெரிவித்தார். கூடவே பெண் என்பதாலும், அதுவும் தமிழகத்தின் தமிழச்சியாக இருப்பதிலும் பெருமை கொள்வதாகக் கூறிப் பேச்சைத் தொடங்கியவர், ‘‘இது பட்ஜெட் அல்ல... fudget'' என்று ஆரம்பித்து, அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார். ‘‘இந்தியா முற்றிலும் தொழிலாளர் களின் உழைப்பால் வளர்ச்சியடைந்த தேசம். ஆனால், இன்று வேலையில்லாத் திண்டாட்டத்தால் தொழிலாளர்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இந்தப் பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை. நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. பெண்கள், தாலிக்குத் தங்கம் வாங்குவதுகூட கனவாகியுள்ளது’’ என்று பட்ஜெட் குறித்து, தேர்ந்த தயாரிப்புகளுடன் பேசினார்.

மிழகத்தின் மற்றொரு பெண் எம்.பி-யான காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி, விமான நிலையத்தில் எம்.பி-க்களுக்கான சிறப்பு வழிகளை உபயோகிக்கவில்லை. நீண்ட வரிசையில் நின்று பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொண்ட இவரின் புகைப்படம் இணையத்தில் பேசுபொருளானது. இதுகுறித்து ட்விட் செய்த ஜோதிமணி, ‘அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இருப்பதுதான் இயல்பானது!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

  ஜோதிமணி , தமிழச்சி தங்கப்பாண்டியன்
ஜோதிமணி , தமிழச்சி தங்கப்பாண்டியன்

மக்களவையில் முத்தலாக் தொடர்பாக பேசிய ஜோதிமணி, பெண்கள் மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை அரசு செயல்படுத்துவ தாகக் குற்றம்சாட்டினார். இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இப்படி தமிழகத்தின் மூன்று பெண் எம்.பி-க்களும் தமிழக உரிமை சார்ந்த பிரச்னைகளை எழுப்பியதோடு, நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உள்ளிட்ட மாநிலம் சார்ந்த பிரச்னையோடு தொகுதி நலன் சார்ந்த விஷயங்களுக்காக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்திருக்கிறார்கள்.

மாநிலங்களவையில் அ.தி.மு.க பெண் எம்.பி-யான விஜிலா சத்யானந்த் தபால்துறைத் தேர்வு தொடர்பாக தமிழகத்தின் எதிர்ப்பை பதிவுசெய்தது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

மிழக எம்.பி-க்களை போன்று திரிணாமூல் காங்கிரஸின் புதிய நாடாளு மன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையினால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். ட்விட்டரில் டிரெண்டிங், ஆங்கில ஊடகங்களில் தொடர் பேட்டி என அவரது முதல் கன்னிப் பேச்சு, இந்தியாவில் பரபரப்பை அதிகரிக்கவைத்ததோடு, யாரிந்த மஹுவா மொய்த்ரா என்று கூகுள் செய்து படிக்க வைத்தது.

நாடாளுமன்றத்துக்குச் சென்ற முதல்நாளே தமிழ்நாட்டு பெண் எம்.பி-க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், ஜோதிமணி... கூடவே தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே அனைவருடனும் இணைந்து மஹுவா எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த

42 வயதான மஹுவா மொய்த்ரா அரசியலுக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவில் முதலீட்டு வங்கியாளராகப் பணியாற்றியவர்.

‘‘நீங்கள் கண்களைத் திறந்தால் மட்டுமே இதற்கான அறிகுறிகளைக் காண்பீர்கள். இந்த நாடு எல்லா இடங்களிலும் சிதைந்து போயுள்ளது. அறிகுறிகளின் பட்டியலில் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், மேலோட்டமான தேசிய வாதத்தில் மூழ்கி மனித உரிமைகளை அவமதித்தல், வெகுஜன ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு, தேசிய பாதுகாப்பு மீதான ஆவேசம் மற்றும் மதம் ஆகியவை அடங்கும். அமெரிக்காவில் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் குறியீடுகள் குறித்த போஸ்டர் உள்ளது. அதில் சொல்லப்பட்ட அனைத்து அறிகுறிகளும் இப்போது இந்தியாவில் காணப்படுகிறது'' என்று கன்னிப்பேச்சிலேயே மஹுவா மொய்த்ரா பட்டாசாக வெடித்தார்.

இப்படி மத்திய அரசின் கொள்கை சார்ந்து அவர் எழுப்பிய கேள்விகள் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதும் எதிரொலித்தன. கூடவே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரின் கல்வித் தகுதி குறித்த சர்ச்சைகளைக் குறிப்பிட்டு, “கல்லூரியில் பட்டம் பெற்றதை அமைச்சர்கள் காட்டமுடியாத போது ஏழை மக்கள், இந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தாம் என்பதற்கான சரியான சான்றிதழைக் காட்ட வேண்டுமென வற்புறுத்துவது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.

 சுப்ரியா சூலே,  விஜிலா சத்யானந்த்,  ரமாதேவி
சுப்ரியா சூலே, விஜிலா சத்யானந்த், ரமாதேவி

மஹுவாவின் உடல் மொழியும் ஆயிரம் மெகாவாட் ஆற்றலாக அவரது பேச்சுக்கு வலுசேர்த்தது. மஹுவா பேசும்போதெல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் சத்தமிட்டு தங்களின் எதிர்ப்பைக் காட்டினர். அப்போதெல்லாம், “சார்... இந்த அறையில் தொழில் முறை ஹேக்கர்களுக்கு இட மில்லை. சபையை ஒழுங் காக நடத்துங்கள்” என்று சபாநாயகரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டார். கூடவே, ``என் நேரத்தை அபகரித்தால் அவர்கள் அபகரித்த மணித்துளிகளை மீண்டும் நான் எடுத்துக் கொள்வேன்'' என்று கறார் காட்டினார் மஹுவா.

``2014 முதல் 2019 வரை வெறுப்பு அரசியல் கும்பல்கள் நடத்தும் குற்றங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளன'' என்று சுட்டிக்காட்டிய மஹுவா, நாட்டின் பன்முகத்தன்மை பற்றி மவுலானா ஆசாத்தின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டினார்.

ப்படி உரிமை சார்ந்தும், அர்த்தம் பொதிந்தும் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி-க்களின் பேச்சு மகிழ்ச்சி அளித்த நேரத்தில், சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆசம்கான், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி-யும் துணை சபாநாயகருமான ரமாதேவியை ஆபாசமாக விமர்சித்தது திர்ச்சியை ஏற்படுத்தியது.

எம்.பி-க்கள் ஆனாலும் பெண்கள் இத்தகைய பேச்சுகளை எதிர்கொள்ளாமல் கடக்க முடியாதா போன்ற கவலைகளும் ஆதங்கங்களும் உண்டாகின. கடுமையான எதிர்ப்புகள் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்தன. கட்சி பாகுபாடின்றி பெண் எம்.பி-க்கள் ஆசம்கானுக்கு எதிராகவும் ரமாதேவிக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர். பிறகு அவையில் ரமாதேவியிடம் ஆசம்கான் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் மன்னிப்பை ஏற்கப்போவதில்லை என்றே ரமா தேவி குறிப்பிட்டார்.

எம்.பி-க்களும் இத்தகைய பாலின இடர்ப்பாடுகளை எதிர்கொள்வது வருத்தத்தை தருகிறது. “இந்த அவை எல்லோருக்குமானது. கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் வார்த்தை களைக் கவனமாக கையாள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாது’’ என்று சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதுதான் ஒரே ஆறுதல்.

வரலாற்றின் எந்தப் பக்கத்தில் இருக்க விரும்புகிறோம் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பை ஆதரிக்கும் பக்கமா அல்லது அதைச் சவக்குழிக்குள் தள்ளும் பக்கமா என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும். இதை இப்போதுள்ள பெண் எம்.பி-க்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பது அவர்களது நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலம் புலப்படுகிறது. கூடவே... இந்த முறை நாடாளுமன்றம் சென்றுள்ள பெண்

எம்.பி-க்கள் நிச்சயமாகப் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதவை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பைத் தவறவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கையையும் தங்களது கன்னிப்பேச்சிலேயே விதைத்திருக்கிறார்கள். நம்பிக்கையோடு காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism