Election bannerElection banner
Published:Updated:

பால்புதுமையினரை இந்தியச் சமூகம் அங்கீகரிக்கப் பழகிவிட்டதா?! - #OneYearOfSec377

Ek Ladki Ko Dekha Toh Aisa Laga
Ek Ladki Ko Dekha Toh Aisa Laga

கனடா அதிபர் ஜஸ்டின் டிரிடியூவரைச் சந்தித்து தனது அங்கீகாரத்தைப் பெற்ற துர்கா இன்னும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துடன் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

நள்ளிரவில் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது என்பது வரலாறு. 2018, செப்டம்பர் 6-ம் நாள் இந்தியா மீண்டும் ஒரு சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 377-ல் மாற்றுப்பாலினத்தவர் மற்றும் பால்புதுமையினருக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் உறவுமுறைத் தடைகளை  ரத்து செய்து, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட இந்த ஒருவருடத்தில் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

தேசியத் தடகள வீராங்கனை துத்தி சந்த் வெளிப்படையாகத் தன்னை தன்பால் ஈர்ப்பாளராக அறிவித்துக்கொண்டார்.

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகத் தன்பாலினக் காதலை மையப்படுத்தி ‘ஏக் லடுக்கி கோ தேக்கா தோ ஐஸா லகா’ என்னும் இந்தி திரைப்படம் வெளியானது. இந்த வழக்குக்காக வாதாடிய முக்கிய வழக்கறிஞர்களான மேனகா குருசாமி மற்றும் அருந்ததி கட்ஜூ இணையர்கள் தங்களைத் தன்பாலின ஈர்ப்பாளர்களாக சமூகத்துக்குப் பிரகடனப்படுத்திக் கொண்டனர்.

Dutee Chand
Dutee Chand

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான கௌரவப் பேரணி (Pride march) ஒருங்கிணைக்கப்பட்டது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் தயக்கமின்றி தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான அடையாளக் களமாக அந்தப் பேரணிகள் இருந்தன.

அதே சமயம் அண்மையில் சென்னையில் நடந்த வேறொரு சம்பவத்தையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது.  கடந்த ஜூலை இறுதியில் சென்னையின் பிரபல பார் ஒன்றுக்கு தோழிகளான ரசிகா கோபாலகிருஷ்ணனும் ஷிவாங்கியும் சென்றுள்ளனர். பாரின் நடனமேடையில் நடனமாடிக் கொண்டிருந்த இருவரையும் அங்கிருந்த பௌன்சர்கள் சிலர் வெறித்து நோக்கியுள்ளனர், அதையடுத்து அவர்கள் இருவரையும் பெண்கள் அறை வரைக்கும் தொடர்ந்த அந்த ஆண்கள் "நீங்கள் இங்கே இருப்பது எங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது” என்று கூறி இருவரையும் வெளியேற்றியுள்ளனர்

Rasika, Shivangi
Rasika, Shivangi

ரசிகாவின் கேள்வி எல்லாம், ”அந்த நடன மேடையில் எல்லோருமே கொண்டாட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த ஆண்கள் ஏன் எங்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள் அறை வரை எங்களைத் தொடர்ந்து வந்து எங்கள் இருவரையும் அந்த ஹோட்டலில் இருந்து வெளியேற்றுவதற்கான அவசியம் என்ன?” என்பதுதான்.

வேறொரு சம்பவம் கோவாவைச் சேர்ந்த சிற்பி துர்கா காவ்டேவைப் பற்றியது. பாலின நிலைப்புத்தன்மையற்றவர் (Gender Fluid) . பாலின நிலைப்புத்தன்மையற்றவர்கள் தங்களுடைய பாலினத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்து மாற்றிக்கொள்வதற்கான சுதந்திரம் உண்டு என்பதுதான் அதன் சாராம்சம். ஆனால் துர்கா காவ்டே சந்திப்பதெல்லாம் சொல்லித் தீராத அவதூறுகள். “என் அப்பா அம்மாவே என்னை அவர்களின் பையனாகவும் பெண்ணாகவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தச் சமூகம் இன்னும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை."

கனடா அதிபர் ஜஸ்டின் டிரிடியூவைச் சந்தித்து தனது அங்கீகாரத்தைப் பெற்ற துர்கா இன்னும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்.
Canada Prime minister Justin Trudeau, Durga
Canada Prime minister Justin Trudeau, Durga

"ரஷ்யாவிலிருந்து கோவா வந்த சிலர் எனது பேட்டியைப் படித்துவிட்டு அதன் விளக்கத்தைக் கேட்டார்கள். சொன்னேன். அதன்பிறகு அவர்களில் ஒரு ஆண் என்னை நெருங்கி வந்து எனது பிறப்புறுப்பைத் தொட்டு அருவருப்பான கேள்விகளைக் கேட்டார். அவர்கள் நான்கு பேர் இருந்தார்கள். நான் ஒருவர்தான் இருந்தேன்." என்று குரல் தழுதழுக்க முடிக்கிறார். கனடா அதிபர் ஜஸ்டின் டிரிடியூவை சந்தித்து தனது அங்கீகாரத்தைப் பெற்ற துர்கா இன்னும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துடன் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

அந்தக் காவல்துறை அதிகாரி அந்த இரு எதிர் கதாபாத்திரங்களின் பாலினச் சுதந்திரம் சார்ந்த பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்
இயக்குநர் கௌதம் வாசுதேவ்
வேட்டையாடு விளையாடு
வேட்டையாடு விளையாடு

தமிழ்த் திரைப்படமான 'வேட்டையாடு விளையாடு' படம்தான் முதன்முதலில் தன்பாலின ஈர்ப்பாளர்களை தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியது. இருந்தும் எதிர்க்கதாபாத்திரங்களின் உறவுமுறையை ஏதோ தீமை போலச் சித்திரித்திருக்கும். இதுகுறித்து பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்த அந்தப் படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ், “நானோ அதில் நடித்த நடிகர் கமலோ பாலினச் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் தீமை செய்தார்கள். அந்தச் சூழலில் அந்தக் காவல்துறை அதிகாரி அந்த இரு எதிர் கதாபாத்திரங்களின் பாலினச் சுதந்திரம் சார்ந்த பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்” என்று சில பதில்களை உதிர்த்தார். 

’உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டது!’ என அரசே அறிவித்தாலும் பால்புதுமையினர் மற்றும் மாற்றுப்பாலினத்தவரின் நிலை இந்தச் சமூகத்தில் எப்படி இருக்கிறது?

சகோதரன் அமைப்பின் நிறுவனர் சுனில் மேனன் பேசுகையில், “இந்தியாவில் அத்தனை குற்றங்களுக்கு எதிராகவுமே சட்டங்கள் இருக்கின்றன. பாலியல் வன்கொடுமை மன்னிக்க முடியாத குற்றம் என்று சட்டம் தண்டனை வழங்குகிறது. ஆனால், பாலியல் வன்கொடுமை நிகழாமல் இருக்கிறதா? இன்றளவும் வரதட்சணைக் கொடுமை, ஆணவக் கொலை உள்ளிட்ட அத்தனை குற்றங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அதற்கு எதிரான சட்டங்களும் இருக்கின்றன. ஆனால், மாற்றம் ஏற்படுத்த களத்தில் இறங்கிப் பணியாற்றுவது தேவையாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுனெஸ்கோ அமைப்பின் உதவியுடன் பாலின அடையாளம் அறியப்படாத பிள்ளைகள் பள்ளியில் எதிர்கொள்ளும் அடிப்படைச் சிக்கல்கள் குறித்த ஆய்வறிக்கையை உருவாக்கி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதை அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் கொண்டு சேர்த்தோம்.

Sunil Menon
Sunil Menon

பால்புதுமையினர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் களவேலைகளைச் செய்து வருகிறோம். பிற மாநிலங்களில் இதற்கான தொடக்கம் கூட ஏற்படவில்லை என்பதை இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது. சமூக மாற்றம் ஏற்படும் என்கிற பாசிட்டிவ் எண்ணத்துடன் இருக்கிறோம்” என்றார்.

அரசு ஒருபக்கம் எங்களை ஆதரித்தாலும் மற்றொரு பக்கம் எங்களை ஒடுக்குகிறது எனக் குறிப்பிடுகிறார் அருந்ததி கட்ஜூ, “எங்கள் உறவுமுறைகளுக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டாலும். நாங்கள் குடும்பம் என்கிற கட்டமைப்பை உருவாக்குவதில் அரசால் பல சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, வாடகைத்தாய்களுக்கான மசோதா திருத்தி அமைக்கப்பட்டதன் வழியாக எங்கள் உரிமைகளையும் சமத்துவத்தையும் முற்றாக அரசு மறுத்திருக்கிறது. இந்த சட்ட திருத்த மசோதாவின்படி வெவ்வேறு பாலினத்தைச் சேர்ந்த திருமணமான இணையர்கள் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம். அதிலும் திருமணமாகிக் குழந்தையுடன் இருக்கும் பெண்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்கலாம் எனக் கூறுகிறது. ஆக இரு ஆண்களோ, இரு பெண்களோ குடும்ப உறவுமுறைக்குள் வாடகைத்தாய் வழியாகக் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது சட்டப்படி சாத்தியமில்லை” என்கிறார். 

Arundhati and Menaka
Arundhati and Menaka

கிணறு பாதி கடக்கப்பட்ட கதையாகத்தான் பால்புதுமையினர் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான உரிமை இருக்கிறது. பிரிவு 377-லிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், சமூக விடுதலையை அடைய நீண்டதொரு விவாதமும் பலகட்டக் களப்பணிகளும் தேவையாக இருக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு