Published:Updated:

தற்சார்பு இந்தியா... இலக்கை எட்ட நாம் செய்ய வேண்டியது என்ன? #IndiaVsChina

தற்சார்பு இந்தியா: சீனாவின் பொருள்கள் உலக நாடுகளை ஈர்க்க முக்கிய காரணம் விலை, குறைவு என்பதுதான். சீனா கொடுக்கும் அதே குறைந்த விலையுடன் அதிக தரத்துடன் இந்தியாவால் கொடுக்க முடிந்தால் நாம்தான் கில்லாடி; உலகின் முன்னோடி.

கொரோனா காரணமாக சீனாவின் மீதான உலகநாடுகளின் பார்வை இப்போது மாறியிருக்கிறது. சீனாவுக்கு மாற்றாக யாராவது வந்தால் தங்களது ஆதரவு கரத்தை நீட்ட உலக நாடுகள் தயாராக இருக்கின்றன.

இருப்பினும், இந்தியா உட்பட பல நாடுகள், சீனாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதைத் தவிர்க்க முடியாமல் தவித்து வருகின்றன. காரணம் அதற்கான மாற்று வழி நம்மிடம் இல்லை என்பதுதான். இந்தியாவை அந்த மாற்று சக்தியாக உருவாக்கும் நோக்கில்தான், சுயசார்பு திட்டத்துக்கு பிரதமர் தனது ஆதரவை வழங்கி, தொழில் முனைவோர்களின் கதவைத் தட்டி, ஆரோக்கியமான சூழலை உருவாக்க முயற்சி செய்துவருகிறார்.

குறைந்த விலை - சீனாவுக்கு மட்டும் எப்படி சாத்தியம்?

சீனாவின் பொருள்கள் உலக நாடுகளை ஈர்க்க முக்கிய காரணம் விலைக் குறைவு என்பதுதான். சீனா கொடுக்கும் அதே குறைந்த விலையுடன் அதிக தரத்துடன் இந்தியாவால் கொடுக்க முடிந்தால் நாம்தான் கில்லாடி; உலகின் முன்னோடி. ஆனால், சீனாவை விட குறைந்த விலைக்கு கொடுக்க முடியுமா என்பதுதான் கேள்வி.

இந்தியா - சீனா நட்புறவு நாடகம்...  இந்தியாவின் ஏக்கமும் சீனாவின் துரோகமும்!

அவர்களால் கொடுக்க முடியும்போது நம்மால் கொடுக்க முடியாதா என்ற கேள்வி சுலபமானதாக இருந்தாலும், எதார்த்தம் என்பது, இன்றைய இந்தியாவின் தொழில் கட்டமைப்பைக் கொண்டு அதை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்பதுதான். இந்த எதார்த்தச் சுவரை வீழ்த்திவிட்டால், சீனாவின் விலையோடு மட்டுமல்ல, ஜப்பானின் தரத்தோடும் நம்மால் போட்டியிட முடியும்.

வலுவான திட்டம் நம்மிடம் இருக்கிறதா?

இருசக்கர வாகனம், ஜவுளி உற்பத்தி போன்ற சில துறைகளில் இன்றும் நாம்தான் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறோம். வருடத்துக்கு 3.5 லட்சம் பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறோம். சீனா 21.5 லட்சம் பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது, நம்மைவிட 6 மடங்கு கூடுதலாக ஏற்றுமதி செய்கிறது. இந்த, அதிக அளவிலான உற்பத்திதான் சீனா குறைந்த விலையில் பொருள்களை ஏற்றுமதி செய்ய முதல் காரணம்.

ஏற்றுமதி
ஏற்றுமதி

இந்தியாவில் ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டால், பெரும்பாலும் அது உள்நாட்டின் தேவையை கவனத்தில்கொண்டே தொடங்கப்படுகிறது. ஆனால், சீனாவில் ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால், அது உலகத்தின் தேவையைக் கவனத்தில் கொண்டே கட்டமைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே 10 ரூபாய் பேட்டரி முதல் பல கோடி ரூபாய் விமான உதிரிபாகம் வரை சீனாவிடம் இருந்து நாம் குறைந்த விலைக்கு வாங்குகிறோம். மருந்து உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடு, நம் இந்தியா. ஆனால், அதே மருந்துப் பொருள்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் 68 சதவிகிதம் மூலப்பொருள்களை சீனாவிடம் இருந்துதான் பெறுகிறோம்.

'21.5 லட்சம் பில்லியன் டாலர்'
சீனாவின் ஏற்றுமதி அளவு (ஒரு ஆண்டுக்கு)!

நமது தொழில் துறை உலகளாவிய பார்வையுடன், உலக நாடுகளின் தேவையை மனதில் கொண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் தொழில் துறையும், நிறுவனங்களும் திட்டமிட்டு கட்டமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் அதிக அளவில் உற்பத்தியை செய்து குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனிக்குழு அமைக்க வேண்டும்!

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் தயாராகும் எல்லா பொருட்களின் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் உடனே அதிகரிப்பது இயலாத காரியம். எனவே முதலில் நாம் எந்தத் துறைகளில் நல்ல கட்டமைப்போடு இருக்கிறோமோ அந்த பொருட்களின் மீது கூடுதல் கவனம் செலுத்த தனி குழு அமைத்து அவற்றின் உற்பத்தியை உயர்த்தி, விலையைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகப்படுத்தலாம் (உதாரணமாக ஜவுளி, வாகன உதிரி பாகங்கள், மருந்துப் பொருள்கள், வேதிப்பொருள்கள், இரும்பு பொருள்கள் போன்றவை). நாம் தனித்துவம் பெற்ற இந்தத் துறைகளில் நமது உற்பத்தியைப் பெருக்கி, 'Product Focus Strategy' என்று சொல்லப்படுகிற குறிப்பிட்ட சில பொருள்களின் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்கை மேலும் அதிகரித்து, 'உலகின் தொழிற்சாலை இந்தியா' என்கிற நம் திட்டத்தின் முதல் படியில் அடி எடுத்து வைக்கலாம்.

கூட்டு ஆராய்ச்சி திட்டம்!

நான் கோவைக்குச் சென்றிருந்தபோது அங்கு காகிதப்பைகள் (Paper Bag) தயாரிக்கும் இயந்திரங்களை விற்பனை செய்யும் தொழில் முனைவோர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் தனது தொழிற்சாலையை சுற்றிக் காண்பித்தார். அத்தனை இயந்திரங்களும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யபட்டவை.

"சாதாரண காகிதப்பை தயாரிக்கும் இயந்திரம்தானே... இந்தியாவில் உற்பத்தி செய்ய முடியாதா?" என்று கேட்டேன். "இது போன்ற ஓர் இயந்திரத்தை இங்கு உற்பத்தி செய்தால் 35 சதவிகிதம் கூடுதல் விலை ஆகிறது'' என்றார். அது மட்டுமல்ல, இது போன்ற பேப்பர் பேக் தயாரிக்கும் நிறுவனங்கள் 84 சதவிகிதம் இயந்திரத்தை சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்கின்றனர்" என்றார்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா
சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்கள்..! - இந்தியாவில் கால்பதிக்குமா..?

எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. ஒரு பேப்பர் பேக் தயாரிக்கும் இயந்திரம் செய்ய, பெரிய ராக்கெட் தொழில்நுட்பமா தேவைப்படப்போகிறது..? ஆனால், அவர் சொன்னதிலிருந்து அடிப்படையில் எங்கோ சிக்கல் இருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்துகொண்டேன். இப்படித்தான் இந்தியாவின் மொத்த மின்னியல் இயந்திரங்கள் (Elelctrical machines) பயன்பாட்டில் 48 சதவிகிதத்தை இன்றைக்கும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.

R&D-யில் அதிக கவனம்!

குறைந்த விலையில் தரமான பொருள்கள் உற்பத்தி செய்ய, 'Research and Development' என்று சொல்லக்கூடிய ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து செயல்பட வேண்டும். தொழில் துறையில் சிறந்து விளங்குகிற நாடுகள் தங்களின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 - 4 சதவிகிகிதம் வரை ஆராய்ச்சிகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், இந்தியாவில் அதற்கு 0.5 - 0.6 சதவிகிதம் வரைதான் முதலீடு செய்கிறோம். அதுவும் பெரும்பாலும் அரசு சார்ந்த முதலீடாகத்தான், அதுவும் விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் மட்டுமே பொருள்கள் உற்பத்தி மேம்பாடு குறித்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகின்றன.

இயந்திர தீப்பெட்டி உற்பத்தி
இயந்திர தீப்பெட்டி உற்பத்தி

உதாரணத்துக்கு, ஒரு தரமான மொபைல் போன் 10,000 ரூபாய்க்கு சீனா ஏற்றுமதி செய்கிறது என்றால், அதே தரத்துடன் மேலும் சில சிறப்பம்சங்களுடன் 8,000 ரூபாய் மதிப்பில் நம்மால் கொடுக்க முடிந்தால், இந்திய போன்களை போட்டியிட்டு வாங்கப் போகிறார்கள். அதற்கு இன்றைக்கு வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொருட்களின் உற்பத்தி விலையைக் குறைக்க வேண்டும். ஆண்டுக்கு 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகிற உலகில், பொறியியல் பட்டதாரிகளில் 25 சதவிகிதம் இருக்கும் இந்தியாவால் இதைச் செய்ய முடியவில்லையென்றால், வேறு எந்த நாடால் முடியும்?

முதலில் R&D துறையை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பொருளின் தயாரிப்புக்கும் ஒரு R&D குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் துறை சார்ந்த சில தனியார் நிறுவன பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், ஐ.ஐ.டி போன்ற தொழில்நுட்பத்தில் சிறந்த கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடம்பெற வேண்டும்.

இவர்கள் அந்தப் பொருளுக்கான உலகின் தேவையைக் கண்டறிந்து, சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தரமான பொருள்களைக் குறைந்த விலையில் தயாரிக்கும் பொருள்களின் மாடல்களை (Product Prototype) உருவாக்க வேண்டும். இந்த Product Prototype-ஐ கொண்டு இந்தியாவின் எந்த நிறுவனம் வேண்டுமானாலும், சிறு சிறு மாறுதல்களைச் செய்து அந்தப் பொருள்களை உற்பத்தி செய்யலாம்.

நிறுவனத்தின் கவனம் முழுக்க உற்பத்தியில் இருக்கும்போது, குறைந்த விலையில் பொருள்களைத் தயாரிக்க முடியும். ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும். இதற்கு அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களும் முழுமூச்சுடன் முன்வர வேண்டும். சரியாகச் சொல்வதானால் அரசின் உதவியுடன், தனியார் நிறுவனங்கள் இந்த முயற்சியை கையில் எடுத்தால் எளிதில் சாதிக்க முடியும்.

குறைந்தபட்ச ஊதியம்!
இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம் 11,000 ரூபாய். ஆனால் சீனாவில் 17,500 ரூபாய்.

மனிதவள பயிற்சியில் கூடுதல் கவனம்!

அடுத்ததாக நமக்கு தேவை, மனித வளத்தில் கூடுதல் கவனம். சீனாவில் குறைந்த ஊதியத்திற்கு ஆட்கள் கிடைப்பார்கள் போலும் என்று நினைத்துவிடாதீர்கள். அங்கு நம்மைவிட அதிக ஊதியம் தருகிறார்கள். இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம் 11,000 ரூபாய். ஆனால், சீனாவில் 17,500 ரூபாய்.

இது குறித்த ஓர் ஆராய்ச்சி முடிவு, இந்தியாவை விட சீனாவில் உற்பத்தி திறன் 156 சதவிகிதம் கூடுதல் என்கிறது. இந்தியாவில் படிப்பு முடிந்த பிறகு பயிற்சி, வேலை என்று இருக்கும் நிலையை மாற்றி, படிக்கும்போதே வேலைக்கான, தொழிலுக்கான பயிற்சியையும், சுறுசுறுப்பையும் இளைஞர்களிடம் விதைக்க வேண்டும்.

IT Company Workers
IT Company Workers

வரும் 2027-ம் ஆண்டு உலகிலேயே அதிக தொழிலாளர்களை கொண்ட நாடாக இந்தியாதான் இருக்கும் என்று உலக நாடுகள் கணித்துள்ள நிலையில், அந்த இளைஞர்களை அதிக திறன் கொண்டவர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு அதிகமாக இருக்கிறது.

மத்தியில் ஆளும் அரசு, தொழில் மேம்பாட்டுக்காக 'Make in India' உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டுவரும் இந்தக் காலகட்டத்தில், பெரிய நிறுவனங்களும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது ஆராய்ச்சி முயற்சியையும், தனது பணியாளர்களுக்கான பயிற்சியையும் தந்து முனைப்புடன் செயல்பட்டால், சுயசார்பு இந்தியாவை சீக்கிரமாகவே உருவாக்கிவிடலாம்.

போர் என்று வந்துவிட்டால், 'இது நம் தேசம்' என்று எப்படி நம் தேகம் துடிதுடிக்கிறதோ, அதே துடிதுடிப்பு இப்போதும் இருக்க வேண்டும். இளைஞர்கள் அனைவரும் அறிவாற்றலோடு திரள வேண்டும். ஏனெனில் இனி நடக்கப் போவது பொருளாதாரப் போர்.

- 'ஆனந்தம்' செல்வகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு