Published:Updated:

சீனப் பொருட்களை எதிர்த்த சுதேசி விழிப்புணர்வு இயக்கம், இப்போது என்ன சொல்கிறது?

இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகையில், சீனாவுடனான வர்த்தக உறவு எவ்வாறாக இருக்கும்?

மோடி - ஷீ ஜின்பிங்
மோடி - ஷீ ஜின்பிங்

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் முறைசாரா சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்து முடிந்துள்ளது. பிராந்திய உறவு, சர்வதேச அரசியல் வர்த்தக நலன் எனப் பலதரப்பட்ட விஷயங்கள் தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்து இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

மோடி - ஷீ ஜின்பிங்
மோடி - ஷீ ஜின்பிங்

இந்தியா வரும் முன்னர், சீன அதிபர் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதியைச் சந்தித்தது பெரிதும் பேசப்பட்டது. பாகிஸ்தானின் பிரதான பிரச்னைகள் அனைத்திலும் சீனா ஆதரவளிக்கும் எனத் தெரிவித்ததும் அதிகம் பேசப்பட்டது. அதற்கு எதிர்வினையாக இந்திய அரசும், 'காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், அதில் எந்தவொரு அந்நிய நாட்டின் தலையீடும் ஏற்றுக்கொள்ளப்படாது' என அறிக்கை வெளியிட்டது. இருநாட்டுத் தலைவர்களின் முக்கியமான சந்திப்புக்கு முன்பாக இவ்வாறு கருத்துகள் பரிமாறப்பட்டது சர்ச்சைகளை உருவாக்கியது. தலைவர்களின் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் எழுப்பப்படும் என எதிர்பார்ப்புகள் எழுந்தன.

இரண்டு நாள்கள் நடைபெற்ற தலைவர்களின் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் பற்றி விவாதிக்கப்படவில்லை என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இருநாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்தும், வர்த்தக மதிப்பு மற்றும் வர்த்தக அளவை உயர்த்துவது தொடர்பாகவும் தலைவர்கள் இருவரும் ஆலோசித்ததாக வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே கூறியிருந்தார்.

மோடி - ஜின்பிங்
மோடி - ஜின்பிங்
`சந்தோஷம் + வருத்தம்!’ மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பை சீனா எப்படிப் பார்க்கிறது?

இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட விவகாரத்தை ஐ.நா சபையில் பாகிஸ்தான் எழுப்பியது. அதில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டதால் சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் கூறிவந்தனர். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பாக, ’சீனாவின் பொருள்களைப் புறக்கணிப்போம்’ என ஒருநாள் நிகழ்வும் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் கலந்துகொண்டிருந்தார். தற்போது இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு வர்த்தக நலனில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகையில், சீனாவுடனான வர்த்தக உறவு எவ்வாறாக இருக்கும் என்பது பற்றிப் பேசினோம்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நம்மிடம் பேசுகையில், "இந்தியாவுக்கும் சீனாவுக்குமான வர்த்தகப் பற்றாக்குறை என்பது அதிகமானதாக உள்ளது. இந்தப் பற்றாக்குறையைப் போக்க இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். சீனப் பொருள்கள் தரம் குறைந்தவை மற்றும் மக்கள் நலனுக்குத் தீங்கானவை. எனவே, தரமற்ற பொருள்களை அனுமதிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

பாகிஸ்தான் உடனான சீனாவின் உறவு என்பது இந்திய நலனை என்றும் பாதிக்காது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவுடனான சீனாவின் அணுகுமுறை என்பதும் மோதல் போக்காக இல்லாமல் தளர்ந்து வருகிறது. சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் நிகழ்வில் பேசிய பொருள் வேறு. இந்தியப் பொருள்களை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதுதான் அடிப்படையான நோக்கம். அமெரிக்க - சீன வர்த்தகப் போரின் பலன் இந்தியாவுக்குத்தான் கிடைக்கும். அதை உறுதிபடுத்த வேண்டும் என்பதைத்தான் நாங்கள் கூறிவருகிறோம். இந்திய நலனைப் பாதிக்காமல் சீனாவுடனான வர்த்தகம் செழுமைப்படுத்தப்படும் என்பதைத்தான் தலைவர்களின் சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளது” என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் நம்மிடம் பேசுகையில், ”சீனப் பொருள்கள் அனைத்தும் விலை குறைவானவை. அதனால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகின்றன. ஆனால், அவை தரத்திலும் குறைவானவை. அரசாங்கம் சீனப் பொருள்கள் இறக்குமதியை ஊக்குவிக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக, சீனப் பட்டாசுகளால் உள்நாட்டு வணிகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. உள்நாட்டுப் பட்டாசுகள் ஆபத்து குறைவானது என்றாலும் விலைக்காக மக்கள் சீனப் பட்டாசுகளை நாடிச் செல்கின்றனர்.

வெள்ளையன்
வெள்ளையன்
மோடி - ஜின்பிங் சந்தித்த சனிக்கிழமை கோவளம் எப்படி இருந்தது? #SpotVisit

அரசு, சீனப் பொருள்களில் தரமற்றவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தினாலே சீனப் பொருள்களின் இறக்குமதி குறைந்துவிடும். ஏனென்றால், பெரும்பாலான சீனப் பொருள்கள் தரமற்றவைகளாக இருக்கின்றன. இவை நேரடியாக அல்லாமல் மறைமுகமாகவும் சந்தைக்கு வருகின்றன. நம் நாட்டில் நமது தேவைக்கேற்ப சுயசார்பாக அனைத்துப் பொருள்களையுமே தயாரிக்க முடியும். ஆனால், அரசு உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்காமல் இறக்குமதியிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது. தரமான பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தரமற்ற பொருள்களின் சந்தையாக இந்தியா இருக்கக் கூடாது. சீனாவுடனான வர்த்தக உறவு இந்தியாவுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும்” என்றார்.