Published:Updated:

ஒரே நாடு, ஒரே மொழி... பெரியார் சொன்னது என்ன தெரியுமா?#HBDPeriyar141

Periyar and Amit shah
Periyar and Amit shah

2019-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்திருக்கும் ’ஒற்றுமைக்கான ஒற்றைமொழி' சித்தாந்தத்துக்கு எதிராக, அன்றே பெரியாரிடம் பதில் இருந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் ‘ஒற்றைமொழி’ குறித்த ட்வீட், இன்று அத்தனை மாநிலங்களையும் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. பெரியாரின் 141-வது பிறந்தநாள் இன்று. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை 1937-ம் வருடத்தில் தொடங்கிவைத்தது முதல், அது மீண்டும் விஸ்வரூபம் எடுத்த 1965 வரை அதன் முழு வரலாற்றிலும் இடம்பெற்றிருந்தவர் என்கிற அடிப்படையில், மொழிகுறித்த பெரியாரின் பார்வையை விவாதிக்கவேண்டியிருக்கிறது. தமிழைப் புனிதப்படுத்தினாரா அல்லது மிகைப்படுத்தினாரா... தாய்மொழி பற்றி பெரியாரின் பார்வை என்ன? 1939-ல் ’குடிஅரசு’ இதழின் தலையங்கமே, ‘வீழ்க இந்தி’ என்பதுதான்.

Kudiarasu
Kudiarasu

இந்தியை, நம்மை அடிமைப்படுத்தும் மொழி என்கிறார். ‘ஒரு நாட்டை, அந்நாட்டு மக்களை அடிமைப்படுத்த வேண்டுமானால், அந்நாட்டு மொழி கலாசாரத்தை அழிக்க வேண்டும் என்பதற்கிணங்க இந்தி, திராவிட மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு இடையிலும் திணிக்கப்படுகிறது’ என்கிறார்.

இந்தியை ஏன் புகுத்தினார்கள்?

'தேசத்தை ஒருமைப்படுத்தத்தான் இந்தி தேவைப்படுகிறது' என்கிறார் உள்துறை அமைச்சர். ஆனால், பெரியாரின் பார்வை வேறாக இருக்கிறது. “இந்தியை ஏன் புகுத்தினார்கள் என்றால், அது அரசியல் உணர்ச்சியால் அல்ல; கலாசார உணர்ச்சியின் மீதுதான் புகுத்தினார்கள். அதேபோல இந்தியை நாம் வன்மையாக எதிர்த்ததும் அரசியல் உணர்ச்சியால் அல்ல. கலாசார உணர்ச்சியால்தான் எதிர்த்து வந்திருக்கிறோம். இன்றைக்கும்கூட அரசியலை லட்சியமாக வைத்துப் புகுத்துகிறார்கள். இவ்வளவு பிடிவாதமாக இந்தியைத் திணிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. தங்கள் கலாசாரத்துக்கு நம்மை அடிமைப்படுத்தி, நமது தன்மானத்தை ஒழித்துக்கட்டும் உணர்ச்சியால்தான் இந்தக் காரியம் நடைபெறுகிறது. இந்தி நுழைவு என்பது வடமொழி ஆதிக்கத்தோடு மட்டுமல்லாமல், சிறு பையன்களின் தூய மனத்தில் சாதியப் படிநிலை கலாசாரத்தைப் புகுத்தும் அநீதி. ஒரு வீட்டுக்குள் பாம்பு வந்து புகுவதக் கண்ட பிறகு, எப்படி அது இனியும் வீட்டுக்குள் வராமல் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்கிறோமோ, அதைப் போலத்தான் நமக்கு ஏற்பட்ட இந்தி ஆபத்துக்குப் பிறகு இங்கே தமிழ் உணர்ச்சியும் ஏற்பட்டது” என்கிறார்.

தமிழ் மொழி என்பது அவரைப் பொறுத்தவரையில் இந்திக்கு எதிரான நமது ஆயுதம் அடையாளம். நமது நாட்டு ஆட்சி, நமக்கு வேண்டுமென்றால் அதற்கு நமது மொழி அவசியம் என்பது அவர் பார்வை. தேசிய மொழியாக, கல்வி மொழியாக இந்தி கொண்டுவரப்பட்டால் வடநாட்டவர்கள் வைத்ததே சட்டமாகிவிடும் எனத் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

தாய்மொழி புனிதமா?

புனிதம் என்கிற கட்டமைப்பையே உடைத்தவர் பெரியார். மொழியைப் புனிதப்படுத்துவதையும் தீவிரமாக எதிர்க்கிறார். “ நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்த நாட்டில் இல்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமை. அதுபோல அதனை, 'எல்லாம் வல்ல மொழி' என்பதும் அறியாமை. தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைக்கிறேன் என்றால், இதைவிட மோசமான ஒன்று நம்மீது வந்து உட்கார்ந்துவிடக்கூடாது என்ற கவலையினால்தானே தவிர, தமிழ் எல்லாம் வல்ல மொழி என்று நான் நினைத்ததில்லை.தமிழ் புனிதத் தன்மை உடையது என்பதற்காக, நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் தமிழ்தான் சிறந்ததாக இருந்தது என்பதற்காகவே போராடுகிறேன்” என்கிறார்.

Periyar
Periyar
காலத்திற்கேற்றவண்ணம் தமிழ் மொழியையும் கெடுத்துவிட்டார்கள்
ஈ.வே.ரா. பெரியார்

தமிழ் காட்டுமிராண்டி மொழிதான், ஏன்? 

சிறந்த மொழி என்றவர்தான், அதே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார். அதற்கான காரணத்தையும் அவரே முன்வைக்கிறார். “இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்கவழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில்தானே இன்றும் இருந்துகொண்டிருக்கிறோம். அந்தப் பழக்க வழக்கங்களில் இருந்து நம்மை நாம் மாற்றிக்கொள்ளாமல், 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணங்கள் காட்டிக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றிவந்தால், அதற்கு என்ன பொருள்? தமிழ், காட்டுமிராண்டிகள் கையாளும் மொழி. நாகரிகத்திற்கேற்றவண்ணம் அமைந்துள்ள மொழி என்று கூறுவதற்கில்லை. முன்பு, மதமும் கடவுளும் சாதியும் தலைதூக்கி நின்றிருந்த காலத்திற்கேற்றவண்ணம் தமிழ் மொழியையும் கெடுத்துவிட்டார்கள். காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்து, தமிழையும் அதற்கேற்ற முறையில் காட்டுமிராண்டிகளுக்கு ஏற்ற மொழியாகக் கையாண்டிருக்கிறார்கள். எனவே, காலத்திற்கேற்ற வண்ணம் தமிழ்மொழியைச் சீர்படுத்தவேண்டியது அவசியமாகிறது” என்று தான் தமிழைக் காட்டுமிராண்டிகளின் மொழி என்று கூறியதற்கான காரணங்களை முன்வைக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை தமிழ், திராவிட நிலத்தின் கூட்டுமொழி. புனிதத் தன்மை இல்லை, வல்லமை இல்லை, காட்டுமிராண்டிகளின் கையில் அகப்பட்ட மொழி என்று சொன்னாலும் திணிப்புக்கு எதிரான ஒற்றை ஆயுதமாகத் தமிழ் இருக்கும் என ஆழமாக நம்பினார். இங்கே, தென்னிந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் ஒவ்வொரு மாநிலமும் தமிழைத் தங்கள் பாணியில் பேசுவதாக நம்பினார்.

Periyar
Periyar

“தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பவை தமிழே ஆகும். மலையாளப் பாகத்தில் பேசும் தமிழ், மலையாளமாகச் சொல்லப்படுகிறது. கர்நாடகப் பாகத்தில் பேசும் தமிழ், கன்னடமாகிவிட்டது. ஆந்திராவில் அது தெலுங்காகிவிட்டது. நால்வரும் பேசுவது தமிழ்தான். நாம் 'அங்கே' என்பதை ஒருவன் 'அக்கடே' என்றும் மற்றொருவன் 'அவடே' என்றும் கூறுகிறான். அந்தச் சிறு வேறுபாட்டின் காரணமாக இவை வெவ்வேறு மொழியாக்கப்படலாமா? அப்படியென்றால், ‘அங்கிட்டு’ என்று இங்கே தமிழ்நாட்டிலேயே பேசும் தமிழன் வேற்று மொழியாளனா? எனவே, இவை நான்கும் ஒரே உதிரத்திலிருந்து உதித்து எழுந்தவையல்ல. அந்த உதிரமேதான் இவை நான்கும். என்னருந் தமிழே! நீயேதான் தெலுங்கு! நீயேதான் கன்னடம்! நீயேதான் மலையாளம். பண்டிதர்கள் சிலர் 'இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை. ஒரே தாய் வயிற்றில் பிறந்த நான்கு அக்கா தங்கைகள்' என்கிறார்கள். அது பித்தலாட்டம். இந்த திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான். அது தமிழ்தான். அதை நமது மக்களுக்கு உணர்த்தி, ‘ஒரே நாடு, ஒரே மக்கள்’ என்று ஒன்றுபட்ட நிலையை உண்டாக்க வேண்டும்” என்கிறார்.

2019-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்திருக்கும் ’ஒற்றுமைக்கான ஒற்றைமொழி’ சித்தாந்தத்துக்கு எதிராக, அன்றே பெரியாரிடம் பதில் இருந்தது. அத்தனை மொழியையும் நம் மொழியாக ஏற்றுக்கொண்டால் போதும், அத்தனை மொழியையும் நம் மொழியாக மாற்ற வேண்டிய தேவை இல்ல. அத்தனையும் மீறி மாற்றத் துணிபவர்களுக்கு எதிராக மொழிதான் ஆயுதம்! தமிழ்தான் ஆயுதம்! என்பதே அது.

அடுத்த கட்டுரைக்கு