அலசல்
அரசியல்
Published:Updated:

பற்றிக்கொண்ட சட்டத்தீ... அடுத்தடுத்த அஜெண்டாக்களுடன் அமித் ஷா!

போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டம்

- லியானா, கே.ஜி.பி

பா.ஜ.க-வின் நீண்டநாள் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறிவரும் சூழலில், குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நாடே கலவர பூமியாகியுள்ளது. அஸ்ஸாம் தொடங்கி கேரளா வரை குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் கிளர்ந்தெழுந்துள்ளன. காட்சிகள் இத்துடன் முடியப்போவதில்லை; அடுத்தடுத்த அஜெண்டாக்களுடன் அமித் ஷா காத்திருக்கிறார் என்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்.

இரண்டாவது முறையாக 2019, மே மாதம் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என அடுத்தடுத்து சட்டங்களை நிறைவேற்றி வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. ‘‘இந்திய நாட்டின் சட்டத்திருத்த வரலாற்றில் ஆறு மாதங்களுக்குள் இத்தனை சட்டங்களை மாற்றம் செய்த வரலாறு இதுவரை நடந்ததில்லை. இந்தியாவின் மதசார்பின்மைக்கே இந்தச் சட்டங்கள் சிக்கலை ஏற்படுத்திவிட்டன. குடியுரிமை திருத்தச் சட்டத்தின்மூலம் இஸ்லாமியர்களை நேரடியாகவே புறம்தள்ளியுள்ளனர்’’ என்ற குரல்கள் பலமாகவே கேட்கின்றன.

கழுத்தை நெரிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்!

இப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய ஆறு சமூகங்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரம் இந்த நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்களுக்கு, குடியுரிமை கிடையாது என்றும் அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துதான் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டக் களத்துக்கு வந்தார்கள். கலவரம் வெடித்து, மாணவர்கள்மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. போலீஸார் தடியடி நடத்தியதில், ஏராளமான மாணவர்களுக்கு மண்டை உடைந்தது. டெல்லி போலீஸின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடெங்கிலும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மூன்று பேர் இறந்தார்கள் என்றெல்லாம் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.

போராட்டம்
போராட்டம்

இந்த நிலையில் பா.ஜ.க-வுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்லப்படும் ஒரு தகவல் பதறவைக்கிறது. ‘‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட சில மாநிலங்களில் உள்ள ஒருசில இஸ்லாமிய சமூக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால், அடுத்த கூட்டத்தொடரில் குடியுரிமைப் பதிவேடு ஆவணம் என்கிற சட்டத்தைக் கொண்டுவரும் முடிவில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இந்தச் சட்டம் கொண்டுவந்தால், இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களை இஸ்லாமியர்கள் தேடி ஓட வேண்டிவரும்’’ என்கின்றனர்.

பிறப்புக்கும் வருகிறது கட்டுப்பாடு!

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இன்னொரு சட்டத்தையும் விரைவில் கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாகச் சொல்கின்றனர். இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ‘‘இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளில் முக்கியமானது, மக்கள்தொகைப் பெருக்கம். எதிர்காலத்தில் உலகிலேயே அதிக மக்கள்தொகைகொண்ட நாடாக இந்தியா மாறாமல் தடுக்கும்விதமாக குடும்பக் கட்டுபாட்டைச் சட்டமாக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக்கொண்டால் ரேஷன் உள்ளிட்ட அரசு மானியங்கள் ரத்து, அரசு வேலை கிடையாது என்ற ஷரத்துகளை உள்ளடக்கிய சட்டவரைவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’’ என்கிறார்கள்.

போராட்டம்
போராட்டம்

இன்னும் சிலரோ, “இது குறிப்பிட்ட சில சமூகங்களைக் குறிவைத்துச் செய்யப்படும் இன அழிப்பு போன்றதே. ஏனெனில், அந்தச் சமூகங்களில் குடும்பக் கட்டுப்பாடு என்பது மதநம்பிக்கைக்கு முரணானது. இதை குறிவைத்தே பா.ஜ.க தரப்பு இந்த நடவடிக்கையை எடுக்கக்கூடும்” என்கிறார்கள்.

அச்சுறுத்தும் பொது சிவில் சட்டம்!

குடியுரிமைப் பதிவேடுமூலம் குடிமக்களை ஆவணப்படுத்தும் பணிகளை முடித்தவுடன், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதைப்போல் திருமணம், விவாகரத்து, சொத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட சிவில் சட்டங்களும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் பொது சிவில் சட்டத்தின் நோக்கம். இது இஸ்லாமியர்களின் மதச் சடங்குகளையும் ஷரியத் சட்டப்படி அவர்கள் மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களையும் முடக்குவதற்காக பா.ஜ.க பின்னும் வலை என்கிற கருத்து பரவலாக உள்ளது. இதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மதமாற்ற தடைச் சட்டம்

மேற்குவங்கம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் நக்சல்பாரி அமைப்புகளுக்கு நிதி உதவி அதிகம் செல்வதாகக் கணக்கெடுத் துள்ள மத்திய அரசு, இந்த மாநிலங்களில் மதமாற்றத்துக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சில அமைப்புகள், வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நக்சல்களுக்கு உதவுவதாகக் கருதுகிறது. இந்த அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை ‘கட்’ செய்தால், நக்சல்களைக் கட்டுப்படுத்த முடியும் எனத் திட்டமிட்டுள்ளனர். மத்திய நிதித்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் ஒருவேளை பலனளிக்காமல்போனால், ‘மதமாற்ற தடைச் சட்டம்’ மூலமாக சம்பந்தப் பட்ட அமைப்புகளையே முடக்கவும் ஏற்பாடாகியுள்ளது. அடுத்த வருட இறுதிக்குள் இந்தக் காட்சிகள் விரியலாம்.

போராட்டம்
போராட்டம்

‘‘மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் பா.ஜ.க, மக்களைப் போராட்டக் களத்தில் இறக்கிவிடும் அளவுக்கான சட்டங்களை அடுத்தடுத்து கொண்டு வந்திருக்கிறது. நாட்டுக்குத் தேவை யானது அமைதியான சூழல்தான். எனவே, நம்பி ஓட்டுபோட்ட மக்களின் உணர்வுகளை மதித்து, மத்திய அரசு செயல்பட வேண்டும்’’ என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

பினராயி அதிரடி!

‘குடியுரிமை சட்டத்திருத்தத்தை கேரளத்தில் அமல்படுத்த மாட்டோம்’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இதுபற்றிப் பேசிய அவர், ‘‘உலக நாடுகளின் முன் இந்தியாவை அவமானப்படுத்தும் சட்டம் இது. நாட்டின் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கும் இந்தச் சமயத்தில், மக்களை திசைதிருப்ப இதுபோன்ற தந்திரங்களைக் கையாள்கிறது பா.ஜ.க அரசு. பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் கையாண்ட தந்திரம் இது. அதற்கு நீண்ட ஆயுள் கிடையாது என வரலாறு நிரூபித்திருக்கிறது. குடியுரிமைச் சட்டத்தை கேரள மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம்” என்றார்.

பினராயி அதிரடி
பினராயி அதிரடி

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன், ‘‘வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகளை இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்க, குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று, 2012-ம் ஆண்டு கோழிக்கோட்டில் நடந்த சி.பி.எம் மாநாடு கோரிக்கைவைத்தது. ‘குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று 2012-ம் ஆண்டு மே 22-ம் தேதி, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரகாஷ் காரத் எழுதிய கடிதம் என்னிடம் உள்ளது. இப்போது, எல்லாவற் றையும் மறந்துவிட்டுப் பேசுகிறார் பினராயி விஜயன்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

முரளீதரனின் பேச்சை மறுத்துப் பேசும் கேரள மாநில சி.பி.எம் குழு உறுப்பினர் பி.ராஜீவ், ‘‘வங்கதேசத்தின் அகதிகள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் சி.பி.எம் கோரிக்கைவைத்தது. ஆனால், இப்போது குறிப்பிட்ட ஒரு மதத்தினரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையாக குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்கிறார்.

கேரளத்தில் பா.ஜ.க-வைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கின்றன.

இவர்கள் என்ன சொல்கின்றனர்?

செந்தில்குமார் - தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க

``பொது சிவில் சட்டம், மதமாற்ற தடைச் சட்டம் என்று பா.ஜ.க பாய்ச்சல் நாட்டுக்கு நல்லதல்ல. பா.ஜ.க-வின் அடுத்த தாக்குதலே, தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாதான். இதன்மூலமாக ஒவ்வொரு குடிமகனின் விவரங்களையும் அரசால் கண்காணிக்க முடியும். தனிமனிதனின் சுதந்திரத்தை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கும் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பினால், எதிர்க்கட்சிகள் ஆட்சேபிக்கும் எனக் கருதி, பா.ஜ.க-வினர் பெரும்பான்மையாக உள்ள இணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளனர். அடுத்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவைச் சட்டமாக்குவதற்கும் ஏற்பாடாகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எந்தப் பயனுமில்லை என்பது தெளிவாகியிருந்தும், தங்களுக்குள்ள மெஜாரிட்டி பலத்தால் நினைத்ததையெல்லாம் நடத்திட பா.ஜ.க முயல்கிறது. இது அவர்களின் வீழ்ச்சிக்கான குறியீடு.’’

செந்தில்குமார், பீட்டர் அல்ஃபோன்ஸ், கே.டி.ராகவன்
செந்தில்குமார், பீட்டர் அல்ஃபோன்ஸ், கே.டி.ராகவன்

பீட்டர் அல்ஃபோன்ஸ் - முன்னாள் எம்.எல்.ஏ, காங்கிரஸ்

‘‘இந்தியா முழுவதும் பதற்ற உணர்வை ஏற்படுத்தி, மக்கள் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்க்கவைத்துப் பிரித்தாளும் சூழ்ச்சியே, மோடி அரசின் பாசிசத் திட்டம். காஷ்மீரின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது, மற்ற மாநில மக்கள் அமைதியாக இருந்தார்கள். இப்போது மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலங்கள் பற்றியெரிகின்றன. எல்லாப் பிரச்னைகளையும் இந்து - முஸ்லிம் பிரச்னைகளாகவே திருப்ப பா.ஜ.க முயல்கிறது. சமூக நீதி இருந்தால்தான் முதலீடுகள், வேலைவாய்ப்புகள், முன்னேற்றம் வரும். இங்கு அந்தச் சமூக நீதியே கேள்விக்குறியாகியுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தின் மூலமாக அழிவின் முன்னுரையை பா.ஜ.க எழுதியுள்ளது.’’

கே.டி.ராகவன் - மாநிலச் செயலாளர், பா.ஜ.க

‘‘குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஒருசில இடங்களில் தனிநபர்களின் தூண்டுதல் பேரில்தான் போராட்டங்கள் நடைபெறுகின்றனவே தவிர, நாடு தழுவிய போராட்டம் ஏதுமில்லை. இஸ்லாமை நாட்டின் மதமாக ஏற்றுள்ள மூன்று நாடுகளிலிருந்து வந்திருக்கும் மைனாரிட்டி மதத்தினருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம். இதில் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்குவதா வேண்டாமா என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். அகதிகளாக வந்துள்ள இலங்கைத் தமிழர்கள் யாரும் குடியுரிமை கோரவில்லை. ஒருவேளை அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டால், எஞ்சி உள்ள இலங்கைத் தமிழர்களையும் இந்தியாவுக்கு விரட்டிவிட்டு, இலங்கையை முழு பெளத்த நாடாக மாற்ற அந்நாட்டு அரசாங்கம் முயற்சி செய்யாதா, இதற்குத்தான் தி.மு.க முயற்சி செய்கிறதா? பொது சிவில் சட்டம்தான் எங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளதே தவிர, குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் மதமாற்ற தடைச் சட்டமும் எங்கள் திட்டத்திலேயே இல்லை. மோடியே இதுபற்றி ஏதும் பேசாதபோது, தவறான தகவல்களை யார் பரப்பினாலும் அது கண்டிக்கத்தக்கது.’’