இந்தியாவில் இப்போது ஸ்விக்கி, ஜொமேட்டோ, ஓலா, ஊபர் போன்ற இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் ஓட்டுநர்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்துள்ளது. இதில் முழு நேரமாகவும், பார்ட் டைமாகவும்கூட வேலை செய்யலாம் என்பதால், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் முதல், வேலை செய்யும் இளைஞர்கள் வரை, பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக பகலில் ஒரு வேலை, இரவில் ஒரு வேலை என்றுகூட பலர் இந்தத் துறையில் வேலை செய்கின்றனர்.

வளர்ந்துவரும் தொழில்நுட்பமும், சமீபத்திய கொரோனாத் தொற்று ஊரடங்கும், பல தொழில்களையும், தொழிலாளர்கள் வேலை செய்யும் முறையையும் மாற்றியுள்ளன. பலரும், தங்கள் மொபைல் போன் செயலி மூலமாகவே இந்த வேலைகளில் தற்காலிகமாகப் பணி செய்கின்றனர். நம் இந்தியப் பொருளாதாரம், இப்போது On-demand workers எனப்படும் 9-5 வேலை நேரத்துக்குப் பதில், தேவைக்கு ஏற்ப எந்த நேரம் வேலை வந்தாலும் செய்யக்கூடிய தொழிலாளர்கள் (Gig Workers) அதிகரித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஹைதராபாத்தில் 23 வயது ஸ்விக்கி ஊழியரான ரிஸ்வான், உணவு டெலிவரி செய்ய ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டு உரிமையாளரின் ஜெர்மன் ஷெப்பர்டு இன வளர்ப்பு நாய் ஒன்று துரத்தியதில் பயந்துபோய் மூன்றாவது மாடியிலிருந்து குதித்திருக்கிறார். உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரிஸ்வான், மூன்று நாள்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரபல ஸ்விக்கி ஊழியரின் இறப்பு, நாடு முழுக்க முறைசாரா தொழிலாளர்களின் நலனைக் குறித்துப் பல கேள்விகளையும் அதிர்வலைகளும் உருவாகியுள்ளது.

பொதுவாகவே, வாடிக்கையாளர்கள் உணவு தாமதமாகிவிட்டது என்று சமூக வளைதளத்தில் கூறினாலே, அவர்களுக்கு உடனடியாக மன்னிப்பு தெரிவிக்கும் நிறுவனம், தன்னுடைய ஊழியர் ஒருவர், வேலை நேரத்தில் உயிரிழந்ததற்கு எந்த அறிக்கையையும் இன்னும் வெளியிடாமல் அமைதியாகவே இருக்கிறது. அதே சமயம், ஸ்விக்கி நிறுவனம், தன்னுடைய டெலிவரி ஏஜென்ட்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை புதிதாக அறிவித்துள்ளது. இந்தச் சேவை வரவேற்கத்தக்கது என்றாலுமே, இரவு பகலாக நிறுவனத்துக்கு உழைக்கும் இந்த அடிமட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான வேலை நேரம், விடுமுறை மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.
நிதி ஆயோக் அறிக்கைப்படி 2021-2022 வரை 77 லட்சம் முறைசாரா தொழிலாளர்கள் இந்தியாவில் பணியாற்றி வருகிறார்கள். இந்த அறிக்கையில், இணையவழி சேவை நிறுவனங்களில் எதிர்காலத்தில் அதிகப்படியான பெண்கள் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியா முழுக்க இணையவழி சேவை நிறுவனங்களில் பணியாற்றும் முறைசாரா தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களும், உரிமைகளும் காலத்திற்கு ஏற்பப் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பல இடங்களில் குடியிருப்புகளில் லிப்ட் பயன்படுத்தக் கூடாது, உணவகங்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கழிவறைகளைப் பயன்படுத்தக் கூடாது, உணவகங்களுக்கு உள்ளே அமராமல் வெளியில்தான் பார்சல் வாங்கக் காத்திருக்க வேண்டும், மால் என்றால் தனியாக டெலிவரி ஊழியர்களுக்கு என்று இருக்கும் வழியில்தான் உள்ளே செல்ல வேண்டும், டெலிவரி செய்யும் பொருள்களை வீட்டு வாசல் வரை சென்று கொடுக்க வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகளை இந்த நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் டெலிவரி ஊழியர்கள் மீது திணிக்கிறார்கள்.

அதே சமயம், வாடிக்கையாளர் வீட்டில் வளர்ப்பு நாய் இருக்கும்பட்சத்தில், மிகுந்த கவனத்துடன் வீட்டுக்கு வருபவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு கையாண்டிருக்க வேண்டும். "நம்ம நாய்தான், யாரையும் கடிக்காது, துரத்தாது" என்று அலட்சியமாக இருப்பது முற்றிலும் தவறானது. ஒருவரின் வீட்டுக்கு வருபவருடைய பாதுகாப்பு குறித்து அந்த வீட்டு நபருக்கு முழு பொறுப்பு உண்டு என்பதை உணர வேண்டும்.
அந்த வளர்ப்பு நாய் உரிமையாளரின் கவனக்குறைவால், இன்று ஓர் உயிர் பறிபோய்விட்டது. இனி ஸ்விக்கி நிறுவனம், அரசாங்கம், வளர்ப்பு நாயின் உரிமையாளர் என யார் எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், அது அந்த உயிருக்கு நிகராகாது என்பதே உண்மை.