Published:Updated:

புதிய அரசின் கவனத்துக்கு: பள்ளிக்கல்வியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் என்னென்ன?

பள்ளிக்கல்வி

பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்படவேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

Published:Updated:

புதிய அரசின் கவனத்துக்கு: பள்ளிக்கல்வியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் என்னென்ன?

பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்படவேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

பள்ளிக்கல்வி

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரேகட்டமாக கடந்த 6-ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, வாக்குப்பதிவில் மந்தநிலை இருக்குமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த தேர்தல்களைப்போலவே 70 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ம் தேதி காலை தொடங்கப்பட்டு அன்றிரவுக்குள் முடிவுகளும் தெரிந்துவிடும். தமிழகத்தின் புதிய ஆட்சி அதற்கடுத்த சில நாள்களுக்குள் அரியணை ஏறிவிடும். இந்தநிலையில், புதிதாக அமையப்போகிற அரசிடம், அது எந்தக் கட்சியின் அரசாக இருந்தாலும், துறைவாரியாகப் பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அந்தவகையில் பள்ளிக் கல்வித்துறையில் செய்யப்படவேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்துச் சிலரிடம் பேசினோம்:

கொரோனா எச்சரிக்கையுடன் மாணவிகள்
கொரோனா எச்சரிக்கையுடன் மாணவிகள்

ஜெயபிரகாஷ் காந்தி (கல்வியாளர்)

``கொரோனாவைக் காரணம் காட்டி, முழுமையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். வாரத்துக்கு ஒரு நாளாவது சுழற்சி முறையில் (கொரோனா காலகட்டத்தில்) வகுப்புகளை நடத்துவது குறித்து புதிய அரசு சிந்திக்க வேண்டும். காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கே செல்லாமல் இருப்பது பின்னாளில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். பல்வேறு மாநிலங்களில் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். அதனால், தற்காப்பு நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, 10, 11 படிக்காமல் அடுத்த ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுவார்கள். அதைத் தடுக்க வகுப்புகளை நடத்துவதே சரி.

அடுத்ததாக, ஸ்டேட் போர்டு சிலபஸ் நன்றாக இருந்தாலும், நம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு இணையாகக் கற்றுக்கொள்ள முடிகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அதற்கான அடிப்படை அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை நம் மாணவர்களுக்கு இருக்கிறது. அதற்குப் புதிய சிலபஸை எளிதாகக் கற்றுக்கொடுக்கும் திறமையை முதலில் ஆசிரியர்கள் நன்றாக வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவர்களுக்கு உரிய பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி

12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள வசதியாக இலவசமாக லேப்டாப் போன்ற வசதிகளைச் செய்துதர வேண்டும். அடுத்ததாக மிக முக்கியமாக, தனியார் பள்ளிகளைப்போல அரசுப் பள்ளிகளுக்கும் பேருந்து அல்லது மினி வேன் போன்ற வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் பெண்கள் படிக்கும் பள்ளிகளிலாவது அதைச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு வரவிருக்கிறது. அப்போது நம் மாணவர்கள் பின்தங்கிவிடாமலிருக்க இங்கிலீஷ் மீடியம் பள்ளிகளை அதிகப்படுத்த வேண்டும். நீட் போன்ற தேர்வுகளுக்கு எட்டாம் வகுப்பிலிருந்தே பயிற்சிகளை வழங்க முன்வர வேண்டும்.'' என்கிறார் அவர்.

தேவநேயன் (குழந்தைகள் செயற்பாட்டாளர்)

``கொரோனா காலகட்டத்தில் பல குழந்தைகள் படிப்பதை விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரையும் மீண்டும் பள்ளிக்கு அழைத்துவரும் நடவடிக்கையைப் புதிய அரசு முதலில் செய்ய வேண்டும். அடுத்ததாக, கடந்த ஓராண்டாகப் பல குழந்தைகளுக்கு எழுத்து, வாசிப்பு ஆகியவற்றில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அவற்றை மேம்படுத்த நிபுணர்குழுவை அமைத்து, என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என முடிவெடுக்க வேண்டும். அடுத்ததாக, பள்ளிக் கல்வித்துறையில் எப்போதும் அவர்களுக்கு அவர்களே அறிவுரை சொல்லும் வகையிலேயே நிபுணர் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அதில் கண்டிப்பாக மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், குழந்தைகள் செயற்பாட்டாளர்கள், குழந்தைகள் உளவியலாளர்களைக் கொண்டு ஒரு வல்லுநர்குழு உருவாக்கப்பட வேண்டும். அவர்கள்தான், அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும். இந்தக்குழுவே தற்போது, ஆன்லைன்வழிக் கல்வியை எப்படிச் சமத்துவமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு செல்வது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். இணையப் பாதுகாப்பு குறித்தும், என்ன செய்ய வேண்டும் என்பதையும் குழு முடிவு செய்ய வேண்டும்.

குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்
குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்

ஆதி திராவிடர் நலத்துறை, ஆதிவாசிகள் நலத்துறை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி மிகவும் மோசமாக இருக்கிறது. அதை மேம்படுத்த வேண்டும். அதற்காக ஒதுக்கப்படும் நிதி சரியாகப் போய்ச் சேருவதில்லை. அதைக் கண்காணிக்கும் வேலையை தாசில்தார்கள் மேற்கொள்கிறார்கள். அது கூடாது. தனியாக கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளை அதிகரிக்க வேண்டும். தாய்மொழிக் கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் உறுதிப்படுத்த வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை 14- வயதிலிருந்து 18 வயதாக அதிகப்படுத்த வேண்டும். அதன் மூலம், இலவச, தரமான கட்டாயக் கல்வி அருகாமையில் தாய்மொழியில் கொடுக்கப்பட வேண்டும்.

அதேபோல, ஆதி திராவிட நலத்துறை விடுதிகளில், ஆசிரியர்களை வார்டன்களாக நியமிக்கக் கூடாது. அதற்கான அதிகாரிகளைத் தனியாகத் தேர்வுசெய்து நியமிக்க வேண்டும். பாலின சமத்துவம், பாலின நீதி, பாலியல் வன்முறை, வாழ்க்கைத் திறன் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய குழந்தை உரிமைக் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். மாணவர்களின் உளவியல் பிரச்னைகளைச் சரிசெய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் கவுன்சிலர்களை நியமிக்க வேண்டும். இல்லையென்றால், உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க வேண்டும். அதேபோல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த புரிதலை மாணவர்களுக்கு சரியான வகையில் ஏற்படுத்த வேண்டும். சென்னைக்கு வெளியே மறுகுடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு சரியான பள்ளிக்கூடங்கள் இருக்கின்றனவா என்று ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் புத்தகங்கள், பேனா, நோட்டு போன்ற விஷயங்களைப் பள்ளி திறந்த முதல் வாரத்துக்குள் கொடுத்துவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிற முடிவை புதிய அரசாங்கம் முதல் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டும்'' என்கிறார் அவர்.

பரமேசுவரி
பரமேசுவரி

பரமேசுவரி (தலைமை ஆசிரியர், அரசுப்பள்ளி)

``மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க பாடப் புத்தகங்கள் மட்டுமே மிகப்பெரிய கருவியாக இருக்கின்றன. அதில் மாற்றம் வர வேண்டும். அடுத்ததாக நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றும் வேலையை மட்டுமே அந்தத் தேர்வுகள் செய்கின்றன. அரசுப் பள்ளிகளுக்கு, பெண் கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகளை சிறப்பாகச் செய்து கொடுக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு பள்ளியையாவது தேர்ந்தெடுத்து, அனைத்து வசதிகளுடன் கூடிய மாடல் பள்ளிகளாக உருவாக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி என்பதை உறுதி செய்யும் அரசாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திறன் முன்னேற்றத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்'' என்கிறார்.