Published:Updated:

கலாம் கனவு கண்ட 'இந்தியா விஷன் 2020'- இலக்கைத் தொட்டதா? ஓர் அலசல் ரிப்போர்ட்! #India2020

இதோ... இன்னும் ஒரே நாளில் 2020 பிறக்கப்போகிறது. 20 வருடங்களுக்கு முன், அப்துல் கலாம் கண்ட கனவு முழுவதும் நிறைவேறிவிட்டதா?

சாதாரண குடும்பத்தில் பிறந்து, குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். இளைஞர்கள்மீது அதீத நம்பிக்கை கொண்டவர். "தூக்கத்தில் வருவது கனவல்ல; நம்மை தூங்கவிடாமல் செய்வதே கனவு" என்று கூறிய இவர் கண்ட கனவுதான், 'இந்தியா விஷன் 2020'. இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என்று அப்பொழுதே கனவு கண்டார். 1998-ம் ஆண்டு, இந்தியா விஷன் 2020 என்ற புத்தகத்தை எழுதினார். அதன் முக்கிய சாராம்சம் என சில துறைகளைக் குறிப்பிடலாம். வேளாண்மை, கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் இந்தியா அதீத வளர்ச்சி அடைய வேண்டும். நாட்டில் வறுமை ஒழிய வேண்டும். இதுதான் அவர் கண்ட கனவு. அந்தக் கனவு பலித்ததா? அதில் நடந்ததும் நடக்காததும் என்னென்ன?

A. P. J. Abdul Kalam
A. P. J. Abdul Kalam
18-24 வயதுடைய இளைஞர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்றனர்!

கல்வியே செல்வம்!

"நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும். அறிஞர்கள் விஞ்ஞானிகளைக் கொண்ட சிறந்த நாடாக விளங்க வேண்டும்" என்று கல்வி குறித்து எழுதியிருந்தார், அப்துல் கலாம். சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வில், 'மாணவர்கள் தொடக்கப் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்வது கடினமானதாக உள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் அதிகமான சேர்க்கை இருந்தபோதிலும், குறைவான மாணவர்கள் மட்டுமே கல்லூரியை சென்றடைகிறார்கள். 18-24 வயதுடைய இளைஞர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்றனர். சமீபத்திய நிலவரப்படி 993 பல்கலைக்கழகங்கள், 39,931 கல்லூரிகள் இந்தியாவில் உள்ளன. இவற்றில் 2.5% கல்லூரிகள் பிஹெச்.டி (Ph.D), 34.9% கல்லூரிகள் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு இடமளிக்கின்றன. ஆனால், 2020-க்குள் இளைஞர்களுக்கு உயர்கல்வி வழங்க, குறைந்தது 1,500 பல்கலைக்கழகங்கள் தேவைப்படுகின்றன என்று தேசிய அறிவு ஆணையம் (National knowledge commission) மதிப்பிட்டிருக்கிறது. அதன்படி, நமக்கு இன்னும் 500-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தேவைப்படுகின்றன.

கல்வி
கல்வி
ஒவ்வோர் இரவும் சுமார் 200 மில்லியன் குடிமக்கள் பசியுடன் தூங்குகிறார்கள். இந்நிலை 2020-லாவது மாற வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொத்த உணவுத் தேவை!
2020-ல் இந்தியாவின் ‌மொத்த உணவுத் தேவை 350 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் வறுமை

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பதை நாம் அறிவோம். ஒரு நாட்டில் விவசாயம் வளர்ச்சியடைந்தால், பசி, பஞ்சம் வெகுவாகக் குறையும். நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியாவின் பொருளாதார உற்பத்தியில் விவசாயம் சுமார் 14 சதவிகிதம் பங்களிக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உற்பத்தி குறைந்துள்ளது. 2018-19-ம் ஆண்டிற்கான நிலக்கடலை உற்பத்தி 66.59 லட்சம் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், 2017-18-ம் ஆண்டு உற்பத்தி 92.53 லட்சம் டன் ஆகும். இதேபோல், கடந்த ஆண்டு ஆமணக்கு விதை உற்பத்தி 12.15 லட்சம் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-18ல், 15.68 லட்சம் டன்னாக இருந்தது. பருத்தி உற்பத்தியும் குறைந்துள்ளது. 2020-ல் இந்தியாவின் ‌மொத்த உணவுத் தேவை 350 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பசி, பட்டினியால் இன்னும் மக்கள் அவதிப்படுகின்றனர். உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, 1992ல் இந்தியாவில் 240 மில்லியன் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் இருந்தனர். 2012-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 217 மில்லியனாகக் குறைந்துள்ளது. இருப்பினும், 'அனைவருக்கும் உணவு' மற்றும் 'பூஜ்ஜிய ஊட்டச்சத்துக் குறைபாடு' ஆகியவற்றில் மோசமான தோல்வியை நாம் அடைந்திருக்கிறோம். உலக பசி பட்டியலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒவ்வோர் இரவும் சுமார் 200 மில்லியன் குடிமக்கள் பசியுடன் தூங்குகிறார்கள். இந்நிலை, 2020-லாவது மாற வேண்டும்.

farming
farming
ஏழை மாநிலங்களில் உள்ள 10 மருத்துவமனைகள் ஆறில், தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

உடல்நலமே பிரதானம்!

இந்தியாவில் நோயுடன் வாழும் மனிதர்கள் ஏராளம். நாட்டின் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கேற்ற மருத்துவர்கள், மருத்துவமனைகள் பற்றாக்குறையாகவே உள்ளன. உலக மக்கள்தொகையில் 17.5 சதவிகித மக்கள் இந்தியர்கள். உலகளாவிய நோய்களில் 20 சதவிகித இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகள், 75 சதவிகிதம் புறநோயாளிகள் மற்றும் 60 சதவிகிதம் உள்நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறது. ஒரு சராசரி இந்தியக் குடிமகன், வருடாந்திர வீட்டு வருமானத்தில் பாதியை மருத்துவத் தேவைகளுக்காகச் செலவிடவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால், ஒவ்வோர் ஆண்டும் 60 மில்லியன் இந்தியர்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளும் போதுமானதாக இல்லை. கோவாவில், ஒவ்வொரு 614 பேருக்கும் ஓர் அரசு மருத்துவமனைப் படுக்கை உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பீகாரில் 8,789 பேருக்கு ஒரு அரசு மருத்துவமனைப் படுக்கைதான். ஏழை மாநிலங்களில் உள்ள 10 மருத்துவமனைகள் 6ல் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அவற்றில், நான்கில் ஒரு பகுதி மோசமான சுகாதாரம் மற்றும் வடிகால் வசதிகளைக் கொண்டுள்ளது.

 Health
Health
இந்தியாவில், வேலைவாய்ப்பு மிகப்பெரிய பிரச்னை. உயர்கல்வி படித்தவர்களில் பாதி பேர் அவர்கள் படித்ததற்கு சம்பந்தமே இல்லாத துறையில் வேலை செய்கிறார்கள்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில், வேலைவாய்ப்பு மிகப்பெரிய பிரச்னை. உயர்கல்வி படித்தவர்களில் பாதி பேர், அவர்கள் படித்தற்கு சம்பந்தமே இல்லாத துறையில் வேலை செய்கிறார்கள். 2000-ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை 2020-க்குள் 1.3 பில்லியனைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டது. மேலும், ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகை பிரிவு, 2027 -க்குள் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவைவிட அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. எல்லோருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது என்பது கனவாகவே இருக்கிறது. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியை தமிழ்ப்படுத்தியதன் மூலம் 11 மில்லியன் இளைஞர்கள் வேலை இழந்தனர். ஆஸ்பிரிங் மைண்ட்ஸின் புதிய வருடாந்திர வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு 2019 அறிக்கை, 80% பொறியியல் பயின்ற மாணவர்கள் எந்தவித வேலைக்கும் பொருத்தமானவர்கள் அல்ல என்கிறது. 'மாணவர்கள், எவ்விதமான வேலைக்கு விண்ணப்பிக்கிறோம், அதற்கான தகுதி, எப்படிப்பட்ட வேலை என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்' என்றும் கூறியது. 2020-ல் அனைவருக்கும் தரமான கல்வியளித்து, சிறந்த செயல்திறன் உடையவர்களாக மாற்றினால், வேலைவாய்ப்பு அதிகரிக்க சாத்தியம் உள்ளது.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
Vikatan

இதோ, ஒரே நாளில் 2020-ம் ஆண்டு பிறக்கப் போகிறது. 20 வருடங்களுக்கு முன் அப்துல் கலாம் கண்ட கனவு முழுவதும் நிறைவேறிவிட்டதா என்றால், நிச்சயம் 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். அவர் கண்ட கனவை நிஜமாக்க நாம் இன்னும் சிரத்தை எடுத்து உழைக்க‌ வேண்டும். அவரவர் துறைகளில் உழைக்க வேண்டும். தனிமனிதனாக நாம் அனைவரும் உயர்ந்த நிலையை அடைவோமானால், நாடு நிச்சயம் வல்லரசாகும். இந்த ஆண்டு முடியாமல் போனாலும் கூடிய விரைவில் கலாமின் கனவை நிறைவேற்றத்தான் போகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு