Published:Updated:

`கோல்டன் ஹேண்ட்ஷேக்' எனும் அநீதியின் உச்சம்: பரிதவிக்கும் பழங்குடிகள்!

பழங்குடிகள்
பழங்குடிகள்

வனத்துறையால் பழங்குடிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டமும் நடைமுறைக்கு வந்து 12 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது

நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளாகின்றன. ஆனால், பூர்வகுடிகளுக்கு மட்டும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவேயில்லை. ஆங்கிலேயே காலனிய ஆதிக்கத்திலிருந்து சொந்த அரசின் காலனிய ஆதிக்கத்துக்கு அவர்களின் அடிமைத்தளை மாற்றப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பெரும்பான்மையான பழங்குடிகளால் தங்கள் பூர்வீக மண்ணில் குடியிருப்புகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பட்டா பெற முடியவில்லை. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Luz4Hc

வனத்துறையின் தொடர் வஞ்சகத்தால் பூர்வகுடிகள் தங்களுடைய உரிமைகளை இழந்ததுடன், 'வனத்தை ஆக்கிரமித்திருக்கும் குற்றவாளிகள்' என்றே முத்திரை குத்தப்படுகின்றனர். தமிழக மேற்குதொடர்ச்சி மலையின் ஆனைமலைத் தொடர்களில் வாழும் பழங்குடிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் ஆனைமலை பூர்வகுடிகளுக்குக் கிடைக்க வனத்துறை முட்டுக்கட்டை போடுவதால், பூர்வகுடி மக்கள் வாழும் பகுதி தொடர்ந்து இருண்ட கண்டமாகவே உள்ளது. சமீபத்தில் பழங்குடிகளுக்கு ரேஷன் அட்டை வழங்கச் சென்ற தாசில்தாரை, ஐந்து மணி நேரம் வனத்துறை சோதனைச்சாவடியில் உட்காரவைத்துத் திருப்பி அனுப்பினர். உணவும் வாழிடமும் மறுக்கப்படும் வனவிலங்குகள்கூட காட்டைவிட்டு வெளியே வந்து தங்கள் பிரச்னையை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், உரிமைகள் மறுக்கப்படும் பழங்குடிகளின் குரல், இந்தக் காடுகளுக்குள்ளேயே புதைக்கப்படுகிறது.

பழங்குடிகளுக்கும் காடுகளுக்கும் உள்ள தொடர்பை முற்றாக அறுத்திட முனைகிறது இந்தத் திட்டம். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதைதான் இது

2006-ம் ஆண்டு வன நில உரிமை அங்கீகாரச் சட்டம் நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டபோது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், 'பழங்குடி மக்களுக்கு அரசு மிகப்பெரும் அநீதி இழைத்துவிட்டது. அவர்கள் நீதிக்காக வெகுநாள் காத்துக்கொண்டிருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும். பாரம்பர்யமாக வனத்தில் வாழும் பழங்குடிகளுக்கு 10 சென்ட் பரப்பளவில் குடியிருப்பு மனையும், விவசாயத்துக்காக அதிகபட்சமாக 10 ஏக்கர் வரை நிலமும் வழங்கவேண்டும். அவர்களுடைய பாரம்பர்ய உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்' என்றார். இது, பழங்குடி மக்களுக்காக இயற்றப்பட்ட முக்கியமான சட்டம். இந்தச் சட்டம், பழங்குடிகளிடமிருந்து தட்டிப்பறிக்கப்பட்ட அதிகாரத்தை, மீண்டும் பழங்குடிகளுக்கே பகிர்ந்தளித்தது. மேலும் வனத்தில் நிர்வாகம், மேலாண்மை செய்வதில் பழங்குடிகளுக்கு உள்ள பங்கை உறுதிசெய்தது.

வனத்துறையால் பழங்குடிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டமும் நடைமுறைக்கு வந்து 12 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இந்தச் சட்ட அமலாக்கத்தை மிகத் தாமதப்படுத்திய வனத்துறையினர், தற்போது பழங்குடி மக்களை வனத்தைவிட்டு வெளியேற்றும் மூர்க்கத்தனமான ரகசியத் திட்டத்துடன் களமிறங்கியுள்ளனர். 'நீங்கள் சமவெளிப் பகுதிக்கு வந்தால் உங்களுக்கு வீடும் பணமும் தருகிறோம்' என ஆசைவார்த்தை காட்டும் 'கோல்டன் ஹேண்ட்ஷேக்' எனும் திட்டத்தை பழங்குடி மக்களுக்கான கூட்டங்களில் முன்வைக்கிறது வனத்துறை. பழங்குடிகளுக்கும் காடுகளுக்கும் உள்ள தொடர்பை முற்றாக அறுத்திட முனைகிறது இந்தத் திட்டம். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதைதான் இது.

பழங்குடிகள்
பழங்குடிகள்

இந்தச் சட்டத்தின்கீழ் நாடு முழுவதும் கோடிக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பழங்குடி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டும், ஆனைமலைத் தொடரில் வாழும் பழங்குடிகளில் ஒருவருக்குக்கூட நிலம் வழங்கப்படவில்லை என்பதுதான் அநீதியின் உச்சம். இந்தச் சட்டத்தின் முதல் அம்சமான அனைத்து வனக்கிராமங்களையும் வருவாய் கிராமங்களாக மாற்ற வேண்டிய செயல்திட்டத்தை தமிழக அரசு இப்போதுதான் இந்தப் பகுதியில் தொடங்கியிருக்கிறது.

பூர்வகுடிகளைப் புறக்கணிப்பது, உரிமைகளை மறுப்பது, அவர்களின் தனித்த கலாசாரம், மொழி, வாழ்வியலைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுவது ஆகியவை, அரசியல் சாசனம் பழங்குடி மக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளுக்கு எதிரானவை. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பூர்வகுடிகளுக்கான உரிமைப் பிரகடனத்துக்கும் எதிரானவை. பழங்குடிகளுக்கு நீதி வழங்க வேண்டிய மற்ற துறைகளும் நிர்வாக அமைப்புகளும் வனத்துறையின் இந்தச் சர்வாதிகாரப் போக்குக்குத் துணைபோவது மிகவும் வேதனை.

- பூர்வகுடிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை அதிர்ச்சி சம்பவங்களுடன் விவரிக்கிறார், பழங்குடியினர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் ச.தனராஜ். ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள இந்தச் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > அழியும் நிலையில் ஆனைமலை பழங்குடிகள்! https://www.vikatan.com/news/general-news/anaimalai-tribes-issue

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு