Published:Updated:

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம்: 'அமைச்சர் ஜெயக்குமார் ஏன் பயப்படுகிறார்?'

ரகசிய இடத்தில் விசாரிக்கப்படும் அவர், தன்னோடு தொடர்பில் இருந்த டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் மற்றும் தேர்வாணைய அதிகாரிகளின் பெயர்களைக் கூறியுள்ளதாகவும், மாவட்டவாரியாக தன்னால் பணி பெற்றவர்களின் பட்டியலை ஒப்பித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் நடைபெறும் அடுத்தடுத்த திருப்பங்களால் தமிழகமே அதிர்ந்துபோயுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள சூழலில், டி.என்.பி.எஸ்.சி-யைக் கட்டுப்படுத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை அமைச்சரான ஜெயக்குமார்மீதும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. 'அவர் ஏன் பயப்படுகிறார்?' என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

2019 செப்டம்பரில் நடைபெற்ற குரூப்-4 தேர்வில், மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவரும், சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் இந்த மோசடியில் இடைத் தரகர்களாகச் செயல்பட்டு நூற்றுக்கணக்கானவர்களுக்கு பணியிடங்கள் பெற்றுத் தந்திருப்பதையும், இதற்காக கோடிக்கணக்கில் பணம் வசூலித் திருப்பதையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கண்டுபிடித்தனர்.

சி.பி.சி.ஐ.டி போலீஸார் தேடுவதைத் தொடர்ந்து, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றிய எஸ்.ஐ-யான சித்தாண்டி, குடும்பத்துடன் தலைமறைவானார். காரைக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய அவரின் தம்பி வேல்முருகனைக் கைதுசெய்த போலீஸார், அவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். வேல்முருகன் அளித்த தகவலின் அடிப்படையில், மேலும் சிலரை சி.பி.சி.ஐ.டி தூக்கியது.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம்: 'அமைச்சர் ஜெயக்குமார் ஏன் பயப்படுகிறார்?'

இந்த நிலையில், சென்னைக்கு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் இருந்த சித்தாண்டியை, சில தினங்களுக்கு முன்னர் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்ததாகக் கூறப்படுகிறது. ரகசிய இடத்தில் விசாரிக்கப்படும் அவர், தன்னோடு தொடர்பில் இருந்த டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் மற்றும் தேர்வாணைய அதிகாரிகளின் பெயர்களைக் கூறியுள்ளதாகவும், மாவட்டவாரியாக தன்னால் பணி பெற்றவர்களின் பட்டியலை ஒப்பித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சித்தாண்டியிடமிருந்து முழுமையான தகவல்கள் கிடைத்து மேலும் சிலரை கைதுசெய்த பிறகே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சி.பி.சி.ஐ.டி முடிவெடுத்துள்ளதாம். இதனிடையே, இடைத்தரகர் முகப்பேர் ஜெயக்குமாரைத் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவரின் புகைப்படத்தை போஸ்டர் அடித்து, தேடப்படும் குற்றவாளியாக தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

இதற்கிடையே, "அமைச்சர் ஜெயக்குமார், தார்மிகரீதியாக தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறியுள்ள தி.மு.கழக எம்.பி-யான தயாநிதி மாறனிடம் பேசினோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/36W0z4x

"மத்தியப்பிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழலுக்கும்மேலான ஊழல் தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் அதிகாரிகள் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருக்கும்போது, துறையின் அமைச்சரான ஜெயக்குமாருக்குத் தெரியாமல் இந்த மோசடிகள் எதுவும் நடந்திருக்காது. எத்தனையோ மாணவர்கள் அரசாங்க உத்தியோகக் கனவோடு தேர்வு எழுதுகின்றனர். அவர்களின் லட்சியங்களை இந்த அரசு கேலிக்கூத்தாக்கிவிட்டது. புதுப்புது டெக்னிக்கைப் பயன்படுத்தி விஞ்ஞானபூர்வமாக முறைகேட்டை அரங்கேற்றுகின்றனர்.

எங்கள்மீது குற்றச்சாட்டு முன்வைத்தபோது, அதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தோம். நாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்துள்ளோம். மடியில் கனம் இல்லையென்றால் ஜெயக்குமார் ஏன் பயப்படுகிறார்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையைச் சந்திக்க வேண்டியதுதானே!" என்றார் சூடாக.

இந்த நிலையில் இந்த விவகாரம்குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த அமைச்சர் ஜெயக்குமார், "அரசியல் ஆதாயத்துக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின் றனர். டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் எவ்வளவு பெரிய பொறுப்பில் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விளக்கமளித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம்: 'அமைச்சர் ஜெயக்குமார் ஏன் பயப்படுகிறார்?'

இந்தப் புகார்கள் தொடர்பாக விளக்கமறிய, அமைச்சர் ஜெயக் குமாரைத் தொடர்பு கொண்டோம். "இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் தவறு செய்தேன் என்பதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். இதுபோன்ற புரளிகளைக் கிளப்பிவிடுபவர்களை உள்ளே தள்ளாமல் விடமாட்டேன். தயாநிதி மாறன் என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறினார். அரசுரீதியாக அவர்மீது வழக்கு தொடுக்கத் தயாராகிவருகிறேன். என்மீது பொய்ப் புகார்களைக் கிளப்புவது யாராக இருந்தாலும் அவர்கள் சிறைக்குச் செல்வது நிச்சயம்" என்று கொந்தளித்தார்.

- இத்துடன், டி.என்.பி.எஸ்.சி முறைகேடு பின்னணி தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி-யைச் சேர்ந்த நேர்மையான சில அதிகாரிகள் நம்மிடம் விரிவாகப் பேசினர். அதிர்வலைகளை ஏற்படுத்தும் அந்தத் தகவல்களுடன் கூடிய ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > "அமைச்சருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது" - தெறிக்கவிடும் டி.என்.பி.எஸ்.சி! https://www.vikatan.com/social-affairs/politics/tnpsc-scam-is-known-to-minister-jayakumar

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு