Published:Updated:

வாகன ஓட்டிகளுக்கு மட்டும்தான் அபராதமா... இவங்களுக்கெல்லாம் கிடையாதா?

சாலைப் பாதுகாப்பில் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பங்கிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு அரசு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்!

Traffic Jam in Chennai
Traffic Jam in Chennai ( Vikatan )

புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டதும், அதன்மூலம் விதிக்கப்படும் அதிகப்படியான அபராதத்தொகை குறித்து நாடு முழுவதும் விமர்சனங்கள், எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் விவாதங்கள் தீவிரமாக நடக்கின்றன. தமிழகத்தில், குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பது தொடர்கதையாக இருக்கிறது. புதிய சாலைகள் போட்டால் சில நாள்கள்கூட தாங்குவதில்லை. ஒரு மழைக்கே குண்டும்குழியுமாக மாறிவிடுகின்றன. அத்தகைய சாலைகளைப்போடும் ஒப்பந்ததாரர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டுமென்று சமூக வலைதளங்களில் குரலெழுப்புகின்றனர் நெட்டிசன்ஸ். இந்தக் குரல்கள் இந்தியா முழுக்கவே ஒலிக்கின்றன.

Damaged Road
Damaged Road
vikatan

அடுத்ததாக கழிவுநீர், தொலைபேசி, குடிநீர் எனப் பல்வேறு பணிகளுக்காக அந்தச் சாலைகளைத் தோண்டுபவர்கள், வேலை முடிந்ததும் ஒழுங்காக சீர்படுத்தாமல் அப்படியே மண்ணால் மூடிவிட்டுக் கிளம்பிவிடுகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளும் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அந்தக் குண்டும்குழியுமான சாலையில் பொதுமக்கள் சிரமப்பட்டுதான் பயணிக்க வேண்டியிருக்கிறது. சென்னை மாநகராட்சியில், புறநகர் மட்டுமன்றி நகரின் மையப்பகுதியிலேயே இப்படித் தோண்டப்பட்ட சாலைகளே நிறைய உள்ளன. ஏதாவது பணிக்காக பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளைத் தோண்டுபவர்கள், அதை மீண்டும் சரிசெய்து கொடுப்பதுதானே முறை? அப்படிச் செய்யாதவர்களுக்கு பெரிய அளவில் அபராதம் விதிக்க வேண்டுமென்றும் கேட்கிறார்கள்.

கழிவுநீர் வடிகால் வாரியத்தால் சாலையின் நடுவே அமைக்கப்பட்ட வட்டவடிவத் திறப்புகள் அனைத்துமே சரியாக மூடப்படாமலும், உடைக்கப்பட்டும்தான் கிடக்கின்றன. கழிவுநீர் குறித்து கூறும்போது, இன்றுவரை பாதாளச்சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக மனிதர்களையே சாக்கடைக்குள் இறங்கி மலம் அள்ள வைக்கும் மோசமான சூழலையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆக, கழிவுநீர்க்குழாய் மூடிகளைச் சரியாகப் பராமரிக்காத சென்னை மாநகராட்சிக்கு யார் அபராதம் விதிப்பது?

Chennai Road
Chennai Road
Vikatan

சென்னை நகரில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் வேலைகளால் சாலையில் நெருக்கடி மிகுந்துள்ள நிலையில், ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தின்மூலம் நடைமேடைகளின் அகலத்தை அதிகரித்து, போக்குவரத்துக்கான சாலைகளின் அகலத்தைக் குறைக்கும் தவற்றைச் செய்துவருகிறார்கள். குறிப்பாக தி.நகரில், பாண்டி பஜார் சாலையில் நடைமேடைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அகலப்படுத்தப்பட்டு, சாலையின் அகலம் சுருக்கப்பட்டுவிட்டது. எப்போதுமே நெருக்கடியாக இருக்கும் தியாகராயநகர் பகுதி, தற்போது மேலும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இப்படி இவர்களே போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துவதும்கூட அதிவேகப் பயணத்துக்கும், விபத்துக்கும் காரணமாகிறது என்பதை மறுக்க முடியுமா? அவர்களுக்கு யார், எத்தகைய அபராதம் விதிப்பது என்றும் கேள்வியெழுப்புகிறார்கள்.

அடுத்து, மிகமோசமாகப் பெருகிவரும் பேனர் கலாசாரம் குறித்துக் குறிப்பிட்டாக வேண்டும். சமீபத்தில், சென்னையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரின் இல்லத்திருமண விழாவுக்காக சாலை நெடுக வைக்கப்பட்டிருந்த பேனர் கழன்று விழுந்ததால் தடுமாறி, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்த விவகாரம் நீதிமன்றம்வரை சென்று, கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இப்போது அரசியல்வாதிகள் எல்லாம் பாய்ந்து பாய்ந்து பேனர்களை அகற்றிக்கொண்டிருக்கிறார்கள்!

Subhasri Accident
Subhasri Accident
Vikatan

வரவேற்பு பேனர் வைக்கும் கலாசாரம், அரசியலில் மட்டுமல்லாது திரையுலகிலும் அதிகமாக உள்ளது. திரைப்படங்களின் ரிலீஸ், ஆடியோ ரிலீஸ் போன்ற விழாக்களின்போது திரையரங்கங்களிலும் சாலைநெடுகவும் பேனர்கள் வைத்து பொதுமக்களைச் சிரமத்துக்கு உள்ளாக்குகிறார்கள். தற்போது பொதுமக்களும் திருமணம், காதுகுத்து, பிறந்த நாள் என அனைத்து விழாக்களுக்கும் திருமண மண்டபங்களையொட்டி பிரமாண்ட பேனர்கள் வைக்கிறார்கள். இவையனைத்திலும் நமக்கு விழிப்புணர்வு அவசியம்.

விஜய் அரசியல் பன்ச், 'நோ' பேனர், குட்டிக் கதை...'பிகில்' இசை வெளியீட்டில் நடந்தது என்ன?

போக்குவரத்துக்கு இடையூறாக வரவேற்பு வளைவுகள், பேனர்கள் வைப்பவர்களுக்கும் கடுமையான அபராதங்களை விதிக்க வேண்டும். விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், மக்களிடையே பாதுகாப்பான போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த அபராதங்களின் நோக்கமென்றால், மேற்கூறிய தவறுகளுக்கும் அபராதம் விதிப்பதுதானே சரியாக இருக்கும்?

Political Cutouts
Political Cutouts
Vikatan

இவைதவிர, அரசுப் பேருந்துகளின் பற்றாக்குறையால் முக்கிய அலுவலக நேரங்களில் கூட்டநெரிசலான பேருந்துப் பயணம், பழுதடைந்த சிக்னல்கள், போக்குவரத்துக் காவலர்களின் பற்றாக்குறையால் சிக்னல்களில் திணரும் போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களும் விபத்துகளுக்குக் காரணமாகின்றன என்பதை மறுக்க முடியாது.

ஆக, சாலைக்கட்டமைப்பைச் சரிசெய்யாமல், அவற்றை முறைப்படுத்தாமல், பொதுமக்களை மட்டுமே குற்றவாளிகளாக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் எழுப்பும் நியாயமான கேள்விகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும். சாலைப் பாதுகாப்பில் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பங்கிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு அரசு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்!