Published:Updated:

சங்கீத வாத்யாலயாவால் யாருக்கு சங்கடம்?! - சிப்பெட்டைத் தொடர்ந்து அடுத்த அநீதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சங்கீத வாத்யாலயாவால் யாருக்கு சங்கடம்?! - சிப்பெட்டைத் தொடர்ந்து அடுத்த அநீதி
சங்கீத வாத்யாலயாவால் யாருக்கு சங்கடம்?! - சிப்பெட்டைத் தொடர்ந்து அடுத்த அநீதி

சங்கீத வாத்யாலயாவால் யாருக்கு சங்கடம்?! - சிப்பெட்டைத் தொடர்ந்து அடுத்த அநீதி

மிழகத்தில் இயங்கி வந்த சிப்பெட்டை, கர்நாடகாவுக்கு இடம் பெயர வைக்கும் முயற்சியை தமிழக அரசியல் கட்சிகள் ஒரே குரலில் எதிர்த்தன. இதன் காரணமாக, சிப்பெட்டை இடமாற்றும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அடுத்தகட்டமாக, கைவினைக் கலைஞர்களின் நன்மைக்காக செயல்படும் சங்கீத வாத்யாலயாவை, பெங்களூருவுக்கு இடமாற்றம் செய்யும் வேலைகள் நடப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர் கலைஞர்கள். 

மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது சங்கீத வாத்யாலயா. கடந்த 1956-ம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் இந்நிறுவனத்தின் மண்டல அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் செயல்படுகிறது. அண்ணா சாலையில் உள்ள இந்த நிறுவனத்தில் நானூறுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் உள்ளன. எங்கும் காணக் கிடைக்காத அரிய இசைக் கருவிகளைப் பாதுகாத்து வருகிறது சங்கீத வாத்யாலயா. நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைப் பாடகர் சுதா ரகுநாதன் உள்பட பிரபலமான கலைஞர்கள், இசைக் கருவிகளை ரசிப்பதற்காகவே இங்கு வருகை தருவது வழக்கம். யாழ், வீணை, பாரம்பர்ய இசைக் கருவிகள் அனைத்தும் இங்கு தயாராகின்றன. "அறுபது ஆண்டுகளாக எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் சங்கீத வாத்யாலயா இயங்கி வருகிறது. சில கர்நாடக அதிகாரிகளின் கண்களை இந்த வாத்யாலயா உறுத்தியிருக்கிறது. எனவேதான், இடமாற்றும் வேலைகளை தீவிரப்படுத்துகின்றனர்" என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார் மண்டல அலுவலக ஊழியர் ஒருவர். 

“மாநில அரசின் பூம்புகாருடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புற கைவினைக் கலைஞர்களுக்கான மூலப் பொருட்களைக் கொடுத்து, கைவினைப் பொருட்களைத் தயார் செய்வது; பூம்புகார் மூலமாக இந்தியா முழுவதும் விற்பனை செய்வது; கண்காட்சிகளில் பங்கெடுப்பது; தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த ஓவியர்களைத் தேர்வு செய்து குடியரசுத் தலைவர் விருதுக்குப் பரிந்துரைப்பது என எங்களுக்கான பணிகள் அதிகம். கடந்த ஏழு ஆண்டுகளாக தென்மண்டல இயக்குநர் பதவியில் மல்லிகார்ஜுனையா என்பவர் இருக்கிறார். பொதுவாக, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மண்டல இயக்குநர் பதவியில் யாரும் நீடிப்பது இல்லை. தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கால் இவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கிறார்.

சொந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, சென்னையில் உள்ள சங்கீத வாத்யாலயாவை பெங்களூருவுக்கு மாற்ற விரும்புகிறார். இதற்கு நாங்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துவிட்டோம். ஆனாலும், மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் சிலரின் துணையோடு செயல்பட்டு வருகிறார். அவரை எங்களால் ஒருகட்டத்தில் எதிர்க்க முடியாமல் போகவே, நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு விரிவாகக் கடிதம் எழுதினார். உடனே, இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த சில நாட்களாக மீண்டும் இடமாற்றம் குறித்த பேச்சு எழுந்துள்ளது” என வேதனைப்பட்டவர், 

“சங்கீத வாத்யாலயாவை இடமாற்றம் செய்வதற்கு மண்டல இயக்குநர் சொல்லும் காரணம்தான் அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசு கட்டடங்களில் உள்ள அரசுத் துறைகள் எதுவும் வாடகை செலுத்தாமல் நீண்ட காலம் செயல்பட்டு வந்தன. ‘இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மிகக் குறைந்த அளவாவது வாடகை செலுத்த வேண்டும்’ என அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார். இதையடுத்து, நாங்களும் சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு மாதம் அறுபதாயிரம் ரூபாய் அளவுக்கு வாடகை செலுத்தி வருகிறோம். இந்தப் பணம் அரசின் கஜானாவுக்குத்தான் செல்கிறது. மின் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவை மாநில அரசின் கஜானாவுக்குத்தான் செல்கின்றன. இதனால், தனியார்கள் எந்தவிதத்திலும் பயன் அடைவதில்லை. ஆனால், இது ஒன்றையே காரணமாக வைத்துக் கொண்டு, ' தேவையற்ற வாடகைப் பிரச்னை' என நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதுகிறார் மண்டல இயக்குநர். அறுபதாண்டு காலமாக கைவினைக் கலைஞர்களின் நலனுக்காக செயல்படும் சங்கீத வாத்யாலயாவை இடமாற்றம் செய்யும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்" என்றார் நிதானமாக. 

இதுகுறித்து சங்கீத வாத்யாலயாவின் மண்டல இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, ‘இந்த விவகாரம் குறித்து நாங்கள் எதுவும் பேச முடியாது’ என்றதோடு முடித்துக் கொண்டனர். இறுதியாக, தமிழக பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். “இந்தச் செய்தியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வருகிறது என்றால், உடனடியாக மத்திய அமைச்சரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்வேன்” என்றார் உறுதியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு