Published:Updated:

தொடரும் விலைவாசி, குழப்பத்தில் அரசு, விழி பிதுங்கும் வணிகர்கள் #100DaysofGST

தொடரும் விலைவாசி, குழப்பத்தில் அரசு, விழி பிதுங்கும் வணிகர்கள் #100DaysofGST
தொடரும் விலைவாசி, குழப்பத்தில் அரசு, விழி பிதுங்கும் வணிகர்கள் #100DaysofGST

தொடரும் விலைவாசி, குழப்பத்தில் அரசு, விழி பிதுங்கும் வணிகர்கள் #100DaysofGST

கடந்த ஜூலை முதல் தேதியிலிருந்து ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. இன்றுடன் ஜி.எஸ்.டி அமல்படுத்தி 100 நாள்கள் நிறைவடைந்தபோதும் கூட, பொதுமக்கள் முதல் வணிகர்கள் வரை விழி பிதுங்கி வருவதாக நிபுணர்கள் சொல்கின்றனர். 

இந்தியாவில் இதற்கு முன் வரியே இல்லாததுபோலவும், புதிதாக ஜி.எஸ்.டி வரி வந்ததுபோலவும் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். ஹோட்டல்களில் இதற்கு முன் சேவை வரி, வாட் வரி, சுவச் பாரத் செஸ் வரி, கிரிஷ் கல்யாண் செஸ் வரி எனப் பல வரிகள் இருந்தன. இதைப்போல, உணவு முதல் தங்கம் வரை நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் சில வரிகளைச் செலுத்திவந்தோம். இப்போது இதை சீர்ப்படுத்தி மொத்தமாக ஒரே வரி `ஜி.எஸ்.டி' எனக் கொண்டுவரப்பட்டது.

ஜி.எஸ்.டி கடந்து வந்த பாதை! 

இந்திய வரலாற்றில் ஜி.எஸ்.டி வரி மிக முக்கியமானது. இது, கடந்த 2005-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு அரசால் கொண்டுவரப்பட்டது. எனினும், இந்த மசோதாவை ஒருசில காரணங்களால் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில், பா.ஜ.க அரசு வெற்றிபெற்று கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. காரணம், மக்களவையைப்போல் மாநிலங்களவையில் பா.ஜ.க அரசுக்குப் பலம் இல்லாததுதான். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்கள் அவையிலும் ஜி.எஸ்.டி மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்தபின் ஜூலை முதல் தேதியிலிருந்து ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தது. 

ஆனால், இன்றும் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் ஜி.எஸ்.டி புரிந்தபாடில்லை. எந்தப் பொருளுக்கு என்ன வரி எனத் தெரியாமலே உள்ளனர். ஜி.எஸ்.டி அமல்படுத்தியபோது ஒருசில மாதங்களில் விலைவாசி அதிகரிக்கும். அதன்பிறகு பொருள்களின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் சொன்னார்கள். அதன்படி விலைவாசியும் கடந்த 100 நாள்களில் மளமளவென அதிகரித்தது. இதன் பிறகு அதுவே பழகிடும் என்ற நிலைதான் நீடிக்குமோ எனத் தோன்றுகிறது. ஏனெனில், இதுவரை ஒரு முறை விலைவாசி ஏறினால் அது இறங்கியதாக சரித்திரம் உள்ளதா?

இதுகுறித்து ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணனிடம் பேசினோம்.

``ஜி.எஸ்.டியைப் பொறுத்தவரை அரசு, வணிகர்கள், பொதுமக்கள் என இன்றும் அனைவரும் குழப்பத்திலேயே இருக்கின்றனர். இப்போது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருள்களின் விலையைக் குறைத்துள்ளனர். ஏசி ரெஸ்டாரன்ட் ஜி.எஸ்.டி-க்கான வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைத்துள்ளனர். 

ஓர் இடத்தில் அதிகமாக ஜி.எஸ்.டி வரி வசூலிக்கிறார்கள் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் செய்ய

வேண்டும். ஆனால், இதற்கு எந்த ஒரு வழியும் இல்லை; வசதியும் இல்லை. பல இடங்களில் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கின்றனர். ஆனால், முறையாக வரி செலுத்துகிறார்களா என்பது தெரியவில்லை. இவை அனைத்தும் யார் எல்லாம் ஜி.எஸ்.டி வரி வசூல் செய்கிறார்களோ, இது எல்லாம் அவர்களுக்கு கூடுதல் லாபமாக அமைந்துவிடும். ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்து பொருள்களின் விலை குறைய, குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகளாவது ஆகும். ஏனெனில், இந்தியா பெரும்பாலும் ஒழுங்குப்படுத்தப்படாத துறையாகவே உள்ளது. இதில் 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதம் வரை மட்டுமே ஒழுங்குப்படுத்தப்பட்ட துறை எனச் சொல்லலாம். மீதி 60 சதவிகிதம், 100 சதவிகிதமாக மாற பல ஆண்டுகள் ஆகும். 

விழிப்புஉணர்வு இல்லை!

வணிகர்களைப் பொறுத்தவரை, ஜி.எஸ்.டி வரி தாக்கல் சிரமமாகவே இருக்கிறது. இந்தியாவில் பெரிய வணிகர்களைவிட, மிகச் சிறிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் பல லட்சக்கணக்கான வணிகர்கள் இருக்கின்றனர். இவர்களிடம் `மாதம்தோறும் 4 ரிட்டன், 5 ரிட்டன் தாக்கல் செய்; தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம்' எனச் சொன்னபோது, அவர்களுக்கு எரிச்சல்தான் வந்தது. இப்போது இதனால் மாதம்தோறும் வரித் தாக்கலை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்தால் போதும் என மாற்றிவிட்டனர். ஏனெனில், அரசு எதிர்பார்த்த அளவில் வரித் தாக்கல் நடைபெறவில்லை. ஆகையால், அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்வதற்காக வரித் தாக்கலை முடிந்தவரை எளிமைப்படுத்தி வருகின்றனர். 

அரசு, வணிக அமைப்புகளுடன் ஒன்றுசேர்ந்து பல விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்க வேண்டும். எதுவுமே நடைபெறவில்லை. ஜி.எஸ்.டி வந்த பிறகு, பெரும்பாலான பொருள்களின் விலை குறைய வேண்டும். ஆனால், எந்த ஒரு பொருளின் விலையும் குறைந்தபாடில்லை. இன்றைய தேதி வரை பொருள்களின் விலை அதிகரித்துதான் வருகிறது. இதற்கு அரசும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதுபோல் தெரியவில்லை. இன்றும், பல பேர் ஜி.எஸ்.டி பதிவுசெய்யாமலே உள்ளனர். ஜி.எஸ்.டி பதிவுசெய்தவர்கள்கூட வரி தாக்கல் செய்யாமலே இருக்கின்றனர். வணிகர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கின்றனர். சரியான வழிகாட்டல் இல்லை. அரசுத் தரப்பிலிருந்து சரியான ஹெல்ப் லைன் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஹெல்ப் லைன் சென்டர் இருந்து, மக்களுக்கு உதவியாக இருந்தால் மட்டுமே உண்மையில் ஜி.எஸ்.டி வெற்றியடையும்" என வருத்தத்துடன் சொல்லி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு