Published:Updated:

“ஹார்வேர்டில் தமிழ் இருக்கைக்கு நிதி சேர்ப்பது இருக்கட்டும். இந்தியாவில்..?” - எழுத்தாளர் புதியமாதவி சங்கரன்

“ஹார்வேர்டில் தமிழ் இருக்கைக்கு நிதி சேர்ப்பது இருக்கட்டும். இந்தியாவில்..?” - எழுத்தாளர் புதியமாதவி சங்கரன்
“ஹார்வேர்டில் தமிழ் இருக்கைக்கு நிதி சேர்ப்பது இருக்கட்டும். இந்தியாவில்..?” - எழுத்தாளர் புதியமாதவி சங்கரன்

“ஹார்வேர்டில் தமிழ் இருக்கைக்கு நிதி சேர்ப்பது இருக்கட்டும். இந்தியாவில்..?” - எழுத்தாளர் புதியமாதவி சங்கரன்

அமெரிக்காவில் வசிக்கும் வைதேகி ஹெர்பர்ட், தமிழ் சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இதற்கான பாராட்டு விழாவில், பென்சில்வேனியாவைச் சேர்ந்த இதய அறுவைசிகிச்சை மருத்துவர் ஜானகிராமன், வைதேகியைச் சந்தித்தார். 2,000 வருடங்களுக்கு முன் தோன்றிய சங்க இலக்கியத்தின் மேன்மைக்காக, தானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில், 2014 நவம்பர் மாதம், வைதேகி ஹெர்பெர்ட்டைத் தொடர்புகொண்டார் ஜானகிராமன். 

“என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன?” என்று கேட்டதற்கு, “உலகப் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது. தொன்மையான தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அங்கே அமையுமானால் உலகமே பயனுறும். தமிழுக்குப் பெருமை; தமிழர்களுக்கும் பெருமை'' என்றார் வைதேகி.

இதுதான் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக விழுந்த முதல் விதை.

மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தன் இருவரும் கூட்டாக ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி அளித்து பணியைத் தொடங்கினர். ஹார்வேர்டு பல்கலையில் தமிழ் இருக்கை கொண்டுவருவதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் கொடுத்தது. நடிகர்களில் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாயும், விஷால் 10 லட்சம் ரூபாயும் வழங்கினர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் 25 லட்சம் வழங்கினார். தனிநபர் சார்பில் வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை இது. இதுதவிர, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் 25 லட்சம் ரூபாய் வழங்கினர். கவனம் பெறுதல் அதிகரித்து, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் சம்பளத்தைக் கொடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர். தன் பங்களிப்பாக ஐந்து லட்சம் ரூபாயை வழங்கினார், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 90 வயதுடைய ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் கோ.ராமசாமி. இப்படி இரண்டு ஆண்டுகளாக வேகம்பிடித்து வளர்கிறது நிதி திரட்டும் பணி.

அண்மையில் வெளியான பல்கலைக்கழக உலகத்தர வரிசையில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்துக்கே முதல் இடம் கிடைத்திருக்கிறது.  `உலக அறிவு மையம்' என்றழைக்கப்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில், பல திசைகளில் இருந்துவரும் தரமான மாணவர்கள் தமிழைக் கற்கவும் ஆராயவும் வாய்ப்புகள் அமைய வேண்டும். 2,300 ஆண்டுகள் பழைமையான சங்க நூல்களுக்கும், பழைமையான தமிழ் இலக்கியங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கற்பிக்கப்படும். 1.5 மில்லியன் மக்கள் மட்டுமே பேசும் `செல்டிக்’ மொழிக்கு ஹார்வேர்டில் இரண்டு இருக்கைகள் இருக்கின்றன.

சொற்ப மக்களே பேசும் சம்ஸ்கிருதம், ஹீப்ரு ஆகிய மொழிகளுக்கும் மற்ற செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. இப்போது கிட்டத்தட்ட 80 சதவிகிதப் பணம் சேர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. இன்னும் பணம் தேவையிருப்பதால் தனிநபராகவோ, கூட்டாகவோ, அமைப்புகளின் மூலமாகவோ, விரும்பிய தொகையைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 மில்லியன் மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு இருக்கை நிறுவுவதற்கான பணிகளைத் துரிதமாகச் செய்யவேண்டும் என்று தமிழ் மொழி ஆர்வலர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்திவருகிறார்கள்.

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இருப்பது அவசியம். அதே நேரத்தில், தமிழகத்திலும் மற்ற  மாநிலங்களிலும் தமிழ் கல்விக்கு இருக்கும் சிக்கல்களைக் கேள்விகளாகத் தொடுத்திருக்கிறார் மும்பை, தாராவியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் புதியமாதவி சங்கரன்.

1. அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில், `திருக்குறள் பீடம்' என்ற தமிழ் இருக்கையை, சிதம்பரம், மதுரை, சென்னைப் பல்கலைக்கழகங்களில் உருவாக்கினார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு சிதம்பரத்தில் திருக்குறள் பீடம் காணாமல்போய்விட்டது. செம்மொழி ஆய்வு நிறுவனமோ, ஏற்கெனவே உருவாக்கிய திருக்குறள் பீடத்தைப் புதுப்பிக்காமல், கவனிக்காமல் புதிதாக இன்னொரு திருக்குறள் இருக்கையை ஒரு கோடி ரூபாய் திட்டத்தில் தொடங்கியது ஏன்?

2. இந்தியாவில் தமிழகத்தைத் தவிர எத்தனை அயல் மாநிலங்களின் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறை இருக்கிறது? அப்படியே இருந்தாலும் அவற்றின் இன்றைய நிலை என்ன?

3. தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைக்கான இடம் என்ன? எத்தனை மாணவர்கள் அதில் படிக்கிறார்கள்? தமிழ்நாட்டின் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைகளுக்கு அரசு ஒதுக்கியிருக்கும் நிதி எவ்வளவு? அதை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? இதுவரை வெளிவந்த ஆக்கபூர்வமான புத்தகங்கள், செயல்பாடுகள் என்ன? ஒரு பல்கலைக்கழகம் ஒரு மொழிக்கான இருக்கையை உருவாக்க, அந்த மொழி பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அதைத் தமிழினம் செய்திருக்கிறதா போன்ற கேள்விகளை எழுப்பியிருப்பதுடன், ஆர்வலர்களின் தரப்பிலும், அரசின் தரப்பிலும் பதிலை எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் புதியமாதவி சங்கரன்.

அடுத்த கட்டுரைக்கு