Published:Updated:

நள்ளிரவு ஜி.எஸ்.டி.. 14 வது ஜனாதிபதி... என்னவெல்லாம் நடந்தது 2017-ல்? #2017Rewind

நள்ளிரவு ஜி.எஸ்.டி.. 14 வது ஜனாதிபதி... என்னவெல்லாம் நடந்தது 2017-ல்? #2017Rewind
நள்ளிரவு ஜி.எஸ்.டி.. 14 வது ஜனாதிபதி... என்னவெல்லாம் நடந்தது 2017-ல்? #2017Rewind

நள்ளிரவு ஜி.எஸ்.டி.. 14 வது ஜனாதிபதி... என்னவெல்லாம் நடந்தது 2017-ல்? #2017Rewind

"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்" என்று சொல்வார்கள். அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதி புதிய ஆண்டு பிறக்கிறது. 2017 முடிந்து, 2018-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். 

ஒவ்வோர் ஆண்டிலும் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டில் இந்திய அளவில் நடந்த குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.

குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், இரண்டிலுமே மத்தியில் ஆளும் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில், இமாச்சலில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பி.ஜே.பி., குஜராத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கடுமையாகப் போராடி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. குஜராத்தில் மோடி அலை வென்றதாகக் கூறிக் கொண்டாலும், கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. குஜராத்தில் மீண்டும் விஜய் ரூபானியும், இமாச்சலப் பிரதேசத்தில் ஜெய்ராம் தாக்கூரும் முதல்வர்களாகப் பதவியேற்றனர். 

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்தது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. 

2016-ம் ஆண்டின் முக்கிய நிகழ்வாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகினார். உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர், புதல்வர் ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு வர வழிவகுத்தார். அந்தவகையில் பாரம்பர்யம்மிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார். ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி, 2018-ம் ஆண்டில் வெற்றிநடை போடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேரள மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட பார்ப்பனர் அல்லாத 36 பேரை, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இது, கேரளா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அளவிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி வகித்தபோது, தொலைதொடர்புத்துறையில் அலைக்கற்றைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டதில், ஊழல் நடைபெற்றதாகக் கூறப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு, ஆறு ஆண்டுகள் விசாரணைக்குப் பின் முடிவுக்கு வந்தது. தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்து சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பளித்தார். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க சி.பி.ஐ. தரப்பு தவறி விட்டதாக அவர் தன் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

2017-18-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதியே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே-க்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவந்த நடைமுறை முதல்முறையாக மாற்றப்பட்டு, பொது பட்ஜெட்டுடன் சேர்த்தே முதல்முறையாக தாக்கலானது. 

'ஒரே தேசம்; ஒரே வரிமுறை' என்ற முழக்கத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பான ஜி.எஸ்.டி வரிமுறை, ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி தலைமையில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்று, அடுத்தநாள் முதல் ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தது.

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக பி.ஜே.பி-யைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தார்.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நவம்பர் மாதம் நடைபெற்ற உலகத் தொழில்முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி அளித்த விருந்தில் இவாங்கா கலந்து கொண்டார். டிரம்ப் மகள் வருகையையொட்டி, ஹைதராபாத் நகரில் இருந்த பிச்சைக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு, மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவாங்கா-வுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹைதராபாத் நகரில் உள்ள பழைமை வாய்ந்த கட்டடத்தில் இவாங்காவுக்கு விருந்து அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும், ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டுமே நாம் பதிவு செய்துள்ளோம்...

அடுத்த கட்டுரைக்கு