Published:Updated:

``பா.ஜ.க-வைத் தமிழகம் தேர்ந்தெடுத்தால், அது பெரியாரை அவமதிக்கும் செயல்!'' – ஜிக்னேஷ் மேவானி

``பா.ஜ.க-வைத் தமிழகம் தேர்ந்தெடுத்தால், அது பெரியாரை அவமதிக்கும் செயல்!'' – ஜிக்னேஷ் மேவானி

``பா.ஜ.க-வைத் தமிழகம் தேர்ந்தெடுத்தால், அது பெரியாரை அவமதிக்கும் செயல்!'' – ஜிக்னேஷ் மேவானி

``பா.ஜ.க-வைத் தமிழகம் தேர்ந்தெடுத்தால், அது பெரியாரை அவமதிக்கும் செயல்!'' – ஜிக்னேஷ் மேவானி

``பா.ஜ.க-வைத் தமிழகம் தேர்ந்தெடுத்தால், அது பெரியாரை அவமதிக்கும் செயல்!'' – ஜிக்னேஷ் மேவானி

Published:Updated:
``பா.ஜ.க-வைத் தமிழகம் தேர்ந்தெடுத்தால், அது பெரியாரை அவமதிக்கும் செயல்!'' – ஜிக்னேஷ் மேவானி

`ஜிக்னேஷ் மேவானி தேர்தலில் போட்டியிடுகிறார் ' எனத் தெரிந்தவுடன், காங்கிரஸும் ஆம் ஆத்மியும் `தங்களது கட்சிகள் போட்டியிடப்போவதில்லை' என அறிவித்தன. டிசம்பரில் நடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் போட்டியிட்ட ஜிக்னேஷ், கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.  சில நாள்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த வாட்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். அவருடன் உரையாடியபோது...

`` `உனா' எழுச்சித் தொடங்கிப் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள். தற்போது நீங்கள் ஈடுபட்டிருக்கும் தேர்தல் பாதை, போராட்டங்களுக்கான வீரியத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா?''

``இல்லை. நிச்சயமாக அப்படி நடக்க வாய்ப்பில்லை. தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, மக்கள் மத்தியில் எனக்கான செல்வாக்குக் கூடியுள்ளது. மக்களுக்கான இந்த இயக்கத்தில் பலர் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என எண்ணுகிறேன். மக்களின் ஆதரவு இன்னும் அதிகமாகக் கிடைத்தால், நான் முன்னெடுக்க விரும்பும் போராட்டங்களில் மக்களையும் பங்கேற்கச் செய்வேன்.''

``யாருக்குச் சுதந்திரம் அதிகம்... சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷுக்கா, போராளி ஜிக்னேஷுக்கா?''

(சிரிக்கிறார்) ``சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் எனக்குப் புகழ் போதை வரவில்லை. நான் முன்னர் இருந்ததைப்போலவே இப்போதும் இருக்கிறேன். தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும்போது, என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்களிடம் `நான் இரண்டு சதவிகிதம் அரசியல்வாதியாகவும், தொண்ணூற்று எட்டு சதவிகிதம் போராளியாகவும்தான் இருந்திருக்கிறேன்' எனச் சொல்வதுண்டு. போராளியாக இருப்பதுதான் எனக்குப் பொருத்தமாக இருக்கிறது. மக்கள் என்னை ஒரு போராட்டக்காரனாக நினைவுகொள்ளவே விரும்புகிறேன். நான் பங்கேற்கும் போராட்டங்களையே மக்கள் நினைவுகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்; நான் போட்டியிட்ட தேர்தல்களை அல்ல.''

``பீமா கோரேகான் நினைவுப் பேரணி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் நிகழ்வு என விமர்சிக்கப்படுகிறதே?''

``தலித் மக்கள் அரசியல்மயப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இந்துத்துவ சக்திகள் வைக்கும் குற்றச்சாட்டுகள்தான் அவை. நான், மக்களின் போராட்ட மனநிலையை ஆதரிக்கிறேன். அன்றைய தலித் மக்கள், சாதிய மேலாதிக்க பூஷ்வாக்களுக்கு எதிராக அந்தப் போரைப் பயன்படுத்திக்கொண்டார்கள். சாதியச் சக்திகளுக்கு எதிரான ஒரு குறியீடு என்ற வகையில், பீமா கோரேகான் போராட்டத்தை நான் ஆதரித்தேன். ''

``டெல்லியில் நீங்கள் பங்கேற்ற `யுவ ஹங்கர்’ பேரணியை, ஊடகங்கள் தவறாகச் சித்திரித்ததாகக் கூறுகிறீர்கள். உங்கள் புகார் என்ன?''

``டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள், புரட்சிகர இளைஞர்கள் ஆகியோருடன் சேர்ந்து நாங்கள் நடத்திய `யுவ ஹங்கர்’ பேரணிக்குப் பல தடைகள் எழுந்தன. வட இந்திய ஊடகங்கள் சில, பேரணி தோல்வியடைந்ததாகக் காட்டுவதற்கான பல வேலைகளை விடாப்பிடியாகச் செய்தன.  மூன்று பெரிய வட இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள், இதில் முன்னணியில் நின்றன. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் முதலான இயக்கங்களிலிருந்து பெற்ற செயல்திட்டத்தை அவை நடைமுறைப்படுத்தின. எப்போதும் என்னைக் குறிவைத்து, என் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதையும், போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதையும் முன்வைத்து வேகமாகச் செயல்படுகின்றன. பரவாயில்லை. அவை அப்படிச் செயல்பட்டாலும் அது நிலைப்பதில்லை.

இந்த நாட்டில் சிலபல உண்மையான ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள். நான் மக்களுக்கான போராட்டங்களில் உண்மையுடன் நிற்பதால், மக்கள் என்னை ஆதரிக்கிறார்கள். எனவே, என்னைக் குறிவைக்கும் ஊடகங்களைவிட, மேம்பட்ட தளத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறேன்.''

``ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலா, டெல்லியில் முத்துகிருஷ்ணன், தற்போது அகமதாபாத்தில் மாரிராஜ் - உயர் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் மீது காட்டப்படும் பாகுபாட்டை எப்படிக் களைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?''

``மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் உளவியல் வன்முறைகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது, இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் சாதியக் கட்டமைப்புதான். ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னையாக `சாதி' இருக்கிறது என்பதை நினைக்கத் தவறிவிடுகிறோம். சாதியை வெறும் தலித்துகளின் பிரச்னையாகப் பார்ப்பதோடு இதை நிறுத்திக்கொள்கிறோம். தலித் அமைப்புகளிடையேகூட சாதி ஒழிப்புக்கான சரியான புரிதல்களும் விவாதங்களும் இல்லை.

நான் சட்டமன்றத்தில் நுழைவதால் மட்டுமே சாதி ஒழிந்துவிடாது. நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இன்னும் கடுமையாக அனைவரிடமும் இதையே வலியுறுத்திவருகிறேன். சாதியும் வர்க்கமும் ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்துள்ளன. இந்த இரண்டையும் எதிர்த்து மக்கள் போராட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். முற்போக்கான கருத்துகளும் அறிவியல்பூர்வமான விவாதங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். 

சாதியக் கட்டமைப்பின் அடித்தளத்தை உடைப்பதற்கு, நம் முன் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். நிலச் சீர்திருத்தங்களும் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். கூட்டம் கூட்டமாக ஓர் இடத்தில் ஒரே சாதியினர் வாழும்முறை ஒழிக்க வேண்டும். கிராமங்களாக இருந்தாலும் நகரங்களாக இருந்தாலும், தலித் மக்கள் ஊருக்கு வெளியேதான் வாழ்ந்துவருகின்றனர். தொடர்ந்துவரும் இத்தகைய இழிவுகள் அழிக்கப்பட வேண்டும். அரசு இதில் தலையிட்டு, மக்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றி ஒன்றாக வாழ்வதற்கான வழிமுறைகளைச் செய்யவேண்டும். இது, சாதிமறுப்புத் திருமணங்களுக்கு வழிவகுக்கும்; சாதியக் கட்டமைப்பை உடைக்கும்.

இன்னும் பல செயல்திட்டங்களைச் சாதி ஒழிப்புக்காக தொலைநோக்குடன் செயல்படுத்த வேண்டும். சாதியக் கட்டமைப்பு இறுக்கமாக இருக்கும் வரை, உயர்கல்வி நிறுவனங்களில் ரோஹித் வெமுலா போன்ற மாணவர்களின் மரணத்தைத் தடுக்க முடியாது. எனினும், தற்கால நிவாரணமாக பல்வேறு செயற்பாட்டாளர்கள் முன்வைக்கும் ரோஹித் வெமுலா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும், நாடு முழுவதும் தலித் மாணவர்கள் மீது எந்தெந்த விதங்களில் பாகுபாடுகள் காட்டப்பட்டுவருகின்றன என்பதை மிகத் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.''

``தமிழ்நாடு அரசியலைப் பற்றி பாரதிய ஜனதா கட்சியைக் கிண்டல்செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தீர்கள். தமிழ்நாடு அரசியல் மீதான உங்களின் நிலைப்பாடு என்ன?''

``தமிழ்நாடு அரசியல் பற்றிய முழுமையான புரிதல் எனக்கு இல்லை. நான் கர்நாடகாவுக்கும் கேரளாவுக்கும் சென்று வந்திருக்கிறேன். இந்தியாவின் தென்மாநிலங்களின் அரசியலை நான் பெரிதாகக் கவனித்ததில்லை. இனி கவனிக்கலாம் என இருக்கிறேன். ஆனால், பல நண்பர்கள் மூலம் தொடர்ச்சியாக சில விஷயங்களை அறிந்துவருகிறேன். இங்கு ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கும் இடையில் ஒருவிதமான மேட்ச் ஃபிக்ஸிங் நிலவுகிறது. இது என்னை மிகவும் வருந்தச் செய்கிறது. இந்தக் கூட்டணி சாத்தியமாகி, பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் நுழைந்து வளர்ந்துவிட்டால், தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும்.

பாரதிய ஜனதா கட்சி என்பது, முழுமையாக ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரான கட்சி; அது எப்போதும் பாசிசத்துடனும், அடிப்படைவாதத்துடனும், சர்வாதிகாரத்துடனும் செயல்படும் கட்சி. மக்களுக்கு எதிரான கட்சி; பா.ஜ.க., தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமல்ல... விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிரான கட்சி. சாதியமும் முதலாளித்துவமும் இணைந்து பா.ஜ.க-வை இயக்குகின்றன. எனவே, பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தமிழ்நாட்டில் வேரூன்றுவதைத் தடுப்பதில் தமிழ்நாட்டு மக்கள் உறுதிகாட்ட வேண்டும். இல்லையென்றால், பெரியார் வழிவந்த தமிழ்நாட்டின் மரபு அபாயத்துக்குத் தள்ளப்படும். பாரதிய ஜனதா கட்சியைத் தேர்வுசெய்வது என்பது, பெரியாரை அவமானப்படுத்தும் செயல்தான்.''

``குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரங்கள் முடிந்து ஏறத்தாழ 15 வருடங்கள் ஆகின்றன. இன்று குஜராத்தில் வாழும் இஸ்லாமியர்களின் நிலை என்ன?''

``தலித்துகளின் நிலையில்தான் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள், இன்று நவீனகால தீண்டப்படாதவர்களாக வாழ்ந்துவருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உழைக்கும் மக்கள். அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. கலவரங்களில் பாதிப்படைந்த மக்களுக்கு மரியாதையும் இல்லை; அவர்களுக்கான நீதியும் கிடைத்தபாடில்லை.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான் களப்பணியாற்ற விரும்பும் பகுதியும் அதுவே. ஏனென்றால், எனது வாட்காம் தொகுதியில் 70,000 முஸ்லிம்களும், 38,000 தலித்துகளும் இருக்கிறார்கள். எனக்கு தலித்துகளைவிடவும், இஸ்லாமியர்களே அதிக அளவில் வாக்களித்தனர். தலித்துகளும் இஸ்லாமியர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். இல்லையென்றால், குஜராத் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இந்த நிலைமையே நீடிக்கும்.''

``ஹர்திக் படேல் மீது பரப்பப்படும் அவதூறுகளை எப்படிப் பார்க்கிறீர்க்ள்?''

``நான், ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர் மூவருமே, பா.ஜ.க தனது பெருமையாகக் காட்டிக்கொண்ட குஜராத் மாடலை அம்பலப்படுத்தியுள்ளோம். 150 தொகுதிகளைக் கைப்பற்ற விரும்பிய பா.ஜ.க-வின் திட்டம், விவசாயிகளின் போராட்டத்தாலும் சிதறியது. வெறும் 17 உறுப்பினர்கள் கூடுதலாக வென்றதால், குஜராத் சட்டமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது பா.ஜ.க. அதை அவர்கள் கொண்டாடவில்லை. வாட்காம் தொகுதி மக்கள் மட்டுமே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

பா.ஜ.க-வினருக்கு எங்கள் மூவரின் மீதும் அச்சம் இருக்கிறது. முன்பெல்லாம் படேல் சமூகத்தினர் பொதுவாக பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பர். ஆனால் இப்போது, `படேல்' சமூகத்தின் வாக்குகளை ஹர்திக் தன் கைக்குள் வைத்திருக்கிறார் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஹர்திக்கின் முன்னேற்றம், அவர்களை உறுத்துகிறது. இதைத் தடுக்க, என் பிம்பத்தைக் களங்கப்படுத்த முயற்சிப்பதைப்போலவே, ஹர்திக் படேல் மீதும் தனிநபர் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அதனால்தான் இந்தப் பாலியல் குற்றச்சாட்டு நாடகத்தையெல்லாம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பாலியல் உறவுக்கான சுதந்திரம் என்பது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. படுக்கையறைக்குள் பக்குவப்பட்ட இரு மனிதர்களுக்கு இடையில் எது நடந்தாலும், அதில் தலையிட பா.ஜ.க-வுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது ஹர்திக் படேலுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பா.ஜ.க-வை எதிர்ப்பவர்கள் அனைவரின் மீதும் இதுபோன்ற பலவிதமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

பல்வேறு பல்கலைக்கழகங்களில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டங்களும், முற்போக்கு மாணவர் இயக்கங்களும்கூட இப்படித்தான் குறிவைக்கப்படுகின்றன. இது கீழ்த்தரமான உத்தி. கருத்துகளோடு முரண்படுவதற்கு அவர்களிடம் எந்த நியாயமும் இல்லை என்பதைத்தான் இது தெளிவாகக் காட்டுகிறது.''