Published:Updated:

கல்லணையைக் கட்டமைத்த கரிகாலன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 3

கல்லணையைக் கட்டமைத்த கரிகாலன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 3
கல்லணையைக் கட்டமைத்த கரிகாலன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 3

காவிரி கடந்து வந்த பாதை குறித்த ஒரு தொடர் கட்டுரை.

கேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. இதன்பிறகு காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது. 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

‘திரிவேணி சங்கமம்!’ 

மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன், பவானி ஆறும் சேர்வதால் ‘பவானி கூடுதுறை’ என்ற பெயரும் உண்டு. இந்தப் பவானி, காவிரியுடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின்பேரில், பவானி கூடுதுறைக்குத் ‘திரிவேணி சங்கமம்’ என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து ஈரோட்டுக்குப் படையெடுக்கும் காவிரி, கொடுமுடி அருகே நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆற்றையும் தன்னுடன் இணைத்துக்கொள்கிறது. (இந்த நொய்யல் ஆற்றில்தான் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலை அலையாக நுரைபொங்கி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரும் அச்சத்தை உண்டாக்கியது. இதுகுறித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், “கடந்த சில ஆண்டுகளாக நொய்யலில்  நிலவிய வறட்சியின் காரணமாக, கோவை பகுதிகளில் தேங்கிய சாக்கடைக் கழிவுகள், தற்போதைய மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு நொய்யலில் நுரை பொங்கியதே தவிர, சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து யாரும் கழிவுகளைக் கலக்க விட்டதாகத் தெரியவில்லை” என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). அதன்பின்பு, கரூர் அருகே கட்டளை என்னுமிடத்தில் அமராவதி ஆறும், காவிரியுடன் கலக்கிறது. 

கரூர், திருச்சி மாவட்டங்களில் காவிரி விரிந்துசெல்வதால் அகண்ட காவிரி என்று பெயர்பெற்றது. அடுத்து முசிறி, குளித்தலையைத் தாண்டிச் செல்லும் காவிரி, முக்கொம்பு என்னுமிடத்தில் மேலணையை அடைந்து இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. ஒருகிளைக்கு ‘கொள்ளிடம்’ என்றும், (வெள்ளப்பெருக்கின்போது மிகையாகப் பெருக்கெடுக்கும் நீரைத் திருப்பிவிட்டு அந்நீர் கொள்ளுமிடம் என்பதால் அது கொள்ளிடம்)  மற்றொன்றுக்கு ‘காவிரி’ என்றும் பெயர். கொள்ளிடம் செல்லும் பாதை காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம், காவிரிக்கு நடுவே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்கி, பின் பழைமையான கல்லணையை அடைகிறது. கல்லணையில் இருந்து செல்லும் காவிரி பல சிறுகிளைகளாகப் பிரிந்து அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களில் ஓடுகின்றன. பிறகு, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாகச் சென்று இறுதியாகப் பூம்புகார் என்னுமிடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. 

வெள்ளச் சேதம் குறித்த கல்வெட்டு!

தலைக்காவிரியில் உருவாகும் காவிரி எந்தவொரு தங்குத்தடையும் இன்றி, மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி, சோழ நாட்டுக்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகினர். காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தமிழகம் பலமுறை அழிவைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, திருச்சி உறையூர் பகுதி கடுமையான பேரழிவைச் சந்தித்தது. கி.பி. 1118 -1135-ல் இந்தப் பகுதியில் விக்கிரமச்சோழன் ஆட்சி நடைபெற்றபோது, அப்போது ஏற்பட்ட இழப்புகள் குறித்து முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தின் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கி.பி. 9 - 10-ம் நூற்றாண்டுகளில் முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சி நடைபெற்றபோது, உறையூரை வெள்ளம் சூழ்ந்து பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அதுதொடர்பான சேதம் குறித்து அல்லூர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஒருகட்டத்தில், இப்படித் தொடர் பாதிப்புக்குள்ளான மக்கள், தஞ்சை ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று 1923-இல் அவர், மைசூரு சமஸ்தானத்துக்குக் கடிதம் அனுப்பினார். ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் இழப்பீடு கோரப்பட்டது. மைசூரு அரசும் இதனை ஏற்றுக்கொண்டதாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றைய நிலைமையோ தலைகீழ்.

கரிகாலன் கட்டிய கல்லணை!

இப்படி வீணாகக் கடலில் கலக்கும் இந்த நீரைத் தடுக்கும் வகையிலும், கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் மக்களுக்குக் குடிநீர்கூடக் கிடைக்கும் வகையிலும் ஓர் அணையைக் கட்டித் தமிழகத்துக்குச் சிறப்புச் சேர்த்தார், அன்றைய சோழப் பேரரசின் பெருவேந்தனாகத் திகழ்ந்த கரிகாற்சோழன். அவர் கட்டிய அந்த அணைதான் கல்லணை. மணல்படுகையில் 1,080 அடி நீளமும், 60 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட இந்த அணை, பெரும் கற்களை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கிக் கட்டப்பட்டது. அதாவது, ஓடும் ஆற்று நீரில் கனமான கல் ஒன்றைப் போட்டால் அது, அங்கிருக்கும் மணலில் அப்படியே கிடக்கும். அப்படியான நிலையில், வேகமாய் ஓடும் ஆற்று நீரானது அந்தக் கல்லுக்குக் கீழுள்ள மணலையும் பறித்துக்கொண்டு ஓடும்போது, அந்த இடத்தில் மேலும் பள்ளம் ஏற்பட்டு அந்தக் கல் ஆழத்துக்குப் போகும். இப்படி அதன்மீது மேலும்மேலும் கற்களைப் போடும்போது முதலில் போட்ட கல்லானது இன்னும் ஆழத்துக்குப் போய்விடும். இப்படியாக அடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே கல்லணை என வரலாற்றுச் சான்றுகள் சொல்கின்றன. அதாவது, சிமென்ட்டும், சுண்ணாம்புக் கலவையும் இல்லாமல் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. என்றாலும் இன்றளவும், அணையின் கட்டுக்கோப்பு குன்றாமல் நீடித்து நிற்கிறது. இதன் கட்டுமான வேலைப்பாட்டினைக் கண்டு உலகம் முழுவதும் உள்ள கட்டுமானத் துறை வல்லுநர்கள் இன்றும் வியக்கிறார்கள்.

உலகிலேயே மிகவும் பழைமை வாய்ந்த அணைகளில், தற்போதும் பயன்பாட்டிலுள்ள நான்காவது அணையாக (1.ஜோர்டான் நாட்டில் உள்ள ஜாவா அணை, 2. எகிப்து கெய்ரோவில் உள்ள சாத்தல் கபாரா, 3. ஏமன் நாட்டில் உள்ள கிரேட் டாம் அணை) கல்லணை விளங்குகிறது. இந்த அணை, மலைக்குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கருங்கல் மற்றும் மண்ணைக் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழைமையான அணையாக விளங்குவதுடன், சோழர்கால கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழ்கிறது. இதை நீர்த்தேக்கம் என்று சொல்வதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று சொல்லலாம். அதன்மீதுதான் 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் தற்போதைய கல்லணைக் கட்டுமானத்தை எழுப்பியுள்ளனர். 

இலக்கியத்தில் சிறப்பு!

 “இந்தத் தொழில் நுட்பம் அறிந்த தமிழ்நாட்டு வல்லுநர்களின் உதவியைக் கொண்டுதான் அந்தக் காலத்தில் நைல் நதியில் முதல் ஆசுவான் அணை கட்டப்பட்டது” என வளர்தமிழ் அறிஞர் முஸ்தபா கூறியிருக்கிறார். இந்த அணையைக் கட்டியதோடு மட்டும் கரிகாற்சோழன் சும்மா இருக்கவில்லை. சிங்களப் போர்க்கைதிகள் 12 ஆயிரம் பேரை அழைத்துவந்து காவிரிக்குக் கரை கட்டியுள்ளார். இதனால் அவர், காவிரி நாடன், பொன்னிவளவன் என்றெல்லாம் இலக்கியங்களில் போற்றப்பட்டுள்ளார். இவரை, பொன்னிக்கரை கண்ட பூபதி என்று ‘விக்கிரமச் சோழன் உலா’  நூல் குறிப்பிடுகிறது. இவரைத் தவிர சோழ அரசர்கள் பொன்னியின் செல்வர் என்றும், காவிரிக் காவலர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். 

கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டிய செய்தியினை, கலிங்கத்துப் பரணி, குலோத்துங்கச் சோழன் உலா, பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. சிங்களரின் மகாவம்சம் நூலிலும் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

“முழுகுல நதிக்கு
அரசர் முடிகொடு வகுத்த கரை
முகில்தொட அமைத்தது அறிவோம்” 

- என்று குலோத்துங்கச் சோழன் பிள்ளைத் தமிழும், 

“உச்சங்கோ ரெண்கோ லுயரம் பதினறுகோல்
எச்சம் பிரிவா யிருபதுகோல் - (த)ச்சளவு
மண்கொள்ளக் கொண்டகோ லெண்கோல் வளவர்கோன்
கண்கொள்ளக் கண்ட கரை”

- எனப் பெருந்தொகையும் கல்லணையின் சிறப்புகள் குறித்தும், கரிகாலனின் புகழ் குறித்தும் குறிப்பிடுகின்றன. 

காவிரி பாயும்...

அடுத்த கட்டுரைக்கு