Published:Updated:

நகரமயமாதல்... வெளியேற்றப்படும் மக்கள்... 'காலா' பேசும் அரசியலின் நிஜப் பக்கம்! #VikatanInfographics

  'நிலம் உங்களுக்கு அதிகாரம்... எங்களுக்கு வாழ்க்கை!' என்று போராடிவரும் இந்தியாவின் 2.6 லட்சம் பேருக்கு தீர்வு சொல்லப்போவது யார் என்பது பில்லியன் டாலர் கேள்வி!

நகரமயமாதல்... வெளியேற்றப்படும் மக்கள்... 'காலா' பேசும் அரசியலின் நிஜப் பக்கம்! #VikatanInfographics
நகரமயமாதல்... வெளியேற்றப்படும் மக்கள்... 'காலா' பேசும் அரசியலின் நிஜப் பக்கம்! #VikatanInfographics

ந்தியாவில் தொழில் வளர்ச்சிக்காகவும், மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. நகர மயமாதலால் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும், மக்களின் பொருளாதாரச் சூழல் உயரும் என்று கூறி அரசு நகரங்களை உருவாக்குகிறது. இதற்கு, முதலில் தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் பெரும்பாலும் குடிசைப்பகுதிகளாகவும், நகரின் மையப்பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்துவந்த பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வாழும் பகுதியாகவும்தான் இருக்கின்றன. 

நகரங்களை அழகுபடுத்தவும், பல்வேறு நிறுவனங்களுக்கு அலுவலகங்கள் அமைக்கவும், வனக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலைப் பராமரிப்பு, நெடுஞ்சாலை விரிவாக்கம், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பல்வேறு கட்டமைப்புப் பணிகளுக்காகவும் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்.

டந்த 2017-ம் ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில்  2.6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று உறைவிடம் மற்றும் நிலவுரிமைக்கான கூட்டுப்பணி  (HLRN - Housing and Land Rights Network) தகவல் வெளியிட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை தொடர்பாகக் கடந்த 4 மாதங்களில் மட்டும் (செப்டம்பர் - டிசம்பர் வரை) சென்னையில், தோராயமாக 2805-க்கும் அதிகமான வீடுகள் அகற்றப்பட்டதாக HLRN கூறுகிறது. இதுபோன்ற நிலையினால், சாதாரண மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அவர்கள் உறைவிடம், உடமை ஆகியவற்றை இழப்பதோடு, பாரம்பர்யம் மற்றும் இடம் சார்ந்த தொழிலையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வசிக்கும் இடத்தை மட்டுமே நம்பிப் பிழைத்த மக்கள், வறுமையினாலும் தங்க இடமின்றியும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அரசாங்கத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்துதருவதாகக் கூறப்படும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. இதனால், தெரு ஓரங்களிலும் சாலை ஓரத்திலும் சிறிய குடிசையை அமைத்து வாழ்கிறவர்கள் பலர்.

பாராளுமன்ற அறிக்கையின்படி இந்தியாவில், அதிக குடிசைப் பகுதிகளைக்கொண்ட மாநிலம், மும்பையைத் தலைநகராகக்கொண்ட மஹாராஷ்டிராதான். சுமார் 9,864 ஏக்கர் நிலப்பரப்புகொண்ட மும்பையில், 2,470 குடிசைப் பகுதிகள் உள்ளதாக ஜியாகரஃபிகல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (GIS) நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. அந்த குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களில், தமிழர்களின்  எண்ணிக்கை அதிகம். 1700-களில், ஆங்கிலேயர்களால் மும்பையில் தொடங்கப்பட்ட பல்வேறு ஆலைகளில் வேலைபார்க்க இந்தியா முழுவதுமிருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர். அதில், அதிகம் பேர் தமிழர்கள் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து அதிக மக்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை மும்பையின் சில பகுதிகளில் தமிழர்களே அதிகம் வாழ்ந்துவருகின்றனர்.

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் மும்பை. உலக அளவில், இந்தியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்க்கு அதிக சம்பளம் தரும் நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது மும்பை. இந்தத் தகவலை வெளியிட்டது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு வங்கியான HSBC. ஆனால், உள்நாட்டு மக்களுக்கு சரியான வசதிகளைச் செய்துதரத் தவறியுள்ளது மும்பை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், ஆசியக் கண்டத்திலுள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில், மும்பையிலுள்ள தாராவிக்கு இரண்டாமிடம். உலக அளவில் மூன்றாமிடம். 1995-ல் குடிசைப் பகுதிகளைச் சீரமைக்க மஹாராஷ்டிரா அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம், கடந்த ஆண்டுத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தாராவியைப் பின்னுக்குத் தள்ளி, குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கையில் முன்வந்து நிற்கிறது மும்பையின் கிழக்கு அந்தேரிப் பகுதி. அந்தேரி கிழக்கில், மொத்தம் 281 குடிசைப் பகுதிகள் உள்ளன. அதில் சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதேபோல தாராவியில் மொத்தம் 79 குடிசைப்பகுதிகள் உள்ளன. அதில், சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 

இங்கு சுவாசிப்பதற்கேற்ற நல்ல காற்றுகூட இருப்பதில்லை. 2015-ம் ஆண்டு 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாப்புலேஷன் சைன்ஸ்' (IIPS), மும்பையிலுள்ள குடிசைப் பகுதிகளில் நடத்திய சர்வேயில் 89.6 விழுக்காட்டினர் சுவாசப் பிரச்னைகளால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும், 41.6 விழுக்காட்டினர் செரிமானப் பிரச்னைகளால் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது IIPS. இது சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கான பிரச்னை மட்டுமல்ல. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி  இந்தியாவிலுள்ள 4,041 சிறு நகரங்களில், 2,163 சிறு நகரங்கள் குடிசைகளாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் குடிசைகளை அகற்ற வாரியங்கள் அமைக்கப்பட்டிருந்தும், குடிசைகளின் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை.

'இந்தப் பகுதி மக்கள் ஏன் இப்படி இருக்காங்க...' என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கும். இப்போது எல்லாப் பகுதிகளுமே தன்னை மாற்றிக்கொண்டு நகர மயமாதலுக்குத் தயாராகிவருகின்றன. இந்த நகர மயமாதலில் சிக்கி, அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கடற்கரையோரப் பகுதிகள் அல்லது ஒதுக்குப்புறமான பகுதிகள், நகரம் ஒதுக்கித் தள்ளிய பகுதிகளில் குடியேறுகிறார்கள். அதிக மக்கள் தொகையை ஒரு சிறிய பகுதி தாங்க ஆரம்பித்து, அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து 'ஸ்லம்' எனும் குடிசைப்பகுதி உருவாகிறது. அத்தியாவசிய உள்கட்டமைப்புகள், மருத்துவ வசதிகள் இல்லாமல் தவிக்கும் இவர்களை அரசாங்கமும் கண்டுகொள்ளாமல் விடுவது வருத்தமான விஷயம். இங்கே, நோய்களும் மரணங்களும் அதிகம். அதைவிடவும் எந்தப் பிரச்னை எழுந்தாலும் அதை முடிவுக்குக் கொண்டுவர காவல்துறை கையில் எடுக்கும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் இந்தப் பகுதிகள்தான் பலிகடா. இதற்கு, மெரினா புரட்சியில் தாக்கப்பட்ட நடுக்குப்பம், ரூதர் புரம், மாட்டாங்குப்பம் போன்ற இடங்களே சாட்சியாக நிற்கின்றன. 

அகில உலக மனித உரிமைகள் சட்டம் கூறுவது என்ன?

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் 1948 பிரிவு 25ல், 'ஒவ்வொருவரும் உணவு, வீடு, உடை, மருத்துவ வசதி, சமூகப் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்துகொள்ளக்கூடிய உரிமையுடையவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மட்டும் 'பேரிடர் மேலாண்மை மற்றும் மறுசீரமைப்புக்காக' மொத்தம் 4,784 குடும்பங்களை வெளியேற்றியது தமிழக அரசு. இதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கோயம்புத்தூர் நகராட்சி மன்றம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இணைந்து, காவல்துறையின் உதவியுடன் மாவட்டம் முழுவதும் 630 வீடுகளை இடித்துத்தள்ளியது. 

ஐ.நா உறைவிடத்துக்கான விளக்கத்தில், 'ஒவ்வொரு ஆண், பெண், இளைஞர் மற்றும் குழந்தைகள் பயமின்றி, பாதுகாப்புடன் தன் சமூகத்துடன் இணைந்து, அமைதியுடனும் மாண்புடனும் வாழும் குடியிருப்பே தரமான மற்றும் போதிய உறைவிடத்துக்கான உரிமையாகும்' என்று கூறப்பட்டுள்ளது.     

வலுக்கட்டாயமான வெளியேற்றம் :

ஒரு மனிதனை வலுக்கட்டாயமாக அவனுடைய இருப்பிடத்திலிருந்து வெளியேற்றினால், போதுமான உணவு, நீர், மருத்துவ வசதி, கல்வி, வேலை, தனிமனித பாதுகாப்பு, நிலம் மற்றும் உறைவிட உரிமை அவனுக்கு மறுக்கப்படுகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறவர்கள் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், ஆதரவற்றோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர். இதேபோல, சென்னையில் உள்ள அனகாபுத்தூர் காயிதே மில்லத் நகரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டாயத்தின் பேரில் அகற்றப்பட்டது.  இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கட்டாயத்தின் பேரில் வீடுகள் இடிக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிலும் சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக 'உறைவிடம் மற்றும் நிலவுரிமைக்கான கூட்டுப்பணி' (HLRN) தெரிவிக்கிறது.

கட்டாய வெளியேற்றம் சர்வதேச மனித உரிமைகளையும், உறைவிட உரிமைகளையும் மீறும் செயல். சர்வதேச சட்டத்தின்படி கட்டாய வெளியேற்றம்செய்யும் இடங்களில் பொதுமக்களை பாதுகாக்கவேண்டியது அரசின் கடமை. ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வெளியேற்றப்பட்டால், அதற்கான ஆதாரத்தை அரசாங்கம் காண்பிக்க வேண்டும். அதிலும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. 

தவிர்க்க முடியாத சூழ்நிலையினால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுபவர்களுக்கு அரசாங்கம் செய்துதர வேண்டியது என்ன?

வெளியேற்றப்பட்டவர்கள், சட்டரீதியாக நிவாரணம் பெறவும், சட்ட உதவி பெறவும், பாதுகாப்பு, மறு குடியிருப்பு, மீட்பு, இழப்பீடு பெறவும் உரிமையுண்டு. பாதிப்படைந்தவர்களின் குறையைக் கேட்கவும், பெண்கள், குழந்தைகள்,  பட்டியலின மற்றும் பழங்குடியினரின் உரிமையை சமமாகப் பாதுகாக்கவும் அரசு கடமைப்பட்டிருக்கிறது. மேலும், ஆண் பெண் என்று அனைவருக்கும் உணவு, பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதி, வீடு, உடை, குழந்தைகளுக்கான கல்வி, சமமான இழப்பீடு போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.    

தமிழகத்தில் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சில இடங்கள் 

சென்னை கீழ்க்கட்டளை சிக்னல் அருகே, செப்டம்பர் மாதம் 40 வீடுகள் கட்டாயத்தின் பேரில் அகற்றப்பட்டன. 

மதுரையில் உள்ள குரவக்குடியில், ஜூலை மாதம் 50 வீடுகள் அகற்றப்பட்டன.

சிவகாசி அருகே, ஏப்ரல் மாதம் 75 வீடுகள் அகற்றப்பட்டன.

சேலத்தில், ஏப்ரல் மாதம் 12 வீடுகளும், நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக ஜூன் மாதம் 30 வீடுகளும் அகற்றப்பட்டன.

பெரம்பூர் அம்பேத்கர் நகரில் 65 வீடுகளும், தி.நகர் வள்ளுவர் கோட்டம் பகுதியில் 900 வீடுகளும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அகற்றப்பட்டன. 

எண்ணூர் அருகே (NTO குப்பம்) 130 வீடுகளும், ஃபோர்ஷோர் எஸ்டேட் (Foreshore Estate), மெரினா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 350 வீடுகளும் செப்டம்பர் மாதத்தில் அகற்றப்பட்டன.  

உதகமண்டலத்தில் ஆகஸ்ட் மாதம் 60 வீடுகள் அகற்றப்பட்டன.  

'இந்தியாவை க்ளீன் இந்தியா'வாக மாற்றுவேன்' என்று உறுதியெடுக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், சூழல்கள் இங்கு நேர்மாறாக உள்ளன. இந்தியாவில், நூற்றுக்கு ஆறு பேர் வாழத் தகுதியற்ற குடிசைப்பகுதிகளில்தான் வாழ்கிறார்கள் என்பதும், அவர்கள் எந்த மாதிரியான அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதும் அதிகாரத்தை வைத்து அடக்குபவர்களுக்குத் தெரியுமா?  'நிலம் உங்களுக்கு அதிகாரம்... எங்களுக்கு வாழ்க்கை...!' என்று போராடிவரும் இந்தியாவின் 2.6 லட்சம் பேருக்கு தீர்வு சொல்லப்போவது யார்? என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி.