Published:Updated:

`அபிமன்யூவிடம் ஒரு போதும் பணம் இருந்ததில்லை... இப்போது உயிரும் இல்லை!’

`அபிமன்யூவிடம் ஒரு போதும் பணம் இருந்ததில்லை... இப்போது உயிரும் இல்லை!’
News
`அபிமன்யூவிடம் ஒரு போதும் பணம் இருந்ததில்லை... இப்போது உயிரும் இல்லை!’

அவன் கையில் ஒரு போதும் பணம் வைத்திருந்து நான் பார்த்தது இல்லை. இப்போது, உயிரும் இல்லை.

கேரளாவை உலுக்கி எடுத்திருக்கிறது 20 வயது அபிமன்யூ என்ற தமிழ் இளைஞனின் கொடூரக் கொலை!

கடந்த திங்கள்கிழமை...  எர்ணாகுளம் மகராஜா கல்லூரி மயான அமைதியில் மூழ்கிக் கிடந்தது.. கல்லூரியின் மத்தியப் பகுதியில் சடலம் ஒன்று கிடத்தப்பட்டிருக்க சுற்றி நின்ற மாணவ -மாணவிகளின் கண்களில் நீர் திட்டுத் திட்டாக திரண்டு நிற்கிறது. 'நான் பெத்த மவனே போய்ட்டியா' என்கிற ஓலம் மட்டும் நிற்காமல் காதுக்குள் விழுந்துகொண்டே இருக்கிறது. வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழும் ஏழைத் தாய்க்கு ஆறுதல் கூற யாரிடமும் வார்த்தைகள் இல்லை. சடலமாக கிடந்த இளைஞனின் பெயர் அபிமன்யூ. பெயருக்கேற்ற வகையில் தீரமிக்க போராளி.. 'மதவாதத்தை அப்புறப்படுத்துவோம்' என்று முழங்கும் அபிமன்யூவின் கரங்களைப் பின்புறமாக பிடித்து கட்டி வைத்து கத்தியால் அவனின் மார்பை பிளந்துள்ளனர் மதவாதிகள். 

கல்லூரியிலிருந்து  அபிமன்யூவின் உடலை  எடுத்துச் செல்லும்போது, ``அபிமன்யூ நீ சாகவில்லை. உன் ரத்தம் எங்களுக்குள் பாய்ந்துள்ளது. எங்கள் வழியாக இந்த உலகில் நீ வாழ்கிறாய்... அபிமன்யூ உனக்கு சாவே இல்லை '' என  மாணவர்கள் விண்ணைப் பிளக்கும் வகையில் கோஷமிட்டனர். வேதியியல் இரண்டாமாண்டு மாணவனான அபிமன்யூவின் தந்தை பெயர் மனோகரன், தாயின் பெயர் பூவை. இந்தத் தம்பதியின் கடைசி மகன்தான் அபிமன்யூ. இடுக்கியில் வறுமைக்கிடையே வாழ்ந்து வந்த தமிழ்க் குடும்பத்திலிருந்து கல்லூரி பக்கம் எட்டிப் பார்த்தது அபிமன்யூ மட்டும்தான். வீட்டில் அபிமன்யூவுக்குப் படிப்பு நன்றாக வந்தது.  வறுமை தாண்டவமாட யாராவது ஒருவரைத்தான் படிக்க வைக்க முடியுமென்பதுதான் பெற்றோரின் நிலை. அபிமன்யூவுக்காக தன் படிப்பை தியாகம் செய்தார் அவரின் சகோதரர். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அபிமன்யூவிடம் வார இறுதி நாள்களில் சொந்த ஊருக்குப் பேருந்தில் செல்லக்கூட காசு இருக்காது. பல நேரங்களில் காய்கறி லாரிகளில்தான் அபிமன்யூவின் சொந்த ஊர் பயணம் அமையும்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இடுக்கி மாவட்டம் வட்டவட என்ற கிராமத்தைச் சேர்ந்த அபிமன்யூ கடந்த ஆண்டு மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றிய அபிமன்யூவுக்கு எதிரிகள் அதிகரித்தனர். 'மதவாதத்தை வோறோடு அறுப்போம்' என்று கோஷமிடும் அபிமன்யூ மதவாதிகளுக்கு வில்லனாகத் தெரிந்தார். இந்திய மாணவர் சங்கமும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை அமைப்பான கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரி சுவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று எழுதியுள்ளனர். அப்போது, கேம்பஸ் ஃப்ரன்ட் அமைப்பினர் எழுதிய சுவர்களில் அபிமன்யூ, மதவாத கேம்பஸ் ஃப்ரன்ட் என்று மாற்றி எழுதியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட தகராறில் 20 வயது அபிமன்யூவின் உயிர் அநியாயமாக பலியானது. கொலை தொடர்பாக கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

மதவாதிகளின் கொடூரத் தாக்குதல் காரணமாக இப்போது சக்கரநாற்காலியே வாழ்க்கையாகி விட்ட சைமன் பிரிட்டோ என்கிற இந்திய மாணவர் சங்க முன்னாள் நிர்வாகியும் அபிமன்யூவின் உடல் கிடத்தப்பட்டிருந்த மகராஜா கல்லூரிக்கு வந்திருந்தார். 'எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ.. அது நடந்து விட்டதே...!' என்று செய்தியாளர்களிடம் அவர் கண்ணீர் மல்கக் கூறிக்கொண்டிருந்தார். ஜான் பிரிட்டோ, அபிமன்யூ குறித்து கூறியதாக ஏசியாநெட் செய்தியாளர் சுஜித் சந்திரன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு நெகிழ வைக்கிறது.

அதில், ``மகாராஜா கல்லூரியின் மேஜை ஒன்றில்  தோழர் அபிமன்யுவின் உடலை அவரின் சக தோழர்கள் படுக்க வைத்திருந்தார்கள். அவருக்கு அருகிலிருந்து ``என் மகனே...நான் பெற்ற மகனே" என்று அரைகுறை மலையாளம் கலந்த தமிழில் தோட்டத்தொழிலாளியான அவரின் தாயார் பூவை கதறுவதைத் தவிர வேறு எந்த சிறு சத்தமும் அங்கே கேட்கவில்லை... ஏதோ ஒரு தோழரின் தோளில் ஆதரவாக தலையை சாய்த்துக்கொண்டு அமைதியாக அழுதுகொண்டே தனது வேட்டியின் நுனியால் கண்ணீரைத் துடைக்கும் தந்தை மனோகரன். நெரிசலுக்கிடையில் சென்று அவரின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வெளியேறும்போது, ஓரமாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த தோழர்.சைமன் பிரிட்டோவைப் பார்த்தேன். நடுங்கும் கரங்களில் தனது மகளை தன்னுடன் இறுக்கி அணைத்திருந்தார். அபிமன்யூவின் உடலை அங்கிருந்து வெளியே கொண்டுசெல்லும்போது தோழர் சைமன் பிரிட்டோவின் அருகில் ஒரு நிமிடம் நிறுத்தினார்கள். அவர் தனது முறுக்கிய கரங்களை உயர்த்தி அபிமன்யூவுக்கு வீரவணக்கம் செலுத்துவார் என்று தான் நான் நினைத்தேன் ஆனால், அவர் அபிமன்யூவுக்கு மிகுந்த சிரமப்பட்டு நெற்றியில் முத்தமிட்டார்.

Image Courtesy: Asian Graph

செய்தியாளர்களிடம் ஜான் பிரிட்டோ, ``இவ்வளவு நல்ல குணம் படைத்த இளைஞனைப் பார்க்கவே முடியாது. அவனிடம் ஒருபோதும் பணம் இருந்ததில்லை. ஊருக்குச் செல்லும்போது பணம் கொடுத்து உதவ முயன்றால் 'வேண்டாம் தோழர்' என்று மறுத்து விடுவான். சொந்த ஊருக்குப்போகாத வெள்ளிக்கிழமைகளில், எனக்கு உதவுவதற்காக என் வீட்டுக்கு வருவான். என் மனைவி ஸீனா, அவனுக்கு விருப்பமான உணவை சமைத்துக்கொடுப்பார். ஒவ்வொருமுறை உணவை அருந்தும்போதும் விடுதியில் தன்னுடன் தங்கியிருக்கும் யாருமே சாப்பிட்டிருக்க மாட்டார்கள் என்று சொல்லிக்கொண்டேதான் சாப்பிடுவான்'' என்று சுஜித் சந்திரன் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அபிமன்யூவின் இந்தக் கொடுர மரணம் கேரளத்தை உலுக்கி எடுத்திருக்கிறது. கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ``மதவாதிகளுக்கும் மதத்தை காரணம் காட்டி கத்தியை எடுப்பவர்களும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். இவர்களை அப்புறப்படுத்த அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் '' என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அண்மையில் பீர்மேடுவைச் சேர்ந்த சரசம்மா என்ற பெண்  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவமனை பதிவுசீட்டில் 'உங்கள் மதம் என்ன?' என்கிற வினாவும் கேட்கப்பட்டிருந்தது.  'மதம் இல்லாத மருந்து மதி' என்று சரசம்மா மலையாளத்தில் பதில் எழுதி வைத்தார்  சரசம்மாக்கள் உலவும் பூமியில்தான் மதவெறி கொண்டவர்களும் நிறைந்து கிடக்கின்றனர்!