Published:Updated:

`தன்னுடைய இருப்பின் தேவையை கருணாநிதி உணர்ந்துள்ளார்!’- எழுத்தாளர் சல்மா

`தன்னுடைய இருப்பின் தேவையை கருணாநிதி உணர்ந்துள்ளார்!’- எழுத்தாளர் சல்மா

இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவரது தேவையை இந்தச் சமூகம் உணர்ந்தது போல அவரும் உணர்ந்துள்ளார் என்றுதான் தோன்றுகிறது. அதனால் அவர் மரணத்துடன் போராடி மீண்டுவர முயற்சி செய்கிறார் என்றே தோன்றுகிறது”

`தன்னுடைய இருப்பின் தேவையை கருணாநிதி உணர்ந்துள்ளார்!’- எழுத்தாளர் சல்மா

இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவரது தேவையை இந்தச் சமூகம் உணர்ந்தது போல அவரும் உணர்ந்துள்ளார் என்றுதான் தோன்றுகிறது. அதனால் அவர் மரணத்துடன் போராடி மீண்டுவர முயற்சி செய்கிறார் என்றே தோன்றுகிறது”

Published:Updated:
`தன்னுடைய இருப்பின் தேவையை கருணாநிதி உணர்ந்துள்ளார்!’- எழுத்தாளர் சல்மா

தி.மு.க தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள்முதல், அவரது குடும்பத்தினருடன் மருத்துவமனையிலேயே இருக்கிறார் எழுத்தாளர் சல்மா. அவரிடம் அங்குள்ள சூழல் குறித்துப் பேசினேன்.

``தலைவர் இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதாலும், அவர் இல்லாத காலத்தை எப்படிக் கடத்தப் போகிறோம் என்ற  மன அழுத்தத்தினாலும், மருத்துவமனையில் இருந்த ஒவ்வொருவரிடமும் இயலாமையும் கவலையும் பெரிய அளவில் இருந்தது. ஏனென்றால், தலைவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். ஆனால், கலைஞர் வெறும் தலைவராக மட்டும் இருந்ததில்லை.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவருடைய இருப்பைப் போல, வேறு எந்தத் தலைவருடைய இருப்பும் தாக்கம் ஏற்படுத்தியதில்லை. என்னுடைய சொந்த அனுபவமாக நான் சொல்வது அவர் கொண்டுவந்த 33% உள்ளாட்சி இட ஒதுக்கீடுதான். இதன் மூலமாகத்தான் என்னை அவர் வெளியில் கொண்டு வந்தார். பெரும்பாலான இளைஞர்கள் முதல் தலைமுறை பட்டதாரியானது. பெண்களுக்குச் சுய உதவிக் குழுக்கள், 8-வது வரை படித்தவர்களுக்குத் திருமண உதவித் தொகை வழங்கியது; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது என, யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் தலைவர் வாழ்க்கையுடன் தொடர்புடையவராக இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால்தான் மக்களுக்கு அவருடைய இருத்தல் என்பது உணர்வுபூர்வமாக மாறியிருக்கிறது. அதுவும் குறிப்பாகப் பெண்கள் தங்களுடைய தந்தைக்கு ஏதோ ஆனதாக நினைக்கிறார்கள். `நன்றாக இருக்கிறார்’ என டாக்டர்கள் சொன்னால்கூடப் பெண்களெல்லாம் `அவர் எப்படி இருக்காரு. வெளில அனுப்புங்க நாங்க பாக்கணும்’ என்று அவருடைய நலம் பற்றி உரிமையாகக் கேட்கிறார்கள். இந்த மாதிரி மற்ற தலைவருக்கு நடந்துருக்குமா என்று தெரியவே இல்லை.

அங்கே இருப்பவர்கள் எல்லோரும் இவரை ஒரு தலைவர் என்றோ, வேடிக்கை பாக்கவோ, கடனுக்காகவோ காத்துக்கிடக்கவில்லை. டிவி, சமூக வலைதளங்களில் அவர் என்னவெல்லாம் செய்தார் என்று கடந்த நான்கு ஐந்து நாள்களாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதன்மூலமாக ஒரு தலைவராக இளைய தலைமுறைக்கு இன்னும் அவருடைய தேவை புரிய ஆரம்பித்திருக்கிறது.   கலைஞர் எழுத்து இலக்கியம் புதிய சிந்தனைகள் வழியாக சமூக மாற்றத்திற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளார். எதை எப்போது செய்ய வேண்டும் என்ற ராஜதந்திரம், உழைப்பு, எல்லாக் காலங்களிலும் சோர்வுறாத மனநிலை, தன்னம்பிக்கை இப்படி அவரைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு தலைவரிடமும் ஒவ்வொரு விஷயம் முக்கியமாக இருக்கும். ஆனால், பல்வேறு திறமைகள் சேர்ந்த, பல்வேறு நபர்கள் சேர்ந்த, பல்வேறு விஷயங்கள் சேர்ந்த ஒரு மனிதனாக, ஒரு மிகப்பெரிய பிம்பமாக நம் முன் நிற்கிறார். இவ்வளவு விஷயங்கள் ஒரு தனிமனிதரிடம் எப்படி உருவானது என்ற ஆச்சர்யம் மற்றவர்களைப் போல எனக்கும் இருக்கிறது.

 இனி கலைஞர் போன்ற ஓர் ஆளுமை உருவாக முடியமா என்ற கேள்வியும், வியப்புமுமே எல்லோருக்கும் இருக்கிறது. விமர்சனமே இல்லாத தலைவர்கள் இருக்க முடியாது. அது மாதிரிதான் தலைவர் கருணாநிதியும் விமர்சனங்களுக்குட்பட்டே தன்னுடைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டிருந்தார். அப்படி வரும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட விதம், விமர்சித்தவர்களிடம் காட்டிய அரசியல் நாகரிகம் என எல்லா வகையிலும் வியக்க வைக்கும் ஓர் ஆளுமைதான் கருணாநிதி. அதற்காகத்தான் இவ்வளவு பெரிய கூட்டம் மருத்துவமனை வாசலில் காத்துக்கிடக்கின்றது.

நான் உள்ளே இருக்கின்றேன். தலைவர் குடும்பத்தைப் பார்க்கிறேன். தலைவர் குடும்பத்தினர் எல்லாம் யதார்த்தமாக இருக்கிறார்கள். வருபவர்களை வரவேற்றுப் பேசுகிறார்கள். ஆனால், வெளியே இருப்பவர்கள் சமூக ஊடகங்கள், மீடியாக்கள் மூலமாகக் கலைஞர் பற்றிய வதந்தியைப் பரப்பி பதற்றத்தை உருவாக்குகிறார்கள். நான் வெளியே வந்து, `தலைவர் நல்லா இருக்கிறார்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு நிம்மதியாகச் செல்லலாம் என்றால், அங்கே ஓர் அம்மா `தலைவர் இறந்துட்டாராமே. அண்ணா சமாதிக்குப் பக்கத்துல இடத்தைக் கையகப்படுத்த, எம்.எல்.ஏ-ங்ககிட்ட கையெழுத்து வாங்கணுமாமே. அதுக்கு எடப்பாடி ஒத்துழைக்கணுமாமே. அதுக்கான வேலைகளைப் பாத்துட்டுருக்காங்களாமே. இதையெல்லாம் நம்மகிட்ட மறைக்குறாங்களாமே?’ என்று என்னிடம் கேட்கும்போது எனக்குப் பெரிய வேதனையாக இருந்தது. இந்த வதந்தி வெங்கையா நாயுடு பார்த்துவிட்டுப் போனதுக்குப் பிறகு வந்தது. ராகுல் காந்தி வந்து கலைஞரைப் பார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிறகே அந்த வதந்தி நின்றது.


இப்படியான வதந்திகளைக் கேக்கும்போது வருத்தமாக இருக்கிறது. நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி நாம் பேசுவதே அநாகரிகம். அப்படியிருக்கும்போது நாம் பார்க்காத, கேட்காத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவது மனித இயல்புக்கு முரணானது இல்லையா?  பரபரப்புக்காகவும், சுய சந்தோஷத்துக்காகவும் நீங்கள் செய்யும் ஒன்று பிறருடைய உணர்வுகளைக் காயப்படும் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?  

இன்றைய அரசியல் சூழலில் அவரது தேவையை இந்தச் சமூகம் உணர்ந்தது போல அவரும் உணர்ந்துள்ளார் என்றுதான் தோன்றுகிறது. இன்னும் நாம் செய்ய வேண்டியது அதிகமாக இருக்கிறது என்பது அவரது ஆள் மனதில் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அவருக்கு உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையைவிட இந்தியா இப்பொழுது இருக்கும் சூழலில் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம், இந்தச் சமூகத்தை இப்படியே விட்டுவிட்டுப் போகக் கூடாது என்ற எண்ணமெல்லாம் நமக்குள் இருப்பதுபோலவே அவருக்கும் இருக்கிறது. அதனால், அவர் மரணத்துடன் போராடி மீண்டுவர முயற்சி செய்கிறார் என்றே தோன்றுகிறது” என நம்பிக்கையுடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism