Published:Updated:

``அவர் கட்சி அலுவலகத்தை தமிழ்ப் பள்ளியாக மாற்றினார்!" மும்பை செயலாளர் மீரான் உருக்கம் #MissUKarunani

``அவர் கட்சி அலுவலகத்தை தமிழ்ப் பள்ளியாக மாற்றினார்!" மும்பை செயலாளர் மீரான் உருக்கம் #MissUKarunani
News
``அவர் கட்சி அலுவலகத்தை தமிழ்ப் பள்ளியாக மாற்றினார்!" மும்பை செயலாளர் மீரான் உருக்கம் #MissUKarunani

கலைஞர் கருணாநிதி மும்பை வாழ் தமிழர்களுக்காகப் பள்ளிகள், நூலகங்கள் அமைத்ததைப் பற்றி தற்போதைய மும்பை மாவட்டச் செயலாளர் அலிஷெய்க் மீரான் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

டந்த மூன்று நாள்களாக நம் எல்லாரும் மனங்களிலும் ஒருவித சோகம் பரவியிருக்கிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவு, மூன்று தலைமுறை அரசியல் அத்தியாயம் நிறைவடைந்த உணர்வைக் கொடுத்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகச் செய்திகளில் பேசப்பட்டவர், இனி இல்லை என்பதை ஏற்க இன்னும் சில காலம் ஆகலாம். அரசியல் வாழ்க்கையில் ஒரு தலைவர் மறைவதும், மற்றொருவர் தோன்றவதும் இயல்புதான். ஆனால், அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி காட்டிய தலைமைப்பண்பும் ஆளுமையும் இனிவரும் தலைவர்களிடம் இருக்குமா என்பது சந்தேகமே.

மறைந்த தி.மு.க தலைவர் தமிழுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தமிழகத்தைத் தாண்டியும் உழைத்தவர். 1960-ம் ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் விவசாயம் பொய்த்தது. பிழைப்பு தேடி பல தமிழர்கள் வெளி மாநிலங்களை நோக்கிச் சென்றனர். இந்தக் காலகட்டத்தில், கலைஞர் கருணாநிதி மும்பை வாழ் தமிழர்களுக்காகப் பள்ளிகள், நூலகங்கள் அமைத்ததைப் பற்றி தற்போதைய மும்பை மாவட்டச் செயலாளர், அலிஷேக் மீரான் (Alisheik Meeran) நெகிழ்வுடன் பகிர்கிறார்.

``என் சொந்த ஊர், திருநெல்வேலி. அங்கிருக்கும்போது தி.மு.க இளைஞரணி செயலாளராக இருந்தேன். பல கூட்டங்களிலும் போராட்டங்களிலும் கலந்துகொண்டேன். பிறகு, வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்து மும்பைவாசி ஆகிவிட்டேன். மும்பையில் தி.மு.க கட்சி கிளைகள் 40 இருக்கின்றன. 1960 - 70 காலகட்டத்தில் பல தமிழர்கள் வேலைக்காக மகாரஷ்ட்ராவுக்கு வந்தனர். இந்த எண்ணிக்கை பெருகப் பெருக, மராட்டியர்களை எரிச்சலடையச் செய்தது. ``வேலைக்காக நீங்கள் எல்லோரும் இங்கே வந்துவிட்டா நாங்கள் எங்கே போவது" எனக் கேள்வி எழுப்பினர். அது, சில சமயங்களில் வன்முறையாகவும் வெடித்தது. ஒருமுறை நடந்த வன்முறையின், அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தலையிட்டு பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1960 காலகட்டத்தில் அறிஞர் அண்ணாவும் கலைஞரும் மும்பை வந்தபோது, மும்பை தமிழர்களுக்காகப் பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போதைய தி.மு.க அவைத் தலைவர் தேவதாசன், மும்பையில் உள்ள பந்தாப் (Bhandup) பகுதியில், பிரைட் ஹைய் ஸ்கூல் மற்றும் ஜூனியர் காலேஜ் ( Bright High School and Junior College) ஆரம்பித்தார். சமீபத்தில், அந்தப் பள்ளியில் திருவள்ளுவர் சிலையை நிறுவி, விழாவில் கலந்துகொண்டார் மு.க.ஸ்டாலின். 1994-ம் ஆண்டு, ஜெர்மெரி என்ற பகுதியில், முன்னாள் செயலாளர் அப்பாதுரையால், லிட்டில் ஃப்ளவர் ஸ்கூல் ( Little Flower School) தொடங்கப்பட்டது. கோவந்தி என்ற இடத்தில், 1996-ம் ஆண்டு மற்றொரு பள்ளியைத் தொடங்கினார். 1988-ம் ஆண்டு, ஜோகேஷ்வரி என்ற பகுதியில் இருந்த இரண்டு கட்சி அலுவலகங்களைத் தமிழ்ப் பள்ளிகள் கட்டுவதற்காகக் கொடுத்துவிட்டார். தற்போது 1,000 மாணவர்கள் அங்கே படித்துவருகின்றனர். இவை அனைத்துக்கும் கலைஞர்தான் பின்புலமாக இருந்தார்.

அதேபோல், அப்போதைய மும்பை மாநகர பள்ளிகளில், ஏழாம் வகுப்பு வரையே தமிழ் மீடியம் இருந்தது. இது தொடர்பாக, அப்போதைய மகாராஷ்ட்ரா முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்களுக்கு கருணாநிதி ஒரு கடிதம் அனுப்பினார். இது விஷயத்தில் தமிழக அரசும் எல்லா உதவிகளையும் செய்யும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு முன்வந்து உதவுவார். 1996 - 2001 காலகட்டத்தில், திருவள்ளுவர் தமிழ் மையம் அமைத்து, பல தமிழ்ப் புத்தகங்களை வழங்கியவர் கருணாநிதி.

எனக்கு மற்றொரு நிகழ்ச்சியும் நினைவில் இருக்கிறது. 2013-ம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த தமிழ் மாணவி பிரேமா, சி.ஏ தேர்வில் முதலாவதாக வெற்றிபெற்றார். இது, நாளிதழில் ஒரு துண்டுச் செய்தியாக மட்டுமே வெளியானது. ஆனால், அந்த மாணவியின் பெயரையும், அவர் தந்தை ஆட்டோ ஒட்டுநர் என்பதையும், அவரின் பெயரைவைத்தே கண்டுபிடித்த கருணாநிதி, அவர்களுக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார். பின்னர், அப்போதைய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், அந்த மாணவிக்கு உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து பலரும் உதவ முன்வர, அந்த மாணவிக்கு கிட்டதட்ட 20 லட்சம் ரூபாய் உதவித்தொகையாகக் கிடைத்தது. ஒருமுறை, சென்னை வந்த அந்த மாணவி, கருணாநிதியைச் சந்தித்து, “நீங்கள் கொடுத்த அந்த ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகைதான் என்னை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டியது'' என நெகிழ்ந்தார்” என தன் நினைவுகளைக் கூறுகிறார் அலிஷேக் மீரான்.