Published:Updated:

கருத்துரிமை கொல்லப்பட்டதன் ஐந்து ஆண்டுகள்! - தபோல்கர் கொலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

கருத்துரிமை கொல்லப்பட்டதன் ஐந்து ஆண்டுகள்! - தபோல்கர் கொலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
கருத்துரிமை கொல்லப்பட்டதன் ஐந்து ஆண்டுகள்! - தபோல்கர் கொலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

தபோல்கர் கொலையாளியின் பெயர், எதற்கு கௌரி லங்கேஷ் கொலைக் குற்ற விசாரணையில் வரவேண்டும்?

``எனது தேசத்தில் எனது மக்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள நான் காவல் துறையின் பாதுகாப்பை வேண்டினால், என்னிடம்தான் ஏதோ தவறிருப்பதாகப் பொருள். ஏனென்றால், நான் சட்டவிதிமுறைகளின்படி அவர்களுக்காகத்தான் போராடுகிறேன். அவர்களுக்கு எதிராக அல்ல''

-  நரேந்திர தபோல்கர்

ண்மையைச் சொல்லப்போனால், கருத்துரிமைச் சுதந்திரத்தின் மீதான கொலைகளுக்கு எல்லாம் அதுதான் ஆதியாக இருந்தது. இதே நாளில்தான் ஐந்து வருடத்துக்கு முன்பு மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவரும் எழுத்தாளருமான நரேந்திர தபோல்கர் பூனேவில் உடற்பயிற்சிக்காக நடந்து சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் செய்ததெல்லாம் இரண்டே இரண்டுதான். ஒன்று, மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் கழகத்தைத் தொடங்கினார். மற்றொன்று, அதன்வழியாக மூடநம்பிக்கை ஒழிப்பு தொடர்பான மசோதா ஒன்றை மகாராஷ்டிர சட்டப்பேரவையில் கொண்டுவர முனைந்தார். `அந்த மசோதா இந்துமதப் பாரம்பர்யத்துக்கு எதிரானது' என்று ஆளும் பி.ஜே.பி-யும், சிவசேனாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மசோதா கிடப்பில் போடப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் தபோல்கர் படுகொலையும் செய்யப்பட்டார்.

இதையடுத்து தபோல்கரைச் சுட்டத் துப்பாக்கிக் குண்டுகளை வைத்து, மகாராஷ்டிர போலீஸார் கடந்த 2014-ல் நகோரி மற்றும் கண்டேல்வால் ஆகிய இரண்டு ஆயுதக் கடத்தல் நபர்களைக் கைது செய்தார்கள். அதன்பிறகு, அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சி.பி.ஐ. விசாரித்த இந்த வழக்கில், சனாதன் சன்ஸ்தா என்கிற மதச்சார்பு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் வீரேந்திர சிங் தாவ்டே கைது செய்யப்பட்டார். தாவ்டே- வுடன் வினய் பவார் மற்றும் சாரங் அகோல்கர் ஆகிய இருவரையும் வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளாகச் சி.பி.ஐ அறிவித்தது. அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் இருவரும்தான் தபோல்கரைச் சுட்டதாகவும் சொன்னது. மேலும், `அவர்கள் இருவரையும் பற்றித் துப்பு கொடுப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டது. சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில்கூட அவர்கள்தான் குற்றவாளிகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. தாவ்டே குற்றவாளி எனக் குறிப்பிடப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தார். அவருக்கும் சி.பி.ஐ. முதன்மைக் குற்றவாளியாகக் குறிப்பிட்ட அகோல்கருக்கும் தொடர்பு இருந்தது என்று சஞ்சய் சத்வில்கர் என்கிற இந்துத்துவ செயற்பாட்டாளர் ஒருவரும் சாட்சியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சஞ்சய் சத்வில்கர் ஒரு போலி இந்துத்துவவாதி என்று பல அமைப்புகள் குற்றம்சாட்டின.

இந்த நிலையில், தற்போது தபோல்கரைச் சுட்டவர் சச்சின் பிரகாஷ் ராவ் அந்தூரே என ஒரு நபரை, ஔரங்காபாத்தில்  சி.பி.ஐ. காவல்துறை கைதுசெய்துள்ளது. பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக அண்மையில் கர்நாடகா காவல்துறை கொடுத்த தகவலின் பேரில் வைபவ் ராவத், சரத் கலஸ்கர், சுதன்வா கொந்தலேகர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் 20 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையின்போதும் சச்சின் பிரகாஷ் ராவ் அந்தூரே பெயரே வெளிவந்துள்ளது.   

இதையடுத்து, ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட தாவ்டே  யார்? அந்தூரேதான் குற்றவாளி என்றால், சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நபர்கள் யார்? தபோல்கர் கொலையில் மொத்தம் எத்தனைக் குற்றவாளிகள்... என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. ஐந்தாண்டுகள் கடந்தும் கொலைக் குற்றவாளிகளைச் சரிவரக் கண்டுபிடிக்க முடியாததை மகாராஷ்டிர செயற்பாட்டாளர்களும் கண்டித்துள்ளனர். 

இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, `தபோல்கர் கொலையாளிகளின் பெயர், எதற்குக் கௌரி லங்கேஷ் கொலைக் குற்ற விசாரணையில் வரவேண்டும்' என்கிற முக்கியக் கேள்வியை எழுப்பியுள்ளனர். 

அடுத்த கட்டுரைக்கு