Published:Updated:

கோட்சே நினைவுநாளில் மேலும் 5 `இந்து நீதிமன்றங்கள்’! - எங்கே போகிறது இந்தியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோட்சே நினைவுநாளில் மேலும் 5 `இந்து நீதிமன்றங்கள்’! - எங்கே போகிறது இந்தியா?
கோட்சே நினைவுநாளில் மேலும் 5 `இந்து நீதிமன்றங்கள்’! - எங்கே போகிறது இந்தியா?

உத்தரப்பிரதேசத்தில் அந்தப் பெண்மணியைக் கைதுசெய்யுமாறு எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு இருக்கின்றன. காரணம், அவர் தலைமையில் நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள `இந்து’நீதிமன்றம்! 

டந்த மாதத்தில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமானது, நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் சட்டப்படி நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது. அதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. திடீரென ஆக.15-ம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், அகில பாரத இந்து மகாசபா எனும் அமைப்பின் நிர்வாகிகளெனக் கூறிக்கொண்டவர்கள், இந்து நீதிமன்றத்தைத் தொடங்கியதாக அறிவிப்பு செய்தனர். 

முனைவர் பட்டம் பெற்ற பூஜா சகுன் பாண்டே என்பவர் அந்த நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அகில இந்திய இந்து மகாசபாவின் துணைத்தலைவர் அசோக் சர்மா கூறியுள்ளார். 

``இந்த நீதிமன்றமானது இந்து மதத்தினருக்கிடையிலான குடும்பப் பிரச்னை மற்றும் பிற உரிமையியல் பிணக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும்” என்று விளக்கமளித்துள்ள அவர், ``அலிகார், ஹத்ராஸ், மதுரா, ஃபிரோசாபாத், ஷிகோபாத் ஆகிய இடங்களில் மேலும் ஐந்து இந்து நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இவை அனைத்தையும் சேர்த்து முதல் கட்டமாக 15 இந்து நீதிமன்றங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் ” என்றும் கூறியுள்ளார். 

இந்த நாட்டில் ஒரே அரசியலமைப்புச் சட்டம் இருக்கையில், அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் இருந்தால் என்ன தவறு எனும் கேள்வியை இதைப் போன்ற இந்துத்துவ அமைப்புகள் முன்வைப்பதும் அதற்கு, சிறுபான்மையினரின் மத, பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சில தனியான சட்ட ஏற்பாடுகள் அவசியம் என மறுதரப்பார் பதிலளிப்பதும் புதிதல்ல; இதில் இது மட்டும்தான் இருக்கிறதா என்பதுதான் கேள்வியாக எழுந்துநிற்கிறது. 

இந்தியாவின் சுதந்திர தினத்தன்று முதல் நீதிமன்றத்தைத் தொடங்கியதாக அறிவித்துள்ள அவர்கள், அடுத்த கட்ட நீதிமன்றங்களைத் தேர்ந்தெடுத்துள்ள நாள், முக்கியமானது. 

இந்தியாவின் தேசத்தந்தை எனப் போற்றப்படும் காந்தியடிகளை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நவ.15-ம் தேதிதான், அவர்களின் தெரிவு என்பதுதான் அதிர்ச்சிதரத்தக்கதாக இருக்கிறது. இந்த அதிர்ச்சிக்கு இன்னும் வலுசேர்க்கும்படியாக வார்த்தை முத்துகளை உதிர்த்திருக்கிறார், ‘இந்து நீதிமன்ற’ முதல் ’நீதிபதி’ பூஜா சகுனபாண்டே! 

``காந்தியை கோட்சே கொன்றிருக்காவிட்டால், நான் அதைச் செய்திருப்பேன்” என்று பேசியுள்ள அந்தப் பெண்மணி, தானும் அகில பாரத இந்து மகாசபாவும் கோட்சேவை வழிபடுவதில் பெருமிதம்கொள்வதாக அழுத்தமாகக் கூறியிருக்கிறார். 

``முஸ்லிம்களுக்கு ஷரியத் நீதிமன்றம் இருந்தால் இந்து நீதிமன்றம் உருவாவதில் தவறில்லை. நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கியிருக்கின்றன. எங்களின் நீதிமன்றம் கொஞ்சம் வழக்குகளைத் தீர்த்து, மற்ற நீதிமன்றங்களின் காலவிரயத்தைக் குறைக்கும்” என நியாயப்படுத்தியிருக்கிறார், இந்த சபாவின் தலைவர் சந்திரபிரகாஷ் கௌசிக். 

ஷரியத் நீதிமன்றக் கருத்தை இலக்காகவைத்துள்ள இவர்கள், அதன் `தனியுரிமை’யை விட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். எப்படி ஷரியத் நீதிமன்றங்களுக்குச் சட்ட அந்தஸ்து இல்லையோ அதைப்போலவே இந்து நீதிமன்றத்துக்கும் அப்படியான சட்ட ஏற்பு அவசியமில்லை என்கிறார், பூஜா சகுனபாண்டே. 

இவர், கணிதவியலில் முனைவர் ஆய்வுப்பட்டம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பி.ஜே.பி ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும்கட்சித் தரப்பில் இந்த விவகாரத்தைப் பற்றி வாய்திறக்காமல் சாதிக்கையில், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினரோ, பூஜாசகுனவை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளன. 

``ஆளும் தரப்புக்கு நெருக்கமாகக் கருதப்படும் பூஜாசகுன போன்றவர்களின் விஷம்தோய்ந்த கருத்துகளைப் பற்றி முதலமைச்சர் ஆதித்யநாத் பேசியாக வேண்டும். அவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்” என்கிறார் சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுனில் யாதவ். 

``இப்படியான அபாயகரமான நபரை சிறைக்கு வெளியே ஒரு நிமிடம்கூட இருக்க அனுமதிக்கக்கூடாது” என்கிறார், காங்கிரஸ் கட்சியின் துவிஜேந்திர திரிபாதி. இந்த விவகாரத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் கையிலெடுத்துள்ளது. மாவட்ட நீதிபதியும் மாநில அரசும் இந்த விவகாரம் குறித்து செப்.11 அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

முஸ்லிம்களின் உரிமையியல் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, தீர்ப்புமன்றம் எனப்படும் ஷரியத் நீதிமன்ற அமைப்பானது இந்தியாவில் 1790-களிலேயே வந்துவிட்டன. இதில் பெரும்பாலும் திருமணம், குடும்பப் பிரச்னைகள் விசாரிக்கப்படும். தற்போது, உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இவ்வகை தீர்ப்புமன்றங்கள் செயல்படுகின்றன. உ.பி.யில் மட்டும் 40 தீர்ப்புமன்றங்கள் இருக்கின்றன. கடந்த மாதம் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியக் கூட்டத்தில், மாவட்டம்தோறும் இப்படியான தீர்ப்புமன்றங்களை அமைக்கவேண்டும் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. இவற்றுக்கு சட்டப்படியான எந்த அதிகாரமும் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு