Published:Updated:

`நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்... நீ அமைதியாக உறங்கு கௌரி அம்மா!' - ஜிக்னேஷ் மேவானி

`நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்... நீ அமைதியாக உறங்கு கௌரி அம்மா!' - ஜிக்னேஷ் மேவானி

சென்ற ஆண்டு கௌரி சுட்டுக்கொல்லப்பட்டபோது `அடுத்து யார்' என்கிற கேள்விக்குறி எல்லோரின் முகத்திலும் இருந்தது. அடுத்து யார் என்பதை நாங்கள் பார்த்துவிட்டோம்.

`நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்... நீ அமைதியாக உறங்கு கௌரி அம்மா!' - ஜிக்னேஷ் மேவானி

சென்ற ஆண்டு கௌரி சுட்டுக்கொல்லப்பட்டபோது `அடுத்து யார்' என்கிற கேள்விக்குறி எல்லோரின் முகத்திலும் இருந்தது. அடுத்து யார் என்பதை நாங்கள் பார்த்துவிட்டோம்.

Published:Updated:
`நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்... நீ அமைதியாக உறங்கு கௌரி அம்மா!' - ஜிக்னேஷ் மேவானி

த்திரிகையாளர் கௌரி லங்கேஷ் தனது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு கடந்திருக்கிறது. நினைவு தினங்கள் என்பது ஒருவகையில் மரணத்துக்கான நியாயங்களை எப்படியேனும் பெற்றுவிடுவதற்கான முயற்சிதான். அவரது படுகொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிலர் தற்போது கைதாகியிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த தகவல்கள், ஏற்கெனவே 2013-ம் ஆண்டு கருத்து அரசியல் கொலைகளின் ஆதிச் சம்பவமாக அரங்கேறிய நரேந்திர தபோல்கர் கொலையின் குற்றவாளிகளைக் கண்டறிய உதவியிருக்கிறது. கௌரியின் படுகொலைக்கான உண்மைக் காரணங்களை நினைவுபடுத்திக்கொள்வது ஒருவகையில், சமூகம் எதற்கு எதிராய் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதாகிறது. அந்தக் காரணங்களையெல்லாம் ஒன்று திரட்டும் வகையில், கௌரியின் நினைவு தினத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி.

"கௌரி இறந்து இன்றோடு ஒரு வருடம். அடையாளம் அறியப்படாத சில மனிதர்களால் அவர் அப்போது கொல்லப்பட்டார். ஆனால், அவர்கள் கௌரியைச் சுட்டதற்கான காரணம் தெளிவாகவே இருந்தது. கௌரியின் அரசியல் செயல்பாடுகள் அவர்களுக்கு முரணாகவும் எதிராகவும் இருந்தது. கருத்தரசியலுக்காகக் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த பன்சாரே வரிசையில் கௌரிக்கு நான்காவது இடம். மற்ற மூவரின் கொலை விசாரணைகள் அப்படியே தேங்கியிருக்கின்றன என்றாலும் கௌரியின் கொலை வழக்கு விசாரணை ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், வெறுப்பரசியல் மிகுந்திருக்கும் உலகத்தில் கருத்தரசியலுக்காக கொலை செய்பவர்களைக் கண்டுபிடிப்பது கடினமாகவே இருக்கிறது. உமர் காலித்தைச் சுட முயற்சி செய்தவர்களைக் கண்டுபிடிப்பது எத்தனை கடினமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு...

எனது `ச்சலோ உனா (Chalo Una)' போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு முதன்முதலில் 2016 ம் வருடந்தான் நான் கௌரியைச் சந்தித்தேன். பசுக்களைக் கொன்று தோலுரித்ததாகப் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு வீதிகளில் நிற்கவைத்து சாட்டையால் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்ட தலித் இளைஞர்களுக்கான நியாயம் வேண்டி `ச்சலோ உனா’ போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு கொடுமைக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பதில் எனது முதல் முயற்சி அது. அதே சமயம் கர்நாடகாவில் தலித் மக்களுக்கான நில உரிமை மீட்புப் போராட்டத்தில் கௌரியும் அவரது நண்பர்களும் ஈடுபட்டிருந்தனர். அதுவே எங்களை இணைத்த புள்ளி. அதற்கடுத்து அங்கே நடந்த மக்களுக்கான பல செயல்பாடுகளில் கௌரியின் உதவியுடன் நானும் ஈடுபட்டிருந்தேன். 

துன்பத்தின் காலங்களில்தான் உண்மை உறவுகளை அறியமுடியும் என்பார்கள். ஆகஸ்ட் 2016-க்கு முன்புவரை கௌரி லங்கேஷ் பற்றி யாரேனும் கேட்டிருந்தால் எனக்குச் சொல்ல ஒன்றும் இருந்திருக்காது. ஆனால், அதற்குப் பிறகு அவள் எனக்கு `தோழர்...தோழி... அம்மா’ என எல்லாமுமாக இருந்தாள். அவள் ஒரு போராளி. பெண்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக, தலித்களுக்காக, சமூக சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடினாள். அவள் அதிரடியானவள், எதனையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவாள். ஆனால், அது எதுவுமே அவளது அன்பின் அளவைக் குறைத்ததில்லை. தன்னைப் பரிகாசம் செய்பவர்களிடம் கூடப் பொறுமையாக வாதாடும் குணம் எனது கௌரி அம்மாவுக்கு மட்டுமே இருந்தது. வலைதளங்களிலேயே வாழ்பவர்கள், உட்கார்ந்த இடத்திலேயே போராடுபவர்கள், எந்தவித உத்வேகமும் இல்லாதவர்கள் என இளைஞர்களை அடையாளப்படுத்துபவர்களுக்கு நடுவே கௌரிக்கு எங்கள் மீது நிறையவே நம்பிக்கை இருந்தது. 

எங்களைப் போன்ற போராடும் இளைஞர்கள் பலரை அவள் தனது பிள்ளைகளாகத் தத்தெடுத்துக்கொண்டாள். நான் பேசும் கருத்தரசியல்களை `எனது மகன் பேசியிருப்பதைக் கேளுங்கள்’ என்றே பகிர்ந்துகொள்வாள். கௌரியால், கர்நாடகா எனக்கு மற்றொரு தாய்வீடாக இருந்தது. ஒரு செயற்பாட்டாளராக இருந்த நான் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினராக வளர்ந்ததற்கு கர்நாடகாவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களின் ஆதரவும் முக்கியமானதாக இருந்தது. தேர்தல் அரசியலாக இல்லாமல், கருத்து ஒற்றுமை அரசியலின் அடிப்படையில் அனைவரையும் ஒன்றிணைக்க கௌரி முயன்றுகொண்டிருந்தாள். கௌரி பிரிவினைவாதிகளின் இலக்காக அமைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். 

யாரும் கேட்பதற்கற்ற வெளியில் எதிர்ப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்ந்து பதிவு செய்துவரும் உயர்வகுப்பு மக்களுக்கு இடையே எவ்வித விளம்பரப் பக்கங்களும் சமரசங்களும் இல்லாமல், தனது தாய்மொழியிலேயே பத்திரிகையை நடத்திவந்தார் கௌரி. நம்மைச் சுற்றி இருக்கும் மக்கள் அனைவருக்கும் நமது சிந்தனைகள் சென்று சேரவேண்டும். அது தாய்மொழியில் மட்டுமே சாத்தியம். இதை கௌரி உணர்ந்திருந்தார்.  இன்றைய சமூகத்தில் நான் உட்பட பாமர மக்கள் பலரின் வாழ்க்கை பெரிய மாற்றத்தைச் சந்தித்திருக்கிறது. `உணவும் நிலமும் எங்கள் உரிமை' என்று போராடத் தொடங்கிய நாம் மோடிமையப்படுத்தப்பட்ட இந்தியாவை (`Modi-fied India') காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறோம். கல்புர்கியும் கௌரியும் கொல்லப்பட்டபோது தேசமே கொதித்து எழுந்தது. ஆனால், காஷ்மீரில் பத்திரிகையாளர் சுஜாத் படுகொலை செய்யப்பட்டபோது அதை இவர்கள்தான் செய்திருக்கக் கூடும் என்று ஏற்றுக்கொண்டு கடக்கக் கூடிய ஆபத்தான பக்குவம் நமக்குள் ஏற்பட்டிருந்தது. 

இவற்றுக்கு எதிராக எல்லாம் நாம் போராடியிருக்க வேண்டிய சூழலில், மாட்டுக்கறி தொடங்கி தற்போது அர்பன் நக்சல்கள் வரை வெவ்வேறு விஷயங்களுக்காக... அவர்களாகவே உருவாக்கிய வெவ்வேறு பிரச்னைகளுக்கு எதிராக குரல்கொடுக்க திசை திருப்பப்பட்டோம். நாம் இங்கே குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம் யாரென்று பெயர் குறிப்பிடத் தேவையில்லாத அந்த நபர், ஏதோவோர் அம்பானியும் அதானியும் மேலும் சில கோடிகளைச் சம்பாதிப்பதற்கும், ஏதோ சில மல்லையாக்கள் தங்களது பணத்துடன் இந்த தேசத்தை விட்டுப் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் நிச்சயம் உதவிக் கொண்டிருப்பார். 

கௌரிக்காக இதை நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், கௌரியின் நண்பர்கள் உட்பட சிலர் ‘அர்பன் நக்சல்கள்’ என்கிற பெயரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பீமா கோரேகானில் கலவரம் ஏற்படுத்தியதாகவும் சதித்திட்டம் தீட்டியதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கே கலவரத்துக்கு முதன்மைக் காரணமாக இருந்த சம்பாஜி பீடேவும் மிலிந்த் ஏக்போட்டேவும் உச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகும்கூட கைது செய்யப்படவில்லை.  

சென்ற ஆண்டு கௌரி சுட்டுக்கொல்லப்பட்டபோது `அடுத்து யார்' என்கிற கேள்விக்குறி எல்லோரின் முகத்திலும் இருந்தது. அடுத்து யார் என்பதை நாங்கள் பார்த்துவிட்டோம். இனி யார் என்பதும் எங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. ஏனென்றால், அவர்கள் உமருக்கு எதிராகத் துப்பாக்கி ஏந்தினார்கள். சாய்பாபாவையும் சுதிர் தவாலேயையும் சிறையில் அடைத்தார்கள். மனித நேயச் செயற்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ் வரை அவர்களது திட்டங்கள் நகர்ந்து வந்திருக்கின்றன. அந்த `அவர்களால்’  ஒவ்வொரு இஸ்லாமியப் பாமரனையும் தீவிரவாதியாக்க முடிந்தது. ஒவ்வொரு இஸ்லாமியரும் தன் கையில் மாட்டுக்கறி வைத்திருப்பவராகவே பார்க்கப்பட்டார். அவர்களால் ஒரு பாலியல் வன்முறைக் குற்றவாளியை ஆதரிக்க முடியும். அந்தப் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களைக் குற்றவாளியாக்க முடியும். சமூக வலைதளங்கள்தாம் அத்தனைக்கும் காரணம் எனப் பழிபோட முடியும். ஊடகத்தளங்களை தங்களுக்கு ஏற்றதுபோலச் செயல்படவைக்க முடியும். ஆனால், எத்தனை காலம்தான் இது நடக்கும்?

நாங்கள் அச்சத்தில் வாழமுடியாது. நாங்கள் தனித்தும் இல்லை. தன்னிச்சையாகவே நாங்கள் நீதிக்காகத்தான் போராடவேண்டியதாக இருக்கிறது. அதற்காக அவர்கள் நம்மைக் கொல்லலாம்.... ஆனால், நமது சிந்தனைகளை ஒன்றும் செய்துவிட முடியாது. கௌரி நம் எல்லோரிடமும் இருக்கிறாள். நாம் எல்லோரும் கௌரிதான். 

நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீ அமைதியாக உறங்கு கௌரி அம்மா!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism