Published:Updated:

"ஜனநாயகம் என்பது அரசை பாதுகாக்கும் கருவி அல்ல!" - பேரா. அப்துல் ரகுமான்

"ஜனநாயகம் என்பது அரசை பாதுகாக்கும் கருவி அல்ல!" - பேரா. அப்துல் ரகுமான்
"ஜனநாயகம் என்பது அரசை பாதுகாக்கும் கருவி அல்ல!" - பேரா. அப்துல் ரகுமான்

"ஜனநாயகம் என்பது அரசை பாதுகாக்கும் கருவி அல்ல!" - பேரா. அப்துல் ரகுமான்

ட இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சேலத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராகப் போராடிய யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டார். இந்தத் தொடர் கைது படலம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் உபா (UAPA) போன்ற கடுமையானச் சட்டங்களை எதிர்த்தும் நாடெங்கும் பல குரல்கள் ஒலித்தன. இதன் நீட்சியாக சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களுடன் இணைந்து கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். இந்த அமர்வில் பேராசிரியர்கள் அப்துல் ரகுமான், ராமு மணிவண்ணன், அழகரசன் ஆகியோர் ஆகியோர் பங்கேற்றனர். 'SHRINKING DEMOCRATIC SPACE' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலை 'Students For Social Democracy' மாணவர்கள் ஒருங்கிணைத்தனர். பல கல்லூரி மாணவர்களும், பிற ஆசிரியர்களும் இந்த உரையாடலில் கலந்துகொண்டனர். 

பேரா. அப்துல் ரகுமான்:

"ஜனநாயகம் என்பது நீதியையும், சுதந்திரத்தையும் நிலைநிறுத்துவதற்கான ஒரு கருவி. அரசைப் பாதுகாப்பதற்கான கருவி அல்ல அது. அரசு நிறுவனங்களும், மேற்சொன்ன குறிக்கோளை அடைவதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் மிகக் கவனமாக இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதோடு அதற்கான அதிகாரங்களை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்தது. அவசரநிலை பிரகடனத்தின் போது நமது நாட்டின் ஜனநாயக மதிப்பீடுகளில் கலக்கம் ஏற்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். நீதித்துறை, நிர்வாகம், ஆட்சிமன்றம் அனைத்தும் அதன் உயிரோட்டத்தை இழந்து வருகின்றன. வகுப்புவாத அரசியல் நமது நாட்டின் அடித்தளத்தையே செல்லரித்துக் கொண்டிருக்கிறது. தடா, பொடா, யுஏபிஏ போன்ற கொடிய சட்டங்கள் எல்லாம் நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதாக இருக்கின்றன. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூட மக்களின் பிரச்னைகளை சுதந்திரமாகப் பேச முடிவதில்லை. இப்படியானச் சூழலில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஜனநாயக போராட்டம் என்பது ஒரு தொடர் செயல்பாடு."

பேரா. ராமு மணிவண்ணன்:

"ஜனநாயகம் என்பது கடந்த ஐந்து ஆண்டுகளாக சுருங்கிவருகிறது. காங்கிரஸ் ஆட்சியிலும் இந்த ஜனநாயக சுருக்கத்தைப் பார்க்க முடியும். காங்கிரஸ் ஆட்சியில் பல்கலைக்கழகத்தில் கூட ஜனநாயகத்தன்மை என்பது இல்லை. மத்தியப் பிரதேசத்தில் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டதில் பலர் பலியாகியிருக்கின்றனர். கல்வி முறையிலும் 'Right of conduct' என்ற சட்டம் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இதை யார் பின்பற்றுகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் பல குழந்தைகள் இறந்தனர், இதற்கு யார் பொறுப்பேற்றனர். வெளிமாநிலமாக இருப்பதால் நாம் போராட்டம் கூட நடத்துவதில்லை. காஷ்மீர் மற்றும் பிற வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் அதிக போராட்டங்கள் நடக்கிறது. சுமார் 20 ஆயிரம் போராட்டங்கள் நடக்கும் தமிழகத்தில் எந்த போராட்டத்திற்கும் அரசு சிறுநகர்வைக்கூட முன்னெடுக்கவில்லை. மெரினா, பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற இடம். 'மெரினாவில் போராடக்கூடாது' என்று சிறு இடத்தை மட்டுமல்ல, ஒரு கடலையே நம்மிடமிருந்து பிரித்திருக்கிறார்கள். நம்மால் மெரினாவுக்குச் செல்ல முடியும். ஆனால், அங்கு அரசியலை சுவாசிக்க முடியாது.

கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க அந்த மாநில அரசு கேட்டது. பழக்கப்படாத எந்த ஒரு பாதிப்பும் தேசிய பேரிடர்தான். அதுமட்டுமல்ல, கேரளா நிவாரண நிதியாக 20 ஆயிரம் கோடி கேட்டது. மத்திய அரசோ வெறும் 500 கோடிதான் அறிவித்தது. இதெல்லாம் மத்திய அரசின் உணர்வற்ற தன்மையைதான் குறிக்கிறது. எட்டுவழிச்சாலைக்கு எதிராகப் போராடிய 80 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இங்கு ஜனநாயகத்தில் ஏதோ பிரச்னை இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. ஜனநாயகத்தை எதிர்க்கவேண்டும் என்பது என் கருத்தல்ல. ஜனநாயகப் புரட்சியைத்தான் நாம் செய்ய வேண்டும். உரிமைகளை யாராலும் தர முடியாது. அது இயற்கையானது. நாம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்." 

பேரா. அழகரசன்

"20ம் நூற்றாண்டில் நிறைய எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், ஓவியர்கள் எல்லோரும் ஜனநாயகத்தின் மரணத்தைப் பற்றி பேசியிருக்கின்றனர். எனவே, ஜனநாயகம் பற்றி ஏற்கெனவே பல விவாதங்கள் எழுந்துள்ளது. சுருங்கி வரும் ஜனநாயக உரிமைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. இந்தியாவின் 50வது சுதந்திரதினத்தை தலித் செயற்பாட்டாளர்கள் கறுப்பு தினமாகக் கொண்டாடினர். அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். அடுத்து 2000ம் ஆண்டில் வந்த 50வது குடியரசு தினத்தை தலித் செயற்பாட்டாளர்கள் தாங்களாகவே முன்வந்து கொண்டாடினர். ஏனெனில், அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினார் என்பதால். இந்த இடத்தின் மாற்றத்தை நாம் கவனிக்க வேண்டும். நிலையான இடமென்று எதுவுமில்லை. 

ஜனநாயக சார்பு (Pro democracy), ஜனநாயக விரோதம் (anti democracy) என்றெல்லாம் ஒன்றுமே கிடையாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு, எல்.ஜி.பி.டி தொடர்பான வழக்கு ஆகியவற்றின் சாதகத் தீர்வு சட்டரீதியான போராட்டத்தில் கிடைத்தவையாக நாம் கருதலாம். ஆனால், அரசியல் அழுத்தத்தின் சார்பாக கிடைத்த தீர்வுகள்தான் இது. ஜனநாயகத்தின் இரண்டு தூண்களான ஊடகத்துறையும், நீதித்துறையும் இன்றைக்கு பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. இங்கு அனைத்தையும் அரசியல் வழியாகத்தான் கொண்டுவர வேண்டும் என்றால் ஜனநாயக நிறுவனங்களின் கதி என்ன. ஜனநாயக நிறுவனங்கள் என்பது பெயரளவில் மட்டும்தானா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று", என்று பேசி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு