Published:Updated:

கௌரி லங்கேஷையும் கல்புர்கியையும் கொன்றவர்கள் ஒருவர்தான்! புது தகவல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கௌரி லங்கேஷையும் கல்புர்கியையும் கொன்றவர்கள் ஒருவர்தான்! புது தகவல்
கௌரி லங்கேஷையும் கல்புர்கியையும் கொன்றவர்கள் ஒருவர்தான்! புது தகவல்

கௌரி லங்கேஷையும் கல்புர்கியையும் கொன்றவர்கள் ஒருவர்தான்! புது தகவல்

வர்கள் 4 பேருமே எழுதியதற்காக வெவ்வேறு காலங்களில் கொல்லப்பட்டவர்கள். அவர்களில் முதல் பலி, பூனாவைச் சேர்ந்த மருத்துவர் நரேந்திர தபோல்கர். மூடநம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியதால்தான் தினமும் நடந்துசெல்லும் பாதையில் ரத்தவெள்ளத்துக்கிடையே கிடந்தார். அடையாளம் தெரியாத நபர்களால் 2015 ஆகஸ்ட் மாதம் தனது வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார், கன்னடப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கல்புர்கி. இந்து மதத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசியது அவரது கொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டது. அதே வருடம் பிப்ரவரி மாதம் மகாராஷ்டிர மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 81 வயதான கோவிந்த் பன்சாரே தனது மனைவியுடன் சென்றுகொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். தபோல்கரைப்போலவே இந்து மதத்தில் இருக்கும் சில வழமைகளை அவர் எதிர்த்தார். இவர்களது படுகொலைகள் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தலாக இந்தியா முழுவதும் உள்ள எழுத்தாளர்களும் செயற்பாட்டாளர்களும் கூறி வந்தனர். அத்தகைய சூழலில்தான் கர்நாடகாவில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தனது வீட்டு வாசலிலேயே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ். இந்துத்துவா சக்திகளுக்கு எதிராகக் குரல்கொடுத்ததுதான் இவரது படுகொலைக்கும் காரணமாகக் கூறப்பட்டது. 

கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், கொலை தொடர்பான விசாரணையும் கர்நாடகாவின் அப்போதைய சித்தராமையா அரசால் துரிதப்படுத்தப்பட்டது. மற்றொருபுறம் 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தபோல்கரின் கொலை குற்ற விசாரணையும் வெவ்வேறு கோணங்களை எட்டிக்கொண்டிருந்தது. 

இந்த நிலையில், வலதுசாரி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வெவ்வேறு நபர்கள்தான் கல்புர்கி, நரேந்திர தபோல்கர் மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரைப் படுகொலை செய்ததாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று கொலைகளுக்கும் கோவிந்த பன்சாரே கொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற விசாரணை ஒருபக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 

தபோல்கரை கொலை செய்த குற்றவாளிகள் சனாதன் சன்ஸ்தா என்கிற இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அண்மையில், மகாராஷ்டிர மாநிலம் பூனே அருகே உள்ள நல்லஸ்போரா பகுதியில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டிருந்ததாக ஒரு வீட்டில் தங்கியிருந்த பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், இதே சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான சரத் கலசாரே என்பவர் வெடிகுண்டு தொடர்பான விசாரணையின்போது தபோல்கர் கொலையில் தனக்குத் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும், 2017-ல் கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு முன்பு, அவரது வீட்டை நோட்டம் பார்க்க, தான் உதவியதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கர்நாடக போலீஸாரால் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருக்கும் பரத் மற்றும் சுஜித் குமார் ஆகியோரை நல்லஸ்போரா வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காகத் தங்களது கட்டுப்பாட்டில் மகாராஷ்டிரா போலீஸ் எடுத்துக்கொண்டுள்ளது. அவர்களது விசாரணை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த குமார் என்னும் நபர் ஏற்கெனவே கல்புர்கி கொலை வழக்கில் தேடப்பட்டுவருபவர். இதன்மூலம், இந்த மூவரையும் கொன்றவர்கள் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது கொலை நோக்கமும் உறுதியாகியுள்ளது என்றும் அந்தக் காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு