Published:Updated:

நியூசிலாந்தில், பெண்கள் முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெற்றது எப்படி?

பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெற்றது குறித்த கட்டுரை...

நியூசிலாந்தில், பெண்கள் முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெற்றது எப்படி?
நியூசிலாந்தில், பெண்கள் முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெற்றது எப்படி?

``18 வயது பூர்த்தியாகிவிட்டதா...? அப்படியெனில், இன்றே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்" என இன்று தேர்தல் ஆணையம் பல வகைகளில் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், 1893-ம் ஆண்டே, கேட் ஷெப்பர்டு (Kate Sheppard) என்ற நியூசிலாந்தைச் சேர்ந்த பெண்மணி, ``பெண்களே... உடனே உங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துகொள்ளுங்கள்" என்று முழங்கினார். அப்படி, அன்று அவர் முழங்கியதால்தான் பெண்கள் இன்று வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். நியூசிலாந்தில் முதன்முதலாகப் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்ற தினம் இன்று.

``பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒருநாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும்" என்பார் திரு.வி.கல்யாணசுந்தரனார். அதன்படி, பெண்ணுரிமைக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்தவர் அவர். திரு.வி.க. மட்டுமல்லாது தந்தை பெரியார், அம்பேத்கர், பாரதியார் எனப் பல தலைவர்கள் பெண்களின் சுதந்திரத்துக்கு ஆதரவாய்ப் போராடியதன் விளைவு இன்று, பெண்கள் பல துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். 

பழங்காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருந்தனர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அப்படியான பெண்களுக்கு அன்றைய காலத்தில் பல உரிமைகள் மறுக்கப்பட்டன. பின்னர் மாபெரும் தலைவர்களின் போராட்டங்களாலும், சீர்திருத்தங்களாலும் வெளியில் வரத் தொடங்கிய அவர்கள், மெள்ள மெள்ள சில துறைகளில் மேம்பாடு அடையத் தொடங்கினர். ஆனாலும், அத்துறைகளில் அவர்கள் முழுமை பெறவில்லை. அப்படியான நிலை இருந்த காலகட்டத்தில்தான், அவர்களுக்கு வாக்குரிமையும் மறுக்கப்பட்டது. ``வாக்களிப்பதை நல்வழியில் செலுத்தவேண்டும்; அது, மக்கள் கடமை. வேறுவழியில் செலுத்தப்படின், ஜனநாயகம் போலியாகிவிடும்; நச்சுத்தீ பரவி நாட்டை எரித்துவிடும்" என்பார் திரு.வி.க. ஆனால், அப்படியான வாக்குரிமைதான் பெண்களுக்கு அந்தக் காலத்தில் கிடைக்கவில்லை. அதற்கு எண்ணற்ற எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. 

``பெண்களுக்கு வாக்குரிமை அளித்தால் குடும்ப அமைப்பு நாசமாகிவிடும். சமூகம் சீர்கெட்டுவிடும்; ஒரு பெண் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தால், அந்த நாட்டின் தகுதி என்னாவது?; பெண் ஏற்றிருக்கும் தலைமையால் மற்ற நாடுகளின் ஏளனப் பார்வைக்கு நம் நாடு ஆளாக வேண்டியது வருமே?; நாட்டை ஆளும்போது ராணுவம் சம்பந்தமான நடவடிக்கைகளை எல்லாம் எடுக்க வேண்டிவரும். அவற்றில் எல்லாம் சரியான முடிவுகளைப் பெண்கள் எடுப்பார்களா?;  அதேநேரத்தில், ராணுவத்தில் சேர வேண்டுமென்றால் பெண்கள் முன்வருவார்களா... அப்படியிருக்கையில், வாக்களிப்பதில் மட்டும் என்ன சமத்துவம் வேண்டியிருக்கிறது?; அரசாங்கம் என்பது ஓர் உறுதியான நிலைத்தன்மையுடன் செயல்படக்கூடியது. அப்படிப்பட்ட அரசாங்கத்துக்கு இளகிய மனம் படைத்த பெண்களால் எப்படி உறுதியுடன் செயல்பட முடியும்'' என அன்றைய பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தவர்கள் குரல்கொடுத்தனர். 

பெண்களும் இதை எதிர்த்து குரல் கொடுக்காததால், வாக்குரிமை மட்டும் அவர்களைவிட்டுக் கொஞ்சம் தள்ளியே இருந்தது. ஆனாலும் நாள்கள் நகர நகர இதற்கான இயக்கம் பிரான்ஸ் நாட்டில் தொடங்கி பின்னர், ஸ்வீடன் நாட்டிலும் பரவியது. 1756-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரு சிறுபகுதியான மாஸசூட்ஸில் நடைபெற்ற உள்ளூர்ப் பஞ்சாயத்துத் தேர்தலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். ஆனாலும், அவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது, வாக்களிக்கும் பெண் திருமணமாகாதவராகவும், தன் பெயரில் சொத்துகள் உடையவராகவும் இருக்கவேண்டும் என்பதே அதன் நிபந்தனை. இந்த நிலையில்தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் கொண்டுவந்து, அதைச் சட்டமுமாக்கியது நியூசிலாந்து. 

பெண்களுக்குக் கட்டாயம் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்பதை மற்ற நாடுகளைவிட நியூசிலாந்து நாட்டினர் பல ஆண்டுகளாகவே வலுயுறுத்திவந்தனர். குறிப்பாக, கேட் ஷெப்பர்டு என்ற பெண்மணி, உலக நாடுகளில் பெண்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதைக் கண்டு வெகுண்டெழுந்தார். ``மனிதர்களைப் பிரிக்கும் இனம், வகுப்பு, பாலினம் என எதுவாக இருந்தாலும் வெற்றி காணப்பட வேண்டும்" என்று அவர் அறைகூவல் விடுத்தார். இதுதவிர, பெண்களின் வாக்குரிமைக்காக அரசாங்கத்திடம் மனு கொடுக்கவும் செய்தார். 

ஆனால் எதிர்த்தரப்பினரோ, ``பெண்களின் உலகம் குடும்பம் மட்டுமே" என்று வாதிட்டனர். ஆனாலும், கேட் ஷெப்பர்டு விடவில்லை. ``அதனால் என்ன? பெண்களுக்கும் வாக்குரிமை அளித்தால், குடும்பங்களைப் பாதுகாக்கும் பல கொள்கைகளை அவர்களும் ஆதரித்து அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கிறதே" என்று குரல்கொடுத்தார். அதன் விளைவாகப் பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை தந்த நாடு நியூசிலாந்து என வரலாற்றில் இடம்பிடித்தது. 1893-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவும் தொடங்கினர். அந்தத் தேர்தலில்தான் எலிசபெத் ஏக்ஸ் என்ற பெண்மணி மேயர் பதவிக்காக வேட்பாளராகவும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

``என் வாக்கு... என் உரிமை" என்பதை நிலைநாட்டுவோம்... மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்போம்!