Published:Updated:

ஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க-வின் பங்கு... டெசோ முதல் டெசோ வரை!

ஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க-வின் பங்கு... டெசோ முதல் டெசோ வரை!
ஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க-வின் பங்கு... டெசோ முதல் டெசோ வரை!

மீண்டும் ஒரு முறை, ஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க.வின் பங்கானது, சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் காங்கிரஸுடன் சேர்ந்து தி.மு.கவும் காரணமாக இருந்ததாக ஜெயலலிதாவுக்குப் பிந்தைய அ.தி.மு.க முதல் முறையாகக் குற்றம்சாட்டியிருக்கிறது. 

அண்மையில் மறைந்துபோன தி.மு.க தலைவர் கருணாநிதி மீதான விமர்சனங்களில், ஈழத்தமிழர் விவகாரமும் முக்கியமானது. இதில், கருணாநிதியின் நிலைப்பாடுகளைப் பற்றி கண்டபடி ஏசுவோரின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவர் மீதான இந்த உச்சகட்ட குற்றச்சாட்டுதான், ஈழத்தில் தி.மு.கவின் நிலைப்பாடாக இருந்ததா, இருக்கிறதா? 

1980-களில் அவர் முன்னின்ற டெசோ இயக்கமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் 2012-ல் அவர் மீளவும் அமைத்த டெசோ இயக்கமும் அவரின் ஈழப்பங்களிப்பைச் சொல்லும் காலக்கண்ணாடியாக இருக்கும். 

தி.மு.கவின் தலைமையகமாக இருந்தது, சென்னை, அண்ணா சாலையில் இருந்த `அன்பகம்’. 1985-ம் ஆண்டு மே 13 அன்று, தி.மு.க தலைவர் கருணாநிதி, தி.க.பொதுச்செயலாளராக இருந்த கி.வீரமணி, காமராஜ் காங்கிரஸ் தலைவராக இருந்த பழ.நெடுமாறன் ஆகியோர் கூடி, `டெசோ’ எனும் `தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பை' (Tamil Eelam Supporting Organisation - TESO) உருவாக்கினார்கள். அதில், 1. தமிழீழம்தான் தீர்வு என்பதை உலக நாடுகளுக்கும் உணர்த்துவது, 2. தமிழீழப் போராளிகளுக்கு உதவுதல், 3. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உரிய உதவிகள் கிடைக்கச்செய்வது முதலியவை டெசோவின் குறிக்கோள்கள் என முடிவுசெய்து அறிவிக்கப்பட்டது. 

டெசோ உருவாக்கப்பட்டதுமே, `இலங்கைத் தமிழர் படுகொலையை உடனே நிறுத்தவேண்டும்’ எனக் கோரி, அனைத்து மாவட்டங்களிலும் பேரணி, போராட்டங்கள் நடத்தப்பட்டன. சின்னஞ்சிறு ஊர்களில்கூட அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனவின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. 

1985 அக்டோபர் 3-ம் தேதி கோவையில், 4-ம் தேதி திண்டுக்கல்லில்,  5-ம் தேதி தூத்துக்குடியில், 6-ம் தேதி திருச்சியில், 7-ம் தேதி சேலத்தில், 13-ம் தேதி வேலூரில் என லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணிகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து 1986 மே 4-ம் தேதி மதுரையில் டெசோ மாநாடு நடத்தப்பட்டது. தமிழகமே கிளர்ந்து எழுந்து திரண்டதுபோல, லட்சக்கணக்கானோர் பங்கேற்ற டெசோ மாநாடு இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது. 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ராமாராவ், கர்நாடக உள்துறை அமைச்சர் ராசையா, வடமாநிலத் தலைவர்களான எச்.என்.பகுகுணா, ஜஸ்வந்த்சிங், காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல்ரஷித் காபூர், பஞ்சாப் அகாலிதளம் பொதுச்செயலாளர் பல்வந்த்சிங் ராமுவாலியா ஆகியோர் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். 

இந்திராவின் மறைவுக்குப் பிறகு பிரதமர் நாற்காலியில் ராஜீவ் அமர்ந்தபின்னர், இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கை மாற்றப்பட்டது. இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1983 ஆக.16-ல் பேசியவர், இந்திரா. நேர்மாறாக, ``இலங்கையில் உண்மையான பிரச்னை வன்முறை; அதை ஆரம்பித்தவர்கள் தமிழர்கள்’’ என்று அராப் டைம்ஸுக்கு 1-9-1985 அன்று அளித்த பேட்டியில் சொன்னார், ராஜீவ். 

பிரதமரே முடிவெடுப்பது என்கிற இந்திரா காலத்து நிலை மாறி, ஜே.என்.தீட்சித், ரொமேஷ் பண்டாரி போன்ற அதிகாரிகள் தீர்மானித்ததே, இந்திய அரசின் கொள்கை என்று ஆனது. 

பூடான் தலைநகர் திம்புவில் ஜூலை 8 முதல் 13வரை நடந்த இலங்கை அரசு - ஈழப் போராளிகள் பேச்சுவார்த்தையில், இந்திய அரசின் முடிவை ஈழப் போராளி இயக்கத் தலைவர்கள் ஏற்கவில்லை. அதையடுத்து, இந்தியாவிலிருந்து பாலசிங்கம், சந்திரஹாசன், சத்தியேந்திரா ஆகிய போராளி இயக்கத் தலைவர்களை நாடுகடத்த 23-8-1985 அன்று ராஜீவ் அரசு உத்தரவிடப்பட்டது. 

அந்த உத்தரவைத் திரும்பப்பெறக் கோரி டெசோ விடுத்த அழைப்பை ஏற்று, 25-8-1985 அன்று சென்னையில் 7 லட்சம் பேர் பேரணியாகத் திரண்டனர். தொடர்ச்சியாக, 27, 28, 29 தேதிகளில் மாவட்டத் தலைநகர்களில் பேரணிகள் நடத்தப்பட்டன. 30-ம் தேதி ரயில் மறியலும் நடத்தப்பட்டது. அதையடுத்து போராளித் தலைவர்களின் நாடுகடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பலமும் ஒற்றுமையும் தமிழகத் தலைவர்களின் வழக்கமான கருத்துவேறுபாட்டால் குலைந்துபோனது. முதல் டெசோ இயக்கம் முடங்கிப்போனது. 

டெசோவே இல்லாதபோது அது உண்டாக்கிய தாக்கமும் குறைந்துபோனது. மகிழ்ச்சியில் மிதந்த ஜெயவர்த்தன, ராஜீவ் காந்தியுடன் உடன்பாடு செய்துகொண்டார். ஆனால், சிறிது காலத்தில், அமைதி காக்கச் சென்ற இந்தியப் படைக்கும் ஈழப் போராளிகளுக்கும் போர் மூண்டது. ஜெயவர்த்தனவை அடுத்து இலங்கை அதிபர் ஆன பிரேமதாசாவால், இந்தியப் படை திருப்பி அனுப்பப்பட்டது. அதை வரவேற்காமல் புறக்கணித்தார், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. 

``இந்திய ராணுவத்தை மதிக்கத் தவறாதவர்கள், தி.மு.கவினர். இந்திய ராணுவத்துக்கு இழுக்குவர அதைப் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். ஆனால், இந்திய ராணுவம் இலங்கையில் என் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் கொல்லப்படக் காரணமாக இருந்தது என்பதை எண்ணித்தான், அந்தப் படையை வரவேற்க நான் செல்லவில்லை” என முதலமைச்சராகக் கருணாநிதி கூறியது, சட்டப்பேரவை வரலாற்றில் பதிவானது. 

13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 1989 நவம்பரில் ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் ஆட்சி, 1991 ஜனவரியில் கலைக்கப்பட்டது. அதற்கு திருப்புமுனைச் சம்பவமாக அமைந்தது, 1990 ஜூனில் ஈபிஆர் எல்எஃப் இயக்கத் தலைவர் பத்மநாபா உட்பட 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு! 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்றும் விடுதலைப் புலிகளுக்குத் தி.மு.க அரசு உதவிசெய்கிறது என்றும் அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி குறிப்பு எழுதினார். அதையடுத்து, ஜனவரி 30-ம் தேதியன்று கருணாநிதி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 

சிங்களர்சார்பு வெளியுறவுக் கொள்கை மாறாத நிலையில், ஈழப் பிரச்னையில் மைய அரசில் இடம்பெற்ற திமுக, ஒருவகை மௌனத்தைக் கடைப்பிடித்தது. அது ராஜீவ் கொலையை ஒட்டிய மௌனம் என்று அது பொழிப்புரை செய்யப்பட்டது. 

இலங்கை இனப்பிரச்னை மென்மேலும் தீவிரமாகி, இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே ஆனதும், இறுதிப்போர் எனும் பெயரில் கொடுந்தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டது. 

2008-ம் ஆண்டில், `போரை நிறுத்து’ என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து தமிழகமே போராட்டக் களம் ஆனது. தமிழக அரசின் சார்பில், முதலமைச்சர் கருணாநிதியோ, டெல்லிக்குக் கடிதம் அனுப்பத் தொடங்கினார்.

அக்.2 ம் தேதி, போர் நிறுத்தம் கோரி, தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடத்துவது என ஐதராபாத்தில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு முடிவுசெய்தது. தேசிய அளவில் சலனங்களை உண்டாக்கிய இந்த முடிவுக்கு, மாநிலம் முழுவதும் அமோக ஆதரவு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தி.மு.க சார்பில் அக்.6-ல் சென்னை மயிலையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தி.மு.க தரப்பில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வரும் எனப் பரவலாக எதிர்பார்ப்பு எழுந்தது. 

``இலங்கையில் நம் சகோதரர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உயிர் இங்கே போனால் என்ன, கடல் கடந்து அங்கே போய் போனால் என்ன? போர்நிறுத்தம் கொண்டுவர இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையென்றால் இனியும் இந்தப் பதவி எதற்கு என யோசிக்க வேண்டி இருக்கும்” என்ற கருணாநிதியின் எச்சரிக்கையுடன் அந்தக் கூட்டம் முடிந்தது. 

``இனப்படுகொலை இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்கிறது; அதற்கு ஆதாரமாகப் பிரதமர் மன்மோகன் எழுதிய கடிதம் இருக்கிறது” எனத் தமிழகத் தலைவர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். 

அக்.14 அன்று தலைமைச்செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார், கருணாநிதி. அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. ``இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு போரை நிறுத்தமுயலாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் பதவிவிலகுவார்கள்” என்று அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதையடுத்து, டெல்லிக்கு வந்த பசில் ராஜபக்சேவுடன் பேச்சு நடத்திய பிரணாப் முகர்ஜி, சென்னைக்கு வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அதையடுத்து, `பதவிவிலகல் மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை’ என்றார் கருணாநிதி. 

அக்.15 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம், 19-ல் ராமேஸ்வரத்தில் திரையுலகினர் போராட்டம், 23-ல் விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல் தொடர, ``ஈழ ஆதரவாளர்கள், இறையாண்மைக்கு எதிராகப் பேசுகின்றனர்”எனச் சட்டப்பேரவையில் காங்கிரஸ் பிரச்னை செய்தது.  

அக்.23 அன்று கருணாநிதியிடம் மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் தொலைபேசியில் பேசினார். 

போர்நிறுத்தக் கோரிக்கைப் போராட்டங்கள் தீவிரம் ஆகிக்கொண்டே இருக்க, முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

அக்.24 அன்று சென்னையில் தி.மு.க சார்பில் மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது. நவ.14 அன்று போர்நிறுத்தத்தை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிச.4 அன்று தமிழக தலைவர்களுடன் பிரதமர் மன்மோகனைச் சந்தித்தார், கருணாநிதி. ரஷ்யாவிலிருந்து திரும்பிய தா.பாண்டியன் வந்தகையோடு அச்சந்திப்பில் இடம்பெற்றது, குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில் அலைக்கற்றை விவகாரத்தில் காங்கிரஸுக்கும் தி.மு.க வுக்குமிடையே உறவு கசக்கத்தொடங்கியது. 

2008 டிசம்பரில் கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் நெருங்கியது. கனரக ஆயுதங்கள் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர். போரை நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகத்தில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தது. 

தி.மு.க கட்சியின் சார்பில்,``வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பிவைக்கவேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது. டிச.14-ல் நடந்த தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம், டிச.27-ல் நடந்த தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இரண்டிலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

2009-ம் ஆண்டில் கிளிநொச்சி நகரை இலங்கை அரசுப் படை கைப்பற்றியது. கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துக்கொண்டே போனது. தமிழகம் எங்குப் பார்த்தாலும் போர் நிறுத்தப் போராட்டங்கள்! 

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. ஜனவரி 29-ல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரிபவனில் தீக்குளித்து, இறந்துபோனார், இளைஞர் முத்துக்குமார். அவரைத் தொடர்ந்து, 16 பேர் தீக்குளித்து இறந்துபோக, தமிழகம் கொந்தளிப்பின் உச்சத்துக்குப் போனது.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, பிப்.3-ல் செயற்குழுவைக் கூட்டி, தி.மு.க சார்பில் `இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை’ எனும் புதிய அமைப்பை உருவாக்கினார். 

``இலங்கைப் பிரச்னைக்காகப் போராடுவதாகக் கூறி, என் ஆட்சியைக் கவிழ்க்க சதி….இந்தப் பேரவை நடத்தும் நிகழ்ச்சிகளில் யாருடைய மனதையும் புண்படுத்தாத முழக்கங்கள் இருக்கவேண்டும்’’ என்று அவர் கூறியது, முக்கியத்துவம் பெற்றது.  

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிப்.4-ம் தேதி போர் நிறுத்தம் கோரி முழு அடைப்பு நடத்தப்பட்டது. 17-ம் தேதி சென்னை முதல் குமரிவரை மனிதச் சங்கிலி நடத்தப்பட்டது. மக்களின் உணர்வுக்கொதிநிலை தொடர்ந்த நிலையில், தி.மு.க கட்சி சார்பில், பிப்.21-ல் இளைஞர் சங்கிலி, ஸ்டாலின் தலைமையில் ஏப்.9-ல் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது. ஏப்.24-ல் வேலைநிறுத்தத்துக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது.  

தொடர்ச்சியான போராட்டங்கள் கொதிநிலையைத் தீவிரப்படுத்த, 2009 ஏப்ரல் 28 அன்று காலையில் மெரினா கடற்கரையில் கருணாநிதி திடீரெனச் சாகும்வரை உண்ணாவிரதம் உட்கார்ந்தார். 6 மணி நேரத்துக்குள், போர்நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த தகவலின்பேரில், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். ஆனால் அன்றுமட்டும் பல நூறு பேர் கொல்லப்பட்டனர் என ஐநா செயற்கைக்கோளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின. 

இதை உறுதிப்படுத்தும்விதமாக, ``போர் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது”என இலங்கை ராணுவம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் திரண்டிருந்த ஈழத்தமிழர்களில் சில நாள்களில் பத்தாயிரக்கணக்கில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், அமைச்சரவைப் பங்கீடு தொடர்பாகப் பேச டெல்லி சென்றார், கருணாநிதி. உடன்பாடு எட்டப்படாமல் போக, வெளியிலிருந்து ஆதரவு என அறிவித்தார். பின்னர், ஒரே நாளில், அமைச்சரவையில் பங்கேற்க ஒப்புதலையும் பட்டியலையும் அனுப்பினார். 

போர் முடிந்தபோதும் உயிர், உடல் துடிக்க முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள், சித்ரவதை செய்யப்பட்டனர். அந்தச் சூழலில் திடீரென உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார் கருணாநிதி. இனமா, மொழியா எனத் தமிழ் உணர்வாளர்களுக்குள்ளே விவாதம் உண்டானது. அந்தச் சூட்டிலேயே, தி.மு.க கூட்டணி எம்.பி.க்கள் முள்வேலி முகாம்களைப் பார்க்க அனுப்பிவைக்கப்பட்டனர். `போர்க்குற்றவாளி’ யான ராஜபக்சேவுக்குப் பொன்னாடை போர்த்தியது கடுமையான எதிர்ப்பைத் தோற்றுவித்தது. 

2010 பிப்ரவரியில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என 2009 செப்டம்பரில் கருணாநிதி அறிவித்தார். தமிழ் அறிஞர்கள் தரப்பில் எதிர்ப்பு உண்டாக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 2010 ஜூன் 24ம் தேதிக்கு மாநாடு தள்ளிவைக்கப்பட்டது. 

2011ம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாறியதும் காட்சியும் மாறியது. 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா கைது, தயாளு அம்மாள், கனிமொழி மீது விசாரணை போன்ற பல நிகழ்வுகளும் நடந்தேறிய நிலையில், அதைப் பற்றி விவாதிக்க ஏப்ரல் 27 அன்று திமுகவின் உயர்மட்டச் செயல்திட்டக் குழு கூட்டப்பட்டது. அதில், போர்க்குற்ற விசாரணை பற்றி முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மாநில ஆட்சியை இழந்துவிட்டதால் ஆட்சிக்குரிய கடப்பாடு தி.மு.கவுக்கு இல்லாமல்போனது. அதேசமயம், மத்திய அமைச்சரவையில் அங்கம்வகித்தநிலையில், மத்திய அரசுக்கு இலங்கையின்பொருட்டு தி.மு.க தரப்பில் அழுத்தம் எதுவும் இல்லை. 

`இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும்’ என ஐநா நிபுணர் குழு தெரிவித்தது. 2012 மார்ச்சில், இறுதிப்போர் மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கை அரசே சுயவிசாரணை நடத்தலாம் என மார்ச் 23ல் ஐநா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம்கொண்டுவந்தது. முன்னதாக, அதை மத்திய அரசு ஆதரிக்கவேண்டுமெனக் கோரி மார்ச் 22 அன்று உண்ணாவிரதம் நடத்துவது; அப்படி மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அதிலிருந்து விலகுவது எனத் தி.மு.க அறிவித்தது. அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக பிரதமர் மன்மோகன் அறிவித்ததும் இரண்டையும் கைவிட்டது, தி.மு.க. 

முன்னதாக, பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை, தனி ஈழம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. 2011 ஜூன் 26-ம் தேதி மெரினாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற ஒன்றுகூடல் நடைபெற்றது. தி.மு.கவின் பிரமுகர்களும்கூட அதில் பங்கேற்றனர். 

சேவ் தமிழ் இயக்கம், மே 17 இயக்கம், போர்க்குற்றங்களுக்கு எதிரான இளைஞர்கள் இயக்கம் போன்ற அமைப்புகள் சார்பில் பல்வேறு பிரசார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 

இப்படியான நிலையில், 2012 மார்ச் 18 அன்று தி.க.தலைவர் கி.வீரமணி சென்னையில் செய்தியாளர் கூட்டத்தில், டெசோவை மீள் உருவாக்கவேண்டும் எனக் கூறினார். அதையடுத்து, அந்த மாதம் 30-ம் தேதியன்று இரண்டாவது டெசோ உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக கருணாநிதி, உறுப்பினர்களாக க.அன்பழகன், கி.வீரமணி ஆகியோர் இருப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. 1985-ல் டெசோவில் இருந்த பழ.நெடுமாறன் இதில் இல்லை; அவருக்கு மாற்றீடுபோல பேரா. சுப.வீரபாண்டியன் சேர்க்கப்பட்டார். 

தமிழ் ஈழத்துக்காகத்தான் இரண்டாவது டெசோ என்று தீர்மானமாக அறிவித்த கருணாநிதி, அடுத்த 3 மாத காலத்தில் அந்த நிலைப்பாட்டில் பிடிமானமில்லாமல் மாறிமாறிப் பேசினார். 

ஏப்ரல் 25 அன்று வடசென்னையில் நடந்த கூட்டத்தில், ``இதுவரை நிறைவேறாத கனவு, தனி ஈழம். அதற்கான உரத்தை, பலத்தை, எழுச்சியை உருவாக்கிவிட்டுதான், உலகத்தைவிட்டு விடைபெற விரும்புகிறேன்’’ என்றார். 

ஏப்ரல் 30 அன்று நடந்த புது டெசோ கூட்டத்தில், ``இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு தனித் தமிழ் ஈழத்தைத் தவிர வேறு வழி இல்லை. விரைவில் தமிழீழம் அமைய, இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் ஐநா மன்றம் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்” எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

திருவாரூரில் நடந்த தன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்,``ஈழத் தமிழர்களின் மீட்சிக்காகவே டெசோ மாநாடு நடத்தப்படுகிறது. வெகுவிரைவில் தனித் தமிழீழ நாட்டை உருவாக்க இந்த மாநாடு பயன்படவேண்டும்’’ என்று கருணாநிதி பேசினார்.  

ஜூலை 16 அன்று அறிவாலயத்திலும் 23 அன்று கோபாலபுரம் வீட்டிலும் அளித்த பேட்டிகளில், மாறுபாடு வெளிப்பட்டது.  

``ஈழத் தமிழ்நாடு எனும் கோரிக்கையை கைவிட்டுவிடவில்லை. அதிலிருந்து தி.மு.க பின்வாங்கிவிடவில்லை. தமிழீழம் என்பது தி.மு.கவின் குறிக்கோள்; அது நிறைவேறும் நிலை உருவாகும்போது, அதற்காகப் படிப்படியாக முயற்சி மேற்கொள்வோம்’’ என்கிற அளவுக்குத் தி.மு.கவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை வெளிப்படுத்தினார், கருணாநிதி. 

ஆகஸ்ட் 5 அன்று விழுப்புரத்தில் டெசோ மாநாடு நடத்தப்படும் என அறிவித்த கருணாநிதி, பின்னர் அதை சென்னைக்கு மாற்றி, ஆக. 12-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். 

எந்தக் காங்கிரஸ் கட்சி, ஈழத்தமிழர் விடுதலை இயக்கப் போராளிகளுக்கு ஆயுதம்தந்து பயிற்சியும் அளித்ததோ, அதே கட்சியின் ஆட்சி, அடுத்த நாட்டின் இறையாண்மையில் அக்கறைகொண்டு, ‘தமிழ் ஈழ ஆதரவு’ என்கிறபடி டெசோ மாநாடு கூடாது என நிபந்தனை விதித்தது. அதை ஒப்புக்கொண்டபடி டெசோவின் மாநாடு, ‘ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ என்று ஆனது. 

அறிவிக்கப்பட்டபடி, ஆகஸ்ட் 12-ம் நாளன்று, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த டெசோ மாநாட்டின் தீர்மானம், தி.மு.கவின் நிலையைத் தெளிவுபடுத்தியது. 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அதில் ஒரு தீர்மானம்கூட, தனி ஈழத்துக்கு ஆதரவு என்ற வாசகத்தைக் கொண்டிருக்கவில்லை. 

 `போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்’ என்று கூறிய ஜெயலலிதா, பின்னாளில் `இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும்’ எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்ததைப் போலவே, தமிழீழம் தமிழீழம் எனத் தமிழக இளைஞர்களின் நாடிநரம்பெல்லாம் உணர்வேற்றியதில் முக்கியப் பங்கு வகித்த கருணாநிதி, தனி ஈழம் என்பதை விட்டுவிட்டு டெசோ மாநாடு நடத்தியதும், ஈழ ஆதரவு வரலாற்றில் பெரும் நகைமுரண்!