Published:Updated:

“பிரார்த்தனை செஞ்சாலும் அடிக்கிறாங்க!”

“பிரார்த்தனை செஞ்சாலும் அடிக்கிறாங்க!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பிரார்த்தனை செஞ்சாலும் அடிக்கிறாங்க!”

அய்யாக்கண்ணு ஆவேசம்

‘‘இது ஜனநாயக நாடான்னு சந்தேகமா இருக்கு. பேச தடை, மீட்டிங் போட தடை, நோட்டீஸ் கொடுக்கத் தடைன்னு எல்லாச் சுதந்திரத்தையும் பறிச்சுக்குறாங்க. இப்ப சாமிக்கிட்ட பிரார்த்தனை செஞ்சதுக்குக்கூட அடிக்கிறாங்க. தினமும் பி.ஜே.பி-காரங்க போன் போட்டு அசிங்கமா திட்டுறாங்க. என்னை அடிச்சவங்களைப் பாராட்டிப் பேசுறாரு ஹெச்.ராஜா. என்னய்யா நடக்குது நாட்டுல? இந்த நாட்டுல விவசாயிகளா பொறந்ததைவிட வேறென்ன பாவம்யா நாங்க செஞ்சிட்டோம்? எங்க உழைப்புக்கு ஊதியம் கொடுங்கன்னு கேட்குறதுல என்ன தவறு...’’ என்று கொந்தளிக்கிறார், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.

திருச்செந்தூரில், விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்பாகத் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்துகொண்டிருந்த அய்யாக்கண்ணுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருடைய கன்னத்தில் பி.ஜே.பி மகளிர் அணியைச் சேர்ந்த நெல்லையம்மாள் என்ற பெண் ஓங்கி அறைந்தார். அதற்குப் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இன்னொருபுறம், ‘அய்யாக்கண்ணுமீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார். சம்பவம் நடந்து இரண்டு தினங்களுக்குப் பிறகு, ‘பக்தர்கள் வழிபாட்டுக்கும் பொது அமைதிக்கும் இடையூறு செய்த விவசாய சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டது. இந்தச் சூழலில், அய்யாக்கண்ணுவிடம் பேசினோம்.

“பிரார்த்தனை செஞ்சாலும் அடிக்கிறாங்க!”

“பிரதமர் மோடிக்கு எதிராகக் கோயில்களில் பிரார்த்தனை செய்கிறீர்களாமே?”

‘‘மரபணு மாற்று விதைகளைத் தடை செய்ய வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன்வெச்சு கன்னியாகுமரியிலிருந்து சுற்றுப்பயணம் ஆரம்பிச்சோம். அந்தந்த மாவட்டத்துல மக்களையும், கலெக்டரையும் சந்திச்சு எங்க கோரிக்கை மனுக்களைக் கொடுக்குறோம். ஸ்ரீவைகுண்டம் கோயிலுக்குப் போய், சாமி முன்னாடி நோட்டீஸை வெச்சு, ‘விவசாயிகள் பிரச்னையைப் பிரதமர் கண்டுக்காம இருக்காரு. அவருக்கு நல்ல புத்தியைக் கொடுத்து, எங்களுடைய பிரச்னையையும் கவனிக்க வை கடவுளே’ன்னு பிரார்த்தனை செஞ்சோம்.’’

“திருச்செந்தூரில் என்ன நடந்தது?”

‘‘இதேபோல, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் போய் வேண்டினோம். கோயிலுக்கு வெளியே மக்கள்கிட்ட நோட்டீஸ் விநியோகிச்சோம். அப்போ அந்த அம்மா வேகமா வந்து, ‘அய்யாக்கண்ணு ஒரு ஃபிராடு’ன்னு கத்தினாங்க. ‘என்ன ஃபிராடுத்தனத்தைப் பார்த்தீங்க?’ன்னு நாங்க கேட்டோம். பளார்னு என் கன்னத்துல அந்த அம்மா அறைஞ்சிட்டாங்க. அப்புறம், செருப்பைத் தூக்கிக் காட்டிட்டு அந்தம்மா போயிட்டாங்க. ஹெச்.ராஜா, நாராயணன் மாதிரியான ஆளுங்க தூண்டிவிட்டுத்தான் இது நடந்திருக்கு...’’

“நீங்கள்தான் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக தமிழிசை சொல்கிறாரே?”

‘‘சம்பவம் நடந்தப்போ அங்கே இருந்த பக்தர்கள், பொதுமக்களை விசாரிச்சா உண்மை தெரிஞ்சிடப்போகுது. என்னை அடிச்சிட்டு, அந்தம்மா போலீஸ் ஸ்டேஷன்ல போய் புகார் கொடுத்துட்டு ஆஸ்பத்திரியில போய் கொஞ்ச நேரம் படுத்திருக்காங்க. ஆனா, அடி வாங்குனதை மறந்துட்டு நாங்க எங்க வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டோம். அங்கிருந்து நாங்க கிளம்பினப்போ, அந்த அம்மா மறுபடியும் வந்தாங்க. ‘என்னம்மா... இன்னும் உங்களுக்கு ஆத்திரம் தீரலையா? அடிக்கிறதுன்னா இன்னொரு கன்னத்துலயும் அடிச்சிக்கோம்மா...’ன்னு சொன்னேன். ‘உங்களைக் கவனிச்சிக்குறேன்...’ன்னு அந்த அம்மா கோவமா சொல்லிட்டுப் போயிட்டாங்க. இதுதான் நடந்தது. தமிழிசை, அவங்க கட்சிக்காரருக்குத்தானே சப்போர்ட் பண்ணுவாங்க!’’

வேதனையும் கோபமுமாகப் பேசிமுடித்தார் அய்யாக்கண்ணு.

- ஆர்.குமரேசன்