சமூகம்
Published:Updated:

பிராமணர்கள்மீது கைவைத்தால் நாங்கள் காவல் படையாக மாறுவோம்!

பிராமணர்கள்மீது கைவைத்தால் நாங்கள் காவல் படையாக மாறுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிராமணர்கள்மீது கைவைத்தால் நாங்கள் காவல் படையாக மாறுவோம்!

கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி

ஹெச்.ராஜாவால் உருவான ‘பெரியார் சிலை’ பற்றிய சர்ச்சையைத் தொடர்ந்து, மயிலாப்பூரில் சில பிராமணர்களின் பூணூலைத் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக மார்ச் 19-ம் தேதி அன்று, மயிலாப்பூர் மாங்கொல்லையில் பிராமணர்கள் பொதுக்கூட்டம் நடிகர் எஸ்.வி.சேகர் தலைமையில் நடத்தப்பட்டது. அதில், ‘புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிராமணர்கள்மீது கைவைத்தால் நாங்கள் காவல் படையாக மாறுவோம்!

நடிகர் எஸ்.வி.சேகர் பேசியபோது, “நம்மை தெருவில் நடக்கக் கூடாது என்று தடுக்கவும், எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொல்லவும் யாருக்கும் தகுதி இல்லை. நமக்கு முதலில் நாடு முக்கியம். அதன்பிறகு நமது சாதியும் மதமும் மிக முக்கியம். நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையைப் போன்றது நமது சாதியும் மதமும். இனி ஒருமுறை இப்படி நடந்தால், சம்பந்தப்பட்ட அமைப்பைத் தடை செய்வோம். நம்மில் பல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக சுப்பிரமணியன் சுவாமி இருக்கிறார். சண்டைக்குச் செல்ல வேண்டாம். ஆனால், சிரித்துக்கொண்டே பழிவாங்குவோம். உங்களுக்குத் தைரியம் இருந்தால் ஹெச்.ராஜாவிடம் சென்று வீரத்தைக் காட்ட வேண்டியதுதானே? நாம் அனைவரும் இந்தியர்களாகவே இருப்போம். இந்தியாவின் தேசியக் கொடியில் ஆரஞ்சு நிறம் இந்துக்கள், வெள்ளை நிறம் கிறிஸ்தவர்கள்,  பச்சை நிறம் முஸ்லிம்கள்” என்றார்.

‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி, ‘‘திராவிடம் பொய்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. சாதியப் பாகுபாடுகளுக்குத் திராவிட இயக்கங்கள்தான் காரணம். ‘தனது அட்மின் தவறாகப் பதிந்துவிட்டார்’ என்று ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்தும்கூட, இப்படி ஒரு காரியத்தைச் செய்திருப்பது அநாகரிகச் செயல். பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று சொல்லிச் சொல்லியே அவர்களை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். ஆனால், பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துவதை நான் இதுவரை எங்குமே கண்டதில்லை. இனி பிராமணர்கள் மீது யாராவது கைவைத்தால் புதிய தமிழகம் கட்சி, அவர்களைக் காக்கும் போராளியாக, பிராமணர்களுக்குக் காவல் படையாக மாறும்” என்றார்.

- ஜெ.அன்பரசன்
படம்: வீ.நாகமணி